சோசியம் பாக்கலையோ சோசியம்.

This entry is part 3 of 24 in the series 8 பெப்ருவரி 2015

ராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.”
கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல இருந்தாள். அழகாக உடுத்தியிருந்தாள். தலையைப் படிய வாரி இருந்தாள். வில்லாக வளைந்திருந்த புருவங்களுக்கு மேலே அளவான சைசில் சிகப்பு பொட்டு வைத்திருந்தாள். ராகவன் அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ பராசக்தி, பராசக்தி “ அவள் வாய் மூன்று முறை உச்சரித்தது. தெருவின் இடமும் வலமும் பார்த்தாள். யாரும் எதிர்படவில்லை. முக்கியமாக அந்தத் திருட்டுப் பூனை கண்ணில் படவேயில்லை.
“ என்ன ஜனனி இது? தினமும்தான் வாக்கிங் போறேன். அதுவும் தெருக்கோடில இருக்கற பார்க்குக்கு? அதுக்கு ஏன் இந்த பில்ட் அப்? “
“ சும்மா இருங்கோ? உங்களுக்கு வியாழன் தோஷமாம்”
“ இன்னிக்கு புதன் தானே? “
“ கிண்டல் பண்ணாதீங்கோ. எதிர்பாராத விபத்துன்னு போட்டிருக்கான். சன் டிவிலேயும் அதேதான் சொன்னான்.”
“ நீ எதுக்க வந்தா மட்டும் விபத்து விலகிப் போயிடுமோ? “
“ நெறஞ்ச சுமங்கலி எதுக்க வந்தா எந்த தோஷமும் வெலகிடுமாம்.”
“ இது யாரு கலைஞரா? ஜெயாவா?”
“ சங்கரா.. அத விடுங்கோ.. போனமா வந்தமான்னு இருக்கணும்.. அந்த நிஷ்டூரம் நாராயணனோட பேச்செல்லாம் வச்சிக்கப்படாது”
நிஷ்டூரம் நாராயணன் என் அண்டை வீட்டுக்காரன். புறநகர் பகுதி எனும் அத்துவானக் காட்டில் நான் வீடு கட்டிக் கொண்டு வந்தபோது, எனக்கு முன்பே குடிவந்து தைரியம் சொன்னவன். எனக்கு அவன் பேசுவது பிடிக்கும். ஜனனிக்கு அவனைக் கண்டாலே ஆகாது.
“ வாஸ்துலாம் ஹம்பக் சார். ஈசான மூலை, அதான் நார்த் ஈஸ்ட், அங்கேதான் கிச்சன் இருக்கணூம்பான். ஏன் சவுத் வெஸ்ட்ல வெச்சா அடுப்பு அணைஞ்சுடுமா? இல்ல அரிசி வேகாதா ?” என்பான்.
எல்லோரும் ஓய்வுக்குப் பிறகு தி ஹிண்டுவில் ஆரம்பித்து, பிரிண்டட் அண்டு பப்ளீஷ்டு பை வரை படித்து காலத்தை ஓட்டும்போது, இவன் செவ்வாய் கிழமை பேப்பருடன் வரும் சோசிய மலர்களை மட்டும் வைத்துக் கொண்டு, அக்கு வேறு ஆணி வேறாக அலசுவான்.
“ லாஸ்ட் வீக் கும்பத்துக்கு போட்டிருந்ததை அப்படியே இந்த வீக் மேஷத்துக்கு போட்டிருக்கான். சுத்த •பிராடு. எல்லாம் பெர்முடேஷன் காம்பினேஷன் கணக்கா போயிடுத்து. இதிலே சோசிய செம்மல் ரங்கபாஷ்யம்னு பேரு வேற “
“ பட் நாணா.. ஒங்க வீட்ல கிச்சன் நார்த் ஈஸ்ட் தானே” என்று ராகவன் சீண்டுவான்.
“ அதுக்குக் காரணம் வாஸ்து இல்ல.. வஸ்து.. ஹாலு, பெட்ரூம்னு ஆளாளுக்கு ப்ளான் போட்டதுல கிச்சன் ஒதுங்கி ஒதுங்கி ஓரமாப் போயிடுத்து. இருந்த காசுல எட்டடி கூட வராதுன்னுட்டான் மேஸ்திரி. இருந்த சிமெண்டைப் போட்டு ஒப்பேத்தினேன். ஒரு வருஷம் வரைக்கும் மேடையே இல்ல. தரையிலேதான் சமையல். நான் நான்ரீபேயபல்  பிஎஃப் வாங்கித்தான் மேடையே போட்டேன்.”
0
நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ராகவனின் நண்பன் ரவி வந்திருந்தான். இருவரும் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அண்டை வீட்டு நாராயணன் அவன் வீட்டுக் காம்பவுண்டில் நடை போட்டுக் கொண்டிருந்தான்.
“ அது நாராயணன்தானே? “
“ ஆமாம்! அவனை உனக்குத் தெரியுமா? “
“ வெறுமே தெரியுமான்னு கேக்காதே! வெவரமாவே தெரியும். “
ராகவனின் காது மடல்கள் நீள ஆரம்பித்தன. “ சொல்லு சொல்லு “ என்றான்.
“ இப்ப வேணூன்னா அவன் சேலையூர் நாராயணனா இருக்கலாம். ஆனா இதுக்கு முன்னாடி அவன் சிதம்பரம் நாராயணன்.. “
“ என்னடா பெரிய சிதம்பர ரகசியம் மாதிரி புதிர் போடற.. நாராயணன் சிதம்பரத்தில இருந்ததா ஒரு தடவை கூட என்கிட்ட சொல்லலியே? “
“ எப்படிச் சொல்லுவான்? சொல்லிக்கறா மாதிரி இருந்தாத்தானே? “
0
சிதம்பரம் நடராசர் கோயிலை ஒட்டிய அக்ரகாரத்தில் மொத்தம் 46 வீடுகள். எல்லாம் வாசற்திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடுகள். அதில் எட்டாவது வீட்டில் இருந்தது கிருஷ்ண சர்மாவின் குடும்பம். வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்த எல்லா அந்தணர்களும் பெயருக்கு பின்னால் சர்மா என்றோ சாஸ்திரி என்றோ போட்டுக் கொண்டிருந்த காலம் அது. பிராம்மணர்கள் வயதில் மூத்தவர்களைப் பார்க்கும்போது சமஸ்கிருத மொழியில் தன்னை இன்ன கோத்திரம், இன்ன சூத்திரம், இன்ன பெயர் என அறிமுகப் படுத்திக் கொள்வர். அதில் பெயருடன் சர்மன் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அது மருவி சர்மா ஆகிவிட்டது. சர்மன் என்றால் பெயர். வைதீகத் தொழிலைக் கொண்டவர்கள் சாஸ்திரிகள். அவர்களது வாரிசுகள் வைத்யநாத சாஸ்திரி, சீனிவாச சாஸ்திரி என தம்மை அழைத்துக் கொண்டர்கள்.
கிருஷ்ணன் சாஸ்திரி இல்லை. அதனால் சர்மா! கிருஷ்ணன் அக்கிரகாரத்தில் ஒரே சோசியர். சாஸ்திரிகள் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நாள் குறித்துக் கொடுப்பார்கள். கிருஷ்ணன் ஜாதகம் பார்த்து நல்லது கெட்டது சொல்வார். அதற்குப் பரிகாரமும் சொல்வார். பத்துக்கு ஆறு அது அப்படியே பலித்ததில், கணக்கின் விதிப்படி அவர் சோசியர் என அறியப்பட்டார்.
கிருஷ்ணனுக்கு ஒரே மகள். அபிராமி. எட்டாவது படிக்கும்போதே அவள் பெரிய மனுஷி ஆகிவிட்டதாலும், ஒன்பதுக்கு சிதம்பரத்திற்கு வெளியே போக வேண்டும் என்பதாலும், அவள் படிப்பு நிறுத்தப்பட்டது. அந்தணர் பெண்கள் பூப்பெய்தும் நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணிப்பதில்லை. மற்ற சாதியினர் அதைச் செய்வதற்குக் காரணம், பிறப்பு நாள், நேரம் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
அபிராமி பிறந்த நேரத்து ஜாதகம் அவ்வளவு ஒசத்தியில்லை என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். சிரம தசைகள் கூடி நின்ற ஜாதகம். திருமணமும், பிள்ளைப்பேறும் பெரும் தடைகளைக் கொண்டது என அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவருக்கு ஒரு விபரீத எண்ணம் வந்தது. அபிராமி பூப்பெய்திய நேரத்தைக் கொண்டு புதிய ஜாதகம் ஒன்றைக் கணித்தார். கட்டம் போட்டுப் பார்த்ததில், பிறப்பு ஜாதகத்தை விட அது தேவலாம் என்று இருந்தது. யாருக்கும் தெரியாமல் அதையே அபிராமியின் பிறப்பு ஜாதகமாக மாற்றி விட்டார்.
என்னதான் மாற்றினாலும் விதி விடுமோ! அபிராமிக்கு வயதானதே தவிர வரன் கிடைக்கவில்லை. அப்போது அதிர்ஷ்டவசமாக நாராயணன் அவரைத் தேடி வந்தான்.
“ நமஸ்காரம். எம் பேர் நாராயணன். திருக்குறுங்குடி சாமிநாத சர்மாவோட பிள்ளை. இங்கே கோயில்ல சீட்டு போடற வேலை கெடைச்சிருக்கு.. தங்க இடம் தேடிண்டிருக்கேன். ஒங்களப் பாக்கச் சொன்னார் சங்கர தீட்சிதர்.. “
பையன் சுருட்டை முடியுடன் அழகாக இருந்தான். நாலு முழ வேட்டியும், கட்டம் போட்ட கைத்தறி சட்டையும் அணிந்திருந்தான். கிராப்பும் இல்லாமல் குடுமியும் இல்லாமல் ஒரு மாதிரி தலை வாரியிருந்தான். பாக்கெட்டில் சின்ன சீப்பு எட்டிப் பார்த்தது.
வேறு யாராவதாக இருந்தால், கிருஷ்ணன் யார் பக்கமாவது கைக்காட்டி விட்டிருப்பார். வீட்டில் வயசுப் பெண்ணை வைத்துக் கொண்டு பிரம்மச்சாரிக்கு இடம் கொடுப்பது புத்திசாலித்தனம் இல்லை என்பதை அவர் அறிந்தே இருந்தார். கூடவே ஊரின் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டி வரும். ஆனால் அன்று அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
“ புழக்கடையிலே ஒரு ரூம் இருக்கு.. தட்டு முட்டு சாமான் போட்டு வச்சிருக்கோம். சரிப்படுமான்னு பாரு.. “
எட்டுக்கு எட்டு அறை. ஓரத்தில் மண்ணால் கட்டிய அடுப்பும், அதன் மேல் புதைத்த பித்தளை குண்டானும் இருந்தன. சுத்தமாக காற்றோ வெளிச்சமோ இல்லாத அறை.
“ மாமா! இது வென்னீர் உள்ளுன்னா? “
“ ஆமா! ஆனா இப்போ வென்னீரை வெளியிலேயே போட்டுக்கறா. உள்ளே போட்டா சுத்தமா புகை அப்பிண்டு கண்ணெல்லாம் எரியறது.. செவரெல்லாம் கருப்பா ஆயிடறது.. அதான்.. “
நாராயணனுக்கு குழப்பமாக இருந்தது. காற்றே இல்லாத அறையில் எப்படி?
அவன் மனதைப் படித்தவர்போல கிருஷ்ணன் சொன்னார்: “ வேற நல்ல எடம் கெடைக்கற வரையிலும் இங்கே இருந்துக்கோ.. மழை இல்லைன்னா இந்த வேப்ப மரத்துக்கடியிலே ரம்மியமா காத்து வரும். வாசக் கதவத் தொறந்து வச்சிண்டா வெளிச்சம் பளீர்னு அடிக்கும். வாடகைன்னு ஒண்ணும் கொடுக்க வேண்டாம்.. “
இப்போது அந்த அறை சொர்க்கம் பொலத் தோன்றியது நாராயணனுக்கு!
ஒரு மாதத்தில் வேறு நல்ல இடம் கிடைத்தாலும் நாராயணன் போவதாக இல்லை என்கிற அளவிற்கு மாறிப்போனான். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று காலை காபி, இரவு உணவு என்று விசாலம் மாமி அவன் மீது அன்பைப் பொழிவது. இன்னொன்று அவன் அபிராமியைப் பார்த்தது.
0
சன்னதி தெருவில் சாவு விழுந்து விட்டது. வெத்தலை ரெட்டியார் போய் விட்டார். போனது நல்லதுக்குத்தான் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். அவர் தன் சம்சாரத்தைப் படுத்திய பாட்டிற்கு அவள் தான் முதலில் மண்டையைப் போடுவாள் என்று எல்லோரும் எதிபார்த்தார்கள். பாவம் பிழைத்தாள். ரெட்டியார் முந்திக் கொண்டார்.
சாவு விழுந்த தெருவில் கோயில் இருந்தால், அன்று சவம் எடுக்கும் வரையிலும், கோயிலை சாற்றியே வைத்திருப்பார்கள். பிறகு ‘சுத்தி’ பண்ணிய பிறகுதான் கோயிலையே திறப்பார்கள். காலையிலேயே சாவு விழுந்து விட்டது. அதனால் வேலைக்கு போன நாராயணனை உள்ளேயே விட வில்லை. நாராயணனுக்கு கோயில் சாத்தியதால் ஒரே சங்கடம்தான் ஏற்பட்டது. அவனுக்கு மதிய உணவு அம்பேல்.
“ இன்னிக்கு கோயில்ல எதுவும் கிடையாது அம்பி.. அடுப்பு மூட்ட முடியாது.. சாமிக்கு பிரசாதம் கிடையாது.. அதானால நீ ஏதாவது வெளியில பாத்துக்கோ.. “
தீட்சிதர் சொன்ன பிறகு அப்பீல் ஏது? நாராயணன் கீழண்டை தெரு வழியாக தன் புழக்கடை அறைக்கு வந்து சேர்ந்தான். மேலண்டை தெருவில் இருக்கும் வீட்டிற்கு அவன் கீழ்ண்டை தெரு வழியாகத்தான் வர வேண்டும். அப்படி ஒரு கண்டிசன் போட்டிருந்தார் கிருஷ்ணன்.
“ ஊர் வாய் பொல்லாது அம்பி.. வயசு பொண்ண வச்சிண்டிருக்கேன்.. ஒன்னை வாச வழியா நுழைய விட்டா, எல்லாருக்கும் அவலாயிடும்.. அதனால் நீ பின் பக்கமா வந்துக்கோ.. என்ன? “
கோயில் மூடியது அறியாத அபிராமி கொல்லையில் பூ பறித்துக் கொண்டிருந்தாள். படல் கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினாள். நாராயணனைப் பார்த்துப் பதறினாள். சிலையாக நின்றே விட்டாள். நாராயணனுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். ஒரு கையில் பூக்கூடையும், மறு கையால் பொத்திய வாயும் அவளை ஒரு ஆனந்தவிகடன் ஓவியம் போலவே அவனுக்குக் காட்டியது.
அபிராமி நொடியில் சுதாரித்துக் கொண்டாள். மின்னலென உள்ளே ஓடிப் போனாள்.
“ அம்மா! யாரோ கொல்லையிலே நிக்கறா.. “
விசாலம் மாமி எட்டிப் பார்த்தாள். “ போடி பைத்தியம்.. நம்ம நாணாதாண்டி.. வா அம்பி, சுருக்க வந்துட்ட? “
விவரம் சொன்னவுடன் சுடச்சுட இட்லியும் கொத்சும் வந்ததும், மதியம் பருப்புத் துவையலும் வத்த குழம்பும் எனப் பிரமாதப்படுத்தியதும் மாமியின் பெயரைப் போலவே மனசும் விசாலம் என்பதைத் தவிர உள்நோக்கம் ஏதும் இல்லை.
0
“எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கோயிலைக் கட்டிண்டு அழுவே! உபயதாரர் இருக்கற வரைக்கும் ஓடும்.. அப்புறம்? பேசாம ஒழிஞ்ச நேரத்துல எங்கிட்டே கொஞ்சம் ஜோஸ்யம் கத்துக்கோ! இது இல்லேன்னாலும் அது கைக் கொடுக்கும் “
களவும் கற்று மறன்னாம்பளே! கட்டம் தானே? கத்துண்டு ஒத்து வரலைன்னா மறந்துட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டே மதிய வேளைகளில் கிருஷ்ணனிடம் ஜாதகம், பரிகாரம் என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான் நாராயணன். மறக்க நினைத்தவனுக்கு அது பதிந்து போனது தான் விசேஷம். டவுனுக்குப் போய் பழைய புத்தகக் கடையில் கீரோஸ் கைரேகை சாஸ்திரம் ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி அதையும் படித்து நெட்டுரு போட்டுக் கொண்டான். அதில் ஆரம்பித்த்து தான் வினை!
சீட்டு வாங்க கை நீட்டுபவர்களின் ரேகைகளை எல்லாம் அவன் கண்கள் ஆராய ஆரம்பித்தன. மூளை அதன் பலா பலன்களை புட்டு புட்டு வைத்தது. ஆனாலும் அல்லவைகளைச் சொல்லாமல் அவன் மௌனம் காத்தான். எல்லாம் அபிராமியின் ரேகைகளைப் பார்க்கும் வரை தான்.
விசாலம் அபிராமிக்கு மருதாணி இட்டுக் கொண்டிருந்தாள். வலது கையைக் காட்டிக் கொண்டு இடது கை மணிக்கட்டை எதிரே இருக்கும் சின்னப் பெஞ்சில் முட்டுக் கொடுத்து இருந்தாள்  அபிராமி. பெருமாள் ரட்சிப்பது போல அவள் கை விரல்கள் பிரிந்து மேல் நோக்கி இருந்தது. பின் கட்டு வழியாக தன்  அறைக்குப் போக யத்தனித்தவன் கண்களில் மத்தியான வெயிலில் ஒளிர்ந்த அந்தக் கை படுவானேன்?
நாராயணனின் கண்கள் தன்னிச்சையாக அபிராமியின் ரேகைகளை மேய்ந்தன. என்ன இது? புத்தி ரேகையின் குறுக்காக ஒரு கோடு ஓடுகிறதே! இது அனர்த்தம் இல்லையோ! கூடா நட்பு என்று சொல்வார்களே! இந்தப் பெண்  அப்படி ஏதாவது பண்ணிக் கொண்டு விடுமா? தந்தச் சிலையை எந்த அம்மி கொத்துபவன் சீரழிக்கப் போகிறானோ?
அந்த  நிமிஷத்தில் அவனுக்கு அபிராமியின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எப்படி கேட்பது. ஏன்? எதற்கு? என்று ஆயிரம் கேள்வி வரும்.
விசாலம் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அபிராமி சுதாரித்துக் கொண்டு சட்டென்று தாவணியை எடுத்து போர்த்திக் கொண்டாள். தலையைக் குனிந்து கொண்டாள்.
“ வா அம்பி. என்ன கோயில் உச்சி வேளைக்கு நடையை  சாத்திட்டாளோ? சாப்டயோ? இங்க சாப்டறயா? இன்னிக்கு ஒண்ணும் பெருசா இல்லே! மனசே சரியில்லை.. பருப்பு தொகையலும், மிளகு ரசமும் தான் வெச்சிருக்கேன். பரவால்லியோ?”
“ வேணாம் மாமி! பகவான் எனக்கு படியளக்கறாரே! இன்னிக்கு வெண் பொங்கலும் தயிர் சாதமும் கெடைச்சுது.. மாமா இல்லியா?”
“ அவர் பக்கத்து டவுன் வரைக்கும் போயிருக்கார்.. ஏதோ ஜாதகப் பொருத்தம் பாக்கணுமாம்.. ஊருக்கெல்லாம் அவர் சொன்னா நடக்கறது.. பெத்த பொண்ணுக்கு  நடக்க மாட்டேங்கறது “
நாராயணனுக்கு சட்டென்று பிடி கிடைத்தது. மாமா இல்லை. மாமியிடம் அபிராமி ஜாதகத்தைக் கேட்டால் என்ன?
“ எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கு மாமி.. வேணும்னா அபியோட ஜாதகத்தை என்னாண்ட காட்டுங்களேன்.. மாமாவுக்கு தெரியாத ஏதோ ஒண்ணு என் கண்ணுக்குப் படலாம்”
விசாலம் கண்ணில் ஒரு ஆசையும் ஏக்கமும் மின்னலென மறைந்து போனது. உடனே ஒரு வித பயமும் வந்து குடியேறிவிட்டது.
“ வேணாம் அம்பி! அவருக்கு தெரிஞ்சா கொன்னுடுவார்.. இவளோட ஜாதகத்தை நானே நாலஞ்சு வாட்டிதான் பாத்துருக்கேன்.. யாருக்கும் காட்டக் கூடாதுன்னு சொல்லியிருக்கார் “
“ ஜாதகத்தைக் காட்டாம எப்படி மாமி மாப்பிள்ளை தேடறது?”
“ காட்டற ஜாதகம் இவள்து இல்லே “
சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள் விசாலம் மாமி. உளறி விட்டோமோ? சட்டென்று வேர்த்த்து. படபடவென்று ஆனது. லேசாக தலையை தூணில் சாய்த்துக் கொண்டாள். உள்ளே ஓடிய அபிராமி, கையில் தண்ணீர் சொம்புடன் வந்தாள். கொஞ்சம் குடித்தவுடன் விசாலம் நிதானத்திற்கு வந்தாள். உள்ளே போய் படுத்துக் கொண்டாள். நாராயணன் விழித்தபடி நின்றிருந்தான். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அபிராமியும் அங்கேயே நின்று கொண்டிருப்பது அவனுக்கு தெரிந்தது. அம்மாவுக்கு முன்னாலேயே உள்ளே ஓடி விடும் பெண் ஆயிற்றே! ஏன் நிற்கிறாள்?
அபிராமியின் கையில் பழுப்பேறிய நாலாய் மடிக்கப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. ஓரத்தில் மஞ்சள் தடவி மங்கி இருந்தது. அதை பெஞ்சு மேல் வைத்து விட்டு, அவனை நோக்கி ஒரு அர்த்தப் பார்வையோடு அபிராமி உள்ளே போய் விட்டாள்.
இது அபிராமியின் உண்மையான ஜாதகம். இதில் என்ன இருக்கிறது என்று பார்க்க நாராயணனுக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டது. விசாலம் மாமி லேசாக குறட்டை விடுவது அவனுக்குக் கேட்டது. ஒருக்களித்த கதவின் இடைவெளியில் ஒரு ஒற்றைப் பின்னல் தெரிந்தது.
0
அபிராமியின் ஜாதகத்தில் எல்லா கோளூம் கந்தர கோளமாக இருந்தது. ஆயுசுக்கும் பரிகாரம் செய்தாலும் விடியாது என்று தெரிந்து கொண்டான் நாராயணன். உடனே ஒரு வெள்ளைத் தாளில் கட்டங்களை அப்படியே பிரதி எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் பழையபடியே அந்த பழுபேறிய காகிதத்தை பெஞ்சில் மீது வைத்து விட்டு வந்து விட்டான். சில நிமிடங்களில் அது அங்கிருந்து காணாமல் போயிற்று!
0
துல்லியமாக ஆராய்ந்ததில், அபிராமியின் ஜாதகத்தில் வேற்று சாதி சேர்க்கை உண்டு என்று அறிந்து கொண்டான். இதை எப்படி மாமாவிடமும் மாமியிடமும் சொல்வது? இதற்கு பரிகாரம் உண்டோ? அவளைக் காப்பாற்ற தானே அவளைக் கல்யாணம் செய்து கொண்டால் என்ன? அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. மாமா வடமா? அதிலேயே பிள்ளை தேடுகிறார் என்று அவனுக்குத் தெரியும். அவனுக்கு பிரஹசரணம். ஒப்புவார்களோ? இதற்கு தன் பெற்றோர் என்ன  சொல்வர். சொந்த வீடு. நிலபுலன் இவற்றோடு வரும் பெண்ணை ஏற்க கசக்குமா அவர்களுக்கு? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பிள்ளைக்கு இதைவிட ஒசத்தியான இடம் கிடைக்குமோ? இதை எப்படி நிறைவேற்றுவது?
0
“ வடமால்லே பிள்ளையே இல்லை.. எல்லாம் வடக்கே போயிட்டாங்க போலிருக்கு.. பேசாம பிரஹச்சரணத்துல பாக்கணும்.. ஆனா சாம வேதம் கூடாது.. இழுத்துண்டே இருப்பான்கள் “
மாமியிடம் சொல்லிக்  கொண்டிருந்தார் மாமா. பின் பக்கம் நிழலாடியது. நாராயணன் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டிருந்தான்.
“ ஏன்னா? “ என்று கிசுகிசுத்தாள் விசாலம். “ நாராயணன் கூட பிரஹச்சரணமோ என்னமோதான் சொன்னான். பேசாமா அவனுக்கே குடுத்துடலாமே! நம்ம அபியைக் கொடுத்தா என்ன? ஸ்திதி நம்ம விட சிதிலம் தான் அவாளுக்கு.. நிச்சயமா ஒத்துப்பா!” ஷர்மாவுக்கு அது சரியெனப் பட்டது. “மொதல்ல அம்பியிடம் பேசிப் பாரு “ என்று மஞ்சள் விளக்கைக் காட்டினார்! அதற்கு நிதானம் என்று பொருள்.
நாராயணன் உடனே செயல்பட்டான். மாமியிடம் ஊருக்கு போவதாகச் சொல்லி திருக்குறுங்குடி வந்தான். அம்மா, அப்பாவிடம் விஷயத்தை சொன்னபோது, அவர்களுக்கும் சம்மதம்தான்.
“ பெரிய வீடும்மா! கல்யாணம் ஆனவுடனே மாமா, மாமிகிட்டே பேசி உங்களை அங்கேயே அழைச்சிண்டுடறேன்.. நான் இப்ப இருக்கற ரூம் காலியாத்தானே இருக்கும் “ என்று ஏகத்துக்கு ஜெய்ட்லி திட்டம் போட்டான்.
0
அவர் அந்தக் கோயிலுக்குள் நுழைந்தபோது ‘பளீர்’ என்றது. கூசம் தாங்கமுடியாமல் கண் உயர்த்தினான் நாராயணன். ஆறடி இருந்தார். பட்டு வேட்டியும், பச்சைக் கலர் பட்டு ஜிப்பாவும் அணிந்திருந்தார். கழுத்தையும் காதையும் மூடிய தங்க, வைரங்கள் ஆதவன் ஒளியில் ஏழு வர்ணங்களைக் காட்டின.
“ என் பேர் சந்தானகோபாலன். ஊரு இதுதான்.. நாந்தான் இப்ப இங்கே இல்லே! ஒரு தலைமுறைக்கு முன்னாலயே பினாங்கு போயிட்டேன் “
தீட்சிதர் மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடி வந்தார். இடுப்பில் சொருகி இருந்த கோயில் சாவி, தட்டு சில்லரையாக குலுங்கியது.
“ வரணும்.. இளங்கோவன், ஈ.ஓ. வந்து சொன்னார். நீங்க வரப்போறேள்னு.. காத்துண்டிருக்கேன்.. சிவனோட நானும்..”
புருவங்களை உயர்த்தி அவரை ஏறிட்டான் நாராயணன். தீட்சிதர் அவன் பார்வையைப் புரிந்து கொண்டார்.
“ அம்பி நீ புதுசோல்லியோ! உனக்கு தெரியாது. சார் சந்தான கோபால  ஷர்மா. நம்மளவா தான்.. தூர தேசம் போயிட்டார்.. சின்ன வயசுல கோயில் வராத நாளே கிடையாது.. அதான் ஈஸ்வரன் அவரை பினாங்கு பணக்காரரா ஆக்கிட்டார்”
“ வருஷா வருஷம் கோயில் நன்கொடைன்னு ஒரு தொகை அனுப்புவேன்.. இந்த வருஷம் நானே நேர்ல வர்றதுனால அனுப்பலை” என்று சொல்லிக் கொண்டே அவர்  உள்ளே போனார்.
0
தீட்சிதர் பின்னர் சாவகாசமாக சொன்ன தகவல்கள் இவை. சந்தானகோபாலன் ஆசார குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் மூட நம்பிக்கைகளில் பேர் போனவர்கள். பினாங்கு கப்பல் கம்பெனியில் வேலை கிடைத்தவுடன் அலமு பாட்டியும் அவனது அப்பா சுந்தரராம  சாஸ்திரிகளும் ஆன வரைக்கும் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் சந்தானம் உறுதியாக இருந்தான். அவனுக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்ய ஆசை. இன்னும் மேலே  படிக்கவும் ஆசை. அதற்கெல்லாம் பெரிய கோட்டைக் கதவையே திறந்து விட்டது போல இருந்தது பினாங்கு வாய்ப்பு. எல்லோரையும் உதறி தள்ளி விட்டு பினாங்கு போய் விட்டான். சாஸ்திரி எள்ளை இறைத்து விட்டு தலையில் குடம் குடமாக தண்ணீர் ஊற்றிக் கொண்டார். ஊரும் அவனை ஜாதிப் பிரஷ்டம் செய்து விட்டது. இதெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்பு.. இப்போது சந்தானகோபாலன் ஒரு லட்சாதிபதி. அமெரிக்காவில் இருப்பதாகத் தகவல்.
“ அந்தூர்ல அவர் எஸ்.கே.ஷர்மாவாம்.. இங்கே அவரை சேத்துக்க மாட்டேன்னு பிரஷ்டம் பண்ணிட்டாளோன்னோ! ஆனா அவர் பிராம்மணியத்தை இஷ்டமா சுவீகரிச்சுண்டு அதே போல வெளிநாட்டுல இருக்கற ஒரு அந்தணக் குடும்பத்துல தான் பொண்ணை கல்யாணம் பண்ணிண்டிருக்கார். ஒரே பையன்.. அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடித்தான் இங்கே வந்திருக்கார். ஒரு மாசம் இருப்பாராம். நம்மாத்துக்குக் கூட வரேன்னிருக்கார் “ விசாலத்தின் ஏறிய புருவம் இறங்கவேயில்லை!
0
நாராயணனின் கல்யாண  ஏற்பாடுகள் ஜரூராக  நடந்து கொண்டிருந்தன. கூறைப் புடவை வாங்கப் போன இடத்தில் விசாலமும் கிருஷ்ணன் ஷர்மாவும் சந்தானத்தை சந்திக்கும்வரை எல்லாம் திட்டப்படியே தான் நடந்தது. சந்தானத்திற்கு ஒரு பிள்ளை இருப்பதும், அவன் பெரிய படிப்பு படித்து நல்ல வேலையில் தில்லியில் இருப்பதும் தெரிய வரும் வரை! சம்பாஷணை சம்பந்தத்தில் முடியும் என்று நாராயணன் கண்டானா? நொடியில் காட்சிகள் மாறி, சந்தானம் பிள்ளை சந்திரசேகரன் மாப்பிள்ளையாகவும் நாராயணன் மாப்பிள்ளைத் தோழனாகவும் மாறிப் போனார்கள். ஜாதகம் பொய்யா? வேறு சாதியில் மணம் என்று அபிராமி ஜாதகம் சொன்னது எப்படி தப்பாகப் போகும்.\
“ விசாலம்! நம்ம சாதியில அபிக்கு கல்யாணம் நடக்காதோன்னு பயந்துண்டிருந்தேன்.. இப்போ பணக்கார மாப்பிள்ளை கெடைச்சுட்டான்.. செலவு எல்லாத்தையும் சந்தானம் சாரே ஏத்துக்கறேன்  சொல்லிட்டார். ஒரு வாரத்துல முடிக்கணுமாம்.. ஆனா ஜாதகம் பொய்யில்லைடி.. இவாளுக்கு ஜாதியே இல்லை.. அதுவும் வேற ஜாதிதானே?” கிருஷ்ணன் மாமியிடம் பேசிக் கொண்டிருந்த்தைக் கேட்டு அவனுக்கு நெஞ்சை அடைத்தது.
0
“ அப்போ நாராயணன் கல்யாணமே பண்ணிக்கலையா?”
“ ஏன் பண்ணிக்கலை.. மாத்தல் வாங்கிண்டு மெட்ராஸ் வந்தான். ஒறவுல ஒரு பெண்ணைக் கட்டி வச்சா! அவ வந்த நேரம் அவனுக்கு டி.வி.எஸ். கம்பெனிலே வேலை கெடைச்சுது. மாமனார் அங்கே யூனியன் லீடரா இருந்தார். ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு ரெண்டு பொறந்துது..”
“ அப்புறம் என்ன? ஜாதகத்தையும் சோசியத்தையும் ஏன் திட்டணும் “
“ ஏன் திட்டமாட்டான்.. பையன் நல்லா படிச்சான்.. சாஃப்ட் வேர்ல சேர்ந்து அமெரிக்கா போனான். நல்லா சம்பாதிச்சான்! ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்துல சேர்ந்து மொட்டை அடிச்சிண்டு கல்யாணமே வேண்டாமுனுட்டான்.”
ரவியின் வர்ணனை ஒரு திரில்லர் கதையாக இருந்தது.  ராகவன் இமை கொட்டாமல் கேட்டான்.
“ பொண்ணு நல்ல படியா.. “
“ அங்கேதான் டிவிஸ்ட்! அவன் பொண்ணு கமலா, அண்ணனைப் பார்க்க அமெரிக்கா போனா..”
“ அடப்பாவமே அவளும் ஹரே கிருஷ்ணாவா?”
“ அப்படி இருந்தாத்தான் பரவாயில்லையே! ஹாரி க்ரஷ்னு ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிண்டு அங்கேயே செட்டில் ஆயிட்டா”
“ நாணா தான் ஜாதகப் புலியாச்சே! முன்னாடியே இது அவனுக்கு தெரிஞ்சிருக்காதோ?”
“ கமலா ஜாதகம் பளிங்கு சுத்தம். எல்லாமே  உச்சம். தப்பா போக வாய்ப்பில்லைன்னு நாராயணன் நம்பினான். ஆனா, விதி வேற மாதிரி இருந்துடுத்து”
0
“ டேய் நீ ரவிதானே? “ என்றபடி நாராயணன் அருகே வந்தான். “ எப்படி இருக்கே? சிதம்பரத்துல பார்த்தது.. இப்ப நீயும் மெட்ராஸ் தானா? “ என்றபடியே கையை  நீட்டினான். அவன் கையில் பத்து விரல்களிலும் பத்து நிறக் கல் மோதிரங்கள் இருந்தன!
0

 

 

Series Navigationசீஅன் நகரம் -2 யுவான் சுவாங்அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Mani says:

    கதையை ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறார் கதையாசிரியர். ஒரு DD serial பார்ப்பது போலிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *