மிதிலாவிலாஸ்-4

This entry is part 3 of 15 in the series 1 மார்ச் 2015

 

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

இரவு ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி இண்டஸ்ட்ரீஸ் என்று பெரிய பலகையுடன் இருந்த ஆபீஸ் கட்டிடமும், மிதிலாவிலாஸ் பங்களாவும் மின்விளக்கு தோரணங்களால் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தன. ஆபீஸ் கட்டிடத்தின் வாசலில் “மைதிலி இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு விழா என்ற பேனர் கட்டப்பட்டு இருந்தது.

சாலைக்கு இருபுறமும் கார்கள் வரிசையாக நின்று இருந்தன. மேலும் வந்து கொண்டிருந்த கார்களுக்கு வழி காட்டுவது போல் செக்யூரிடி ஆட்கள் தொலைவுக்கு அழைத்துச் சென்று பார்கிங் செய்வதற்கு வசதி செய்து கொண்டிருந்தார்கள்.

மிதிலா விலாஸில் விருந்தாளிகளில் பலர் ஏற்கனவே வந்து இருந்தார்கள். பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் மேலும் வருகை தந்து கொண்டிருந்தவர்களின் ஆடை அலங்காரங்கள், வேஷதாரணை, அவர்களின் ஆடம்பரத்தை பறைச்சாற்றிக் கொண்டிருந்தன.

வீட்டுக்கு முன்னால் இருந்த புல்வெளியில் போடப் பட்டிருந்த வட்ட மேஜைகளில் விருந்தாளிகள் உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள். சீருடை அணிந்திருந்த பேரர்கள் கொண்டு வந்து பரிமாறிக் கொண்டிருந்த உணவு வகைகளின் மணமும், விருந்தாளிகளிட மிருந்து வந்து வீசிய நறுமணமும் எங்கும் பரவி இருந்தன.

கேட்டுக்கு அருகில் வலது புறம் அமைக்கப்பட்ட அலங்கார வாசலில் மைதிலியும், அபிஜித்தும் நின்றுகொண்டு விருந்தாளிகளை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். மைதிலி அணிந்திருந்த வைர நெக்லெஸ் செட் பளபள வென்று மின்னிக் கொண்டு வந்திருந்த பெண்டுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டது. அதன் விலை, வாங்கிய இடம் போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளாமல் இருக்க முடியாதபடி செய்து விட்டது. மைதிலியும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

விருந்தாளிகளின் வருகை கொஞ்சம் மட்டுப் பட்டதில் கொஞ்சம் ஒய்வு நேரம் கிடைத்தது.

“அபிஜித்! நான் உள்ளே போய் இந்த வைரநகைகளை எடுத்து வைத்துவிட்டு வருகிறேன். கேட்பர்களுக்கு சொல்லிச் சொல்லி வாய் வலிக்கிறது” என்றாள் மைதிலி பொறுமையற்றவளாக.

“மைதிலி! ப்ளீஸ்! அதை இன்ஸ்யூர் செய்ய வைத்த ஆபீசர் இன்னும் வரவே இல்லை” என்றான் அபிஜித். அவன் கண்களில் லேசாக பெருமை கலந்த சந்தோஷம்! தங்கமாளிகை முதலாளியிடம் தனிப்பட்ட முறையில் டிசைனைச் சொல்லி ஆர்டர் கொடுத்து செய்ய வைத்தான். ஆர்டர் கொடுத்து இருப்பதாக சொன்ன போதே மைதிலி வேண்டாமென்று தடுத்தாள். “ஏற்கனவே இருப்பதை போட்டுக்கொள்ளாத போது இன்னும் புதிதாக எதுக்கு?” என்றாள்.

“எனக்கும் சில விருப்பங்கள் இருக்கும் இல்லையா?” என்றான். மேற்கொண்டு மைதிலி எதுவும் சொல்லவில்லை.

இன்று காலையில் கோவிலுக்கு போகும் முன் மைதிலியின் கழுத்தில் தானே அதை அணிவித்து அவள் தோளைப் பற்றி தன் பக்கம் திருப்பிக் கொண்ட போது அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மைதிலி அந்த நகையை அணிந்து கொண்டதால் அந்த நகையின் மதிப்பு கூடியதா? இல்லை நகையை அணிந்து கொண்டதால் மைதிலியின் அழகு இருமடங்காகி விட்டதா? ஒரு நிமிடம் அவனால் சொல்ல முடியவில்லை.

கோவிலுக்குப் போவது என்பது மைதிலியின் விருப்பங்களில் முதன்மையானது. சின்ன வயது முதல் அவனுக்கு அந்த பழக்கம் இருந்தது இல்லை. மேறுகொண்டு எதிர்மறையான அபிப்பிராயம் இருந்து வந்தது. மைதிலியின் சகவாசத்தில் அந்த எண்ணம் மாறியது. கோவிலுக்குப் போகும் மனிதனின் மனதில் பக்தியும், ஒருமுகப்படுத்தும் குணமும் இருந்தால் சூழ்நிலையின் எரிச்சல்கள் அவனை ஒன்றும் பாதிக்காது என்று புரிந்து கொண்டான்.

இன்று காலை முதல் ஒருநிமிடம் கூட ஒய்வு இருக்கவில்லை. காலையில் கோவிலுக்கு போய் வந்ததும் பேக்டரியில் பூஜை, பிறகு தொழிலாளர்களுடன் காலை உணவு. அது முடிந்த பிறகு கருணை இல்லத்திற்கு சென்றார்கள். மதியம் தொழிலாளர்களின் கோ ஆபரேடிவ் சொசைடியில் லாட்டரி எடுக்கும் நிகழ்ச்சி, பிறகு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் புரோகிராம். மாலை ஆனதும் திருமணநாள் விழாவுக்காக வரும் விருந்தாளிகளை வரவேற்பது. மைதிலியின் கண்களில் களைப்பு தெரிந்து கொண்டிருந்தது.

வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மிசெஸ் மாதுர் குரல் கேட்டது.

“மேனி ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே.” பெரிய பொக்கே ஒன்று கணவன் மனைவிடம் கொடுத்தார்கள்.

“தாங்க்ஸ்!” அபிஜித் சொன்னான்.

“நிஷா வரவில்லையா?’ மைதிலி கேட்டாள்.

“ஊஹும். இதோ.. ஒரு புதிய விருந்தாளியை அழைத்து வந்திருக்கிறேன். மாடல் என்று சொன்னேன். நினைவு இருக்கிறதா? மிஸ் சோனாலி” என்று பக்கத்தில் இருந்த பெண்ணை அறிமுகப் படுத்தினாள். “சோனாலி! மிசெஸ் மைதிலி அபிஜித்! மிஸ்டர் அபிஜித்” என்று சொன்னாள்.

‘”ரொம்ப அபூர்வமான ஜோடிப் பொருத்தம்! பெயர்களும் அழகாக இருக்கு” என்றாள் சோனாலி.

‘தாங்க்யூ” என்றான் அபிஜித். மைதிலி முறுவல் செய்தாள்.

சோனாலியின் உடற்கட்டு, ஆடைகள் அணிந்திருக்கும் முறை பார்த்ததுமே மாடல் என்று தெரிந்து கொண்டிருந்தது.

அதற்குள் வேறு விருந்தாளிகள் வந்து விட்டார்கள். அபிஜித் அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான்.

“வாங்க மிசெஸ் மாதுர்.” மைதிலி அழைத்துச் சென்றாள்.

மேஜைகள் எல்லாம் ஏறத்தாழ நிரம்பி இருந்தன. மைதிலி இடத்துக்காக தேடிக் கொண்டிருந்தாள். “இதோ இங்கே இருக்கு” என்று பேரர் அவர்களை அழைத்துச் சென்றான்.

மைதிலி திரும்பி வந்துகொண்டிருந்த போது “ஹலோ மைதிலி!”
என்று குரல் கேட்டது.

மைதிலி அந்தம்மாளின் கையைப் பற்றிக் கொண்டு, “சாரதா மாமி! இவ்வளவு தாமதமாகவா வருவது?” என்றாள்.

“எதிர்பாராத விதமாக உறவினர் வந்து விட்டார்கள். அது இருக்கட்டும். அபிஜித்தை ஒருநிமிடம் கூப்பிடு” என்றாள்.

“எதுக்கு?”

அந்தம்மாள் கையில் இருந்த வெள்ளிப் பேழையைத் திறந்து காண்பித்தாள். அதில் இதயத்தின் வடிவத்தில் கேக் இருந்தது. அதன் சுற்றிலும் பார்டர் போட்டது போல் ரோஸ் மற்றும் பச்சை நிறத்தில் ரோஜா பூக்களும் இலைகளும் ஐஸிங் செய்யப்பட்டு இருந்தன. இடது புறம் மைதிலி, வலது புறம் அபிஜித் என்ற எழுத்துகள் இருந்தன.

“என்ன இது?” என்றாள் மைதிலி.

“உங்கள் திருமண நாளுக்கு என்னுடைய ஸ்பெஷல் பரிசு. நானே தயாரித்தேன். ப்ளீஸ்! அபிஜித்தைக் கொஞ்சம் கூப்பிடு.”

“இரு, நான் அழைத்து வருகிறேன்.” அந்தம்மாளின் கணவர் அபிஜித் அருகில் சென்றார். “மைதிலி! நானே என் கையால் உங்கள் இருவருக்கும் இதை ஊட்டி விடணும். என்னுடைய விருப்பத்தை நீ நிறைவேற்றணும்.” அந்தம்மாள் சிரித்துக் கொண்டே சொன்னாள். அந்தம்மாளின் போக்கு கொஞ்சம் அதிகபடியாக இருந்தாலும் ரொம்ப நல்ல சுபாவம். அபிஜித் என்றால் பிரியம். மைதிலி என்றால் உயிர்.

மைதிலி மேஜைக்காக தேடிக் கொண்டு இருந்தாள்.

“இதை என் கணவரிடம் கூட காட்டவில்லை. சஸ்பென்ஸ் என்று சொல்லிவிட்டேன்” என்றாள் சாரதா மாமி.

“வாங்க, இப்படி உட்கார்ந்து கொள்வோம்” என்றாள் வழி நடந்து கொண்டே.

இருவரும் போகும் போது “மைதிலி!” என்று குரல் கேட்டது. அபிஜித் அழைத்துக் கொண்டிருந்தான்.

மைதிலி திரும்பிப் பார்த்தாள். வரச் சொல்லி கையை அசைத்தான். மைதிலி அவனையே வரச் சொல்லி ஜாடை காட்டினாள்.

அபிஜித் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஒரு பையனின் கையைப் பற்றி கூடவே அழைத்து வந்து கொண்டிருந்தான்.

மைதிலி உட்கார்ந்துகொண்டே சாரதா மாமி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அந்தம்மாள் அபிஜித் எங்கே உடனே போய் விடுவானோ என்று பேக்கிலிருந்து வெள்ளி கத்தியை எடுத்து தயாராக வைத்துக் கொண்டாள்.

அவன் வந்தான். “மைதிலி!” என்று ஏதோ சொல்லப் போனான்.

சாரதாம்பாள் உடனே, “அபிஜித்! இதை நீங்கள் இதை கட் பண்ணணும்” என்றாள்.

“என்ன இது?” என்றான்.

“உங்களுடைய திருமண நாளுக்காக நான் தனிப்பட்ட முறையில் தயாரித்த கேக். உங்கள் இருவருக்கும் ஒரே மனம் என்பதை குறிக்கும் வகையில் இதயத்தின் வடிவம். இடது பக்கம் மைதிலி என்றும் வலது பக்கம் அபிஜித் என்று ஏன் எழுதினேன் தெரியுமா? மனிதனின் இதயம் இடது புறம் இருக்கும். உங்கள் இதயம் மைதிலிதானே? அதான்.”

அபிஜித் முறுவலுடன் அந்தம்மாள் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“கேக் பண்ணும் போது யாரையுமே அந்த பக்கம் வரவிடவில்லை. நானும் இப்பொழுதுதான் பார்க்கிறேன்.” ஆர்வத்துடன் எட்டிப்பார்த்தார் சாரதாம்பாளின் கணவர்.

மைதிலியும் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க கேக்கை கட் செய்து மைதிலிக்கு ஊட்டி விடுங்கள்.” அபிஜித் கையில் கத்தியை கொடுத்தாள்.

“நல்லா இருக்கு. எங்கள் இதயத்தை நானே கட் செய்து மைதிலிக்கு கொடுக்கணுமா?’ என்றான் போலியாக வருத்தத்தை வெளிப்படுத்திக் கொண்டே.

மூன்று பேரும் சிரித்து விட்டார்கள்.

“நீங்க கட் செய்துதான் ஆகணும். வேறு வழியில்லை” என்றாள்.

“சாரதாமாமி சொன்ன பிறகு அதை மீறத்தான் முடியுமா?” என்றான் அபிஜித். “மைதிலி! நீயே கட் பண்ணு என் இதயத்தை” என்று கத்தியை அவளிடம் கொடுத்தான்.

“ஊஹும். உங்களுக்காகவே மாமி கொண்டு வந்திருக்கிறாள்” என்றாள் மைதிலி.

“உங்கள் இருவருக்கும் சேர்த்துதான் கொண்டு வந்தேன் மைதிலி” என்றாள் மாமி.

மைதிலி முறுவலுடன் கேக்கை கட் செய்தாள். ஒரு ஓரமாக அல்லாமல் மைதிலி என்று எழுதி இருந்ததை மட்டும் கட் செய்தாள். அதை எடுத்து அபிஜித்துக்குக் கொடுப்பதற்காக திருப்பினாள்.

அபிஜித் பக்கத்தில் ஒதுங்கியபடி நின்றிருக்கும் இளைஞனின் தோளைச் சுற்றி கையை போட்டு அருகில் அழைத்து வந்து, “சித்தார்த்தா! உங்களுடைய மேடம் மைதிலி. மைதிலி! இவன் சித்தார்த்தா” என்று அறிமுகம் செய்து வைத்தான்.

மைதிலி முறுவலுடன் பார்த்தான். அவன் கூச்சப்பட்டுக் கொண்டே வணக்கம் தெரிவித்தான்.

மைதிலி அபிஜித்துக்கு கேக்கை கொடுத்தாள். அபிஜித் கொஞ்சம் கடித்துவிட்டு மீதியை மைதிலியின் வாயில் ஊட்டினான். பிறகு கத்தியை எடுத்து ஒரு துண்டு கேக்கை கட் செய்து சித்தார்த்தாவிடம் கொடுத்தான். அதன் மீது அபிஜித் என்று எழுதி இருந்தது. தொலைவில் யாரோ அபிஜித்தை அழைத்தார்கள்.

சித்தூ கூச்சத்துடன் வேண்டாமென்று தலையைத் திருப்பிக் கொண்டிருந்த போது அபிஜித் உரிமை எடுத்துக் கொண்டு அவன் வாயில் ஊட்டி விட்டான்.

“தான் சாப்பிடாமல் அவனுக்குக் கொடுக்கிறானே?’ சாரதா மாமி முணுமுணுத்தாள்.

“தாங்க்ஸ் மாமி!” என்று மாமியிடம் சொல்லிவிட்டு, “மைதிலி! சித்தார்த்தாவிடம் பேசிக் கொண்டிரு. ராஜாராமன் வந்திருக்கிறார்” என்று வேகமாய் சென்றுவிட்டான்.

மைதிலி மேற்கொண்டு கேக்கை கட் பண்ண போன போது மாமி தடுத்துவிட்டாள். “ஊஹும். யாருக்கும் கொடுக்க வேண்டாம். இன்று இரவு நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள்” என்றவள், குரலைத் தாழ்த்திக் கொண்டு “நான் தேவியிடம் பிரசன்னம் போட்டு பார்த்தேன். உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதாவது? நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று சீட்டு வந்தது. இந்த கேக்கை தேவியை பிராத்தனை செய்து நிஷ்டையுடன் தயாரித்தேன். இன்று இரவு நீங்கள் இருவரும் கட்டாயம் சாப்பிடுங்கள். நீ கட்டாயம் தாய் ஆவாய்” என்றாள்.

அதை கேட்டதும் மைதிலியின் கன்னங்கள் சிவந்தன. “நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பேரரை அழைத்தாள்.

“மைதிலி!” என்று அழைத்தபடி இரண்டு பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருத்தி வந்ததுமே மைதிலியின் கன்னத்தில் லேசாக தட்டிவிட்டு பரிசைக் கையில் வைத்துக் கொண்டே, “நீண்ட ஆயுசுடன் நல்லபடியாக வாழ்ந்து இதுபோன்ற விருந்துகளுக்கு எங்களை அழைத்துக் கொண்டு இருக்கணும்” என்றாள்.

“பரிசுகள் கூடாது என்று அபிஜித் சொன்னார் இல்லையா?” என்றாள் மைதிலி.

“அது வேற்று மனிதர்களுக்கு. இருந்தாலும் இதொன்றும் விலை உயர்ந்தது இல்லை. என் கையாலேயே எம்பிராயிடரி செய்த புடவை. சிறிய பரிசு” என்று கையில் வைத்துவிட்டாள்.

மைதிலி பேரரை அழைத்து நான்கு பேருக்கும் பரிமாறச் சொல்லி சொன்னாள். சித்தார்த்தா சற்று தொலைவில் நின்றபடி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நின்ற தோரணையைப் பார்த்தால் அந்த சூழ்நிலையில் பொருத்திக் கொள்ள முடியாமல் சங்கடப் படுவது தெரிந்தது. ஒரு அடி முன்னால் வைத்த மைதிலி தொலைவில் இருந்த மேஜையைக் காட்டி, “அதோ அந்த மேஜை காலியாக இருக்கு. அங்கே உட்காருவோமா?” என்றாள்.

அவன் இந்த பக்கம் திரும்பினான். அவள் முதல் முறையாக அவனை பார்த்தாள். அவள் கண்கள் அவன் முகத்தின் மீதே நிலைத்தன. இளமையின் பொலிவும், குழந்தைத்தனமும் கலந்திருந்த அந்த முகத்தில் ஏதோ தெரியாத ஈர்ப்பு! உயிர்நாடியைத் தொட்டு விட்ட உணர்வு! ஒருவினாடி தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை. அடுத்த வினாடி மீண்டாள்.

இருவரும் புல்வெளியில் சற்று தொலைவாக இருந்த மேஜையின் பக்கம் நடந்து கொண்டிருந்தார்கள். அவள் ஒரு அடி முன்னால், அவன் ஒரு அடி பின்னால்! பின்னால் விருந்தாளிகளின் கலகலப்பு, சிரிப்பும், பேச்சும் கேட்டுக் கொண்டிருந்தது. சிலர் மைதிலிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அவளுக்கு இதொன்றும் காதில் விழவில்லை.

உடல் முழுவது மின்சாரம் பாய்ந்தாற்போல் இருந்தது. இரவு நேரத்தில் வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்றுக்கு அவள் புடவையின் தலைப்பு லேசாக படபடத்துக் கொண்டிருந்தது. மெள்ளமாய் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். தொலைவில் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தான் நடந்து போவது போலவும், துணையாய் இந்த பையன் வருவது போலவும் வித்தியாசமான உணர்வு!

மைதிலிக்குப் புரியவில்லை. என்றுமே இது போன்ற அனுபவம் ஏற்பட்டது இல்லை. உணர்வுகளின் இந்த கொந்தளிப்பு ஏன்?

தானும் சித்தார்த்தாவும்! சுற்றிலும் மக்கள் சந்தடி! நறுமணம் நிறைந்த காற்று! இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு ஏதோ சக்தி தன்னை வழி நடத்திக் கொண்டிருந்தது.

என்ன இந்த சந்தோஷம்? ஏன் இந்த பதற்றம்! தடுமாற்றம்! அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. சுயநினைவு இழப்பது போல் இருந்தது. பெரும் முயற்சி செய்து மேஜை அருகில் வந்ததும் அதன் விளிம்பைப் பற்றிக் கொண்டு சமாளிக்க முயன்றாள். கண்களை மூடிக் கொண்டு காற்றை பலமாக உள்ளே இழுத்துக் கொண்டாள். அரை வினாடி கழித்து கண்களைத் திறந்தாள். எதிரே தண்ணீர் டம்பளர் கண்முன்னே இருந்தது.

தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவனுக்கு புரிந்து விட்டது போலும். தண்ணீர் கொண்டு வந்து தருகிறான்.

“உன் பெயர்?” டம்ப்ளரை வாங்கிக் கொள்ளாமலேயே கேட்டாள்.

“சித்தார்த்தா!” பிறக்கும் போதே கம்பீரத்தை வரமாக கொண்டு வந்த குரல் அது.

மைதிலி கிளாஸை பெற்றுக் கொள்ளவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரொம்ப சாதாரணமான மூக்குக் கண்ணாடியில் தெளிவாக இருந்த அவன் கண்களிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த நிர்மலமான ஒளி மனதின் வாசலை திறந்து யோக சமாதியில் இருந்த அவள் மனதை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது.

“மைதிலி!” யாரோ அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

திடுக்கிட்டவளாய் மைதிலி இந்த உலகத்திற்கு வந்தாள். ஒரு நிமிடம் தான் செயலற்று நின்ற விஷயத்தைப் புரிந்துக் கொண்டாள்.

“தாங்க்யூ!” டம்ளரை பெற்றுக் கொண்டாள். “காலை முதல் ஒரே வேலை. தலை சுற்றுவது போல் இருந்தது.” தெளிவற்ற குரலில் சொல்லிக் கொண்டே தண்ணீரைக் குடித்துவிட்டு டம்ளரை மேஜை மீது வைத்தாள்.

“மைதிலி! ப்ளீஸ் ஒரு நிமிடம். ஒரு போட்டோ.” சிநேகிதி ஒருத்தி வந்து இழுத்துக் கொண்டு போனாள்.

“ஒரு நிமிடம்.” சித்தார்தாவிடம் சொல்லிவிட்டுப் போனாள்.

போட்டோ எடுத்து முடித்ததும் சித்தார்த்தாவுக்காக மேஜை அருகில் வந்து பார்த்தாள். அங்கே சித்தார்த்தா இல்லை. அந்த இடம் காலியாக இருந்தது. சித்தார்த்தாவுக்காக சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தாள். விருந்தாளிகள் விடை பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

அபிஜித் அருகில் வந்தான். “என்ன மைதிலி?” என்றான்.

“சித்தார்த்தா?” என்றாள்.

“கிளம்பிவிட்டான். என்னிடம் சொல்ல்லிக் கொண்டு போனான்.” அவன் மனைவியின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டான். “ராஜாராமன் குடும்பத்தாருடன் ஒரு போட்டோ” என்றான். அதற்குள் ராஜாராமன் குடும்பம் அங்கே வந்து விட்டது.

மைதிலி அபிஜித்துடன் சேர்ந்து போட்டோவுக்காக நின்று கொண்டாள், எத்தனை முயன்றாலும் இயற்கையான அந்த முறுவல் வரவில்லை. மனம் இன்னும் அந்த அற்புதமான அனுபவத்தை விட்டு வெளிவரவில்லை. கண்முன் தெரிந்த சந்தோஷம் ஏதோ திடீரென்று காணாமல் போய்விட்ட உணர்வு.

“மைதிலி ரொம்ப களைத்துப் போனாற்போல் தெரிகிறாள்” என்றார் ராஜாராமன்.

“ஆமாம்” என்றான் அபிஜித். “மைதிலி! எல்லோரும் வந்து விட்டு போய் விட்டார்கள் இல்லையா. போய் ஒய்வு எடுத்துக் கொள்” என்றாள் சாரதா மாமி.

“பரவாயில்லை” என்றாள் மைதிலி.

“ஊஹும். நீ ரொம்ப களைப்பாக இருக்கிறாய். வா உள்ளே.” அபிஜித் மனைவியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

 

Series Navigationமதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *