ஆனந்த பவன் நாடகம் காட்சி -19

author
1
0 minutes, 11 seconds Read
This entry is part 15 of 22 in the series 28 டிசம்பர் 2014

 

 

 

 

 

 

இடம்: ரயில்வே ஜங்ஷன்

 

நேரம்: மணி ஆறே முக்கால்.

 

உறுப்பினர்: ஜமுனா, மோகன், ஆனந்தராவ், ராஜாமணி, சாரங்கன், சுப்பண்ணா, இரண்டு கான்ஸ்டபிள்கள்.

 

(சூழ்நிலை: ஜமுனா பிளாட்பாரத்தில் இரண்டு பெட்டிகளையும் வைத்துக் கொண்டு நிற்கிறாள். ரயில் புறப்பட மணியடித்து விட்டது. கார்டு விசில் ஓசை கேட்கிறது)

 

ஜமுனா: (தனக்குள்) எங்கே போனார்… கார்டு விசில் குடுத்துட்டாரே… ஐயோ… ட்ரெயின் புறப்படப் போறதே… கூல்டிரிங் குடிச்சிட்டு, பாட்டிலை வாங்கிண்டு போனார், பத்து நிமிஷமாகிறது! வண்டி வந்து நின்னு, தோ பொறப்படப் போகிறதே! (தூரத்தில் மோகனைப் பார்த்து) மோகன்! மோகன்!

 

மோகன்: (இரண்டு மப்டி கான்ஸ்டபிள்களிடையே நடந்து வருகிறவன் அவளைத் திரும்பிப் பார்த்து) ஜம்னா… ஸாரி… டெரிப்ளி ஸாரி!

 

ஜமுனா: (பதற்றத்துடன்) என்ன ஆச்சு மோகன், ஒங்களுக்கு என்ன ஆச்சு?

 

(எதிரே ஓடி வருகிறாள்)

 

கான்ஸ்டபிள் எண் 1: யாரும்மா நீ!

 

ஜமுனா: அவரை ஏன் ஸார் அரெஸ்ட் பண்றீங்க?

 

கான்ஸ்டபிள் எண் 2: இவன் மேல ஒரு டப்ளிங் சார்ஜ் ஷீட் இருக்கு! இத்தனை நாள் ஆள் கெடைக்காம இருந்தான்.

 

ஜமுனா: எங்கே கூட்டிட்டுப் போறீங்க ?

 

கான்ஸ்டபிள் எண் 1: மெட்ராஸ், கிட்டே வந்து கலாட்டா பண்ணாதேம்மா! போலீஸ் தன் கடமையைச் செய்யும் போது தலையிடறது ஒரு குற்றம்.

 

மோகன்: ஜம்னா ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு. வீட்டுக்குத் திரும்பிப் போயிடு.

(மீண்டும் கார்டு விசில் ஓசை கேட்கிறது) என்கூட வர வேண்டாம் ஜம்னா, ப்ளீஸ் வாண்டாம்!

 

கான்ஸ்டபிள் எண் 1: வண்டி பொறப்படுது ஏறு, மிஸ்டர் இந்தப் பெட்டியிலேயே ஏறு!

 

ஜமுனா: மோகன்… மோகன்  (ரயில் பெருத்த ஓசையுடன் பிளாட்பாரத்தைக் கடக்கிறது. ஒரு பெட்டியில் வேகமாக ஓடி ஏற முற்பட்டாள்)

 

ஆனந்தராவ்: (தூரத்திலிருந்து) ஜம்னா… ஜம்னா!

 

ராஜாமணி: சுப்பண்ணா நீங்க கொஞ்சம் வேகமா ஓடுங்க, இந்த வேகத்திலே அவளால ட்ரெய்ன்ல ஏற முடியாது! ஏறினா கீழே விழுந்துடுவா ஓடுங்க தடுங்க!

 

சுப்பண்ணா: ஜம்னா… ஜம்னா… ஜம்னா!

 

(ரயில் பெட்டிகள், ஒவ்வொன்றாக விரைந்து ஜங்ஷன் பிளாட்பாரத்தைக் கடந்து முடிந்த ஓசை வருகிறது) என்ன காரியம் பண்ண இருந்தேம்மா ?

 

ஜமுனா: நீங்கள்ளாம் ஏன் இங்கே வந்தேள்… ஏன்… ஏன்… என்னைத் தடுத்தேள்?

 

(ஹோவென்று அலறுகிறாள். மயக்கமாகி விழுகிறாள்)

 

ஆனந்தராவ்: அவளால தாங்க முடியலே சுப்பண்ணா, சாரங்கா, ரெண்டு பேரும் அவளை ஒரு கை பிடிச்சு வெய்ட்டிங் ரூமுக்குக் கொண்டு போங்கோ! இப்பவே எல்லாரும் பார்த்துண்டு நிக்கறா. கிட்டத்தட்ட ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்ச கதை ஆய்ட்டது!

 

சாரங்கன்: வெய்ட்டிங் ரூம்ல கூட்டிட்டுப் போயி படுக்க வச்சு, இன்னும் நாலு பேரு பாத்து சிரிக்கறாப்பல, எதுக்கண்ணா! ஒரேயடியா ஊருக்கே கூட்டிட்டுப் போயிடலாமே.

 

ஆனந்தராவ்: ஊருக்கு வாண்டாம்! சாரங்கா! எந்த மொகத்தோட அவ ஜனங்க மூஞ்சியிலே முழிப்பா? இன்னும் ரங்கையருக்கும் விஷயம் தெரியாது! அவர் வந்து அவர் மொகத்தைப் பார்த்தா இவ என்ன பண்ணிக்குவாளோ, என்னமோ?

 

ராஜாமணி: அப்ப எங்கேப்பா இவளை கூட்டிட்டுப் போறது?

 

ஆனந்தராவ்: பேசாம திருமாங்குடிக்குக் கூட்டிட்டுப் போய்டுவம்! அங்கே ஒங்க மாமா நர்ஸரியும் கான்வெண்டும் நடத்தறார்லே அவர்கிட்டே கொண்டு போய் விட்டுடுவோம். அவர் இவ மனசை மெதுவா நேர் பண்ணுவார்.

 

ராஜாமணி: அதுக்குள்ளாற இவளுக்கு ஏதாவது விபரீத எண்ணம் தோணிட்டா?

 

ஆனந்தராவ்: அதெல்லாம் கிருஷ்ணராவ் கெட்டிக்காரன். மனசுங்கறது எவ்வளவு மெதுவானதுண்ணு அவனுக்குத் தெரியும். ருக்மிணி பாயும் கூட இருக்காளே! ரெண்டு பேருக்கும் கொழந்தை வேற இல்லே… ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துப்பாங்க.

 

ராஜாமணி: சரிப்பா! சாரங்கா, பிடி. கொஞ்சம் மெள்ள. மெள்ள ஏன் சார் வேடிக்கை பார்க்கறீங்க? எதுவோ அதிர்ச்சியிலே மயக்கம் போட்டுட்டா… ப்ளீஸ் கொஞ்சம் வழி விடுங்க. காத்து வரட்டும். சுப்பண்ணா கேன்டீன்லருந்து ஒரு டம்ளர்ல ஜில்லுனு தண்ணி வாங்கிண்டு வாங்கோ! இப்படி இந்த பெஞ்சு மேல படுக்க வைங்க. இங்கே யாரும் நிண்ணு கூட்டம் போட வேண்டாம் சுப்பண்ணா, அப்பா மட்டும் நிக்கட்டும்! ஹும் வெலகப்பா.

 

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigationஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)தொல்காப்பியம்-நன்னூலில் சார்பெழுத்துகள்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *