மரபு மரணம் மரபணு மாற்றம்

author
0 minutes, 21 seconds Read
This entry is part 23 of 24 in the series 8 பெப்ருவரி 2015

டேவிட் ஜெ. பிரவீன்

 

இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள் இன்று பெரும் சீரழிவிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. இப்புவியில் மனித இருத்தலை மேன்மைபடுத்துவது என்கிற பெயரில் மனித இனத்தோடு சேர்த்து மற்ற விலங்கினங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விசயங்கள் சிறிது சிறிதாக தகர்ப்படுகின்றன.

தகர்க்கப்படும் இந்த பட்டியலில் விடுபட்ட மிக முக்கியமான ஒன்று உணவு. ‘இதையாவது விட்டுவச்சானுங்களே’ என்று சற்று நீங்கள் பெருமூச்சு விடுவதாக இருந்தால் கொஞ்சம் பொறுங்கள் இந்த கட்டுரையே உங்களின் அந்த நிம்மதி பெருமூச்சை பதற்ற பெருமூச்சாக மாற்றுவதற்குதானே. வேட்டை நாகரீகத்தை சேர்ந்து அந்த முகம் தெரியாத பெண்மனி தாவரங்களின் விதைகளை மண்ணில் போட்டு தேவையான உணவை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் மனித தேவைக்கான உணவு உற்பத்தி என்பது விதைகளை நம்பித்தான் இருந்துவருகிறது.

இந்த விதைகளுக்குதான் இப்பொழுது வந்தது கேடுகாலம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கேடுகாலம் விதைகளுக்கல்ல நமக்கு. இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு அமெரிக்க இராணுவ தளவாட பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்து குவித்த இரசாயனங்கள் (இரண்டாம் உலகப் போர் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்கிற லாப கணவில். துரதிஷ்டவசமாக! இரண்டாம் உலகப் போர் அவர்கள் எதிர்பார்த்த ஆண்டுகள் நீடிக்கவில்லை) லாபத்தை குவிக்காமல் கிடங்குகளில் தேங்கி அந்த பெரு நிறுவனங்களின் கண்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்த அந்த நொடியில் பிறந்து ஒரு புது அறிவியல் சித்தாந்தம்.

உலகளவில் செய்யப்படும் உணவு உற்பத்திக்கும் உலக மக்கள் தொகைப் பெருக்கத்திற்குமான சமன்பாடு குறைந்துக் கொண்டு வருவதாக பல முன்னிப் பல்கலைகழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அபாய சங்கை ஊதின. இந்த சமன்பாடற்ற நிலை தொடர்ந்தால் பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா சீனா போன்ற நாடுகளிலும் அடுத்த தலைமுறையினருக்கு உண்பதற்கு உணவே இருக்காது என்பது போன்ற தீர்க்கதரிசனங்கள் பரப்பப்பட்டன.

 

தீர்க்கதரிசனம் சொல்லும் அறிவியல் அதோடு மட்டுமா நின்றுவிடும் அதற்கான தீர்வையும் சொல்லத்தானே செய்யும். சொன்னதே இராணுவத் தளவாட நிறுவனங்கள் தயாரித்துவைத்து ஈயோட்டிக் கொண்டிருக்கும் இரசாயனங்களை உறங்கள் என்று பெயர் சூட்டி உலகெங்கும் இருக்கும் விளை நிலங்களில் கொட்டோ கொட்டென்று கொட்டினால் தனி ஒரு மனிதன் உணவில்லை என்று இந்த ஜகத்தினை அழித்துவிடமுடியாது என்கிற அந்த தீர்வை சொன்னது.

அறிவியலின் தீர்வென்றால் அதற்கு காரண காரிய விளக்கங்கள் முக்கியம்தானே. இரசாயன உரங்களுக்கும் காரண காரிய விளக்கங்கள் தரப்பட்டன. உலகத் தேவைக்கான உணவு உற்பத்தி பூச்சிகளாலும், விளை நிலங்களின் சத்தற்றத் தன்மைகளாலும் பாதிக்கப்படுவதாகவும் இரசாயன உரங்கள் இந்த பிரச்சனைகளை கலைந்து விடுகிறதென்றும் இதன் மூலம் உணவு உற்பத்தி பன் மடங்கு பெருக்கெடுக்கும் என்று காரண காரிய விளக்கம் தரப்பபட்டது. இந்த ஆராய்ச்சி கட்டுரைகளையும், தீர்வுகளையும் சொன்ன பெரும்பாலான பல்கலைக் கழகங்களின் புரவலர்கள் வேறு யாரு எல்லாம் இராணுவப் பெரு நிறுவனங்கள்தான்.

பிறந்தது பசுமை புரட்சி. கூடவே இராணுவ நிறுவனங்களின் லாப புரட்சியும். இரசாயன உரங்கள் சுற்று சூழலிலும், விளை நிலங்களிலும் மனிதர்களின் உடல் நலன்களிலும் ஏற்படுத்திய ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அபாயகரமான விளைவுகளைப் பற்றி பேசுவதற்கல்ல இந்த கட்டுரை ‘அதுக்கும் மேல நீங்க மெர்சலா’-க்கத்தான் இந்த கட்டுரை. சரி நாம் விதைகளைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தோமில்லையா அதற்கு திரும்புவோம். இரசாயன உரங்களின் மூலம் வந்து குவிந்த லாபத்தை ருசிகண்ட பெரு நிறுவனங்களின் அடுத்த அறிவியல் பாய்ச்சல் மரபணு மாற்றப் பட்ட விதைகள். இந்த அறிவியலை அடிப்படையாக கொண்ட உண்மை சம்பவம் ஒன்றை பற்றி இப்பொழது பேசப்போகிறோம். வீரம், தியாகம், விரட்டல், மிரட்டல் என்று அனைத்து ஹாலிவுட் மசாலாக்களும் அடங்கிய உண்மை வரலாறு. இந்த வரலாற்றின் நாயகன் இன்றும் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

Nature உலகளவில் இயற்க்கை மற்றம் சூழலியில் சார்ந்த விழிப்புணர்வு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் முன்னனிப் பத்திரிக்கை. இயற்க்கை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகள் இந்த இதழில் வெளிவருவதை தங்களுக்கான புகழின் அடையாளமாக கருதுகிறார்கள். இந்த இதழில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்துவிட்டால் அது அந்த ஆராய்ச்சி கட்டுரை சாரந்த துறையின் மைல்கல்லாக கருதப்படும். அந்த கட்டுரைக் குறித்த மறுபரிசீலனை என்கிறப் பேச்சுக்கே இடம் இல்லை. கடந்த 130 வருடங்களாக அதுதான் நிலைமை. ஆனால் 2001 ஆண்டு November மாத Nature இதழ் இந்த 130 வருட பாரம்பரித்தை குழிதோண்டி புதைக்கும் விதமாக வெளிவந்தது.

அதே ஆண்டு March மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தது அந்த November மாத Nature இதழ். எவ்வித நிருபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளையும் அடிப்படையாக கொண்டு எழுதப்படவில்லை அந்த கட்டுரை என்று இதழ் சார்பில் மன்னிப்பு கேட்டக்கப்பட்டு அந்த கட்டுரை திரும்ப்பெற்றுக்கொள்ளப்பட்டது. Nature இதழால் உண்மையில்லை என்று சபிக்கப்பட்ட அந்த ஆராய்ச்சி கட்டுரையின் சொந்தக்காரர்கள் Ignacio Chapela மற்றும் David Quist. இருவருக்கும் Nature இதழ் கட்டுரையை அவர்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளுவதற்கான படிவங்களை அனுப்பி அவர்களை அதில் கையெழுத்திடுமாரு கேட்டுக்கொண்டது. இந்த கட்டுரையை உண்மையென்று முதலில் பிரசுரிப்பானேன் பிறகு ஆராய்ச்சி உண்மையில்லை என்று மறுத்து பின்வாங்குவானேன்!

பின் வாங்கியது அடையாளம் தெரியாத சாமானியர்கள் ஆயிரம் படிக்கக்கூடிய பத்திரிக்கை என்றால் இந்த பிரச்சனை அடையாளம் தெரியாமல் போயிருக்கும் ஆனால் இங்கே பின் வாங்கியிருப்பது பல லட்சம் வாசகர்களை அதிலும் முக்கியமாக ஆய்வுலக ‘ஜாம்பவான்கள்’ படிக்கும் பங்களிக்கும் ஒரு சர்வதேசப் பத்திரிக்கை. அதிலும் இந்த சம்பவத்திற்கு முன் கடந்த 130 வருடங்களாக இப்பத்திரிக்கையில் வரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பது அறிவுலக கல்வெட்டுகளில் பொறிக்கப்படும் சாசனங்கள் போன்றவைகள். மாற்றம் திருத்தம் என்கிற மறுபேச்சிற்கே இடம் கிடையாது. பிரசுரமாகும் ஒவ்வொரு கட்டுரைக்கு பின்னாலும் பல ஆண்டுகளின் ஆராய்ச்சி முடிவுகள் தரவுகளாக இருக்கும்.

Ignacio Chapela, David Quist இருவருடைய கட்டுரைக்கு பின்னாலும் அதே பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் உண்மைத் தரவுகள்தான் இருந்தன. ஆனாலும் முதலில் இந்த உண்மைகளை ஏற்று பிரசுரித்த Nature இதழ் பின்னால் இந்த கட்டுரையில் எவ்வித ஆராய்ச்சி உண்மைகளும் இல்லை என்று பின்வாங்கக் காரணம் என்ன? மரபணு மாற்ற விதைகள். இந்த விதைகளைத் தயாரிக்கும் Novartis, Monasanto, DuPont, Aventis மற்றும் AstaZeneca போன்ற பெரு நிறுவனங்கள். இத்தகைய பெரு நிறுவனங்களை கலங்கடிப்பது அவர்களின் வியாபார அடித்தளத்தையே உலுக்குவது என்பதெல்லாம் கனவிலும் நடைபெற முடியாத காரியங்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் Ignacio Chapela, David Quist கட்டுரையை கண்டு அலறின. தங்களின் முதலுக்கே வேட்டு வைக்கக்கூடிய உண்மைகள் அடங்கிய கட்டுரை இது என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொண்டதால்தான் இந்த அலறல்.

அப்படி என்ன உண்மையைத்தான் Ignacio Chapela-வும் David Quist-வும் தங்களுடைய ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்து அந்த கட்டுரையில் சொல்லிவிட்டார்கள்? அது 1980-களின் பிற்பகுதி Ignacio Chapela-க்கு அவருடைய சகோதரரிடம் இருந்து அழைப்பு. மெக்சிக்கோ நாட்டின் தென்பகுதியில் இருக்கும் Sierra del Norte பகுதிக்கு வரும்படி. இந்த பகுதி Mexcio நாட்டின் தென்பகுதியில் இருக்கும் Oaxaca என்கிற அடர்த்தியான மழை காடுகள் சூழ்ந்த நிலப்பரப்பில் இருக்கிறது. Ignacio Chapela, Mexcio நாட்டில் பிறந்து அமெரிக்காவில் California மாகாணத்தில் குடியேறியவர். மண் நுண்ணுயிரியல் நிபுனர்.

Oaxaca மழைக் காடுகளை தங்களின் பூர்வீகமாக கொண்ட பழங்குடிகள் அதே காலகட்டத்தில் அவர்களுடைய வாழ்வாதாரமான மழைக் காடுகளை அழித்து காகிதக் கூழ் தயாரிக்கும் மிகப் பெரிய அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் ஒன்றிர்கு எதிராக போராடி வெற்றிப் பெற்றிருந்தார்கள். அந்த வெற்றியை அவர்கள் கொண்டாடி தீர்ப்பதற்குள்ளாகவே வந்து சேர்ந்து இன்னொரு பன்னாட்டு நிறுவனம். இந்த முறை அவர்களின் மழை காடுகளுக்குள் புகுந்தவர்கள் ஜப்பானியர்கள். Matsutake காலான்கள் ஜப்பானில் விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள். இந்த வகை காலான்கள் கிலோவிற்கு $1200 டாலர்கள் வரை விலைபோகக்கூடியவைகள். இந்த வகை காலான்கள் மழைகாடுகளின் ஈரப்பதத்திலும் பெரு மரங்களின் நிழல்களிலும் அபரிதமாக வளரும் இயல்பு கொண்டவைகள்.

இந்த காலான்களுக்கு ஏற்ற காலநிலை Oaxaca காடுகளில் இருப்பதை தெரிந்துகொண்ட ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம் ஒன்று அங்கு வந்து சேர்நத்து. Matsutake காலான்கள் விளைவிக்கப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. Oaxaca பூர்வக்கூடிகள் முன்பே ஒரு பெரு நிறுவனத்தை விரட்டியிருப்பதால் ஜப்பானிய நிறுவனம் Oaxaca காடுகளில் காலான் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களிடம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் கொடுத்துவைத்திருந்தது. பூர்வக்கூடிகளால் பிரச்சனை ஏற்படும்போது அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு. வெறும் காலான்களை வளர்ப்பதற்கு எதற்கு ஆயுதங்களின் பாதுகாப்பு என்கிற கேள்வி பழங்குடிகளுக்கு தோன்ற அவர்களுக்கு ஏற்பட்ட முதல் சந்தேகம் அந்த காலான் ஏதோ போதைப் பொருளுக்கு ஒப்பானது என்பதே. Mexico நாடு வழியாகத்தான் வட அமெரிக்காவுக்குள் பெரும் அளவிளான போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்பதை அவர்கள் அறிந்தேவைத்திருந்தார்கள். அத்தகைய போதை கடத்தலுக்கு ஏற்ற ஏதோ ஒன்றை தங்களின் காடுகளில் அந்த ஜப்பானிய நிறுவனம் வளர்ப்பதாக சந்தேகப்பட்டார்கள்.

Matsutake காலான் குறித்த சந்தேகத்தை தீர்ப்பதற்கே Ignacio Chapela, Oaxaca-க்கு தனது சகோதரனால் அழைக்கப்பட்டார். Chapela-வின் சகோதரர் Oaxaca பழங்குடிகளின் இயக்கமான UZACHI-ல் உறுப்பினர். Oaxaca-வுக்கு வந்த Chapela அந்த காலான்களை பற்றி தகவல் சேகரித்தோடு அந்த காலான்களுக்கு பின்னால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளையும் பழங்குடிகளுக்கு விளக்கிச்சொன்னார். தங்களுடைய பொருளாதாரத்திற்கு பெரிதும் சோளப் பயிர் சாகுபடியையே நம்பியிருந்த பழங்குடிகளுக்கு இந்த காலான் சாகுபடியின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் மேலும் ஒரு பொருளாதார வாய்ப்பாக தோன்றியது. அவர்களுடைய பகுதியில் வளரக்கூடிய ஒரு பயிரின் பொருளாதார பயன்கள் அவர்களுக்கே சொந்தம் என்கிற அடிப்படையில் பழங்குடிகளுக்கும் ஜப்பானிய நிறுவனத்திற்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. Chapela-வின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக பழங்குடிகள் பேச்சுவார்த்தையில் தங்கள் தரப்பு பிரதிநிதியாக Chapela-வை தேர்ந்தெடுத்தார்கள்.

பழங்குடிகள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற உயிரை பிணையாக வைத்து காலான் சாகுபடியில் ஈடுபட்டிருந்த ஜப்பானிய ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் Chapela ஈடுப்பட்டார். பழங்குடிகளின் கோரிக்கையில் இருந்த நியாயத்தின் படி Matsutake காலான் சாகுபடிக்கான உரிமை பழங்குடிகளிடமே விட்டுக்கொடுக்கப்பட்டது. பழங்குடிகளின் இயக்கமான UZACHI-ன் இரண்டாவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் Chapela பழங்குடிகளின் நம்பிக்கையான ஆலோசகராக மாறிப்போனார். அவர் தனக்கு தெரிந்த Mexica நண்பர்களிடம் கடன் பெற்று Calpulapan என்கிற இடத்தில் அதிக தொழில் நுட்ப வசதிகள் இல்லாத ஒரு ஆய்வு கூடத்தை நிறுவினார். இனி ஏற்றுமதிக்காக பழங்குடிகளால் தயாரிக்கப்பட இருக்கும் Matsutake காலான்களின் தரத்தை சோதிப்பதற்கே இந்த ஆய்வுக் கூடம்.

 

Series Navigationமிதிலாவிலாஸ் -1 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணிஇலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *