தலைப்பு இடாத ஒரு ஓவியம்..

This entry is part 1 of 23 in the series 21 டிசம்பர் 2014
Kandinsky
======================================================ருத்ரா
ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின்
தலைப்பிடப்படாத
இந்த ஓவியத்தைப்பாருங்கள்.
என்ன அற்புதம்! என்ன ஆழம்!
புரிந்து விட்டது என்றால் அழகு
புரியவில்லை என்றால் அதைவிட‌ அழகு.
இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட்
உரக்கிடங்கு போல்…
ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும்
நசுங்கிக்கிடக்கும்
ஜங்க்யார்டு போல…
ஒற்றைக்கண்ணாடியில்
கண்ணும் இல்லாமல் முகமும் இல்லாமல்
லுக் விடும்
ஒரு மௌன அம்பின் கூர்மைத்தாக்குதல்கள்
நம் நுரையீரல் பூக்களை கசக்கிவிடுவது போல்…
உலகப்போர்களின் வக்கிரங்களில்
சர்வாதிகார கொலை வேட்டையில்
மரண ஆவேசங்களின் உந்துதல்கள்
மானிட நேயத்தின் மேல்
அணுக்கதிர் பிதுக்கி
அவசரமாய் மலஜலம் கழித்தது போல்….
கொடுவாள் நிமிர்ந்து விறைத்து
விடியல் வானத்தை குத்திக்கிழிக்க‌
வாய்பிளந்த ஏதோ ஒரு கேலாக்ஸி
சோளப்பொரி கொறிப்பது போல…
இல்லாவிட்டால்
இருக்கவே இருக்கிறது காதல்..
காதலை தேடி அலையும்
பிசாசு ஏக்கங்கள்….
பிய்த்துப்போட்ட தலையணைப்பஞ்சுகளாய்
கனவுச் சிதிலங்களில்
கந்தலாய் கிடக்கும்
முத்தங்களும் ஆலிங்கனங்களும் போல…
புருசு தேய்த்த வர்ணக்குழம்பில்
இதயத்து அடி ஆழத்தின்
லாவா வழியல்களில்
எரிமலையின் எச்சில் ஊறும்
கற்பனைத்தீயின்
“நவரக்கிழி” பிழிசல்களின் ஒத்தடம் போல…
பிரசுரிக்கப்படாத படைப்புகளை
கிழித்துப்போடுவதைக்கூட
கசாப்பு செய்தாற்போல எறியும்
ஏதோ ஒரு பத்திரிகை அலுவலகத்தின்
புழக்கடை போல…
என்ன தோன்றுகிறதோ
அப்படியே கூப்பிடுங்கள்..
அப்படியே
அந்த ரத்த சதைக்கூளத்திலிருந்து
ஒரு பொமரேனியன் குட்டி
உங்கள் பாதம் நக்கிக்கொடுக்க வர‌
ஓடிவரும் தருணங்கள் போல…
===============================================================ருத்ரா
இந்த சுட்டிக்கு  நன்றி.(WITH GRATITUDE)
Series Navigationசாவடி – காட்சிகள் 16-18
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *