ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 3 எனக்குப் பிடித்த சிறுகதை: கி ராஜநாராயணனின் ‘நாற்காலி’

author
0 minutes, 14 seconds Read
This entry is part 22 of 23 in the series 30 நவம்பர் 2014

எஸ். நரசிம்மன்
[ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.]

“நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?” – இப்படித் தொடங்குகிறது கி.ராஜநாரயணனின் சிறுகதை. ஒரு அழகான தோரண வாயில் போல. பின்னால் வரும் எழுத்துக்கு கட்டியம் கூறுவது போல. ஒரு மிகச் சாதாரண நிகழ்ச்சியை சிறப்பாகப் படம் எடுத்து வழங்கும் கதை
கதை என்பது வாழ்வின் எதிரொலிப்பாக, இயல்பாக, படிப்பவனை எப்படியும் பாதிக்கும் விதமாக அமையும்போது அது மறக்க முடியாததாகிறது. அடுக்கடுக்கான நிகழ்வுகளும் ‘திடீர்’ ‘திடீர்’ திருப்பங்களும், விறுவிறுப்பைக் கொடுத்தாலும் அந்த அனுபவம் நிலைப்பதில்லை. இது என் அனுபவம்.
கதை, ஒரு காலத்தை, அந்தக் காலத்தின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடிதானே. மிகத் துல்லியமாக மனித உணர்வுகளை, பாசாங்கு இல்லாமல், லேசான நகைச்சுவையோடு விவரிக்கிறது. கதாசிரியனின் பார்வையில் கதை விவரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட நம் கண் முன்னே ஒரு நாடகம் போல் விரிகிறது. இயல்பான, யதார்த்தம் செறிந்த நிகழ்வுகள் கதையைப் படிப்பவரையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக – கதை முடியும் போது மனதுக்குள் லேசாக… இல்லை அழுத்தமாகவே ஒரு முறை உலுக்கி விட்டுச்செல்கிறது. இந்த சுகானுபவத்தை ஒவ்வொரு முறையும் கதையைப் படித்துப் படித்துப் படித்து நான் மகிழ்ந்து போகிறேன். அந்த இலக்கியகர்த்தா என்னுள் எப்போதும் வாழ்வார்.
கதையைப் பார்க்கலாம்.
************
ஒரு ஊர். கிராமம் என்றும் கொள்ளலாம். அங்கே கொஞ்சம் வசதியான ஒரு குடும்பம். திடீரென்று அவர்களுக்கு ஒரு ஆசை! ஒரு நல்ல நாற்காலி செய்ய வேண்டும் என்று (அவர்கள் வீட்டில் முக்காலி தான் – அதுவும் அடிக்கடி கவிழ்ந்து விழுகிறது). அந்த ஊரில் யார் வீட்டிலும் இல்லாத பொருளாயிற்றே! நாற்காலி எப்படிச் செய்வது என்பது பற்றி குடும்பத்தில் எல்லோரும் யோசித்து அலசி முடிவு செய்யும் தருணம்-வெளியூரில் இருந்து அவர்களது மாமனார் வந்து சேர்கிறார். கதையும் களை கட்டுகிறது. அந்தக் குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரு கேலிச்சித்திரம் போல் சித்தரிக்கப்படும் அவருக்கும் ஒரு நாற்காலி வேண்டும் என்பதால் இரண்டு நாற்காலிகள் செய்யப்படுகின்றன. தேக்கு மர நாற்காலிகள். ஒன்று மாமனார் ஊருக்கு அனுப்பப்படுகின்றது.
நாற்காலிக்கு ஏகப்பட்ட “மவுசு”- போட்டி போட்டுக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஊரில் எல்லோரும் வந்து பார்க்கும் உற்சாக திருவிழாவாக இருக்கிறது வீடு. இந்தக் குடும்பத்தில் எல்லோருக்கும் அந்த ‘நாற்காலி’ மீது பிரியம். மாறி மாறி உட்கார்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் காலம் …. ஒரு நாள், நடுராத்திரி – அந்த நாற்காலியை இரவல் கேட்டு ஆள் வருகிறது – ஊரில் ஒரு முக்கிய பிரமுகர் இறந்து விட்டதால் அவரை (உடலை) “உட்கார வைக்க” என்று கேட்டு எடுத்துப் போகிறார்கள். புது நாற்காலியை இரவல் கொடுக்க, அதுவும் இது போன்ற காரியத்துக்கு கொடுக்க மனம் இல்லை – வருத்தம் தான். எல்லாம் முடிந்தபின் திரும்ப வந்த நாற்காலியை நன்றாக வைக்கோலால் தேய்த்துக் கழுவுகிறார்கள். என்றாலும் அதில் உட்கார எல்லோருக்கும் பயம் தான். மெல்ல மெல்ல நாற்காலி “பழக்கப்படுத்தப் பட்டு” உட்காரத் தொடங்கிய சில நாட்களில், மீண்டும் ஒரு சாவு வருகிறது.
மறுபடியும் நாற்காலி போகிறது. இப்படி அடிக்கடி நாற்காலி இரவல் போகிறது. வீட்டுக்காரர்கள் வெறுத்துப் போகிறார்கள்! “நல்ல நாற்காலி செய்தோமடா நாம். செத்துப்போன ஊர்க்காரன்கள் உட்காருவதற்காக, சை!” என்று அலுத்துக் கொண்டான் அண்ணன். இதை விட பெரிய வருத்தம் அங்கே, பக்கத்து ஊரில் மாமனார் தன்னுடைய வீட்டில் தன்னுடைய நாற்காலியில் மகிழ்ச்சியாக உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறார் என்பது தான்.
என்ன செய்யலாம் என்று யோசித்து மெல்ல ஒரு பொய் சொல்ல தொடங்குகிறார்கள். “நாற்காலி தானே …? எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது. போய்க் கேளுங்கள் தருவார்!.” என்கிறார்கள். ‘அவர்களை அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்து சத்தமில்லாமல் சிரித்தோம்.’ இரவல் கேட்பது நின்று விட……அப்பாடி நிம்மதி. ரொம்ப நாள் கழித்து – மாமனார் வீட்டுக்குப் போனால் – மாமனார் மகிழ்ச்சியாகவே இருக்கிறார் – நாற்காலி தான் இல்லை!
‘எங்கே நாற்காலி?’ என்றதும் அந்த அசட்டு மாமனார் அழகாய் பதில் சொல்கிறார்: “அந்தக் காரியத்துக்கே வைத்துக் கொள்ளும்படி கொடுத்து விட்டேன்!அதற்கும் ஒன்று வேண்டியது தானே?”
அவ்வளவு தான் – சிறு கதை முடிந்தது.
************
ஒரு வீடு. அந்தக் குடும்பத்தில் புதிதாக ஒரு ‘நாற்காலி’ செய்கிறார்கள். இதில் என்ன விசேஷம்?
படித்துப் பார்த்தால் தான் தெரியும் – படிப்பவர் அந்தக் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிடும்படி அழகு சொட்ட எழுதப்பட்ட கதை.

கிட்டத்தட்ட பாதிக்கதை நாற்காலி செய்வது பற்றியே தான்.ஆனாலும் அதில் ஒரு வரியையும் விட்டு விட முடியாது.

பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும், அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாது என்றும், கவர்னரே வந்து அவன் செய்தநாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தை சொன்னாள். அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை ‘ஆமா, இவ ரொம்பக் கண்டா’ என்கிற மாதிரிப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மனித மனதின் எண்ணங்களைப் பிட்டு வைக்கும் லாவகம்.

இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கிய போது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்த நாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால் மற்றதைப் பார்க்க வேண்டாம் ; அப்படி ‘ராமர் லெச்சுமணர்’ மாதிரி இருந்தது.

ஒன்றை வைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப்பினோம். கொடுத்தனுப்பியது தான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.

கதையில் சுவாரஸ்யம் தட்டுவது ‘நாற்காலியின்’ உபயோகம் பற்றித்தான் ! என்னே ஒரு சங்கடம் – சொல்லவும் முடியாமல் ,மெல்லவும் முடியாமல். அவர்களுடைய அந்தத் தவிப்பு கதை படிப்பவரையும் பற்றிக் கொள்கிறது.

“நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தை வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான் இவரகள் வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள். ”

‘மாமனார்’ பாத்திரம் பற்றிய நையாண்டி வார்ர்த்தைகள். அவரைப் பற்றிய ஏளன விமர்சனம் – ஆனால் அழகான வரிகள் !

“மாமனார் வெற்றிலை போடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுவாரஸ்யமான
பொழுதுபோக்கு.தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென இருக்கும் சாண் அகலம், முழு நீளம், நாலு விரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை நோகுமோ நோகாதோ என்று அவ்வளவு மெல்ல பக்குவமாகத் திறந்து,பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர காம்புகளைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. சிக்கனம். களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அடுத்து அந்தப் பாக்கை ஊதுவார் ! அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போக வேண்டாமா, அதற்காக. ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும், ஊதலும் வர வர வேகமாகி ஒரு நாலைந்து தடவை மூக்குக்கும், வாய்க்குமாகக் கை மேலும் கீழும் உஷ் உஷ் என்ற சத்தத்துடன் சத்தமாகி டபக் கென்று வாய்க்குள் சென்று விடும். ”

நாற்காலி என்றால் அவருக்கும் பிடிக்கும். நன்றாக வைத்துக் கொள்வார்.

“நாற்காலியை மாமனார் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாக அதைத் துடைத்து வைப்பார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தானே மெதுவாக எடுத்துக் கொண்டு போய் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார். ”

கடைசியில் மாமனாரை ‘மக்கு’ என்று நினைத்து, “பொய்” பேசிய புத்திசாலிகளுக்கு ஒரு வலுவான பாடம் -வலி தெரியாமல், இயல்பாக. ஊருக்கு உபதேசம் என்று வார்த்தை விரயம் இல்லை. நறுக் என்று, மிக எளிமையான, ஆனால் தெளிவான விதத்தில் இரண்டு வரிகளில் வாழ்க்கை நெறி
சொல்லப்பட்டுள்ளது.

படித்து முடித்து விட்டு உடனே மறந்து விட முடியாதபடி ஒரு சிறுகதை.
snntamil@gmail.com
(மார்ச் 13, 2005 அன்று நடந்த ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘எனக்குப் பிடித்த சிறுகதை’ கூட்டத்தில் பேசியது)
******
[தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு:mu.ramanathan@gmail.com]

Series Navigationபயணப்பைபூனையும் யானையும் – முரகாமியின் சிறுகதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *