உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 32 in the series 29 மார்ச் 2015

இரா.தனலெட்சுமி

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

முன்னுரை

உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சி பெற்றது. இலக்கியங்கள் பெருகிய பின்னர் அவற்றை ஆய்ந்து அம்மொழிக்குரிய இலக்கணத்தை உருவாக்கினர். ஒரு மொழியைத் திருத்தமாகவும், செம்மையாகவும் உரையாடுவதற்கும், எழுதுவதற்கும், மொழியின் அடிப்படையை முற்றும் உணர்தற்கும், விதிவிலக்குகளை விளக்குவதற்கும் வாய்ப்பாக இருக்கும் நூலே இலக்கணம் எனப்பெறும். கற்கும் மாணாக்கர்க்கு ஏற்படும் மொழிச்சிக்கல்களைத் தீர்த்து வைக்க இலக்கணக்கல்வி பயன்படும்.

“இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்”

(நன் – 141)

உலகம் தோன்றியவுடன் மக்கள், ஊர்கள், நகரங்கள் ஊர்திகள், சாலைகள் இவையாவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. சாலைப் போக்குவரத்தில் இடர்பாடுகள் தோன்றின. சாலை இடர்ப்பாடுகளைப் போக்கச் சாலைவிதிகள் தோன்றின. அதுபோல முதன் முதலில் மொழி தோன்றியது. பின்னர் இலக்கியம் தோன்றியது. அவ்விலக்கியத்திற்கு இடர்கள் தோன்றின. ஆதலால் இலக்கியத்திற்கு இலக்கியவிதிகள் தோன்றின.


இலக்கணத்தைத் தொடங்கும் பருவம்

தொடக்கநிலைப் பள்ளிகளில் முதல் இரண்டு வகுப்புக்களில் இலக்கணத்தைப் பற்றிய எண்ணமே ஆசிரியரிடம் எழ வேண்டிய இன்றியமையாமை இல்லை. இவ்வகுப்பு மாணவர்களுக்கு வாய்மொழிப் பயிற்சிகளாலும், பிறமொழிப் பயிற்சிகளாலும் மொழித்திறனை வளர்க்கலாம். மூன்றாம் வகுப்பில் இலக்கணத்தைப்  பற்றி ஆசிரியர் ஓரளவு சிந்திக்கலாம். இவ்வகுப்பு மாணவர்கள் தங்கள் புத்தகங்களிலிருக்கும் சொற்றொடர்களிலிருந்து பெயர்ச்சொல், வினைச்  சொல்லைப் பிரித்தறியவும் ஒருமை பன்மை வேறுபாடுகளைக் காட்டவும் அறிந்தால் போதுமானது. நான்காம் வகுப்பு மாணவர்களுக்குப் பேச்சிலும், எழுத்திலும் ஏற்படும் குறைகளைக் களைந்தாலே போதுமானது. எனவே ஐந்தாம் வகுப்பிலிருந்து முறையாக இலக்கணப் பாடத்தைத் தொடங்கினால் நலம் பயக்கும்.

நடுநிலைப் பள்ளி வகுப்பிற்கு வரும் மாணாக்கர்கள் ஓரளவு நன்கு பேசவும் எழுதவும் பழகியிருப்பர். ஒருசில விதிகளுக்கிணங்கப் பேசவும் எழுதவும் வேண்டுமென்பதை அறிவர். படிப்படியாகச் சொல் வகைகளையும் ஒவ்வொரு வகைச்சொல்லும் ஒவ்வொரு விதமாகப் பயன்படினும் எல்லா வகைச் சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதையும் அறிவர் இந்நிலையில் ஒரளவு இலக்கணத்தைத் தனிப்பாடமாகக் கற்பிக்க முயலலாம்.

உயர்நிலைப் பள்ளி வகுப்பிற்கு வரும் மாணாக்கர்கள் ஒரளவு நல்ல மொழியறிவினை அடைந்து சில இலக்கியங்களைத் துய்க்கும் ஆற்றலையும் பெற்றிருப்பர். அவர்கள் இலக்கண அறிவின் இன்றியமையாமையை ஓரளவு நன்கு அறிவர். இவ்வகுப்பு மாணவர்களுக்கு இலக்கணத்தை தனிப்பாடமாகவே கற்பிக்கலாம்.

பள்ளிகளில் இலக்கணம் ஏன் கற்பிக்கப்படுகிறது?

இந்தியப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தலில் ஐந்து வகைப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. செய்யுள், உரைநடை, துணைப்பாடம், இலக்கணம், மொழிப்பயிற்சி என்பன அவை. இவற்றுள் செய்யுள், உரைநடை, துணைப்பாடம் ஆகியன தமிழ் இலக்கியம் கற்பிக்கும் நோக்கிலும், இலக்கணம் மொழிப்பயிற்சி ஆகியன தமிழ் மொழியைக் கற்பிக்கும் நோக்கிலும் இடம்பெறுகின்றன. ஆனால் தொடர்ந்து தமிழ்ப் பாடநூல்களைப்படித்து வரும் ஒருவருக்கு இந்தப் பொதுப் புரிதல் குறித்த ஐயம் தோன்றுவதோடு பல கேள்விகள் எழுகின்றன. சான்றாக உரைநடை தமிழ் இலக்கியம் கற்பிக்கும் நோக்கில் இடம்பெறுகிறதா எனும் கேள்வி எழுகிறது. ஏனெனில் பெரும்பாலான உரைநடைப் பாடங்கள் மொழிப்பாடநூலுக்கான பாடங்கள் போல் அல்லாமல் கருத்துப்பாடங்களைப் போல் தகவல் தொகுப்புகளாகவே இருக்கின்றன. இவ்வாறு எழுகின்ற இன்னொரு முக்கியமான வினா இலக்கணம் ஏன் கற்பிக்கப்படுகிறது எனும் வினா.

மொழியை விரைந்து கற்றுத்தர இலக்கணம் இரு வழிகளில் உதவும்

  1. மொழி அமைப்பு விதிகளை மாணவர்களுக்குக் கற்றுத்தருவதற்கு.
  2. மாணவர்கள் செய்யும் பிழைகளை விளக்குவதற்க

எடுத்துக்காட்டாக ‘அம்’ ஈற்றுப் பெயர்ச் சொற்களோடு வேற்றுமை விகுதிகளைச் சேர்த்து எழுதும்போது அத்துச்சாரியை இடையில் சேரும் என்று கற்றுத்தருவது விதியாகும். ராமநாதபுரமில் என்று தவறாக எழுதினால் ராமநாதபுரம் என்பது ‘அம்’ ஈற்றுப் பெயர்ச்சொல் எனவும் எனவே வேற்றுமை விகுதிக்கு முன்னால் அத்துச்சாரியை சேர்த்து ராமநாதபுரத்தில் என எழுதவேண்டும் என விளக்குவது பிழையை உணர வைப்பது (த.பரசுராமன். 2011).

முதல் மொழி மாணவர்களைப் பொறுத்தவரை விதியைக் கற்பிப்பது என்பது வருமுன் காப்பதற்கு அதாவது பிழை வராமல் தடுப்பதற்கு. விளக்கம் தருவது பிழை வந்தபின் அதைக் களைவதற்கு. இந்த வகையில் இலக்கண விதிகள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கும் பயன்படும் வண்ணம் கற்பிக்கப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இலக்கணம் பயிற்றலின் நோக்கங்கள்

எழுத்து மரபு, சொல் மரபு, தொடர் மரபு, புணர் மரபு, பிழையறப் பேசுதலும் எழுதுதலும், யாப்பறிவு, அணியறிவு ஆகியவற்றின் வழி மாணாக்கர்கள் மொழியறிவை வளர்த்தலே இலக்கணப் பாடம் பயிற்றலின் பொது நோக்கமாகும்.


மாணவர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கான காரணங்கள்

  1. தொடக்க வகுப்புகளிலேயே இலக்கணத்தைத் தொடங்குவது.
  2. விதிகளையும், நூற்பாக்களையும் முதற்கண் கூறிப் பின் எடுத்துக் காட்டுகளால் விளக்கும் விதிவிளக்கு முறையை இலக்கணப் படிப்பில் மேற்கொள்வது. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், எளியதிலிருந்து கடினமானவற்றிற்கும், தெளிவிலிருந்து சிக்கலுக்கும் போகவேண்டும் என்னும் அடிப்படையான கல்விபற்றிய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகக் கற்பிக்க பெறுவது.
  3. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற முறையில் இலக்கணத்தை கற்பிப்பது. இம்முறை காரண காரிய முறைக்கு ஒத்ததெனினும் கீழ் வகுப்புக்களுக்குப் பொருந்தாததோடு உளநூல் முறைக்கும் ஏற்றதன்று.
  4. இலக்கணத்தை மொழிப் பாடத்துடனும், கட்டுரையுடனும் பொருத்திக் காட்டாமல் தனிப்பாடமாக நடத்துவது.
  5. நடைமுறையில் வேண்டியது வேண்டாதது என்று இல்லாமல் எல்லா விதிகளையும் கற்பிப்பதோடு அவற்றை மாணாக்கர்களிடம் மனப்பாடம் செய்ய வற்புறுத்துவது.
  6. எடுத்துக்காட்டுகள் கூறும் போது மாணாக்கர்தம் வாழ்க்கையில் அவர்கள் அறிந்திருக்கக் கூடிய சொற்களைப் பொறுக்கி எடுக்காமல் பழைய இலக்கண நூல்களில் கூறியுள்ள சாத்தா, பூதா, தேவா, கொற்றா போன்ற பயன்பாட்டில் இல்லாதச் சொற்களைக் கூறி வகுப்பைச் சுவையற்றதாக்கிவிடுவது.
  7. எடுத்துக்காட்டுக்களை மிகுதியாக காட்டாமல் இருப்பது.
  8. மாணாக்கர் ஒவ்வொருவரையும் அவர்தம் வாக்கிலேயே இலக்கண குறிப்பு முதலியவற்றை வைத்து வழங்க பயிற்றாமை.
  9. இலக்கணத்தில் எழுத்து பயிற்சிகளை மிகுதியாக அளிக்காமை.
  10. இலக்கணத்தை ஒரு கருவியாக மட்டும் கருதாமல் இலக்கண அறிவைத் தனியாகப் பெற்றிருப்பதே முடிந்த குறிக்கோளும் பயனும் என்று நினைப்பது.
  11. விளையாட்டு, தனித்தனிப் பயிற்சி முறைகளை இலக்கணப் படிப்பில் புகுத்தாமை.
  12. தேர்வை முதன்மையாகக் கொண்டிருக்கின்ற இன்றைய பாடத்திட்டத்தில் இலக்கணப் பகுதிகளில் மதிப்பெண் பெறாமலேயே ஒருவர் வெற்றி பெற வாய்ப்புண்டு, அதனால் மாணவர்கள் பிற பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்கணத்தை அலட்சியப்படுத்துகின்றனர். இத்தகைய அலட்சிய மனப்பான்மையே இலக்கணத்தை வெறுக்கத் தூண்டுகிறது.

மேற்கண்ட காரணங்களால் மாணவர்கள் பள்ளிகளில் இலக்கண பாடத்தை வெறுக்கின்றனர். இவற்றிற்கு நேர்மாறாகக் கற்பிக்கப் பெறுமாயின் இலக்கணப் பாடம் மாணாக்கர்கள் விரும்பும் ஒரு இனிய பாடமாக மாறும் என்பது உறுதி.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிப்பதில் ஏற்படும் சிக்கல்கள்

மொழியைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுத் தரும் இலக்கணமே ஒரு சில இடங்களில் தவறாக அமைந்துக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்பதாம் வகுப்புப் பாடநூலில் பின்வருவனவற்றைச் சுட்டலாம்.

  • மெய்யெழுத்துக்களை ஒலிக்கும் போது வேறுபட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம். அவை வல்லின ஒலி, மெல்லின ஒலி, இடையின ஒலி என்பன. அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம் அவை பிறக்கும் இடங்கள் வேறுபடுவனவே (தமிழ் 9. பக். 23) உண்மையில் அவை வேறு படுவதற்குக் காரணம் ஒலிப்பு முறையே. நுரையீரலிலிருந்து வெளிவரும் காற்று மூக்கறை வழியாகவும் வாயறை வழியாகவும் வெளியேறினால் அவை மெல்லினம், வாயறை வழியாக நன்கு தடுக்கப்பட்டு வெளியேறினால் அவை வல்லினம், சிறிதளவு தாடையுடன் வெளியேறினால் அவை இடையினம்.
  • ஒலிகள் பிறக்கும் இடத்தைக் காட்டக் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ள, ண ஓர் இடத்திலும் ற ஒர் இடத்திலும் ர ஒர் இடத்திலும், ல, ந, ன ஒர் இடத்திலும் ழ ஒர் இடத்திலும் பிறப்பதாகக் காட்டப்பட்டுள்ளது (தமிழ் 9. பக்.23) ஆனால் உண்மையில்
    • ர, ழ ஓர் இடத்திலும் (அண்ணத்தை நாவின் நுனி தடவ)
    • த, ந ஓர் இடத்திலும் (மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்த)
    • ல, ள ஓர் இடத்திலும் (அண்பல் அண்ணம் இரண்டையும் நாவிளிம்பு தடித்து ஒற்றவும் வருடவும்)
    • ற, ன ஓர் இடத்திலும் (அண்ணத்தை நாவின் நுனி பொருந்த)

எழுத்துக்கள் பிறப்பதாக நன்னூலார் கூறுகிறார்.

  • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்தும் வாயைத் திருப்பதோடு மேல்வாய்ப்பல்லை நா விளிம்பு தொடுவதனால் தோன்றுகிறது (பக்.24) இது முற்றிலும் தவறு. பல்லை நாக்குத் தொட்டால் உயிரெழுத்து எதுவும் தோன்ற வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்பொழுது காற்று தடைபடும். வாயில் தடையில்லாமல் ஒலிக்கப்படுவதே உயிர் எழுத்து.
  • ள்-மேல் வாயை நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது (பக்.25)

ள் நாவளை ஒலி, நா நுனி வளைந்து அண்ணத்தைத் தொட வேண்டும். நாவினது ஓரங்கள் தடித்து அண்ணத்தைத் தொடுவதால் ச, ஞ, ய ஆகியவையே பிறக்கும்.

இவ்வாறு எழுத்துக்களின் பிறப்புப் பற்றி கூறுவதில் பல்வேறு குழப்பங்களுடன் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம் கற்றுத்தரும் போது கொடுக்கிற விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் தேவையற்ற ஐயங்களை ஏற்ப்படுத்தாத வகையில் தெளிவாக அமைய வேண்டும்.

  • தொழிற்பெயரை விளக்கும்போது (தமிழ் பக்.69) வினைப்பகுதியோடு மேற்குறித்த விகுதிகளைச் சேர்த்தால் தொழிற் பெயராகும் எனக்கூறிப்பல எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு.

கோடு + அல் = கோடல்

ஆடு + அம் = ஆட்டம்

மாணவர்களுக்குக் கோடு+அல்= கேட்டல் ஆகவில்லை ஏன் என்றோ ஆடு+அம் ஏன் ஆடல் ஆகாமல் ஆட்டம் என ஆகியது என்றோ கேள்வி எழலாம்.

  • மெய்யெழுத்து மிக்கு வர வேண்டிய இடத்தில் மிகாமலும் மிகாத இடத்தில் மிக்கு வந்தால் பொருள் மாறுபடும் (தமிழ் 9 பக்.167). இதைப்படித்த மாணவனுக்கு வந்தப்பையன், வந்துப்போனான் என்றவாறு எழுதினாலோ, அங்கு போனான், அவனைக் கூப்பிடு என்றவாறு எழுதினாலோ பொருள் எவ்வாறு மாறுபடும் எனக்கேட்டால் எப்படி விளக்குவது?

“முருகன் பரிசு பெற்றான்

பரிசு பெற்றானைப் பாராட்டினர்”.

இவ்விரு தொடர்களிலும் பெற்றான் என்னும் வினைச்சொல் வந்துள்ளது. முதல் தொடரிலுள்ள பெற்றான் என்பது முருகன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாக வந்துள்ளது. இரண்டாவது தொடரில் உள்ள பெற்றானை என்பது முருகனைக் குறிக்கும் பெயராக வந்துள்ளது. இவ்வாறு வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினைசெய்தவரைக் குறிப்பது வினையாலனையும் பெயர் எனப்படும் (பக்.70).

இவ்விலக்கம் சில கேள்விகளை எழுப்புகிறது வினையைக் குறிக்காத வினைமுற்று உள்ளதா? வந்தவன், நிற்பவன் போன்றவை வினை முற்றுகளா? இல்லாவிட்டால் அவை எப்படி வினையாலனையும் பெயர் ஆகும்?

போன்ற பல்வேறு கேள்விகளை ஏற்ப்படுத்தும் விதமாக பாடநூலில் இலக்கணப் பகுதி அமைந்துள்ளது.

முடிவுரை

மேற்சொன்ன காரணங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது பள்ளிகளில் தமிழ் இலக்கணம் மொழியைத் திறம்படப் பயன்படுத்தும் நோக்கில் அல்லாமல் கருத்துப்பாடம் போல் கற்பிக்கப்படுவதாகத் தெரிகிறது. அதாவது மரபிலக்கணம் தமிழர்களின் சொத்து எனும் நோக்கில் அதை அடுத்தத் தலைமுறைக்குத் தோள் மாற்றிக் கொடுக்கும் செயலாக மேற்க்கொள்ளப்படுவதாகத் தோன்றுகிறது. இதற்குத் காரணமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

  1. தேர்வில் இலக்கணத்திற்கு குறைந்த அளவு இடம்.
  2. புரிந்து கொள்ளாமலே அந்த மதிப் பெண்களைப் பெற வாய்ப்பு.
  3. இலக்கணப் பகுதியை முற்றிலும் படிக்காமலேயே 60% க்கு மேல் மதிப்பெண் பெற வாய்ப்பு இருப்பது.
  4. தமிழைப் பிழையோடு எழுதியே மதிப்பெண் பெறமுடியும் என்ற நிலை.

இவற்றைத் தவிர்ப்பதன் வழியாகப் பள்ளிக் கல்வியில் இலக்கணம் கற்பித்தலை மேம்படுத்தலாம்.

துணை நூல்கள்

தமிழ்ப் பாடநூல் 2012 6 முதல் 10 வரை

தமிழ் நாட்டுப்பாடநூல் கழகம்

சென்னை.

சண்முக செல்வகணபதி 2000 நன்னூல் தெளிவுரை

கற்பகம் பதிப்பகம்

தஞ்சாவூர்.

த.பரசுராமன் 2007 பள்ளித் தமிழ்ப் பாடநூல் மதிப்பீடு

முத்து

புதுச்சேரி.

தமிழ்ப் பல்கலைக்கழகம் 2013 தமிழ்க் கற்பித்தல்

தொலைநிலைக் கல்வி இயக்ககம்

தஞ்சாவூர்.

த.பரசுராமன் 2011 பள்ளித் தமிழ்

(பாடத்திட்டம் + பாடநூல் + பயிற்றுமுறை)

முத்து

புதுச்சேரி.

ஞா.பழனிவேலு 2011 செந்தமிழ் கற்பித்தல்

நதி பப்ளிகேஷன்ஸ்

தஞ்சாவூர்.

 

இரா.தனலெட்சுமி

முனைவர் பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

Series Navigationநாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்றெக்கைகள் கிழிந்தவன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *