சீரங்க நாயகியார் ஊசல்

This entry is part 5 of 19 in the series 25 ஜனவரி 2015

periyaperumal-periyapiratti

இந்நூல் பெரிய கோயில் என்று போற்றப்படும் திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள பெரிய பிராட்டியான சீரங்க நாயகித்தாயாரை மங்களாசாசனம் செய்யும் நூலாகும். இதை யாத்தவர் கோனேரியப்பனையங்கார் ஆவார். இவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பேரன் என்பது இந்நூலின் இறுதியில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் அறிய முடிகிறது. இதோ அந்தத் தற்சிறப்புப் பாயிரம்;

தார்அங்கத் திருவரங்கர்க்கு ஊசல் பாடிச்

           சாத்தினான் பேரனெனும் தன்மை யாலும்

                ஆருங்கண்டே தெளியும் அவன் சொல் பாட்டின்

                                அதிசயத்தை அறிவன்என்னும் ஆசை யாலும்

                பாரெங்கும் புகழ்வேத வியாச பட்டர்

                                பதம்பணி கோனேரியப்பன் புன்சொல் லாகச்

                சீரங்க நாயகியார்க்கு ஒருபத் தைந்து

திருஊசல் திருநாமம் செப்பி னானே!

 

திருவரங்கப் பெருமானுக்கு ஏற்கனவே பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஓர் ஊசல் பாடி உள்ளார். அனைவரும் கண்டு தெளியும் அந்தப் பாட்டனாரின் பாட்டின் அதிசயத்தை அறிய வியாச பட்டர் எனும் ஆசாரியாரின் பாதம் பணிகின்ற கோனேரியப்பன் ஆசைப்படுகிறார்.

கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் இருவர் ஆவர். அவர்களில் மூத்தவரின் திருநாமம் பராசரபட்டர் என்பதாகும். இளையவரே இந்நூலாசிரியர் வணங்க ஆசைப்படும் வேத வியாச பட்டர் ஆவார். அவருக்கு சீராமப் பிள்ளை என்றும் ஒரு பெயர் வழங்கி வந்தது. மேலும் அவர் தன்னடக்கமாக அற்பமான சொற்களால் நான் இந்த பதினைந்து பாடல்களால் ஆகிய திரு ஊசல் எனும் நூல் பாடி உள்ளேன் என்கிறார். இவை யாவும் இப்பாசுரத்தால் அறியப்படுகின்றன.

அடுத்து இந்நூலின் காப்புப் பாடலைப் பார்க்கலாம்.

 

முருகூரும் மகிழ்மாலை அணியு மார்பன்

                முத்தமிழன் கவித்தலைவன் முனிவர் வேந்தன்

           திருகூரு மனத்திருள்நீக் குதய பானு

                சீபராங் குசயோகி திருநா வீறன்

           அருகூருந் தண்பொருநை வழுதி நாடன்

                அஃகமலம் பாடினான் அன்ன மேறி

           குருகூரன் சடகோபன் காரி மாறன்

                கோகனக மலரடியின் குணங்கள் போற்றி

 

இக்காப்புச் செய்யுளில் நூலாசிரியர் நம்மாழ்வாரையே தாம் வழிபடும் கடவுளாக எண்ணி வாழ்த்துப் பாடுகிறார்.

”நம்மாழ்வார் மணம் வீசக்கூடிய மகிழ மாலையை அணிந்தவர்; மேலும் இயல். இசை, நாடகம் எனும் முத்தமிழிலும் அவர் கவி பாடுவதில் வல்லமை மிக்கவர்; அவர் நம் மனத்திருளை நீக்கும் சூரியன் போன்றவர்; தாமிரபரணி நதிக் கரையில் பாண்டிய நாட்டில் திருக்குருகூரில் வாழ்பவர்; அன்னத்தைத் தம் வாகனமாய்க் கொண்டவர்; பராங்குசர், சடகோபர், காரி மாறன், எனும் திருநாமங்களை உடையவர்;”

என்றெல்லாம் நம்மாழ்வாரைப் போற்றி அவரது திருவடிகளை நான் வணங்குகின்றேன் என்று கோனேரியப்பனையங்கார் பாடுகிறார். பெரும்பாலும் காப்புச் செய்யுள்கள் இறைவனைக் குறித்தே பாடுவதுதான் மரபாகும். பகவத் சம்பந்தத்தை விட பகவத சம்பந்தம் மேலானது என்பது என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமாகும். அவ்வகையில் பெருமாளிடம் ஆழங்கால் பட்டவரான நம்மாழ்வாரையே நூலாசிரியர் நூலின் தொடக்கத்தில் துதித்து மகிழ்கிறார்.

==================================================================

 

 

Series Navigationசுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:கவலை தரும் தென்னை விவசாயம்
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    எழிலன் says:

    கட்டுரை துவங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டது. இன்னும் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *