ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி

author
2 minutes, 25 seconds Read
This entry is part 14 of 23 in the series 7 டிசம்பர் 2014

 

 

ராஜேஷ் ஜெயராமன்

[ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.]

ஆங்கிலப் புலவர்களுள் ஷெல்லி பாரதியுள் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர். ஷெல்லி கொடுங் கோலுக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் இன்ன பிற சமுதாயக்கொடுமைகளுக்கும் எதிராக குரல் எழுப்பியவர் – புதியதோர் உலகம் படைக்கக் கோரியவர்.  ஷெல்லியின் இந்தத் தன்மைகள் பாரதியை ஈர்த்து அவருள் அகத்தூண்டுதல்களை ஏற்படுத்தின.

இந்த ஈர்ப்பு பக்தியாக மாறி பாரதி ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகளையும் கவிதைகளும் புனைந்துள்ளார். ஷெல்லியின் படைப்புகளின் தாக்கத்தாலேயே பாரதி எட்டையபுரத்தில் ‘ஷெல்லியன் கில்ட்’ என்ற சங்கத்தைத் தோற்றுவித்தார். இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்குச் ஷெல்லியின் கவிதைகளிலிலும் கட்டுரைகளையும் விரவியுள்ள அழகையும் அவைகளின் உள்ளுணர்வையும் விளக்கியுள்ளார்.

Bharthi and Shelley எனும் தலைப்பில் வி.சச்சிதானந்தன் என்பவர், Journal of the Academy of Tamil Culture, Vol ix & x எனும் பதிப்பில் எழுதியதிலிருந்து ஒரு தொகுப்பினைக் காண்போம்.

சமுதாயத்தின் மூடநம்பிக்கைகளுக்கும் போலித்தனங்களுக்கும் எதிரான போராட்டமாகவே ஷெல்லியின் வாழ்க்கை இருந்தது. சமுதாயத்தில் விரவியுள்ள பொய்மையே மானுடத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாய் உள்ளது என்று ஷெல்லி கருதினார். அவர் எழுதிய Queen Mab, Prometheus Unbound, The Witch of Atlas, Hellas போன்றவைகளில் இந்த பொய்மைகளின் மீதுள்ள தம்முடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய Queen Mab என்னும் கவிதையில்:

Kings, priests and statesmen blast the human flower
Even in its tender bud; their influence darts
Like subtle poison through the bloodless veins
Of desolate society.

இந்த கொடுங்கோலர்களும், சமுதாயத்தின் புல்லுருவிகளும் அழியும்போதுதான் பொற்காலம் பிறக்கும் என்றும் எழுதியுள்ளார்.

பாரதியின் சமுதாயச் மேம்பாட்டுக்கான அறைகூவல்களில், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான சாடல்களில், கொடுங்கோன்மைக்கெதிரான கருத்துக்களில், மானுடத்தின் பொற்காலத்திற்கான கனவுகளில் ஷெல்லியின் தாக்கத்தைக் நாம் காணலாம்.

ஷெல்லியின் கருத்தில் கொடுங்கோலர்கள் இருவகையானோர், அரசர்களும் மதகுருமார்களும். இவர்கள் மக்களின் இயல்திறத்தைப் பறித்துக்கொண்டு அவர்களை அடிமைப்படுத்துவோர். ஷெல்லி அரசர்களை வெளிப்படையாக கண்டித்து வரும்பழி கூறி இடித்துரைத்துள்ளார். இந்த அரசின் மக்கள் அவர்களின் முதுகெலும்பற்ற தன்மையினால் கொடுங்கோன்மையை தொடர்ந்து ஊக்குவித்து நிலைநாட்டுகிறார்கள். இதனால் மக்களும் கண்டிக்கத்தக்கவர்களே என்றும் சொல்கிறார்.

ஷெல்லியின் ‘Ode to Liberty’, 1917ல் ரஷ்ய ஜாரின் வீழ்ச்சியைக் கொண்டாடி எழுதப்பட்டது.

A Glorious people vibrated again
The lightning of the nations: Liberty
From heart to heart, from tower to tower, o’er Spain,
Scattering contagious fire into the sky Gleamed.

பாரதியின் பார்வையில் கொடுங்கோலன் என்போன் இரணியனைப் போன்ற கடவுளற்ற, ஆன்மாவற்ற அரக்கன். இரணியனின் இன்றைய மறுபடிவம் (modern counterpart) ருசியாவின் கடைசி ஜார், இரண்டாம் நிக்கோலஸ். இந்த ஜாரின் வீழ்ச்சியைக் கொண்டாடிப் புனையப்பட்ட பாடலே பாரதியின் ‘புது ருசியா’. இதில் ஷெல்லியின் ‘Ode to Liberty’ன் தடங்களைக் காணலாம்.

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப் புரட்சி!

மேலும் ‘Ode to Liberty’இல் வரும்

Oh, that the free would stamp the impious name
Of KING into the dust!

இந்த வரிகளின் வடிவத்தை

அம்மைமனங் கனிந்திட்டாள்; அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன்!

இருவருமே கொடுங்கோன்மையை பாம்புடன் ஒப்பிட்டுள்ளனர்-பாரதி:

‘பொய்சூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில்’ என்றும்.

ஷெல்லி: cutting the snaky knots of this foul gordian word called “king” என்றும்.

ஷெல்லியின் ‘Cythna and Laon’ என்னும் படைப்பில் வரும் ‘Cythna’ ஆங்கில் இலக்கியத்தின் முதல் ‘புதுமைப் பெண்’. இந்தக் கவிதையின் முக்கியமான பாத்திரங்கள் Laonம் Cythnaவும். இந்த கவிதையின் கரு – Cythnaவும் Laonம் ஒட்டமான் அரசின் கொடுங்கோலனுக்கு எதிரான இரத்தமற்ற புரட்சிக்கு வித்திடுகிறார்கள். Cythna, Laonஐவிட அறிவாற்றல் பெற்றவளாக ஷெல்லி சித்தரித்துள்ளார். நல்லுலகம் படைக்கத் தேவையான அகத்தெளிவும் ஆக்கசக்தியும் பெற்றவள் இவளே. இந்த புதுமைப்பெண்ணான Cythnaவே Demogorgon குகைக்கு வரவேற்கப்பட்டு படிப்பிக்கப் படுகிறாள்.

ஷெல்லி தன் புதுமைப்பெண்ணை வாய்மையாக, நம்பிக்கையாக, அறமாக- Panthea, Ione, Asia ஆகிய பாத்திரங்களாக உருவகப்படுத்தியுள்ளார். இவள் அன்பின் நற்றிறத்தை அறிந்தவள்; பிழை பொறுக்கும் தன்மை கொண்டவள்; அறிவாற்றலுடன் கூடிய அழகின் வெளிப்பாடு.   Queen Mab முதல் Hellas வரை இவள் தளரா நம்பிக்கையுடன் அறத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறாள்;   மானிட உருவிலோ- அல்லது, Asiaவாகவும் Lady of Atlas ஆகவும் கடவுளருக்கும் மனிதருக்கும் இடையீட்டாளராகவோ. இது போன்ற பெருஞ்சிறப்புக்களை கொண்டவள் ஷெல்லியின் புதுமைப்பெண்.

பாரதி கண்ட புதுமைப்பெண் இந்த அருங்குணங்கள் யாவையும் படைத்தவள். இவ்வுலகையும் உலகத்தாரையும் மேம்படுத்தி மனிதர்களை அமரர்களாக்க வந்த பராசக்தியின் திருப்பிறப்பு; அவதாரம். பாரதியின் “புதுமைப் பெண்” ஷெல்லியின் கதாநாயகியரான Cythna, Emilia போன்றோரின் வழித்தோன்றலே. பெண்மைக்கும் பெண்களுக்கும் இந்திய சமுதாயத்தில் பாரதி வகுத்த நிலையில் காலத்திற்கு முற்பட்டிருந்தார். சாக்தத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கையினாலும் ஷெல்லியின் தாக்கத்தினாலும் பெண்விடுதலைக்கு பெருங்குரல் எழுப்பினார். பாரதி பெண்களை பராசக்தியின் அம்சமாக, அறத்தின் வடிவமாகக் கண்டார்.

ஷெல்லியின் ‘The witch of Atlas’ என்பவள்-

A lovely lady garmented in light
From her own beauty……..

பாரதியின் புதுமைப்பெண் –

சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே

பாரதியின் புதுமைப்பெண் வெளிப்படுத்தும் பல கண்ணோட்டங்கள் ஷெல்லியின் ‘Cythna and Laon’ல் காணலாம். இதில் Laon தன்னுடைய காதலியிடம் சொல்வது –

Never will peace and human nature meet
Till free and equal man and woman greet
Domestic peace…..

இதே பாரதியின் படைப்பில் –

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையகம் தழைக்குமாம்

மேலும் Laon எழுதிய Hymns of Freedom என்னும் பாட்டை Cythna பாடுகிறாள்:

She would arise, and, like the secret bird
Whom sunset wakens, fill the shore and sky
With her sweet accents – a wild melody!
Hymns which my soul had woven to Freedom
………………………………………………………………..
Triumphant strains, which, like a spirit’s tongue,
To the enchanted waves that child of glory sung.

பாரதி இதையே –

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? -என்று எழுதுகிறார்.

ஷெல்லியின் Epipsychidion-இன் கதாநாயகி Emilia Vivani. இவள் இருவராகச் சித்தரிக்கப்ப்டுகிறாள் – ஒருவள் கற்பனைப் பெண் மற்றவள் நடைமுறையில் உள்ளவள். இந்த இரு படைப்புகளும் ஷெல்லியின் கவிதையில் ஒன்றேபோல் தோன்றும். இதே நுட்பமான இணைவு பாரதியின் பாஞ்சாலி எனும் பாத்திரத்தில் காணலாம். ஷெல்லி தன் Emilia வை தோட்டமாகவும், மலர்களாகவும், காற்றாகவும், நீரூற்றாகவும் காண்கிறார். அவள் குரலை சத்தங்களிலும், மோனத்திலும் கேட்கிறார். பாரதி தன் கண்ணம்மாவை இதே போல் உருவகப்படுத்தியுள்ளார்.

ஷெல்லி ‘psyche-epipsyche’ என்று சொல்லப்படும் முறையை கையாண்டுள்ளார். இதன் அடிப்படை வடிவம் – psyche எனப்படும் உள்மனம், தன்னிடம் இல்லாத ஒன்றை உருவகப்படுத்திக் கொள்கிறது. இந்த உருவகமே Epipsyche ஆகும். பிறகு இந்த உருவகத்தை தனதாக்கிக் கொள்ள விழைகிறது. Epipsyche-ஐ உள்மனத்தின் ஆன்மா என்று ஷெல்லி விளக்குகிறார். Epipsychidionல் ஷெல்லி தேடும் உருவகம் – தன் முழுமையாக்கத்துக்கு தேவையான சிறப்புப்பகுதி என்றும் – மனிதருள் உறங்கும் ஆற்றலை எழுப்பும் பேரன்பு என்றும் விளக்குகிறார். இந்த பேரன்பு ஆன்மாவுக்கும் அதன் தேடலுக்கும் ஏற்படும் ஆன்மீக ஒன்றுதல் என்றும் கூறுகிறார். பாரதி கண்ணன் பாட்டுக்களிலும், குயில் பாட்டிலும் இந்த தேடுதலையும் ஏக்கத்தையுமே வெளிப்படுத்துகிறார். அழகின் உருவகமாக கண்ணம்மாவும் காதலின் உருவகமாக குயிலும் பாரதிக்கு அமைகிறார்கள்.

ஷெல்லியின் Millennium world என்னும் புதுப்பிக்கப்பட்ட உலகில் –

The lion now forgets to thirst for blood;
There might you see him sporting in the sun
Beside the dreadless kid; his claws are sheathed,
His teeth are harmless, custom’s force has made
His nature as the nature of a lamb.

பாரதியின் கிருத யுகமும் இதே போன்ற ஒன்றே. அவர் எழுதியது –

எந்த ஜந்துவும் வேறு எந்த ஜந்துவையும் ஹிம்சை பண்ணாமலும் எல்லா ஜந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதாருபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானால், அதுதான் கிருதயுகம்

ஷெல்லியின் புதுவுலகில் –

thrones were kingless, and men walked
One with the other even as spirits do,
None fawed, none trampled; hate, disdain, or fear,
Self-love or self-contempt, on human brows
No more inscribed..

பாரதி எழுதியது –

அநீதியும் கொடுமையும் அழித்துடுஞ் சாதி
அரசனில் லாது தெய்வமே யரசர்
குடியர சாற்றுங் கொள்கையார் சாதி
மானிட ரெல்லாம் சோதரர் மானிடர்
சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர்
சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவரும் ஒன்றே!

ஷெல்லியின் Spirit of the Hour என்பவள்-

……frank, beautiful, and kind
As the free heaven which rains fresh light and dew
on the wide earth, past; gentle radiant forms,
From custom’s evil taint exempt and pure;
Speaking the wisdom once they could not think,
Looking emotions once they feared to feel,
And changed to all which once they dared not be
Yet being now, made earth like heaven.

பாரதியின் புதுமைப்பெண்ணும் இது போன்றவளே –

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!

ஷெல்லியின் To a Skylarkல் வருவது-

With thy clear keen joyance
Languor cannot be:
Shadow of annoyance
Never came near thee: ….

பாரதி ‘சிட்டு’ என்னும் கட்டுரையில் எழுதியது –

க்ஷணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போல் அரிக்கும் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை

ஷெல்லி எழுதிய நாடகம் ‘The Cenci’. 1819ம் ஆண்டில் Shelly இந்த நாடகத்தைப் புனைந்தார். ‘Cenci’ என்ற ஒரு இத்தாலியக் குடும்பத்தினரின் கதை இது. கதாநாயகி Beatrice தன்னை சீரழிக்கவரும் தந்தையின் கொடுமையை பொறுக்க முடியாமல் அவரைக் கொன்றுவிடுகிறாள்.

பாரதியின் உணர்ச்சிகரமான நாடகம் பாஞ்சாலி சபதம். Cenciயும், பாஞ்சாலி சபதமும் வரலாற்றின் துன்பியல் நிகழ்வுகளை வெளிக்கொணர்பவை. உலகம் அறத்தை புறக்கணித்து மறத்தை ஆதரிக்கும் பொழுது கொடுங்கோன்மையின் கை ஓங்குகிறது. வறியோர் நசுக்கப் படுகின்றனர்.

Cenciயின் நாயகி ‘Beatrice’ தன் தரப்பின் நியாயங்களை சான்றோர் சபையில் எடுத்துரைக்கிறாள். சபையினர் செவிசாய்க்காத பொழுது சொல்கிறாள்:

Dare no one look on me?
None answer? Can one tyrant overbear

The sense of many best and wisest men?
Or is it that I sue not in some form
Of scrupulous law, that ye deny my suit?

பாரதியின் பாஞ்சலி சபையில் இதே போல் முறையிடுகிறாள் –

வானசபையில்
கேள்வி பலவுடையோர், கேடிலா நல்லிசையோர்
வேள்வி தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள்
மேலோ ரிருக்கின்றார், வெஞ்சினமேன்
கொள்கிலரோ?

பாரதியின் பல படைப்புகளில் ஷெல்லியின் கருத்துக்களின் தாக்கம் விரவியிருக்கின்றன. இதனால் இவை ஷெல்லியின் கவிதைகளின் தமிழாக்கம் என்று கொள்ளக்கூடாது. ஷெல்லியும் பாரதியும் தம் ஞானத்தேடலில் ஒத்த கருத்தை கொண்டிருந்தனர் என்ற அளவில் மட்டுமே இதை கொள்ளவேண்டும்.

ஆழ்ந்திருத்தலுக்கும் தோய்ந்திருத்தலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தேன் நிறைந்த குடத்தில் ஒரு கல்லையும், பழத்துண்டையும் போட்டால், கல் ஆழ்ந்திருக்கும். பழத்துண்டோ தோய்ந்திருக்கும். தேன், கல்லில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? ஆனால் பழத்துண்டு, தன் சுவையுடன் தேனின் சுவையையும் உள்வாங்கிக்கொள்ளும்.

பாரதியே சொன்னது போல:

மதிதமக்கென்றில்லார் கோடி வகையுறு
சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியும் சாத்திரத் துள்ளுறை காணார்
பானைத் தேனில் அகப்பை போல்வார்
jrajesh@hotmail.com

(ஜனவரி 27, 2007 அன்று ஹாங்காங் நடந்த இலக்கிய வட்டத்தின் பாரதி-125′ கூட்டத்தில் பேசியது)

********

[தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com]

 

Series Navigationஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *