ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”

author
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 23 in the series 15 பெப்ருவரி 2015

ராஜ்ஜா, புதுச்சேரி

[ கட்டுரையாளர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலப் பேராசிரியர். தற்போது ஓய்வு பெற்றுள்ளார். ‘Transfire’ என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் ]

கடலூருக்குப் பக்கத்தில் உள்ள பாலூருக்குப் போக வேண்டியிருந்தது. அந்தக் கிராமத்தில் இருக்கிற ஜோசியக்காரரைப் பார்க்க வேண்டுமாம் என்மனைவி பெரியநாயகிக்கு. எல்லாம் எங்கள் மகள் திருமணம் சம்பந்தமாய்த்தான். எனக்கு இந்த ஜோசியத்திலும் கீசியத்திலும் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை என்றாலும் யாருடைய நம்பிக்கையிலும் கல்லைத் தூக்கிப் போட ஏனோ எனக்கு மனம் வருவதில்லை. அத்தோடு ஊர் பெயரைச் சொன்னதுமே தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார் ஞாபகத்திற்கு வரவே, சரி, போகலாம் என்று கிளம்பி விட்டேன்.

எத்தனையோ லட்சங்கள் போட்டுச் சொகுசுக்கார் வாங்கி என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினாலும், அதை நாமே ஓட்டிக் கொண்டு போகும்போது, ஒரே ஓர் இருக்கையில்தான் அமர முடிகிறது. ஓட்டுநர் ஒருவரை அமர்த்தினால் நாம் முன்னால், பின்னால், நடுவில், கடைசியில், டிக்கியில் என்று எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்.

பணி நிறைவு பெற்றபின், என் காரில் என் மனம் போனபடி உட்கார் ந்தால்தான் மனம் நிறைவு பெறுகிறது. இந்த வயதிலும் மனதை நிறைவாக வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் பின் எந்த வயதில்!

அந்த ஞாயிற்றுக்கிழமை [டிசம்பர் 07 2014] அதிகாலையிலே டிரைவர் ரவி வந்து விட்டார். திருவரசன் டிராவல் ஏஜென்சியின் உரிமையாளர் என்றாலும், நான்சொன்னால் எல்லா வேலைகளையும் ஓரம் கட்டிவிட்டு எனக்குச் சாரதியாகி விடுவார். இவரும் ஓர் இலக்கிய ஆர்வலர் என்பதாலே, என் குடும்ப நண்பராகவும் ஆகிப்போனவர். காரைச் செலுத்திக் கொண்டிருக்கும் போதே பல செய்திகளைச் சொல்லுவார்; விவாதிப்பார். எல்லாம் சமூகம் சார்ந்தவையாகவே இருக்கும். என் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் கரு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ரவியின் கண்கள் பாதையை மட்டுமே பார்க்க, என் கண்கள் அலைபாய, என் மனையியின் மனம் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டி தியானத்தில் இருக்க, கார் மட்டும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பாலூர் நோக்கிப் பறந்தது.

பாலூருக்கு ஒரு சில கி. மீ தூரமே இருந்த போது கூத்தப்பாக்கம் என்று வண்ணக் கலவையால் எழுதி வைக்கப்பட்ட இரும்புப் பலகை இரண்டு கால்களால் ஊன்றி நின்றது என் கண்களை ஈர்த்தது. கூத்தப்பாக்கம் என்றதும் ‘சங்கு’ இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான வளவ. துரையன்தான் ஞாபகத்திற்கு வந்தார்.

நல்லி ‘திசை எட்டும்’ பரிசளிப்பு விழா பொள்ளாச்சியில் நடந்த சமயம். எங்கள் எழுத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இருந்தாலும், நாங்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது அந்த ஊரில்தான். ஒன்றாகவே அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு அமைந்ததால் எங்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. சங்கு இதழ் ஒன்றினை எனக்குக் கொடுத்தார். ‘எங்கள் இதழுக்கு எழுதுங்கள்’ என்றும் சொன்னார்.

ரவியிடம் வளவ. துரையன் பற்றியும், சங்கு இதழ் பற்றியும் பேசிக்கொண்டே போனேன். ’திரும்புகையிலே பார்த்துக்கலாம்’ என்றவர் வந்த குறிக்கோளிலேயே கவனமாக இருந்தார்.

என்னதான் நமது குறிக்கோளிலேயே நாம் கவனமாக இருந்தாலும் நடப்பதுதானே நடக்கும். பாலூரில் சந்நியாசப் பேட்டையில் ஒரு சிறு வீதி. அது ஜோசியக்காரர்களுக்கே ஒதுக்கப்பட்ட இடம் போலும். இருந்தும் ஒரு வீட்டில் மட்டுமே கும்பல்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதம்மா! ஒருக்களித்திருந்த அந்த வீட்டுக் கதவு திடீரென்று முழுதும் திறந்தது. ஜோசியர் வெளியே வந்தார். வந்தவர்களுக்கெல்லாம் போதாத காலம் என்று நினைத்தாரோ, இல்லை அவருக்கே போதாத காலம் என்று உணர்ந்தாரோ தெரியவில்லை. அவர் முகம் கடுவன் பூனை மாதிரியிருந்தது.

“ஜோசியம் பார்க்க வந்தவங்க எல்லாம் வீட்டுக்குப் போயிடுங்க. இன்னைக்குப் பரிகாரம் மட்டும்தான்” என்று அவர் சொல்ல, ஒரு கும்பல் அவர் வீட்டினுள் அடித்துப் பிடித்து ஓடியது. மிச்சமிருந்த கும்பல் பரிதாபமாக பார்த்தது.

“அய்யா! நாங்கள் பாண்டிச்சேரியிலிருந்து வந்திருக்கிறோம்” என்று சற்றே குரலை உயர்த்தினார் ரவி. ஜோசியரோ ‘பாண்டிச்சேரி என்னா அமெரிக்காவைத் தாண்டியா இருக்கிறது’ என்று பார்வையாலே கேட்டுவிட்டு வீட்டினுள் சென்று விட்டார்.

வாழ்க்கையே இப்படித்தானோ! ஒரு கும்பலுக்குப் பரிகாரம் மற்ற கும்பலுக்குச் ‘சரி காரம்’.

ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றிருந்த பெரியநாயகியின் முகத்தைப் பார்த்த ரவி சற்றே அதிர்ந்து போனார். “அம்மா, நீங்க சோர்ந்திடாதீங்க. நடக்கிறதெல்லாம் நன்மைக்கே! வாங்க, திருமாணிக்குழி பக்கத்துலதான் இருக்கு. பழம் பெரும் கோயில். பிரசித்தி பெற்றது. பாடல் பெற்ற ஸ்தலம் ஜோசியர் நம்ம வெளியே தொரத்தினா என்ன! கடவுளே நாம பார்க்க கூப்ப்பிடராறு பாருங்க” என்று அவர் சொன்னதும் பெரிய நாயகிக்குப் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்று சொல்கிற மாதிரி உற்சாகம் குடிகொண்டது. என் மனைவி சாமி பைத்தியம் என்பதையும், நான் சாப்பாட்டு ராமன் என்பதையும் ரவி நன்றாகவே அறிவார்.

‘நல்ல வேளை! ஜோசியரின் இம்சையிலிருந்து தப்பித்துவிட்டோம்’ என்று தெரிந்ததுமே, என் கைபேசியை எடுத்து வளவ. துரையன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். ”வணக்கம் ராஜ்ஜா! சொல்லுங்க.” என்றது மறுமுனையிலிருந்து அவர் குரல். “நான் பாலூருக்கு வந்திருக்கிறேன். கூத்தப்பாக்கம் வழியாப் போகும்போது உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இருக்கிறேன். வரலாமா?” என்றேன். “வாங்க, வாங்க! காத்திருக்கிறேன்” என்றார். அவர் குரலில் ஒரு பாசம் தெரிந்தது.

திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் வாசலில் அருகில் காரை நிறுத்திய ரவி ‘பாருங்க பாருங்க! நான் சொன்னது சரியாப் போச்சு பாருங்க. மூலவர் வீதி உலா போகப் போறாரு. சப்பரம் தயாரா இருக்கு. நேரத்துக்கு வந்துட்டோம். சாமி உலா போயிட்டாருன்னா திரும்பி வர்றதுக்குள்ள பொழுது சாஞ்சிடும்.” என்றர்.

உள்ளே போனோம்.

‘பழம்பெரும் கோயில்னா இப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிய ரவி, நீண்ட சுவர் ஒன்றை காட்டினார். “உள்ளே நுழைஞ்சதுமே கோயில் வாசல் தெரியாது. தெரியவும் கூடாது. சுவரின் ஓர் ஓரத்தில்தான் வழி இருக்கும். அந்த வழியே நுழைந்து போனால்தான்; மூலவரைப் பார்க்கச் செல்லலாம். சாமின்னா சும்மாவா?”

சிறிது நேரத்தில் வாமனபுரீஸ்வரருக்கும் அவரது துணைவியார் ஹேமாம்புஜவல்லிக்கும் பூஜை செய்து, பல்லக்கில் தூக்கிச் சென்றார்கள். நாங்களும் ஊர்வலத்தில் கொண்டோம்.

கைபேசி அழைத்தது. “எங்க இருக்கீங்க?” வளவ. துரையனின் குரல். “திருமாணிக்குழி கோயிலில். விரைவில் கிளம்பி விடுவோம்.” இது எனது குரல். “வாங்க, வாங்க கூத்தப்பாக்கம் வந்த்தும் என்னைக் கூப்பிடுங்க. வீட்டிற்கு வழி சொல்றேன்”.

வாண வேடிக்கைகளுடன் மேளதாளத்துடனும் மூலவர்கள் வீதி உலா கிளம்பினர். நாங்களும் எங்கள் ‘தேர்’ ஏறி கூத்தப்பாக்கம் நோக்கி விரைந்தோம்.

தெருமுனைக்கே வந்து நின்றிருந்தார் வளவ. துரையன். செல்லிலே அவர் வழி சொன்னது மிகவும் சுலபமாகப் போயிற்று. போகிற போக்கைப் பார்த்தால் செல் இல்லாமல் இருந்தால், பணம் இல்லாத பிணம் போல ஆகிவிடுவோம். கைபேசியைக் கண்டுபிடித்தவனைச் சில சமயங்களில் நிந்திக்க நேர்ந்தாலும், பல சமயங்களில் பாராட்டத்தான் வேண்டியிருக்கிறது.

”அதோ! உங்கள் வலது புறம் ஒரு வீட்டின் கேட் திறந்திருக்கிறதே. அதுதான் எங்கள் வீடு. அங்க்யே காரை எடுத்துச் செல்லுங்கள். நான் பின்னாலேயே வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கு முன்னாலேயே சென்று விட்டார்.

காரை விட்டு இறங்குவதற்கு முன்னரே ”வாங்க, வாங்க” என்று பாசம் கலந்த அன்போடு ஓர் அம்மணி வரவேற்றார். அவர் வளவ. துரையனின் துணைவி அலர்மேல்மங்கை.

வீட்டினுள் நுழைந்ததுதான் தாமதம். “முதலில் பலகாரம் சாப்பிட்டுவிட்டுப் பின்னர்ப் பேசிக் மொண்டிருக்கலாம். அதிகாலையிலேயே கிளம்பி இருப்பீங்க இல்லியா?” என்றார். என் மனைவியோ “இப்பதாங்க வர்ற வழியிலே ஒரு ஓட்டல்ல சாப்பிட்டுட்டு வந்தோம். கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க போதும்” என்றாள்.

அலர்மேல்மங்கை விடுவதாக இல்லை. “அது எப்படி எங்கள் வீட்டிற்கு வரும்போது ஓட்டலில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்?” என்று கடிந்தார். “சரி! இருங்க. காப்பிப் போட்டு கொண்டாறேன்.” என்று சொல்லி அடுப்பங்கரையினுள் நுழைந்து விட்டார்.

“வேண்டாங்க வேண்டாங்க! நாங்க காப்பி டீ எதுவும் குடிக்கறதில்ல” என்று சொல்லிக்கொண்டே பெரிய நாயகி அவர் பின்னாலேயே ஓடினாள். “கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க.”

“தண்ணி குடிச்சுட்டுப் போகவா எங்க வீட்டுக்கு வந்தீங்க?” என்று கேட்டவர், “பாலாவது சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டே காய்ச்சிய பாலை மூன்று டபரா செட்டுகளில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தார்.

ராஜ்ஜா வர்றார்னு எங்க வீட்டுக்காரர் சொன்னதுமே, ”அந்த கோபக்காரரா?” என்றுதான் கேட்டேன். இவரும் ‘ஆமா ஆமா!அவரேதான்!” என்றார். உங்க கோபம் நியாயமானதுதான். இவரும் அப்படித்தான். நன்றாகவே கோப்படுவார்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

என் மனைவி என்னைப் பார்த்தாள். இவன் வீட்டில்தானே புலி. வெளியே எலியாச்சேன்ன்னு நினைத்தாளோ எனாவோ, “என்னா செஞ்சாருங்க” என்று அலர்மேல்மங்கையைப் பார்த்துக் கேட்டார். ’உங்க வீட்டுக்காரரையே கேளுங்க” என்று சொல்வதுபோல அவர் சைகை செய்தார்.

தமிழில் படைப்பிலக்கியம் எழுதும்போது ‘ராஜ்ஜா’ என்ற புனைபெயரில் எழுதிக்கொண்டிருக்கிறேன். என் பெயரின் நடுவிலே ‘ஜ்’ என்ற எழுத்தை நான் உபயோகிப்பது என் தனித்துவத்தைக் காட்டத்தான். இதில் எந்த நியுமராலஜியும் இல்லை. என் பெயருக்கு முன்னால் ‘இ’ என்ற எழுத்தைச் சேர்த்து எழுதுவதும், இராசா என்றோ, இன்னும் கொடூரமாக இராச்சா என்று எழுதுவதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்மொழியை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு ‘ராஜ்ஜா’ என்று எழுதும்போது உங்கள் விரல்கள் சுளுக்கிக் கொள்ளுமானால், தயவுசெய்து எனக்குக் கடிதம் எழுதுவதையும், இலக்கிய விழாக்களுக்கு அழப்பிதழ் அனுப்புவதையும் தவிர்த்து விடுங்கள். நான் தொல்காப்பியர் கால எழுத்தாளன் இல்ல. ஜெயகாந்தன் காலத்திலும், பிரபஞ்சன் காலத்திலும் வாழ்பவன். நான் நானாக இருக்கவே விரும்புகின்றேன்’ என்று காட்டமாகவே கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த மாதிரியான கடிதம் ஒன்றினை என்னிடம் இருந்து பெற்றவர் வளவ. துரையன். “நீ நீயாகவே இருந்து போ” என்று என் பெயரை ஏற்றுக் கொண்டவர்கள் பலர். வளவ. துரையனும் இந்தப் பட்டியலில் அடக்கம். அவருக்கு நான் எழுதிய கடிதத்தை அவரது துணைவியாரும் படித்திருக்கிறார். இதுதான் சங்கதி.

பார்த்துப் பார்த்துக் கட்டிய தனது இல்லத்தை வளவ. துரையன் எங்களுக்குச் சுற்றிக் காண்பித்தார். சிறிய வீடுதான். அதில் எழுத்தாளனுக்குத் தேவையான அமைதி உலா வந்தது. எழுதும் அறைக்குக் அழைத்துச் சென்றார். இரு அலமாரிகளையும் திறந்து காண்பித்தார். பரணையைக் காண்பித்தார். பல அட்டைப் பெட்டிகள். எல்லாவற்றிலும் புதையல்கள்தான்.

தன் தகப்பனார் சிறந்த வாசகர் என்றும், வீடு கொள்ளப் புத்தகங்கள் வைத்திருந்தார் என்றும் அலர்மேல்மங்கை பெருமைப்பட்டார். ”அவர் இறந்தபின் அவரது நூலகத்தில் இருந்தவற்றைப் பொது நூலகம் ஒன்றிற்குக் கொடுத்து விட்டோம். அப்பா வைத்திருந்த சமஸ்கிருதப் புத்தகங்களை எந்த நூலகமும் ஏற்க மறுத்ததால் அவற்றைத் தெருவில்தான் போட வேண்டியதாயிற்று” என்று சொல்லி வருத்தப்பட்டார்.

என்ன செய்ய? புத்தகங்களே பெரிய்ய சொத்து என்பதை வாரிசு உணர்கிறது? நாமென்ன ஐரோப்பிய நாடுகளிலா வசிக்கிறோம்?

வளவ.துரையன் தான் எழுதிய ‘பசி மயக்கம்’ என்ற நூலினை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். புரட்டிப் பார்த்தேன். என் முகம் அஷ்டகோணலாகப் போனதை அவர் பார்த்துவிட்டார்.

“மரபுக் கவிதை படிக்க மாட்டீர்களா?” என்றார்.

“புதுக்கவிதை நிறையவே வாசிப்பேன்”

“உண்மைதான்! மரபுக்கவிதையை எவன் வாசிக்கிறான்” என்று கேட்பதுபோல் பார்த்துவிட்டு, உள்ளே போய் ‘ஒரு சிறு தூறல்’ என்று தலைப்பிட்ட தன் புதுக்கவிதைப் புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்தார். புரட்டினேன். ‘தங்களின் முதல் வருகையின்போது அன்புடன்’ என்று எழுதிக் கையெழுத்தும், தேதியும் இட்டிருந்தார்.

கார் புதுச்சேரியை நீக்கி விரைந்தது. அந்த ஐம்பது நிமிட காலத்தில் ஒரு சிறு தூறலில் நனைந்தேன்.

வளவ. துரையனின் கவிதைகள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவை. ரசித்து, ருசித்து இனிப்போடு கசப்பையும் சேர்த்து விழுங்கிக் கசப்பையும் இனிப்பாக மாற்ற வல்லமை படைத்தவை.

”வாழ்க்கை என்பது ஓடுவதுதானே” என்றும், “கொசுவத்திச் சுருளின் / மையப் புள்ளிதான் வாழ்க்கை” என்றும், “ஓட்டமெல்லாம் ஒதுங்குவதற்காக / நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்” என்றும், அவர் தத்துவங்களை அள்ளி வீசும்போதும் சரி, “கோயில் திறக்குமுன் நெருக்கும் / பக்தர் கூட்டம் போல் / காலையில் ஆசை விழிகள்” என்றும், “அடிச்சகதியில் / கால் மாட்டித் தவிக்கும் / எருமைக்கன்று போல” என்றும், ”குருட்டுப் பிச்சைக் காரருக்கு / விழுந்த செல்லாக் காசு போல / ஒரு சிறு தூறலுடன் / ஓடிப்போயின மேகங்கள்” என்றும், அவர் பல வசீகரமான உவமைகளை அள்ளித் தெளிக்கும் போதும் சரி, இவை அனைத்திலுமே எதார்த்தமே பதார்த்தமாய்த் தெரிகிறது.

‘ஒரு சிறுதூறல்’ நூலுக்கு வளவ. துரையன் எழுதிய என்னுரையில்,

‘ஒரு நாள் என் வீட்டு வாசலில் ஒரு நாய் அடிபட்டு இறந்து கிடந்தது. முகம் மட்டும் அடிபடாமல் கண்கள் விழித்துப் பார்ப்பன போல இருந்தன. அது எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கனவு கண்டதோ நாமறியோம். ஆனால் அதன் விழித்த கண்கள் எதையோ சொல்வதுபோல் இருந்தன. அன்று முழுதும் நாய்களைப் பார்க்கும் போதெல்லாம் இதுவே நினைவுக்கு வந்தது.

மறு நாள் ‘மரணம்’ என்ற கவிதையை எழுதி முடித்த பிறகே மனம் சற்று நிம்மதியாயிற்று. இதை வாசிப்பவர்க்கு நாய் அடிபட்டு இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் இக்கவிதையும் நினைவுக்கு வருமன்றோ?”என்று குறிப்பிடுகின்றார்.

எழுத்தாளனின் பேனாவிற்கு எல்லாமே மைதான். எதார்த்தத்தையே பதார்த்தமாக்கிக் கொள்பவனே கவிஞன். பதார்த்தத்த்தில் உப்பு, புளி, மிளகாய் போட்டு சுவை கூட்டுபவனே கவிஞன். கவிஞனின் உணர்ச்சி அனுபவம் கவிதையாக மலர்ந்து, பின் அக்கவிதையைப் படிப்போரின் மனதில் உணர்ச்சிப் பெருக்கினை ஏற்படுத்தினால், அதுவே கவிதைக்கும், கவிஞனுக்கும் கிடைத்த வெற்றி. வளவ. துரையனின் கவிதைகள் வெற்றி பெறுவதும் இப்படித்தான். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வை இப்படி.

ஒரு கவிதையைப் படிக்கும் வாசகன் ‘அடடா இதை நான் அல்லவா எழுதியிருக்க வேண்டும்’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைகிறானோ, அதுவே சிறந்து கவிதை. தேடல்தானே வாழ்க்கையே! தேடி அலைவதுதானே கவிஞனின் வேலையே! தேடல் வாழ்க்கையின் உச்சக்கட்டமே நம்பிக்கைதான். சூரியனின் பிரம்மாண்டத்தை அறிய ஒரே ஒரு கதிர் போதுமே! ஒதோ அந்தக் கதிர்.

”நம்பித்தான்”

”தினம்தோறும் சோறு வைப்பேன் என

நம்பி வருகிறது நாயொன்று.

இன்றும் சன்னல் திறந்திருக்கும் என

நம்பி வருகிறது திருட்டுப் பூனை.

மழைக்காலம் வருமென்று

நம்பிக் கூடு கட்டுகிறது காகம்.

கட்டுப்படாவிடில் அடிப்பர்களென

நம்பிக்காசு கேட்கிறது யானை.

ஒரு நெல்லாவது கிடைக்குமென

நம்பிச் சீட்டு எடுக்கிறது கிளி.

வெளியூர் மகனிடமிருந்து

மணியார்டர் வரும் என

நம்பிக்கிடக்கிறார் தாத்தா.

இக்கவிதை சிறந்ததென

எழுதிக் கொண்டிருக்கிறேன்

நானும்!”

இதுவே எதார்த்தம். என் இலக்கிய வாழ்க்கையில் இக்கட்டுரையும் ஒரு பதிவாக இருக்கும் என்று நம்பித்தான் இக்கட்டுரையை எழுதி முடித்திருக்கிறேன் நானும்.

நன்றி : கிழக்கு வாசல் உதயம்

Series Navigation“ கவிதைத் திருவிழா “-இலக்கியப்பார்வையில் திருநங்கைள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *