ஆனந்த பவன் -21 நாடகம்

This entry is part 30 of 31 in the series 11 ஜனவரி 2015

இடம்: ஆனந்தராவ் வீடு

நேரம்: மறுநாள் காலை மணி ஏழு.

பாத்திரங்கள்: ஆனந்தராவ், ரங்கையர், கங்காபாய்.

(சூழ்நிலை: ஆனந்தராவ் தமது அறையில் கட்டிலின் மீது படுத்திருக்கிறார். அவரைக் காண்பதற்காக, ரங்கையர் வீட்டுப் படியேறிக் கொண்டிருக்கிறார். நடை வாசலில் அவரைக் கண்டு திரும்பி எதிர் கொள்கிறாள் கங்காபாய்)

கங்காபாய்: வாப்பா ரங்கா வா!

ரங்கையர்: அண்ணா தூங்கிண்டிருக்காரா மன்னி?

கங்காபாய்: இன்னேரமா முழிச்சுண்டு சிரமப்பட்டார். விடியக்காலமறே தான் கண் அசந்து தூங்கினார்.

ரங்கையர்: டாக்டர் என்ன சொன்னார்?

கங்காபாய்: ஹார்ட் அட்டாக் தானாம். கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்னாரு.ஜாண் நீளத்துக்கு ஒரு கடிதாசியிலே மருந்து எழுதிக் கொடுத்திருக்கார்.

ரங்கையர்: சேதுவுக்குத் தெரியப்படுத்தினேளோ?

கங்காபாய்: நர்ஸிங் ஹோம்லருந்து கூட்டிண்டு வந்ததுமே, கோயமுத்தூருக்கு எஸ்டிடி போட்டுட்டோம்.

ரங்கையர்: வந்தானா?

கங்காபாய்: அவங்க மாமனார் வடதேச யாத்திரை போயிருக்காராம்! அங்கே ஹோட்டல்லே ஏதோ ஒரு ட்ரெயினிங் கோர்ஸ்காராள் கிட்டே பத்து நாள் மூணு வேளை சாப்பாடு, பலகாரம் சப்ளை பண்றதா ஒரு காண்ட்ராக்டாம். நாளன்னிக்கு முடியறது. நடுவிலே விட்டுட்டு வரமுடியாதுண்ணு போன் பண்ணிட்டான்.

ரங்கையர்: ம்ஹும்! அவாவாளுக்கு, அங்கங்கே ஒரு சங்கிலி மாட்டிண்டுறது!

கங்காபாய்: ஒனக்கு இதெல்லாம் நேர்ந்திருக்க வாண்டாம்! ஒன் மனசுக்கு, ஒன் சத்தியத்துக்கு ஒன் ஆசாரத்துக்கும், சீலத்துக்கும் இத்தனை இடி வந்திருக்க வாண்டாம்.

ரங்கையர்: (பதில் பேசாமல் நிற்கிறார்)

கங்காபாய்: நீ என்னத்தைக் கண்டே… பகவந் நாமாவும் ஆனந்தபவனும் தவிர வேற என்னத்தைக் கண்டே… நோக்கெதுக்கு இத்தனை பெரிய தண்டனை?

ரங்கையர்: (கம்மிய குரலில்) எத்தனை தாங்க முடியும்னு பகவான் சோதிக்கிறார். எந்த ஜன்மத்திலே பண்ணிய கர்மமோ… கர்ம பலனை அனுபவிச்சுத்தானே ஆகணும் மன்னி?

கங்காபாய்: நேக்கு மனசு ஆறல்லே… மூணு நாளா பொலம்பிண்டிருந்தேன், ராத்திரிலே சட்டுணு முழிப்பு வர்றப்போ இவர் திகில் வந்துடறது… யாரு காப்பாத்தப் போறாண்ணு கதி கலங்கிடறது. ஒன் மொகம் ஞாபகம் வர்றது. நோக்கும், என்னன்ன வெல்லாமோ நடந்துட்டதேண்ணு மனசு பேதலிச்சுப் போறது.

ரங்கையர்: நாம என்ன பண்ண முடியும் மன்னி? மனுஷா என்ன பண்ணி முடியும்? முட்டி மோதி எதையோ சாதிச்சுட்டதா அற்ப திருப்திப் பட்டுக்கலாம். நடக்கறதெல்லாம் பகவத் இச்சையின் பேரில நடக்கறதுங்கறது தானே சத்யம்.

கங்காபாய்: எப்படியிருக்கா ஒன்னோட வெள்ளைக்கார மருமக ?

ரங்கையர்: இருந்துண்டிருக்கா. இந்தப் புதிய சூழ்நெலைலே சின்ன வீட்டிலே சமைக்கறது எப்படி? கெணத்திலே தண்ணி எரைக்கறது எப்படிண்ணு ஒவ்வொரு விஷயமும் அவளுக்குப் புதுசா இருக்கு! ஸ்ரமமாகவும் இருக்கும். ஒண்டியா எல்லாத்தையும் பண்ணி ஓரியாட ஆனந்த மாறாளேண்ணு, கூடமாட ஒத்தாசை பண்லேன்.

கங்காபாய்: அந்தக் கிராதகி ஜம்னா இருந்திருந்தா, ஓரளவு தேவலாமா இருந்திருக்கும்.

ரங்கையர்: அவ பேச்சை விட்டுடுங்கோ மன்னி! என்னாலே ஒண்ணு பேச முடியாது நான் தலை முழுகிட்டேன்.

ஆனந்தராவ்: (உள்ளேயிருந்து பலஹீனமாக குரலில்) கங்கா…கங்கா.

கங்காபாய்: (அறைப்பக்கம் திரும்பி) கூப்பிட்டேளா, தோ வந்துட்டேன்!

ஆனந்தராவ்: யாரு வந்திருக்கிறது ரங்கனா?

கங்காபாய்: ஆமா ரங்கையர்தான் வந்திருக்கார்.

ஆனந்தராவ்: வாரங்கா!

(ரங்கையர் அறைக்குள் நுழைகிறார். கட்டிலில் படுத்திருக்கும் ஆனந்தராவ் நிமிர்ந்து உட்கார்கிறார். கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூல் உள்ளது. எனினும் ரங்கையர் நின்று கொண்டே இருக்கிறார்.)

ரங்கையர்: ஒடம்பு எப்படி அண்ணா இருக்கு!

ஆனந்தராவ்: ஒடம்புக்கு என்ன ரங்கா? இருந்துண்டிருக்கு நிக்கறயே, அதோ ஸ்டூல் இருக்கே உக்காரு.

ரங்கையர்: இருக்கட்டும்ணா.

ஆனந்தராவ்: ஒக்கார் ரங்கா! நீ உட்கார்ந்தாதான் நேக்கும் சித்த ஆஸ்வாஸமா பேசத் தோணும்.

(ரங்கையர் உட்காருகிறார்)

ஆனந்தராவ்: ஒடம்பு யந்திரம். ரொம்பத் தேஞ்சுப் போயிடுத்து. வருஷங்கள் ஆயிருக்கோல்லியா? தேய்மானம் ஜாஸ்தியாத்தான் இருக்கும். ஒடம்பை இயக்கிண்டு போற டிரைவர் மனசு, அதுக்கும் வயசாய்ட்டது. ஆனந்தலட்சுமி வந்து போனப்பற இருந்து ஒரு பளு. ஒரு துக்க மூட்டை.

ரங்கையர்: இப்ப எதுக்கு அதெல்லாம் நெனைக்கணும்?

ஆனந்தராவ்: ஒன்னண்டே பேசறதுதான் மஹா அந்யாயம்! நீ சொமந்திருக்கிற வேதனை பத்தாதுண்ணு நான் வேற எறக்கி வக்கிறேன்.

ரங்கையர்: பரவால்லேண்ணா சொல்லுங்கோ.

ஆனந்தராவ்: நோக்கு இதெல்லாம் நடந்துருக்க வேண்டாம் ரங்கா. ஒன் மன்னி வெளியே பேசிண்டிருந்தது காதில விழுந்தது. பளிச்சிணு இதான் தோணித்து.

ரங்கையர்: யாராருக்கு என்னென்ன நடக்கணுங்கறது பகவத் சங்கல்பம். குருவி தாங்கும்; தாங்கணும்ணு தோணினா, பகவான் பனங்காயைத் தூக்கி அதுந் தலை மேல வச்சுடுவார்.

ஆனந்தராவ்: அன்னிக்கு ஒரே நாளிலே, ரெண்டு அடி நோக்கு விழறச்ச, அதுக்குச் சாட்சியா நிக்க வேண்டிய கட்டாயத்திலே நான் தான் —

ரங்கையர்:(மனசிற்குள்) பெரியண்ணா எப்பேர்ப்பட்ட ஞானி! ஹார்ட் அட்டாக் என்று உயிருக்குக் கெடு வைத்து விட்ட போதும் ஹோட்டல்… ஹோட்டல் என்ற கர்மாவைச் செய்ய என்ன துடிக்கிறார். விடுதலையா? இங்கேயே பெற முடியாத விடுதலை இனி எங்க கிடைக்கும்! இந்த பந்தங்களின் வலை பின்னி இழுக்கும் போது எத்தனை நாளைக்கு அந்த மர்கட சந்நியாசம் சாத்தியமாகும்? நான் பந்தமா பட்டிருக்கிறேன்? இல்லை. தீட்சை வாங்கி பிட்சா பாத்திரத்தை ஏந்தித் தேசாந்திரம் போனால் தானா சந்நியாசம்? என்னைத் தியாகம் செய்வதன்றோ சந்நியாசம்? எதற்கோ என்றைக்கோ என்னை நான் தியாகம் செய்து விட்டதாக நினைத்த மமதையின் மேல் ஜகதீஸ்வரி சரியான அடி கொடுத்தாள்! எப்படி புழுவாய்த் துடித்து விட்டேன்… அவள் சோதனையில் நான் தோற்றுப் போனேன்.’

ஆனந்தராவ்: என்ன ரங்கா மனசுக்குள்ளே பேசிண்டிருக்கியா?

ரங்கையர்: ஒரு ஸ்லோகம் ஞாபகம் வர்றது..

ஆனந்தராவ்: சொல்லு

ரங்கையர்:முக்தாபிமானீ முக்தோ ஹி பத்தேச

பத்தாமி மான்யபி

கிம்வதந்தீதி ஸத்யேயம் யாமதி

ஸாகதிர்பவேத்

ஆனந்தராவ்: இதனோட அர்த்தத்தை ஒரு தடவை சொல்லு ரங்கா!

ரங்கையர்: விடுதலை யடைந்தவனாக நினைப்பவனுக்கு விடுதலையே. பந்த முற்றோனாய் நினைப்பவனுக்கு பந்தமே நேருகிறது. நினைக்கிற நிலையே அவரவருக்குச் சித்திக்கிறது.

ஆனந்தராவ்: பளிச்சுனு தெரை வெலகினாப்ல இருக்கு. கேக்கறச்சே, அட இவ்வளவு வெறும் பாடு எதுக்குண்ணு, கரையேறிட்டாப்ல இருக்கு பத்து நிமிஷம் போனா மறுபடியும் எல்லாம் மறந்து இருட்ல தடுமாறி வழி தேடறாப்ல தோணறது.

ரங்கையர்: பக்குவம் வரணும்ணா.

ஆனந்தராவ்: வரணும். வரட்டும். வர்றச்சே வரட்டும்! நேக்கு ஒண்ணு தோணறது!

ரங்கையர்: என்னண்ணா?

ஆனந்தராவ்: திருமாங்குடியிலேர்ந்து என்னைப் பார்க்க கிருஷ்ணராவ் வந்திருக்கான்.

ரங்கையர்: ம்ஹ்ம் சொல்லுங்கோ!

ஆனந்தராவ்: நான் ஜம்னா விஷயம் ஒண்ணும் எடுக்கப் போறதில்லே ரங்கா! நீ ஏன் மொகத்தை அப்படிச் சுளிக்கறே?

ரங்கையர்: நான் முகம் சுளிக்கல்லேண்ணா. மறந்துண்டிக்கறது சட்டுண்ணு ஞாபகம் வர்றச்சே திகீர்ணு பத்திக்கறது.

ஆனந்தராவ்: போகட்டும். விஷயத்துக்கு வர்றேன்! கிருஷ்ணராவ் கான்வெண்ட் வச்சிருக்கானே தெரியுமோல்லியா.

ரங்கையர்: தெரியுமேண்ணா.

ஆனந்தராவ்: அதை ஹைஸ்கூல் ஆக்க சாங்ஷன் வாங்கிட்டானாம். இங்கீஷ் மீடியம் ஸ்கூல்! நன்னா இங்கிலீஷ் தெரிஞ்சவா யாரையாவது கரஸ்பாண்டன்ட் ஆக்கணும்னு பார்க்கறான்.

ரங்கையர்: நல்ல யோஜனைதான்!

ஆனந்தராவ்: அவன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கறது பொண்ணு பொகு சிரேஷ்டம்னான்.

ரங்கையர்: என்னண்ணா, எங்கேயோ சுத்தி வளைக்கறேள்?

ஆனந்தராவ்: அப்ப நான் சுத்தி வளைக்கலே. டைரக்டா பாய்ண்டுக்கு வந்துடறேன்! ஒன்னாலே மோனிகாவையும் குழந்தை யோகியையும் இந்த ஊர்ல வச்சுண்டு குடித்தனம் பண்ண முடியாது. மோனிகாவுக்குப் பொண் தொணை வேணும். மொட்டு மொட்டுனு ஒண்டியா வீட்ல ஒக்காந்துண்டு அவ என்ன பண்ணப் போறா? கேட்டுண்டிருக்கியா?

ரங்கையர்: கேக்கறேண்ணா! சொல்லுங்கோ!

ஆனந்தராவ்: கிருஷ்ணாராவ், திருமாங்குடியிலே பெரிய தோட்டம் வச்சிருக்கான். மா, பலா, அன்னாசின்னு ஒட்டுச் செடி விக்கற நர்ஸரி இருக்கு! ஒரு பக்கமா ஸ்கூலும் இருக்கு. குழந்தை குட்டி கெடயாது. அதனாலேதான் அவா ரெண்டு பேரும் செடியோ கொழந்தைகளோன்னு அன்பைப் பரிமாறிக்க அலையறா! அங்கே அவா மோனிகாவை, நன்னா கவனிச்சுப்பா! கொழந்தை யோகியும் நல்ல சூழ்நிலையே வளருவான். கூட ஜம்னாவும் இருக்கா.

ரங்கையர்: அது ஒண்ணை விட்டுங்கோ! அவ இருக்கறதால, அங்கே இவா ரெண்டு பேரும் போக வேண்டாம்னு தோணறது!

ஆனந்தராவ்: இவ்வளவு கல் மனசு நோக்குப் பொருத்தமில்லே ரங்கா!

ரங்கையர்: கல் மனசா… நேக்கா?

ஆனந்தராவ்: சின்னக் கொழந்தைகள் பண்ற தப்பு சிறிசோ பெரிசோ, நாம என்ன பண்றது? மன்னிக்கறதைத் தவிர நாம வேற என்ன பண்ண முடியும்?

ரங்கையர்: வேண்டாம்ணா அந்தப் பேச்சு வேண்டாம்!

ஆனந்தராவ்: சரி விட்டுடறேன்! ஆனா பகவான் எத்தனை பெரிய பெரிய தப்புகளை மன்னிச்சுண்டிருக்கான்! லோகத்திலே நடக்கிற மஹா பாவங்களுக்கு மன்னிப்பு உண்டோ? ஆனா லோகம் நடந்துண்டிருக்கே, என்னதைக் காட்டறது? பகவான் மன்னிச்சுண்டே இருக்கான்.

ரங்கையர்: நாம பகவான் இல்லேண்ணா!

ஆனந்தராவ்: வாஸ்தவம் நாம மனுஷாதான் பகவான் நம்மை மன்னிச் சுண்டிருக்கச்சே, நாம மத்த வாளை, நாம பெத்த கொழந்தையை மன்னிக்க வேண்டாமோ?

ரங்கையர்: (குரல் கம்முகிறது) அண்ணா!

ஆனந்தராவ்: அதானே தர்மம்!

ரங்கையர்: ஒங்க இஷ்டம்ணா!

ஆனந்தராவ்: அப்படிச் சொல்றது ஏதோ வேண்டா வெறுப்பா சொல்றாப்ல இருக்கு!

ரங்கையர்: ஒங்களுக்கு எது சரிண்ணு தோணறதோ அது என்னிக்கும் சரிண்ணு தானேண்ணா நடந்துண்டிருக்கேன்.

ஆனந்தராவ்: அப்போ சரி. நான் இதெல்லாம் முன்னாடியே யோஜனை பண்ணிட்டு கிருஷ்ணா ராவைக் கேட்டு வச்சுட்டேன் ராஜா வந்ததும், ஒரு எஸ்டிடி பண்ணி இன்னிக்கு சாயந்தரம் வர்றதா சொல்லிடறேன்.

ரங்கையர்: என்னேயே கொண்டு போய் விடற பாரத்தையும், ஜம்னாவை மொகத்துக்கு மொகம் சந்திக்கற சங்கடத்தையும் வச்சுடாதீங்கோ!

ஆனந்தராவ்: இல்லே ரங்கா! அந்த அளவு நான் கொடூரமானவன் இல்லே! ராஜாமணியும் கங்காபாயும் போய்ட்டு வருவா.

ரங்கையர்: சரிண்ணா சந்தோஷம்!

ஆனந்தராவ்: இப்ப நோக்கு அவா சௌகர்யத்தை மட்டும் பார்த்துட்டோம். நோக்கிருந்த ஆதார வேர்களையெல்லாம் அறுத்துட்டமேண்ணு அங்கலாய்ப்பு வர்றது! நீ தனியா எப்படி ஆத்திலே இருப்பே?

ரங்கையர்: எங்கேண்ணா தனியா இருக்கப் போறேன்?

ஆனந்தராவ்: என்ன பண்ணுவே?

ரங்கையர்: இன்னமே வீடு என்னத்துக்கு காலி பண்ணிடறேன்!

ஆனந்தராவ்: காலி பண்ணிட்டு?

ரங்கையர்: குளிக்கணும், படுக்கணும், இதுக்காக நான் ஒண்டி, நேக்காக ஒரு வீடு எதுக்கு? பேசாம ஆனந்தபவனுக்கே வந்துடறேன்!

ஆனந்தராவ்: (உணர்ச்சி வசப்பட்டு) ரங்கா.

ரங்கையர்: நேக்கு எப்பவும் ஆனந்தபவன்ல தலை சாயற வரைக்கும் எடம் உண்டோல்லியோ அண்ணா?

ஆனந்தராவ்: ரங்கா இதெல்லாம் என்ன பேச்சு! வீட்டைக் காலி பண்ணலாம். இப்பவாண்டாம்! நான் சொல்றேன். அப்போ பண்ணு என்ன வாடகை மம்மானியா ஆயிடப் போறது? வீடு இருக்கட்டும். மோனிகாவும் கொழந்தையும் போக்கு வரவுக்கு ஒரு எடம்ணு வேணுமோல் லியோ.

கங்காபாய்: (வெளியேயிருந்து) ரங்கா, டாக்டர் வந்துண்டிருக்கார்.

ரங்கையர்: சரிண்ணா நான் வர்றேன்.

ஆனந்தராவ்: சரி சாயங்காலமா நான் கங்காபாயையும் ராஜாமணியையும் அனுப்பறேன். மோனிகாவை ரெடியா இருக்கச் சொல்லு. நீ கௌம்பு டாக்டர் ரெஸ்ட்ல இருக்கச்ச எதுக்கு வளவளண்ணு பேசறேன்னு சீறுவார்.

(திரை)

Series Navigationநாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்பிரசவ வெளி
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *