இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்

author
0 minutes, 11 seconds Read
This entry is part 18 of 23 in the series 15 பெப்ருவரி 2015

 

. செந்தில்குமார்

 

(அக்டோபர் 27, 2007 அன்று நடைபெற்ற புலம் பெயர் வாழ்வைக் குறித்த இலக்கிய வட்டக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)

 

புலம் பெயர்தல் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து நாற்றுகள், தொட்டிச் செடிகள் குரோட்டன்கள் என்கிற தலைப்பில் பேசப்போகிறேன். மனிதர்களைத் தாவரங்களோடு ஒப்பிட்டுகிறானே என்று யாரும் வருத்தப்படக்கூடாது.

 

புலம் பெயர்வது மனித இனத்திற்குப் புதிதானது இல்லை. தொன்று தொட்டு நடைபெற்று வரும் சுழற்சி. புலம் பெயர்தல் தனி மனித வாழ்வில் நடைபெறுகிறது. ஆனால் “Mass Exodus” என்று சொல்லும் அளவிற்கு கும்பலாக, பெரும் அளவில் மனிதர்கள் புலம் பெயர்தலே மிகுந்த பாதிப்பையும், மாற்றத்தையும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

 

புலம் பெயர்வதற்கான முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று அரசியல், இன்னொன்று பொருளாதாரம்.

 

இதில் அரசியலின் காரணமாக ஏற்பட்ட புலம் பெயர்வுகள் அதிரடியானவை; மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை. சமூக அமைப்பில் மாற்றங்களை உண்டு பண்ணியவை. பல நூற்றாண்டுகளுக்கு அவற்றின் பாதிப்பைத் தொடர்ந்தவை. இவற்றின் காரணங்கள் பெரும்பாலும் போர்கள், இன ஆக்கிரமிப்புகள் மற்றும் பிரிவுகள். கண்ணீரும், குருதியும் இவற்றின் பரிசுகள்.

 

நமது பழந்தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சோழர்களின் ஏரி என்று சொல்லப்படும் அளவிற்கு வங்கக் கடலில் சோழர் கப்பற்படை ஆட்சி செலுத்தியது. அன்றையப் படையெடுப்புகளில், ஆட்சி அமைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் புலம் பெயர்ந்த சமூகம், அங்கிருந்த  மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்கள் இன்று வரை கீழ்த்திசை நாடுகளில் காணக் கிடைக்கின்றன. உணவுப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம்,  திருவிழாக்கள், கோயில்கள், பெயர்கள் எனப் பலவுமே இவற்றின் விளைவுகள். உதாரணமாக, அங்கோர்வாட் என்ற கம்போடிய விஷ்ணு கோவில், மேகவதி சுகர்ணோபுத்ரி என்று சமஸ்கிருத / பிராகிருத மொழியில் பெயர்கள், இந்தோனேசியாவின்  ராமர் பண்டிகைகள்,  பொங்கலைப் போன்ற அறுவடையை ஒட்டிய விழாக்கள்,  தோமலா என்று அழைக்கப்படும் பழங்குடிகள்- என்று பலவும் இந்த அரசியல் புலம்பெயர்தலின் விளைவுகளே.

 

ஒட்டுச் செடி (Hybrid):

 

இவ்வாறு புலம் பெயர்ந்த சமூகங்கள், அங்குள்ள சமுதாயத்தோடு ஒன்றிணைந்து, தங்கள் பழக்க வழக்கங்களையும் அங்குள்ள மரபுகளையும் இணைத்து ஒரு புது வாழ்க்கை முறையை ஒட்டுச்செடி போல அமைத்துக் கொள்கின்றன. இதற்குச் சிறந்த உதாரணம், நமது தமிழகத்தில் வாழும் செளராஷ்டிர சகோதரர்கள். அவர்கள் வடக்கும், தெற்கும் கலந்தவர்கள். சரபோஜி மன்னரும், மராத்தியரும் பெருமளவில் புலம் பெயர்ந்ததால் தமிழகத்திற்கு சாம்பாரும், சரஸ்வதி மகாலும், தஞ்சாவூர் கலைத் தட்டுகளும் வந்தன. அவர்கள் தமிழ்வாழ்வில் ஊறி விட்டதன் ஒரு உதாரணம் “தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை” என்று எண்ணற்ற தமிழ்ப் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்.

 

நாற்றுகள்:

 

இரண்டாவதாக, பொருளாதாரத்தின் காரணமாக ஏற்படும் புலம் பெயர்தல். திரை கடலோடியும் திரவியம் தேடு — கடல் வாணிகம் செய்த இந்தியர்கள் — முன்னோடியாகத் தமிழர்கள்; பூம்புகார் காலத்திலிருந்து தொடங்கிய இந்தப் பெயர்வு நான்கைந்து நூற்றாண்டுகளாக அதிக அளவில் இருக்கிறது. இதில் நகரத்தார் சமூகத்தவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் பல வியாபார நிறுவனங்களைத் தமிழர்கள் அமைத்தனர். தொடர்ந்து தம் சமய வழிபாடுகளையும், கோவில்களையும் புலம் பெயர்ந்த நாட்டில் நிறுவினர். நான் பணிபுரிந்து வரும் வங்கியின் கிளைகள் பல நாடுகளில் இருப்பதும் இந்தப் புலம் பெயர்தலை ஒட்டித்தான்.

 

இவ்வாறு வெளிநாடுகளுக்கு வந்து, வேரூன்றி தமது பழக்கங்களைக் கடைப்பிடித்தும், அங்குள்ள சமூகத்தோடு இணைந்தும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வோரை நாற்றுகளுக்கு ஒப்பிடலாம். ஓரிடத்தில் குடியிருந்தால் செழிப்பு குறைவு என்றுணர்ந்து, போதிய இடைவெளிகளில், புதிய கழனிகளில் வெற்றிகரமான முழு வாழ்வு வாழ்வோர் நாற்றுகளே. ஹாலிவுட்டின் அமிர்தராஜ் சகோதரர்கள்;  பென்சில்வேனியாவின் பாடி ஜின்டால்.

 

தொட்டிச் செடிகள்:

 

இப்போது நான் பணியாற்றும் இந்திய வங்கி பணிநிமித்தம் என்னை ஹாங்காங்கிற்கு அனுப்பி இருக்கிறது. பணி மாறுதல் வரும்போது மீண்டும் இந்தியாவிற்குச் சென்று விடுவேன். இப்படி மாறுதலுக்கு உட்பட்ட வேலைகளில் இருப்போரைத் தொட்டிச் செடிகள் எனலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர். பெரும்பாலும் இது சொந்த விருப்பம், தெளிவு மற்றும் தேர்வின் அடிப்படையில் அமையும் தற்காலிகப் புலம் பெயர்வு. எனவே microclimate என்று சொல்லப்படும் சிறு சூழல், நமது வாழ்க்கை முறைகளை ஒட்டியே அமைகிறது. வேரோடும், வேரடி மண்ணோடும், பாதுகாப்பாக  பயணப்பட்டு, புது இடங்களில் வளரும் தொட்டிச் செடிகளைப் போல.   திட்டமிட்ட வளர்ச்சி, பாதுகாப்பான வளர்ச்சி, அளவிற்கு உட்பட்ட வளர்ச்சி என்றிருப்பவை தொட்டிச் செடிகள். சிலிக்கான் மென் பொறியாளர்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பணிபுரிவோர் போன்றோரையும் தொட்டிச் செடிகளுக்கு ஒப்பிடலாம்.

 

குரோட்டன்கள்:

 

அயல் நாட்டில் வசிப்பதால் மட்டும் ஒரு மனிதன் புலம்பெயர்ந்தவன் ஆகி விடுவதில்லை. தனது நாட்டிற்கு, தனது சமூகத்திற்கு பயனில்லாமல், கொள்கையும், கோட்பாடும் இன்றி வாழும் மனிதர்கள் தங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் அவர்களால் சமூகத்திற்கோ, சமூகத்தால் அவர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. எது உரித்தான நிறம், எது உரித்தான மணம், என்ன பயன்பாடு, எந்த மண்ணுக்குச் சொந்தமானது  என்று எதுவும் கண்டுபிடிக்க இயலாத குரோட்டனைப் போல, மனித குரோட்டன்கள்.

 

இன்றையச் சூழலும் கடும் புயலும்:

 

இன்றும் அரசியலின் காரணமாக  ஒரு பெரும் புலம் பெயர்தல் நம் கண் முன்னே நடைபெற்றுக் கொண்டு உள்ளது. வீடு, வாசல், உற்றார், உறவினர் என அனைத்தையும் இழந்து ஆஸ்திரேலியா முதல் அலாஸ்கா வரை எல்லா நாடுகளிலும் சிதறிக் கிடக்கின்ற புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள். ‘எந்தையும், தாயும், நானும் கொஞ்சித் திரிந்த புலத்தில், என் பிள்ளைகளும், அவர் தம் பிள்ளைகளும் என்று மகிழ்ந்து திரிவாரோ’ என்று ஏங்கிக் கிடக்கிறார்கள்.

 

புலம் பெயர்தலின் நிஜமான சோகங்கள் அனைத்தையும் அந்தச் சமூகம் தாங்கிக் கொண்டிருக்கிறது. கடும்புயலில், கையிலுள்ள அகல் விளக்கை காப்பாற்றச் செய்யும் முயற்சிகளைப் போல, தம் இனம், தம் மொழி, தம் கலை மற்றும் கலாச்சாரங்களைக் காக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. இது நம் கண் முன்னே, அரசியல் காரணமாக ஏற்பட்ட ஒரு புலம் பெயர்வு. அவர்களை நாம் நாற்றுகளுக்கோ, தொட்டிச் செடிகளுக்கோ, குரோட்டன்களுக்கோ ஒப்பிட முடியாது. அவர்கள் புயலில் வீசி எறியப்பட்ட இளம் குருத்துகள்.

 

வழக்கம் போல இந்தக் கூட்டத்திலேயும் என்னைப் பேச அழைத்ததும் என்னை உற்சாகப்படுத்தியதும் நண்பர் மு.இராமனாதன் அவர்கள். அவருக்கும் கேட்டுக் கொண்டிருந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

 

asenth@rediffmail.com

(அக்டோபர் 27, 2007 அன்று நடைபெற்ற புலம் பெயர் வாழ்வைக் குறித்த இலக்கிய வட்டக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)

 

********

(ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள், தொகுப்பு: மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

 

Series Navigationவலி மிகுந்த ஓர் இரவுமரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *