நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

This entry is part 5 of 31 in the series 11 ஜனவரி 2015

                                                            

நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம்.
கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் புகுந்த நகம். கால் ஆணி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டானால் அவற்றை உதாசீனம் செய்யாமல் உடன் கவனித்தாக வேண்டும்.இல்லாவிட்டால் காலப்போக்கில் பாதிக்கப்பட்ட காலையே இழக்க நேரிடும். இவ்வாறு நீரிழிவு நோயுள்ளவர்களில் சுமார் 15 சதவிகித்தினர் கால்களை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் கால்களின் தோலில் உண்டாகும் வெடிப்பு அல்லது கீறல் எனலாம். இதனால் அந்த காயத்தின் வழியாக நோய்க் கிருமிகள் கால்பகுதிக்குள் எளிதில் புகுந்து விடுகின்றன.சரியான அளவிலான காலணிகள் அணியாதது, கல் மீது மிதிப்பது போன்ற சாதாரண காரணங்கள் கூட கால் தோல்களை பாதிக்கவல்லவை .வலி தெரியாத காரணத்தால் கிருமிகள் தாக்கிய புண்களுடன் தொடர்ந்து நடப்பதால் புண் பெரிதாகி கால் எலும்பு வரைகூட ஆழமாக பரவலாம்.
சில சாதாரண செயல்பாடுகளின் மூலமாக நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய கால்களைப் பாத்துகாத்துக்கொள்ளலாம்.

                                       கால்களைப் பாதுகாக்க சில முக்கிய வழிமுறைகள்

* காலணி – நீரிழிவு நோயாளிகள் கூடுமானவரை எப்போதும் காலணிகள் ( Shoes ) அணிந்துகொள்வதே நல்லது. எங்காவது எதிலாவது இடித்துக்கொள்வது,கூர்மையான பொருள் குத்திவிடுவது, எங்காவது உரசிக்கொள்வது போன்ற சிறு சிறு விபத்துகள் வராமல் தடுப்பதற்கு எப்போதும் காலணிகள் அணிந்திருப்பது நல்லது. நமது கலாச்சாரம் வீட்டுக்குள் காலணிகள் அணிவதை வரவேற்பதில்லை என்றாலும், அங்கும் அணிந்துகொள்ள பிரத்தியேக காலணிகள் வைத்திருப்பது நல்லது.எப்போதுமே அடுத்தவரின் காலணிகளைப் பயன்படுத்தும் தீய பழக்கத்தை நாம் தவிர்ப்பது நல்லது.காளான் வகைகள், நோய்க் கிருமிகள் காலணிகளின் வழியாகவும் பரவும் தன்மையுடையவை. காலணிகள் இறுக்கமாக இருக்கக்கூடாது.ஒரே காலணிகளையே அன்றாடம் பயன்படுத்தாமல் இரண்டு ஜோடிகள் வைத்துக்கொண்டு மாறி மாறி பயன்படுத்துவது நல்லது. புது காலணிகளை தொடர்ந்து சில மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. இடையில் கழற்றிவிடுவது நல்லது. காலணிகள் வாங்கும்போது ஒவ்வொரு முறையும் அளவு பார்த்து வாஙகவேண்டும். அதோடு இரண்டு காலணிகளையும் அணிந்து பார்த்து வாங்கவேண்டும். ஒரு சிலருக்கு ஒரு கால் சற்று பெரிதாக இருக்கலாம். காலணிகள் வாங்க மாலையில் செல்லவேண்டும். காரணம் மாலையில் கால்கள் 5 சதவிகிதம் வீங்கிபோகும் வாய்ப்பு உள்ளது.

* கால்களை அன்றாடம் இரவில் பரிசோதித்துப் பார்ப்பது நல்ல பழக்கம். தோலில்  நிற மாற்றம், கீறல், தடிப்பு, வெடிப்பு போன்றவை ஏதேனும் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.

* அன்றாடம் கால்களை சோப்பு போட்டு கழுவி துணியால் துடைத்து உலர்த்துவது நல்லது. எப்போதும் ஈரமாக இருந்தால் தோல் மிருதுவாகி கிருமிகள் தாக்குவதை எளிதாக்கும்.கால் விரல்களின் இடுக்குகளைப் பராமரிப்பதும் அவசியமாகும். அப்பகுதியில்தான் சேற்றுப் புண் என்னும் காளான்களின் தொற்று எளிதில் உண்டாகும்.

* கால் விரல்களின் நகங்களை நேராக குறுக்கே வெட்டி கூரிய பகுதிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது. கோணலாக வெட்டினால் நகங்கள் சதைக்குள் புகுந்து வளர்ந்து வலியை தருவதோடு புண் உண்டாகும்.நகங்களை வெட்டும்போது சதையைச் சேர்த்து வெட்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

* தினமும் புதிய காலுறைகள் ( Stockings ) போட்டுக்கொள்ளுதல் நல்லது. அவை பருத்தியால் ( Cotton ) ஆனது நல்லது. காரணம் அது வியர்வையை எளிதில் உலர்த்தும் தன்மை கொண்டது. அழுக்கு காலுறைகளை திரும்பவும் பயன்படுத்துவது கிருமிகளின் தொற்றை எளிதாக்கும்.

          * கால் பாதத்தில் ஆணி, வெடிப்பு, தடிப்பு, மரு , சதைக்குள் புகுந்த நகம் போன்ற பிரச்னைகள் இருந்தால் நீங்களாகவே பிளேடுகள் அல்லது கத்தி பயன்படுத்தி சொந்தமாக ” அறுவை சிகிச்சை ” செய்துகொள்ளவோ அல்லது அமிலங்கள் அல்லது இதர சாதனங்கள் பயன்படுத்தி குணமாக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். அவை ஆபத்தான பின் விளைவுகளை உண்டு பண்ணிவிடலாம்.

          * நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய முகத்தை எவ்வாறு தினமும் அழகு படுத்தி பராமறிக்கிறார்களோ அதுபோலவே தங்களுடைய கால்களையும் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

          ( முடிந்தது )
Series Navigationசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்றுஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *