சிலம்பில் ஊர்ப்புனைவுகள்

author
0 minutes, 15 seconds Read
This entry is part 23 of 32 in the series 29 மார்ச் 2015
முனைவர் இரமேஷ் சாமியப்பா

இயற்கை இனியது; எழிலானது; எல்லோராலும் விரும்பப்படுவது; இயற்கையில் இருந்து கிளைத்து எழுந்ததே இன்றைய மறுமலர்ச்சி. இயற்கையின் உறுப்பாக வாழ்ந்த மனிதன் இயற்கையைத் தன்னிலிருந்து பிரித்துத் தன்னுடைய கருவியாகக் கொண்டு வாழத் தொடங்கினான். அப்பொழுது அவன் நாகரீகம் பெற்றவனாக மலர்ச்சியுற்றான். மனித இன அறிவியல் வளர்ச்சியும் தமிழன் உறைவிடத்தை வரையறுத்துக் கொண்டு வாழத் தலைப்பட்டான். அவனுடைய வாழ்வும் அவனுக்குப் பல்வேறு துய்ப்புகளையும் துடிப்புகளையும் தந்துதவின. அவ்வளர்ச்சியில் அவனும் அவனை சார்ந்தவர்களும் தொகுதியாக வாழத் தொடங்கினர். அந்த கூட்டு வாழ்க்கை அவனுடைய நாகரீக வரலாற்றில் தனிப்பகுதியாக உருமாறியது. அதுவே ஊராகப் பரிணமித்தது. மக்கள் பெருக்கமே ஊரின் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் மூலகாரணமாயின.(1)

சங்க இலக்கியங்கள் தொகுதி தொகுதியாக மக்கள் வாழ்ந்த ஊர்களையும் அந்த ஊர்கள் அடங்கிய நாடுகளையும் குறிக்கின்றன. சங்கப் புலவர்கள் ஊர்களை வெவ்வேறு வகையில் வெவ்வேறு சூழல்களில் அமைத்திருக்கின்றனர். இச்சங்க இலக்கிய காலத்தை அடுத்து எழுந்ததாகக் கருதப் பெறுகின்ற நூல் சிலப்பதிகாரம். கி.பி.2ஆம் நூற்றாண்டை சார்ந்த இவ்விலக்கியத்தில் ஊர்கள் இடம்பெற்றுள்ள பாங்கு, புலவன் ஊரைப் புனைய வேண்டியதன் நோக்கம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘சிலம்பில் ஊர்ப்புனைவுகள் எனும் பொருண்மையில் இவ்வாய்வு அமைகிறது

 

தொல்காப்பியமும் ஊரும்

தொல்காப்பியம், மதுரை, உறந்தை, வஞ்சி என்று எந்த ஊரின் பெயரையும் சுட்டவில்லை. பன்னிரு நிலம், ஏமப்பேருர், தண்பொழில் வரைப்பு, என்று  சுட்டும். இடந்தலைப்பாடு, இரவுக்குறி, பகற்குறி, ஊரும் பேரும் வினாதல், கண்டோர் கூற்றில் வரும் ஊரது சார்பு, என்பன ஊரைப் புனைந்து பாட வாய்ப்பானக் களங்களாகும்.

தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் ஊர் என்று ஊரைக் குறிக்கின்ற சொல்லைக் கூறிலர். புள்ளிமயங்கியலில் ரகர ஈற்றுச் சொற்களைச் சொல்லும்போது, ஊர் என்ற சொல்லும் அவ்விதிக்குள் கட்டுபட்டுவிடுகிறது. அவர், ஆர்,வெதிர்,சார்,பீர் என்று ரகர ஈற்றுச் சொற்கள் நான்கினையே விதந்து கூறுவர். ஊர் என்ற இடப்பொருள் காட்டும் சொல் இவ்வதிகாரத்தில் இல்லை. ஊரன்றித் தெரு, சேரி, பாக்கம், குடி போன்ற இடஞ்சுட்டும் கிளவிகளையும் சுட்டினாரில்லை.

குற்றியலுகரப் புணரியலில் ஊர் என்ற வடிவினையும் வேறு பொருளுடைய ஏறி வருதல் என்னும் பொருளிலும் ஆளப்பட்டிருக்கிறது. அவை ஊர்பத்தினும் அத்தொழிற் றாகும் (2), ‘ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி’(3) என்று இரண்டிடங்களிலும் பயிலுகின்றது. ஊர் என்ற இடப்பொருளை உணர்த்தும் சொல் பயிலவில்லை எனினும் ஊர் என்ற அமைப்பு- ஊர் என்ற பகுப்பு- தொல்காப்பியர் காலத்தில் இருந்துள்ளது என்பது இதனால் பெறப்படுகிறது.

சொல்லதிகாரத்தில் ஊர் என்ற சொல்லாட்சி இல்லை. வேற்றுமையியலில் ‘வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் எனாஅ’(4) என்ற ஏழாம் வேற்றுமையை விளக்குகிறார். இங்கும் ஊர்ப்பெயரைச் சுட்டிலர். பெயரியலில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என்று பேசுவர். எச்சவியலில் செந்தமிழ்ச் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’(5) என்பதன் மூலம் பன்னிரு நாடுகள் இருந்தமை பெறப்படுகிறது.

பொருளதிகாரத்தில் திணை அடிப்படையிலேயே நிலத்தை – சூழலைப் – புனைய வேண்டும் என்றுரைப்பர். இப்புனைவில் ஊரைக் குறித்திலர்.  தெய்வம் முதலான கருப்பொருளில் ஊரைக் குறித்தாரில்லை. பெயரைச் சுட்டும்போது ஊர்ப்பெயரினோடு சார்த்திக் கூறுக என்பர். மேலும்,

ஊரும் பெயரும் உடைத்தொழில் கருவியும்                                       யாவும் சார்த்தி அவைஅவை பெறுமே (6)

என்ற தொல்காப்பிய நூற்பாவினால், ஊர் பற்றிய சிந்தனை வளர்ச்சி தொல்காப்பியர் காலத்தில் நன்கு வேரூன்றியிருந்தமை புலனாகிறது.

சங்க இலக்கியத்தில் ஊர்ப்புனைவுகள்

சங்க இலக்கியத்தில் அகம்,புறம் என்னும் இரு கைகோளிலும் ஊர் என்னும் கருப்பொருள் ஆளப்பெற்றுள்ளது. புறப்பாடல்களாக ஊர்கள் இடம்பெறும்போது மன்னர்கள் அரசாட்சி செய்கின்ற ஊர்கள், அவனது உரிமையுடைய ஊர்கள், பகைவரை வென்ற ஊர்கள், மற்றும் வரலாற்று அடிப்படையில் இடம்பெறும் ஊர்கள் என்றும், அகப்பாடல்களில் புலவர்களின் சொந்த ஊர்கள், தலைவிக்கு உவமையாக அமைந்த ஊர்கள், மற்றும் ஆதரித்த மன்னர்களின் வள்ளல்களின் ஊர்கள் என்றும் அமைகின்றன.

சிலம்பில் ஊர்ப்புனைவுகள்

சங்க இலக்கியத்தின் ஆற்றுப்படை நூல்கள் நானில வருணனை வழியிடைப்புனைவுகள் ஊரை வருணித்துப் புனைவினை விரித்துரைக்கின்றன. இதனைப் பின்தொடர்ந்த இலக்கியங்களில் குறிப்பாகக் காப்பியங்கள் ஊரினைச் சித்திரிப்பதை ஓர் உட்கூறாகவே கொண்டன. தண்டியாசிரியர், பெருங்காப்பிய இலக்கணம் கூறும்போது, நாடு, நிலம், பொழுது வருணனைகளைக் காப்பியக் கூறுகளில் அடக்குவர். சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஊர்ப்புனைவுகளை நாட்டுப் புனைவுகள், பெருநகரப் புனைவுகள், வழியிடைப் புனைவுகள் மற்றும் சிற்றூர்ப் புனைவுகள் என்ற வகையில் காணமுடிகின்றது.

நாடுகள்

சிலப்பதிகாரக் கதை நிகழும் சோழ, பாண்டிய, சேர நாடுகளைத் தவிர பதினெட்டு நாடுகளின் பெயர்கள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் எடுத்தாளப்பட்டுள்ளன. நாவலம், தமிழ்நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, சேரநாடு, கொங்கு நாடு, கோசர் நாடு, கங்க நாடு கட்டி நாடு, குடகு, கருநடம், கொங்கணம், மாளுவம், மத்திம நாடு, யவனர் வளநாடு, ஆரிய நாடு, இலங்கை, அவந்தி நாடு, வச்சிர நாடு ஆகியன குறிக்கப் பெற்றுள்ளன.

பெருநகரப் புனைவுகள்

சிலப்பதிகாரக் கதை, சேர,சோழ, பாண்டியர்களின் தலைநகரங்களான வஞ்சி, புகார், மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நிகழ்வதாக அமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் புகார், மதுரை இரண்டு நகரங்களின் நீர் வளம், நில வளம், தொழில் வளம், வாணிப வளம் மற்றும் கலை வளம் சிறப்புகளை விரிவாகப் புனைகின்றார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

புகார் நகரம்

புகார் நகரம், மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் என்னும் இருபகுதியாக விளங்கியுள்ளது. மன்றங்கள், கோயில்கள், மற்றும் நகர வீதிகளில் காருகர், காழியர், கூவியர், பரதவர், வாசவர், தச்சர், கண்ணனொடையாட்டியர், பன்னிணவிலைஞர், ஓசுநர், கருங்கைகொல்லர், கண்ணுள் வினைஞர், கஞ்சகாரர், செம்புசெய்குநர், மண்ணீட்டாளர், பொன்செய்கொல்லர், நன்கலம் தருநர், தின்னகாரர், தோலின் தின்னர், பெரும்பாணர், கைவினைஞர், வண்ணம், சுண்ணம், சாந்தி, பூ, புகை, விரை, உப்பு முதலியன பகர்வோர்களுக்கு மருவூர்ப்பாக்கத்திலும் மன்னன் இருப்பிடம், வாணிகர், உழவர், வேதியர்,அரசு அலுவலர், படைப்பிரிவினர், ரத்தினங்களைத் துளையிடுவோர், சங்கு வளையல் செய்வோர், மருத்துவர், வானநூல் வல்லோர் ஆகியோருக்குப் பட்டினப்பாக்கத்திலும் தனித்தனிக் குடியிருப்புகள் அமைந்திருப்பதைச் சுட்டிச் செல்வர். .(இந்திர. 7-39).

மதுரை நகரம்

கோபுரங்களுடன் நான்கு வாயில்கள், பலபொறிகளையுடைய கோட்டை, அகழி, காவற்காடு, கிழக்கில் புறஞ்சிறை மூதூர், பற்றிய புற அமைப்பினை எடுத்துரைத்த ஆசிரியர் மதுரை அக அமைப்பாகக் காவற் கணிகையர் வீதி, ஆடற்கத்தியர் இருபெரு வீதி, அங்காடி வீதி, பொற்கடை வீதி, இரத்தினக் கடை வீதி, அறுவைக் கடை வீதி, கூலக்கடை வீதி, நால்வகை வருணத்தாருக்கும் தனித்தனித் தெருக்கள், ஆய்ச்சியர் குடியிருப்புகள், குறுந்தெருக்கள், சந்திகள், முடுக்குகள் ஆகியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

வழியிடைப் புனைவுகள்

கோவலன் கண்ணகி காவிரிபூம்பட்டினத்திலிருந்து மதுரை நோக்கி கவுந்தியடிகளுடன் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழிகளாகப் புகார் – திருவரங்கம், உறையூர்-கொடும்பை, கொடும்பை-மதுரை (3 வழிகள்) ஆகியன சுட்டப்படுகின்றன. மதுரை தீக்கிரையான பின்பு கண்ணகி நிலை தெரியாது சென்ற மதுரை-நெடுவேள் குன்றம், சேரமன்னன் மலை பளம் காணச் சென்ற,மேற்கரை வஞ்சி -நீலகிரி  மற்றும் சேரநாடு-தங்கால் என்னும் எட்டு வழிகள் புனைவு பெற்றுள்ளன.

சிற்றூர்ப் புனைவுகள்

சிலப்பதிகாரத்தில் முப்பத்து மூன்று சிற்றூர்கள் சுட்டப்படுகின்றன. இவ்வூர்கள் ஊர்ச்சிறப்பினை விளக்கும் போதும் வழிகளை விளக்க வரும் வழியிடை ஊர்ப்புனைவுகளாகவும் வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடும்போதும் ஊர்கள் இடம்பெறுகின்றன.

 

 

 

ஊர்ச்சிறப்பு

கலைஞன் ஊர், ஊரின் தலைமை, சொந்த ஊரைச் சுட்டல், தெய்வம் சார்ந்த ஊர், புனிதத்தலமாக ஊர், தொன்மை ஊர், மணம் மலி ஊர் என்று ஊர்ச்சிறப்பினைப் பாகுபடுத்தற்கியலும்.

கலைஞன் ஊர்

ஊரின் சிறப்பு அவ்வூரில் வாழும் கலைஞராலும் வெளிப்படும். செங்குட்டுவன் நீலகிரியிலிருந்து தலைநகர் திரும்பிய பின்பு பறையூரைச் சார்ந்த கூத்தச்சாக்கையனின் ஆடலைக் கண்டு மகிழ்ந்தான் என்ற குறிப்பு நடுகற் காதையில் இடம் பெறுகிறது. இதனை,

பரந்தரு நால்வகை மறையோன் பறையூர்க்                          கூத்தர் சாக்கையன் ஆடலில் மகிழ்ந்து         (நடுகற். 76-77)

என்னும் அடிகள் குறிக்கின்றன.

ஊரின் தலைமை

மன்னனின் உடைமைப் பொருளாக ஊர் சுட்டப்படுகிறது. செங்குட்டுவன் மலைவளம் காணச் செல்லும்போது அவனது ஆளுகைக்குட்பட்ட நீலகிரியின் நெடும்புறத்தில் பாட் வீடு அமைத்து தங்கியிருந்தான். இதனை,

பாடிவீடு அமைத்துத் தங்கி (கால்கோள். 83-85)

என்னுமடி விளக்குகிறது. பாண்டியனுக்குச் சொந்தமான ஊராகக் குமரியம் பெருந்துறை கூறப்படுகிறது. இவ்விடத்தில் குமரித்துறைவன் என்று பாண்டியன் தலைமை குறித்துக் கூறுவதன் மூலம் ஊர் சுட்டப்படுகின்றது.

 

சொந்த ஊரைச் சுட்டல்

மாடலன் அடைக்கலக் காதையில் தன்னைக் கோவலனிடத்து அறிமுகம் செய்கின்றான். அப்போது அவனது சொந்த ஊராகத் தலைச்செங்கானம் என்ற ஊரினைக் குறிப்பிடுகின்றான். தான் சொந்த ஊரை ஒருவர் குறிப்பதனாலும் ஊர்ப்பெயர் இடம்பெறுவது அறியப்படுகிறது.

தெய்வம் உறையும் ஊர்.

ஓர் ஊரானது அவ்வூரில் உறைந்துள்ள தெய்வம் சுட்டியும் விளக்கம் பெறுகின்றது.சிலப்பதிகாரத்தில் கொற்கை, வெண்குன்று, ஏரகம், செந்தில், என்னும் நான்கு ஊர்கள் இவ்வகையில் இடம்பெறுகின்றன. கொற்கையின் முழுமுதற் கிழத்தி மதுராபதி என்று கட்டுரை காதையில் கூறும்போதும் குன்றக் குரவையில் மகளிர் முருகனைப் புகழ்ந்து பரவும் போதும் மேற்கூறப்பெற்ற தலங்கள் புனைவு பெறுகின்றன.

புனிதத் தலமாக ஊர்

ஊரின் சிறப்புகளில் ஒன்றாக அதன் புனிதத்தன்மையைக் குறிப்பர். மாடல மறையோன் அடைக்கலக் காதை, நீர்ப்படைக் காதை ஆகிய இரு காதைகளிலும் தன் வழிச் செலவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். குமரியம் பெருந்துறையில் தான் நீராடிவிட்டுத் திரும்புவதாகக் கூறுவதன் மூலம் குமரியம் பெருந்துறை பழங்காலம் முதல் புனித நீராடல் தலமாக விளங்குவதை காண்கிறோம். இதனை,

மாதவ முனிவன் மலைவலங் கொண்டு                                          குமரியம் பெருந்துறை கொற்கையிற் படிந்து (அடைக். 14-15)

என்றும்,

மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு                                        குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்  (நீர்ப். 68-69)

என்றும் குறிப்பதன் மூலம் அறிய முடிகிறது.

ஊரின் தொன்மை

புகார் சோழன் மூதூர், பதியெழு அறியாப் பழங்குடி என்று சுட்டப்படுகிறது. ஊரின் பழமையைக் காட்ட இவ்வடைகளைப் புலவர்கள் சங்க காலந்தொட்டு பயன்படுத்தி வருகின்றனர். சோழனின் உறையூர் சிலம்பில் ஐந்திடங்களில் பயிலுகின்றது.

“————   ———   ————-  தவப்பெருஞ் சிறப்பின்                                 காவுந்தியையும் தேவியுங் கணவனும்                                               முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய                                     புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென் (நாடுகாண். 245-248)

என்னுமடிகளில் கவுந்தியடிகள் கண்ணகி கோவலன் இருவருடன் உறையூர் வந்த செய்தி கூறப்படுகிறது. இப்பாடலடியில் உறையூர் பமாற்றுப் பெயராக வாரணம் குறிக்கப்பெறுகிறது. வாரணம் என்பதற்குரிய பெயர்க்காரணமும் கூறப்பெறுகிறது. முறம் போன்ற செவிகளையுடைய யானையைப் போரிலே கெடுத்த பக்கத்தே சிறகுகளையுடைய கோழியின் பெயரமைந்த நகரம் என்பர்.

இத்தகு பெருமிதமுடைய உறையூரின் புறஞ்சேரியில் புகுந்த கவுந்தியடிகள் சாரணர் கூறிய மொழிகளைக் கோவலன் கண்ணகிக்கு விரித்துரைக்கின்றார்.(காடு1-11) அச்சமயம் அப்பும்பொழிலில் இருந்த காமுகனும் பரத்தையும் சொல்லாடியதன் விளைவாகச் சாபம் பெற்று நரியாக உருமாறி உறையூர் காவற்காட்டில் ஒதுங்கினர். மூவரும் அருக தெய்வத்தை வணங்கிய பின்னர் அக்கோயிலைச் சார்ந்த தவப்பள்ளியில் உறைகின்றனர். இதனை,

கவுந்தி யிட்ட தவந்தரு சாபம்                                                   கட்டிய தாகலின் பட்டதை யறியார்                                            குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு                                                —– —————     ————–   ———-                                               உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்க (நாடுகாண். 217-245)

என்ற அடிகளால் அறிகின்றோம். மேற்கண்டவற்றால் உறையூரில் கோட்டையும் காவற்காடும் புறஞ்சிறையும் நிக்கந்தன் பள்ளியும் இருந்த செய்தி புலனாகிறது.

மணம்மலி ஊர்

ஊரைத் தலைமையுடன் இணைத்துப் பேசப்படுவது போன்று அவ்வூர் மணம் பெற்றுத் திகழ்வதாகவும் புனைவு பெறுகிறது. தொன்டி என்னும் ஊரில் உள்ளோர் இட்ட அகில், துகில், ஆரம், கருப்பூரம் முதலான பொருட்களோடு கொண்டலானது கூடல் வந்தது என்று ஆசிரியர் புனைவர். ஊர்காண்காதையில் (106-110) இடம்பெறும் இச்செய்திமூலம் கூடலில் விற்பனக்கு வந்த தொண்டி விளைபொருட்களை அறிகின்றோம்.

வழிகாட்டிகளாக ஊர்கள்

சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில் வடவேங்கடம், உஞ்சை, அரங்கம், திருமால்குன்றம், கொடும்பை, நெடுவேள்குன்றம் என்னும் ஐந்து ஊர்கள் வழியிடையில் அமைந்த ஊர்களாகக் காட்டப்படுகின்றன.

விஞ்சையன் சென்ற வழிப்புனைவு

புகார் நகரில் நடைபெறவிருக்கும் இந்திரவிழாவினைக் காண விஞ்சையன் வரும் வழியாக உஞ்சை, வடவேங்கடம் என்னும் இரு ஊர்கள் சுட்டப்படுகின்றன. வேங்கடமலை, தமிழகத்தின் வடக்கெல்லையாக வேனிற்காதையில் குறிப்பிடப்படும்போதும் மாங்காட்டு மறையோன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் செல்லும் ஊரினைச் சுட்டும்போதும் வடவேங்கடம் குறிக்கப்பெறுகிறது. இதனை,

வீங்குநீர் அருவி வேங்கட மென்னும்                                             ஓங்குயர் மலையை துச்சி மீமிசை (காடுகாண். 41-42)

என்று மறையோன் வேன்கடமலை அருவிகள் நிறைந்த மலையாகச் சுட்டுவதன் மூலம் அறிகின்றோம்.

உஞ்சை நகரம் விந்தியமலைக்கு வடக்குப்பகுதியில் அமைந்த அவந்தி நாட்டின் தலைநகரமாகும். இவ்வூர் சிலப்பதிகாரத்தில் மூவிடங்களில் பயிலுகின்றது. விஞ்சையன் உஞ்சை நகரைக் கடந்து விந்திய மலை காடுகள் தாண்டி வேங்கடமலை வருவததாகப் புனைவு அமைகிறது. வடக்கே இமயமலை தொடங்கி தெற்கே வடவேங்கடம் வரையிலான புவியலமைப்பு சுட்டப்படுகிறது.

கண்ணகி சென்ற வழிப்புனைவு

கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி மூவரும் மதுரை நோக்கிக் காவிரியின் வடகரை வழிச் செல்கின்றனர். செல்லும் வழியில் திருவரங்கத்தை அடைகின்றனர். அவ்அரங்கம் காவிரியாற்றின் இடையில் அடர்ந்த சோலையோடு மணம் மிகுந்து இருந்தது என்பது,

ஆற்றுவீ யரங்கத்து வீற்று வீற்றாகி                                              குரங்ககை உடுத்த மரம்பயில் அடுக்கத்து                                       வானவர் உறையும் பூநாறு ஒருசினை (நாடு காண்.156-158)

என்ற அடிகள் உணர்த்தி நிற்கின்றன. மாங்காட்டு மறையோன் இவ்வரங்கத்தில் திருமால் கிடந்த கோலத்தில் காட்சியளிப்பார் என்று கூறுகின்றான். இதனை,

விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி                                         திருவமர் மார்பன் கிடந்த வண்ணம் (காடுகாண். 39-40)

என்ற அடிகள் உணர்த்தி நிற்கின்றன. அரங்கம் ஆற்றிடைக்குறையில் இருந்தமை வியன்பெருந் துருத்தி என்பதன் மூலம் அறியப்படுகிறது.

கோவலன் கண்ணகி மதுரைக்குச் செல்லும் வழியில் கொடும்பை என்ற ஊர் சுட்டப்படுகிறது.

அறையும் பொறையும் அசிடை மயக்கம்                                          நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந்                                     நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று                                                கொடும்பை நெடுங்குளம் கோட்டகம் புக்கால் (காடுகாண்.68-71)

என்னுமடிகள் மறையோன் கூறுவதாக உள்ளது. உறையூரிலிருந்து கிளம்பி கொடும்பாளூர் அருகே நெடுங்கோட்டகத்தை அடையலாம் என்று அரும்பதவுரைகாரர் பொருளுரைப்பர். அடியார்க்கு நல்லார், கொடும்பை என்பதனைக் கொடும்பாளூர் என்றும் நெடுங்குளம் என்றும் இரு ஊர்களைக் குறிப்பர்.

கொடும்பை-கொடும்பாளூர், நெடுங்குளம் என்பதும் ஊர்ப்பெயர்.      இவையிரண்டும் இணைப்பெயர் பெற்ற ஊர்கள். இக்காலத்தும்         இணைத்தே பெயர்க் கூறப்படுதல் காணலாம்.8

என்பர். கொடும்பாளூரிலிருந்து மதுரைக்குச் செல்லும்போது மூன்று வழிகளைப் பற்றி மறையோன் சுட்டும்போது திருமால் குன்றம் இடம்பெறுகிறது. கொடும்பாளூரிலிருந்து தெற்கே மதுரை அமைந்திருந்தது. தெற்கே செல்லும் மூவழியில் கிழக்குப் பக்கத்து வழியில் சென்றால் திருமால் குன்றம் அடையும் வழி உள்ளது எனும்போது ஊர் இடம்பெறுகிறது.

வரலாற்றுச் செய்திகள்

ஊரைப் புனையும்போது வரலாற்றுச் செய்திகள் இடம்பெறுவதன்மூலம் ஊர்கள் இடம்பெறுகின்றன. போர்க்களவெற்றி, ஆட்சி மாற்றம், நிவந்தம் அளித்தல், பெயர்க்காரணம்,நிகழ்வின் தொடர்ச்சியைச் சுட்டுதல் என்னும் வகையில் ஊர் இடம்பெறுதலை பாகுபடுத்தற்கியலும்.

போர்க்கள வெற்றி

செங்குட்டுவனின் வென்றிச் சிறப்பினை கூற வந்த இளங்கோவடிகள், செங்களம், வியலூர், நேரிவாயில், இடும்பில் மற்றும் அகப்பா என்று ஐந்து ஊர்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள் அகப்பா செங்குட்டுவனின் முன்னோர் வென்ற அரண்களுள் ஒன்றாக இடம்பெறுகிறது. நீர்படைக் காதையில் மாடலன் மறையோன் செங்குட்டுவனின் சினம் தணிக்க அவனது முன்னோர் பெற்ற வெற்றியோடு அவன் பெற்ற வெற்றிகளையும் குறிப்பிடும்போது ஊர்கள் இடம்பெறுகின்றன.

 

கறிவளர் சிலம்பிற் துஞ்சும் யானையின்                           சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்                            ஆர்புனை நெரியல் ஒன்பது மன்னரை                                   நேரிவாயில் நிலைச் செரு வென்று                                   நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக்                  கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி                      உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக்                             கடும்புனற் கங்கை பேர்யாற்று வென்றாய் (நடுகற். 114-121)

என்ற அடிகளில் வியலூர், நேரிவாயில், இடும்பில் மற்றும் கங்கை பேரியாற்றங்கரை ஆகியன குறிக்கப்பெற்றுள்ளன.

செங்குட்டுவனின் வெற்ரிச் சிறப்பினைக் கூறவந்த மறையோன் கூற்றில் இவ்வூர்கள் ஆளப்பட்டுள்ளன. செங்குட்டுவன் தன் மைத்துனன்வளவன் கிள்ளியோடு பொருத ஒன்பது சோழரை நேரிவாயிலில் வென்ற பிறகு பின் அவர்களை இடும்பில் மீண்டும் புறத்திறுக்கின்றான். இங்கு இடும்பில் என்பது இடும்பாவனத்தைக் குறிக்கின்றது. காட்சிகாதையில், சோழ, பாண்டியரையும் குறுநிலமன்னர்களையும் வென்ற செய்தி கூறப்படுகின்றது. நீலன் என்னும் ஒற்றன் வடதிசை மன்னர் இமயமலை அடிவாரத்தில் உள்ள குயிலாலுவத்தில் அமைந்த உமையொருபாகனை வணங்கி நீங்கினர் எனும்போது ஊர் கூறப்பெற்றுள்ளது.

ஆட்சி மாற்றம்

பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவிற்குப் பின்னர் அப்பாண்டிய நாட்டின் அரசுரிமையைக் கொற்கையில் இருந்த வெற்ரிவேற் செழியன் பெற்றான் என்று உரைபெறு கட்டுரையில் குறிக்கப் பெறுகிறது. நீர்ப்படக் காதையில் இச்செய்தியினை, மாடலன் செங்குட்டுவனுக்கு கூறுகின்ற போது இடம் பெறுகிறது. மதுரையில் பாண்டியன் நெடுங்செழியன் இறப்புக்குப்பின்  நடந்த அரசியல் நிகழ்வுகளை விவரிக்கும்போது கொற்கை இடம்பெறுகிறது.கொற்கை இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய செய்தியினை செங்குட்டுவனுக்கு வழிபயணி கூறுவதாகப் படைத்துளார்.

நிவந்தமாக ஊர்

 

கட்டுரை காதையில், பாண்டிய மன்னன் நிவந்தமாகத் தங்கால், வயலூர் என்னும் ஊர்களைத் தானமாக வார்த்திகன் என்னும் பார்ப்பனுக்கு பாவம் போக்க கொடுக்கின்றான். இதன,

தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்                                            மடங்கா விளையுள் வயலூர் நல்கி (கட்டுரை. 118-119)

என்ற அடிகள் உணர்த்தி நிற்கும். மதுராபுரித் தெய்வம் பாண்டிய மன்னனின் செங்கோல் சிறப்பினை விளக்குமிடத்து இவ்விரு ஊர்களும் இடம்பெறலாயின.

 

கடல்கோள் ஊர்கள்

புகார், குமரிகோடு என்னுமிரு ஊர்கள் கடல்கோளால் அழிந்த செய்தியினை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மங்கலவாழ்த்துப் பாடலில் கால்ந்தோறும் நீளுகின்ற புகழான் மட்டும் என்றென்றும் நடுக்கின்றி நிலைபெறுகின்ற புகார் நகரம் என்பது வருணனை. நாகர் நகருடனும் நாகனாடதனொடும் ஒருதன்மைத்தாய் என்றது இவ்வுலகில் காணப்படாத அவ்விரண்டு நகரங்களையும் போன்று இலக்கியங்களில் மட்டும் இருக்கின்றது என்று உரை எழுதிச் செல்வர்.9 (ப.41_

காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் பாண்டியன் புகழினைக் கூறும்போது குமரிக்கோட்டை கொடுங்கடல் கொண்டது என்பர்.

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்                                        குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள   காடுகாண். 19 – 20 )

 

என்ற அடிகளில் குமரிக்கோடு கடல்கோளால் அழிந்த செய்தி இடம்பெறுகிறது. திருவிதங்கோடு, அதங்கோடு, விளவங்கோடு என்பது போன்று குமரிகோடும் ஊரின் பெயராகும்.

 

 

 

பழம்பிறப்பு ஊர்கள்

சிலப்பதிகாரக் காலகட்டத்தில் மக்களிடையே உழ்வினை நம்பிக்கை இருந்து வந்துள்ளது. கோவலன் இறப்பிற்கு ஊழ்வினையைக் காட்டும் ஆசிரியர் கோவலன் முற்பிறப்பில் அயற்புல ஊரில் வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

கடிபொழில் உடுத்த கலிங்க நன்னாட்டு                                            வடிவேற் தடக்கை வசுவும் குமரனும்                                                தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்                                             காம்பெழு கானக் கபில புரத்தினும் (கட்டுரை.128-131)

என்னுமடிகளில் கலிங்க நாட்டின் கபிலபுரம், சிங்கபுரம் என்னும் ஊர்களில் முறையே குமரனும் வசுவும் ஆட்சி புரிந்த செய்தி கூறப்படுகிறது. சிங்கபுரத்தின் அரசு அலுவலராகக் கோவலன் பணியாற்றியதாக ஆசிரியர் உரைக்கின்றார். இவ்வாறு சிங்கபுரம், கபிலபுரம் என்னும் இரு அயற்புல ஊர்கள் இடம்பெறுகின்றன.

இனிய நீர்வளமுடைய கழனிகளையுடைய மருதப் பரப்பின்கண் உள்ள சிஙபுரம் என்னும் நகரத்தினும் மூங்கில் வளருகின்ற காட்டினையுடைய முல்லைநிலத்தில் அமைந்த கபிலபுரம் என்னும் நகரத்தினும் இருந்து ஆள்கின்ற வசுவும் குமரனும் என்பது புனைவுச் செய்தி. இப்புனைவில் சிங்கபுரம் வளமையுடைய செல்வச் செழிப்பிற்குக் காரணமான மருதநிலத்தை உடையதாகச் சிறப்பிக்கப்படுகிறது. ஊரினைப் புனையும் போது ஓர் ஊரினை வளமிக்க மருத நில ஊராகவும் மற்றொரு ஊரினை மூங்கில் நிறைந்த ஊராகவும் சிதிரிக்கின்றார்.சிங்புரமானது சாத்தனார் கூறும் பழம்பிறப்புக் காதையிலும் ‘சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரம்’ (பதி.47) என்று குறிக்கப் பெறுகிறது.

ஒப்புமையாக ஊர்

தந்தை ஏவிய பணிவிடையைச் செய்தலே உறுதிப்பொருள் என்று துணிந்து மனைக்கிழத்தியுடனும் இளையவனுடனும் செல்லுதற்கரிய காட்டின்கண் சென்ற இராமனைப் பிரிந்த அயோத்தி போன்று புகார் நகரம் பெரிதும் கவலையுற்றது போலக் கோவலனைப் பிரிந்த புகார் நகரம் துயறுற்றது என்று இரு நகரங்கள் ஒப்புமையாக இடம்பெறுகிறது.

 

 

பிற

கண்ணகி மதுரையை எரித்த பின்னர் அங்கிருந்து வெளியேறி வயை கரையின் ஒருபுறமாக மேற்கு நோக்கிச் சென்று நெடுவேள் குன்றத்தை வந்தடைகின்றாள் என்று ஆசிரியர் புனைகின்றார்.

உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு                                        அவல என்னாள் அவலித்து அழிதலின்                                               மிசைய என்னாள் மிசை வைத்து தேறலிற்                                      கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு                                அவுணரைக் கடந்த சுடரிலைலை நெடுவேல்                                      நெடுவேள் குன்றம் அடிவைத் தேறி  (கட்டுரை.185-190)

என்ற அடிகளில் குறிக்கப்பெறுகிறது.

வரந்தருகாதையில் மாடல மறையோன் தேவந்தியின் வரலாற்றைக் கூறும்போது காப்பியத் தொல்குடி என்னும் ஊர்ச் சுட்டப்படுகிறது. பாசண்ட சாத்தன் மாலதியின் மகனாகத் தோன்றி வளர்ந்ததாகக் கூறுகின்றான். இவ்வூர் தற்போது நாகை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகில் உள்ளது.

தொகுப்புரை

இயற்கையின் உறுப்பாக வாழ்ந்த மனிதனின் கூட்டு வாழ்க்கைச் சிந்தனை ஊராகப் பரிணமித்தது.      சங்கப்புலவர்கள்  இருகைகோளிலும் ஊரைப் புனைந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் 17 நாடுகள், 3 பெரு நகரங்கள், 33 சிற்றூர்கள்  நேரடியாகவும் மறைமுகமாகவும் இடம்பெறுகின்றன.

சோழநகரம் புகாரும் பாண்டிய நகரம் மதுரையும் விரிவாகப் பேசிய ஆசிரியர் வஞ்சி நகர அமைப்பினைச் சுட்டவில்லை.   சிற்றூர்ப்  புனைவுகள்  சிறப்பு, வழிகாட்டுதல்,வரலாற்றுச் செய்தியினைக் கூற இடம்பெற்றுள்ளன

அடிக்குறிப்புகள்

1, சா.இரமேஷ், சங்க இலக்கியத்தில் ஊர்ப்புனைவுகள், முனைவர் பட்ட ஆய்வேடு, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, செப்டம்பர் 2000.

  1. இளம்பூரணர் (.), தொல்காப்பியம், எழுத்ததிகாரம், கழக வெளியிடு, சென்னை, முதற்பதிப்பு, 1985 . .
  2. மேலது, .
  3. சேனாவரையர் (.), தொல்காப்பியம், சொல்லதிகாரம், கழக வெளியிடு, சென்னை, முதற்பதிப்பு, 1985 .
  4. மேலது,

7.

 

முனைவர் இரமேஷ் சாமியப்பா
தமிழ் உதவிப்பேராசிரியர்
அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி)
கும்பகோணம்
அலைபேசி:9486073399
Series Navigationநாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் குள்ளக் கோள்  புளுடோவை நெருங்குகிறது.புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *