தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !

This entry is part 9 of 22 in the series 8 மார்ச் 2015

 

வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான ஒருத்தியை நான் சமீபத்தில் சந்தித்தேன். அவள் ஒரு புத்த பிக்குவைப் போலிருந்தாள். ஆனால் அவளை எனக்கு முன்பே தெரியும், இந்த புத்த பிக்கு வேடம் தரிப்பதற்கு முன்பே!. சமூகத்தில் திறமையான வழக்குரைஞர் ஒருத்தின் தாயார் அவர்.

அன்று அவள் என்னை வணங்கிய விதம் மாறுதலாய்த் தெரிந்தது ! பழையவளாய் இருந்தால் அத்தனை வணக்கத்தை யாருக்கும் தந்திருக்கப் போவதில்லை. அதுவும் எனக்கு, அவள் வணங்க வேண்டிய அவசியம் இல்லை. அவள் பார்த்து வளர்ந்தவள் தான் அப்படியிருக்க?

அந்த வணங்குதல் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக ஆழமான சோகத்தையும் சோர்வையும் எனக்கு வெளிப்படுத்தியது. தற்போது நடந்து வரும் ஆதார் பதிவிற்காக வந்திருந்தாள் அவள். இந்த பதிவு யாருக்கு இலாபத்தையோ நட்டத்தையோ ஏற்படுத்த போகிறது ? வந்து குவியும் பாமரமக்களுக்கு பதில் சொல்லி மாள முடிய வில்லை.

“ஏம்பா A4 எதாச்சும் சொல்லி அனுப்பு”, என்ற தாசில்தாரின் குரலுக்கு “இதோ டோக்கன் போட்டுட்டு இருக்கேன் சார்”, என்று உள் அறையில் இருந்த குரலுக்கு இசைந்து, “உள்ளே போங்க டோக்கன் தராங்க”, என்றேன்.

ஒரு ஆழமான சோகம் மனிதர்களைத் துறவிற்கு தள்ளி விடுகிறது. எதை துறக்கவேண்டும் என்ற ஞானத்தை அறிவிக்காமலேயே. தன் மகளை பறிகொடுத்த அவளின் வேதனையே அந்த துறவறத்தில் பிரதிபலித்தது. ஒரு வேளை இதன் பின் அந்த காவி உடை அவளுக்கு வேறு அந்தஸ்த்தை தரக் கூடும். இப்படியான ரீதியில் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்க நெருக்கடியான அந்த சூழலில் கூட்ட நெரிசல் அதிகப்பட மக்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஒரு பெண்ணின் மீது அனைவரும் நடந்து முன்னேற அந்த பெண்ணோ அய்யோ அம்மா என்ற அலறலின் உச்சஸ்தாயியை அனுபவித்து மூர்ச்சை அடைந்தது வேதனை. அருகில் இருந்தவர்களோ “டோக்கன் வாங்கவென நடிக்கிறாள்”, என்று தங்களுக்குள் உரையாடிக் கொண்டது அதை விட வேதனை.

தற்போது இந்த ஆதார் தேவை என்பது எரிவாயுவிற்கான மான்யத்தை வாங்குவதற்கும் கிராமப் புறங்களில் ஊரக வேலை வாய்ப்பில் ஊதியம் பெறுவதற்காகவும் அத்தியாவசியமான அரசாங்கச் சட்டத்தில் ஒன்றாக அமைந்து விட்டது.

தங்கள் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள இயலா மக்களை உருவாக்கிக் கொண்டிருப்பது கண்கூடாக தெரிந்து கொண்டிருக்க எந்த திட்டங்களும் 100% முழுமையை அடைவதில்லை. முழுமை அடைந்து விட்டதாக கண் துடைப்பு செய்யப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை ஆகட்டும், மக்கள் தொகை கணக்கெடுப்பாகட்டும், தற்போது நடந்து வரும் ஆதார் ஆகட்டும் சரியான மேற்பார்வை இன்மையால் குறைந்த பட்ச பலனைத் தருவதாகவே இருக்கிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.

குவியும் மக்களைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கும் திறன் நம் அரசாங்கத்திடம் இல்லை. அவர்களை அடக்குவதிலேயே பணி நேரம் முழுமையும் கடந்து போய்விட ஆதார் பதிவு எவ்வாறு செய்யப்படும் ?

இதில் அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மக்களிடமிருந்து ஒரு புறம் இருக்க, அரசியல் வாதிகளிடம் இருந்து மறுபுற அச்சுறுத்தல் களும், மொட்டை பெட்டிஷன்களும் கூட அரங்கேற்றப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் சரியாகச் செயல்பட வில்லை என்று சில இடங்களில் சாலை மறியல், பஸ் மறியல், என்று மக்களின் ஒருங்கிணைப்பு வன்முறையைக் கையில் எடுத்துக்கொள்கிறது.

ஒரு பக்கம் மக்களைக் கையாளும் திறன் இன்மையும், மறுபுறம் மக்களுக்கு அரசாங்கத்துடனான புரிந்துணர்வின்மையும் இந்த ஆதார் எடுக்கும் பணி என்பது எங்கு போய் முடியும் என்பது காலம் சொல்லும் பதிலாகவே இருக்கும்.

[தொடரும்]

+++++++++++++++++++++++++

Series Navigationஒரு தீர்ப்புவிண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *