நாங்கள் விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம், சீ’அன் நகரம் மற்ற நகரங்கள் போன்றே அடுக்கு மாடிக் கட்டடங்களை கொண்டதாகவே காணப்பட்டது. ஆனால் விடுதிக்கு அருகே செல்லச் செல்ல, நகரம் தொன்மை வாய்ந்த பாரம்பரியச் செல்வங்கள் நிறைந்த நகரமாகத் தென்பட்டது.
நாங்கள் தங்கிய விடுதி ரென்மின் சதுக்கம் என்று அழைக்கப்படும் கோட்டையுள் நகரமாக விளங்கிய இடத்தில் இருந்தது. சதுரமான மதில் சூழந்த கோட்டையின் ஒரு வாயில் வழியே நுழைந்தோம். அங்கு கண்ட கட்டடங்கள் கீழே நவீன கட்டடங்களாகத் தோன்றிய போதும், மேல் பகுதி அக்கால கூரை அமைப்புடன் இருந்தது அழகாக இருந்தது. வெளியே இருந்த 30க்கும் அதிகமான மாடிகள் கொண்ட கட்டடங்கள் போல் இல்லாமல், அகலமான குறைந்த அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களாக இருந்தன.
கோட்டை நகரத்திற்குப் பல வாயில்கள் இருந்தன. காலையில் செல்லும் போது உயர்ந்து நிற்கும் மதில் சுவர்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. அதையே இரவில் விளக்கொளியில் காணும் போது கண் குளிர காணும் வண்ணமயமான ரம்மியமான காட்சியைத் தந்தது.
இந்த நகரத்திற்குள் தான் எத்தனை விதமான காட்சிகள் காணக் கிடைக்கின்றன. நாங்கள் முன்னே சென்றிருந்த ஹ_ய் மிங் சியே ஒரு உணவுக் கடை வீதி. பலவித உணவு வகைகளை வயிற்றுக்கும் கண்களுக்கும் கொடுத்துக் நெஞ்சைக் கொள்ளை கொள்கிறது. அதன் கடைசியில் இருந்த பறை கோபுரமும் மற்றொரு அதிசயம். இரவில் வண்ண விளக்குகளுடன் பார்க்கும் போது, ஒரு வித மாயா உலகத்தின் சாயலைக் கொண்டு வரும். அதில் ஏறி நகரத்தைக் காண்பதோடு அல்லாமல், அங்கு வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும் மேளங்கள் முன் காலத்தில் எப்படிப் பயன்பட்டிருக்கும் என்ற எண்ணத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.
நகரைப் பார்க்க வரும் பிரமுகர்களுக்கு இனிய வரவேற்பு இசையை இது நிச்சயம் தந்திருக்கும். யுவான் சுவாங் இந்தியப் பயணத்தை முடித்துத் திரும்பிய போது, அவருக்கு மேளங்கள் வாசித்து வரவேற்பு நல்கியதாக வரலாறு கூறுகிறது. திண்மையான படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்று கோபுரத்தின் தளத்தில் நின்று பார்க்கும் போது, ஒரு பாரம்பரியம் மிக்க இடத்தில் நாமும் நின்று கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் நிச்சயம் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லச் தோன்றும்.
இரண்டாம் தளம் வரை சென்று நகரத்தைக் காணலாம். 24 மத்தளங்கள் மேற்கிலிருந்து தெற்கு வரை உள்ளன. இது அக்காலத்தில் 24 மணி நேரத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டவையாம். இன்று நேரம் பார்க்க அது உதவவில்லையென்றாலும் வரும் பயணிகளுக்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கின்றன. 1996ல் மிகப் பெரிய முழு பசுத்தோலால் ஆன மத்தளம் இருந்த இடத்திற்கு கொடுக்கப்பட்டது. இது தான் தற்போது சீனாவின் மிகப் பெரிய மத்தளம்.
உள்ளே இசை நிகழ்ச்சி மேலும் பயணிகளுக்கு விருந்தளிப்பதாக இருக்கிறது.
நகரின் மையத்தை ஊர்ஜிதப்டுத்தும் வகையில் மணி கோபுரம், மணிக் கூண்டு கட்டடம் உயர்ந்து நிற்கின்றது. மூன்று நிலைகளாக இரண்டு மாடிக் கட்டடமாக அமைக்கப்பட்ட இந்த மிங் வம்சத்திய கட்டடம் நம்மை அந்தக் காலத்தில் சூ யுன்ஜங் தன்னுடைய நாட்டை எதிரிகளிடமிருந்த காக்க என்னவெல்லாம் செய்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. 1384ல் கட்டப்பட்ட இது, இன்றளவும் சீனாவின் பாரம்பரியத்தைக் கட்டியம் கூறிக் கொண்டு நிற்பது, வியப்பைத் தருகிறது. பெரிய மணி ஒரு ஓரத்தில் அமைதியாக இருக்கிறது.
நவீன பல்பொருள் அங்காடிக் கட்டடங்கள் எல்லாப் பக்கமும் நிறைந்து காணப்பட்ட போதும் இவ்விரு கட்டடங்களும் நிமிர்ந்து நின்று மிங் வம்சத்தினரின் வீரத்தினை கட்டியம் கூறும் படி நிற்கின்றன.
தினமும் சீ’அன் நகரில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கிளம்பினாலே, ரென்மின் சதுக்கத்தின் கோட்டை மதிலைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அதைத் தாண்டும் போதெல்லாம் அதன் மேல் செல்லும் ஆவல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. மதில் இரவில் ஒளி விளக்குகளால் ஜொலித்ததை தினம் கண்டோம். முழு மதிலையுமே விளக்குகளால் இரவில் காண முடிந்தது.
கடைசி நாள் ஊரை விட்டுக் கிளம்பும் முன்னர், காலையில் மதில் சுவரை காணப் புறப்பட்டோம். மதில் சுவரின் மேற்கு வாயிலை அடைந்தோம். மதிலை அடைய அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கப் பாதையில் நுழைந்ததுமே, முதலில் பெரிய வரைபடம் எங்களை வரவேற்றது.
70 யுவான் கொடுத்து நுழைவாயில் சீட்டை வாங்கினோம். எவ்வளவு பெரிய மதில் சுவர். கோட்டையைக் காக்க இத்தனை பாதுகாப்பா என்று ஆச்சரியப்பட வைத்தது. அதை இன்றளவும் பராமரித்து வரும் சீ’அன் நகரத்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வாயிலில் நுழைந்ததுமே பிரம்மாண்டம். முதன்முதலில் டாங் வம்சத்தினர் கட்டிய மதிலை மிங் வம்சத்தினர் விரிவாக்கிக் கட்டினார்கள் என்பது வரலாறு.
நிழற்படங்களை எடுத்துக் கொண்டு மெல்ல படிகளில் ஏறி மதிலுக்கு மேல் சென்றோம். அத்தனை பெரிய சாலை போன்ற அமைப்பு அங்கே இருக்கும் என்று எண்ணியும் பார்க்கவில்லை.
மதில் முழுவதும் சீன அலங்காரக் கூடுகள் சிவப்பு நிறத்தில் எல்லோரையும் வரவேற்ற வண்ணம் இருந்தன.
அங்கிருந்து எல்லா பக்கமும் காண முடிந்தது. கோட்டையை அலங்கரிக்கும் பொருட்கள் பலவும் அங்கே வைக்கப்பட்டு இருந்தன. சற்று தூரம் சென்றதும் மதில் மேல் முழுவதுமாக பயணிக்க மிதிவண்டிகள் மையம் கண்ணில் பட்டது. நடந்து செல்வதை விட சுற்றிப் பார்க்கவும், விரைவில் சுற்றி வரவும் முடியும் என்பதால் மிதிவண்டியை 2 மணி நேரத்திற்கு 40 யுவான் கொடுத்து வாடகைக்கு எடுத்துக் கொண்டோம்.
முதலில் மெதுவாக பயணிக்க ஆரம்பித்தோம். தரை சற்றே சமமாக இல்லாத போதும், சவாரி செய்ய வசதியாகவே இருந்தது. சில இடங்களில் பழங்கால பாளங்களும் சில இடங்களில் புதுப் பாளங்களாகவும் இருந்ததைக் கண்ட போது, அந்த மதில் பரிமாரிக்கப்பட்டு, பயணிகளுக்கு வசதியாக அமைக்கப்பட்டு இருப்பது புரிந்தது. வழியெல்லாம் இரண்டு பக்கமும் பார்க்க பல அரிய விசயங்கள் கிடைத்தன. 300 வருடங்களுக்கு முன்பு நகரம் எப்படி இருந்தது என்பதை சித்தரிக்கும் வகையில் கட்டடங்கள் தென்பட்டன. வீடுகளின் கூரைகள் வரலாற்றைப் பேசின. வீதிகள் நம்மை அக்காலத்திற்கு இட்டுச் சென்றன. வரலாற்றுப் படங்களில் காணும் பல விசயங்களை அங்கே காண முடிந்தது.
வழி நெடுகிலும் பட்டாசுச் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தன. இவ்வூரில் விசேட தினங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள் என்பது புரிந்தது.
அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்களை எறியும் ஆயத வண்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து சீ’அன் இரயில் நிலையத்தைக் காண முடிந்தது. வழியில் சீ’அன்னில் ஒரே லாமா கோயிலைக் காணலாம்.
மதிற் சாலையில் அங்காங்கே மண்டபங்கள் இருந்தன. ஒவ்வொரு மண்டபத்திலும் சீனக் கலையின் அம்சங்களைக் காண முடிந்தது. இரண்டு அடுக்கு மூன்றடுக்கு மாடங்களும் இருந்தன.
வழி தோறும் மாடங்கள் இருந்தன. ஒவ்வொன்றையும் பார்த்துச் செல்ல நேரம் இல்லாததால் நாங்கள் சவாரி செய்து கொண்டே சென்றோம். அந்த மாடங்கள் கோட்டை மதில் மேலிருந்து எதிரிகளை வேவு பார்க்க அமைக்கப்பட்டவை. நாங்கள் சவாரி செய்த தூரம் வரை கோட்டையைக் காக்கப் பயன்படுத்தபடும் பீரங்கிகள் ஏதும் வைக்கப்படவில்லை. நாங்கள் ஹாங்காங்கில் வாழும் லான்டாவ் பகுதியில் மிகச் சிறிய துங் சுங் கோட்டை ஒன்று பயணிகளுக்காக பரிமாரிக்கப்பட்டு வருவதைக் கண் முன் கொண்டு வந்தது. அந்தச் சிறிய கோட்டையிலேயே நான்கு பீரங்கிகள் இருந்தன. இத்தனைப் பெரிய கோட்டையில் பீரங்கிகள் இல்லாதது மனதை நெருடியது. கடைசியில் ஓரிடத்தில் ஒரு பீரங்கியைக் காண ஆறுதலாக இருந்தது.
நாங்கள் அப்படியே மேற்கு வாயிலிருந்து வடக்கு வாயிலைச் சென்றடைந்தோம். அங்கு சிறிது இளைப்பாறிய பின் மேலும் பயணத்தைத் தொடர்ந்தோம். முழு மதில் சுற்றளவு 13.74கி.மீ. அதில் ஒரு பகுதியைக் கடந்தது மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து சவாரி செய்வது சற்றே களைப்பாக இருந்த போதும், ஆர்வத்துடன் செய்ய முடிந்தது.
அந்தக் கால போர் வீரர்களின் உடைகளில் சிலரை நடமாட விட்டுள்ளனர். பயணிகள் அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
மிகுந்த குளிர் பருவமாக இருந்ததால், பயணிகள் மிகவும் குறைவாக வரும் காலமாக இருந்ததால், அத்தனை வெளி நாட்டவர்கள் கண்களில் படவில்லை. சீனர்கள் பலர் பல பேருந்துகளில் இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க வந்ததைக் காண முடிந்தது. குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடனும் பெரியவர்களுடனும் பலர் நடந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
மிதிவண்டிகள் சிறு குழந்தைகளுக்குத் தரப்படாததால் அவர்கள் நடந்து செல்லும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை நாங்கள் வண்டியை எடுத்த போதே தெரிந்து கொண்டோம். ஒருவராக இருவராக செல்லக் கூடிய வகை மிதிவண்டிகள் அங்கே இருந்தன. குடும்பத்துடன் செல்ல சிறு வண்டிகளும் இருந்தன. சற்றே கூடுதல் கட்டணமாக இருந்த போதும், குழந்தைகளுடன் பெரியவர்களுடன் வருபவர்கள் அந்த வண்டியில் பயணித்து முழு மதிலையும் சுற்றி வரலாம்.
ஒரு பக்கம் மட்டும் அகழி இருந்தது. வழி நெடுக மக்களையும் மதிலுக்கு அப்பால் இருக்கும் ஊரையும் பார்த்த வண்ணம் அப்படியே நாங்கள் வடக்கு வாயிலை வந்தடைந்தோம். 11 மணிக்கு ஆரம்பித்தது சவாரி 12:15 வரை நீடித்தது.
தெற்கு வாயில் மிகவும் முக்கிய வாயில் என்றும், சிறந்த அம்சங்கள் கொண்டது என்று பிறகு தான் தெரிய வந்தது. அதை பார்க்க முடியாது போனதால், சற்றே வருத்தம் இருக்கத் தான் செய்தது. அதனுள் இரு சிறிய அருங்காட்சியகங்களும் இருந்தன. நேரமின்மையால் அவற்றை காண முடியவில்லை. பயணிகள் அதிகம் வரும் காலங்களில் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள் நடக்குமாம்.
\
மகளுக்கு முழுவதுமாக செல்ல விருப்பம் இருந்த போதும் இனி கிளம்பினால் தான் நேரத்திற்கு விமான நிலையம் செல்ல முடியும் என்பதால் எங்கள் சவாரியை அங்கேயே முடித்துக் கொண்டோம்.
வெளியே வந்து டாக்ஸி பிடிக்க முயன்றோம். 10-15 நிமிடம் ஆன பிறகே ஒன்று கிடைத்தது. முதல் இரண்டு நாட்கள் சீ’அன் நகரம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எதுவும் இல்லாமல் இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டது போக, அன்று பல இடங்களில் சாலை வண்டிகளால் நிரம்பி வழிந்தது. நேர் சாலைகள், குறைவான வண்டிகள் என்று வார நாட்களில் அமைதியாக இருந்த சீ’அன் வார இறுதி நாட்களில்; சாலை நிறைய வண்டிகள் என்று நகரமே மாறிவிட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வெகு நேரம் பிடிப்பதைப் பார்க்க முடிந்தது.
நம்மூர் கோயிலை மூன்று முறை வலம் வந்தால் நல்ல பலன் கிட்டும் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தச் சுவரை மூன்று முறை, மதிலை தரை மார்க்கமாகவும் மதில் மேலேயும், இரவில் ஒரு முறை என்று மூன்று முறை சுற்றி வந்தால் தான், மதிலின் முழுத் தன்மையையும் அறிய முடியும் என்று நான் எண்ணுகிறேன்.
சீஅன் நகரம் பற்றி படங்களுடன் முழுமையாக அறிய கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியைச் சொடுக்கவும்
http://www.youblisher.com/p/1090362-Scintillating-Xian-Experience/
அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.
- தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
- கம்பன் திருநாள் – 4-4-2015
- பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )
- ஞாழல் பத்து
- எழுத்துப்பிழை திருத்தி
- சான்றோனாக்கும் சால்புநூல்கள்
- என்னைப்போல
- மிதிலாவிலாஸ்-7
- குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
- மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
- நிழல் தந்த மரம்
- கருவூலம்
- வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)
- ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை
- உளவும் தொழிலும்
- வைரமணிக் கதைகள் -8 எதிரி
- சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி
- ஒட்டுண்ணிகள்
- தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
- English rendering of Thirukkural
- ஷாப்புக் கடை
- தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்
- உலகம் வாழ ஊசல் ஆடுக
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்