அந்த நீண்ட “அண்ணாசாலை”…

This entry is part 3 of 23 in the series 21 டிசம்பர் 2014
balan3_2251856f
(ஆனந்த விகடன் ஆசிரியர்

எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின்

மறைவுக்கு ஒரு அஞ்சலி)
“இதழ்”இயல் என்றால்
முத்தமும் காதலும் மட்டும் அல்ல.
மூண்ட கனல் உமிழும்
மானிட உரிமைக்குரலும் தான்.
பத்திரிகைக்குரல்களின்
சுதந்திர சுவாசமே!
கல்லூரிகளின் வயற்காட்டிற்கே சென்று
இளைய எழுத்துகளின் நாற்றுகளை
இலக்கிய மின்னல் ஊற்றுகளாய்
உரு காட்டி வழி காட்டிய‌
புதுமைப்பாணி உனது பாணி.
விகடன் “முத்திரை”யைக் கண்டு
பொறாமைப்பட்டிருக்கலாம்
சாஹித்ய அகாடெமிகளும்
ஞான பீடங்களும்.
இந்த முத்திரைக்கு ஈடாக‌e
ஏது இங்கே இலக்கியத்தின்
அக் மார்க முத்திரை?
எழுத்துகளை எழுத்துக்களில் வடிகட்டி
சமுதாய உணர்வின் கசிவுகளை
எழுத்துக்கூட்டி காட்டியவன் நீ.
விகடன் காட்டிய எழுத்தாளர்களே சான்று.
ஜெயகாந்தன்களும் சுஜாதாக்களும்
பாலகுமாரன்களும் இன்னும்
சிவசங்கரி அனுராதா ரமணன் என்று
எத்தனை எத்தனை படைப்பாளிகள்?
வைரமுத்துவும் வாலியும்
கவிதைக்கடலையே அல்லவா
அங்கு ஏற்றம் இறைத்துக்கொண்டிருந்தார்கள்.
எங்கோ ஒரு முகம் தெரியாத கவிஞனுக்கும்
அங்கே முகம் கிடைக்கும்.
எழுத்தின் இதயம் நுழைந்து பார்த்து
அவற்றை எழுச்சியுற செய்தது
உன் ஆசிரியப்பணி.
உன் எழுத்து நுரையீரல் பூங்கொத்து
தமிழ் எழுத்தாளர்களின் பெரும்சொத்து.
எழுத்துகள் மூச்சுத்திணற விட்டதில்லை நீ.
இதழ் அவிழ்க்கும்
சிந்தனைகளின்
தேரோட்டத்திற்கு
அந்த அகலமான “ராஜ பாட்டையை”
உன்னைத்தவிர
யாராலும் அப்படி போட்டிருக்க முடியாது.
ஒரு கார்ட்டுன் கோட்டின்
வளைவு நெளிவை
சிறைக்கம்பிகளால் நிமிர்த்தி விடலாம்
என்று
எம்பிக்குதித்த‌
அந்த கண்ணுக்குத் தெரியாத‌
சர்வாதிகாரத்தின் நிறத்தை
தோலுரித்துக்காட்டிய
உன் பேனா இங்கே படுத்துக்கிடந்தாலும்
உயிர்த்து ஒளிர்கின்றது..
உரத்து ஒலிக்கின்றது..
எழுத்தின் சுதந்திரத்தை!
உன் ஆவி பிரிந்தாலும்
ஆ.வி.யின் ஆவி பிரியாது.
அதன் ஒவ்வொரு பக்கமும்
தெரிவது
உன் துடிப்பே தான்.
உன் அலுவலக முகவரி தாங்கிய‌
அந்த நீண்ட‌”அண்ணாசாலை”
கருப்புக் கம்பளம் விரித்து
துக்கம் கொண்டாடுகிறது.
எங்கள் இதய அஞ்சலிகள்
அதில் தூவிக்கிடக்கின்றன.
=============================================ருத்ரா இ.பரமசிவன்
Series Navigationசாவடி – காட்சிகள் 16-18தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *