அப்பா எங்க மாமா

This entry is part 14 of 28 in the series 12 ஏப்ரல் 2015

 rajid

தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. இல்லையென்றதும் அமர்ந்துகொண்டு அடுத்த நாற்காலியையும் சரிசெய்தார். அவர் மனைவி வரவேண்டும் என்று ஊகித்தேன். தூரத்தில் ஒரு பெண் 2 வயதுப் பையனைத் தூக்கிக்கொண்டு நெருங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பிஞ்சின் கையில் ஒரு கார் பொம்மை கார் படம்போட்ட அட்டைப் பெட்டிக்குள். அந்த அட்டைப் பெட்டியை திறந்து தரும்படி அடம்பிடிக்கிறான் அவன். அவர் அருகே வந்ததும் வணக்கம் பரிமாறிக் கொண்டோம். தொலைக்காட்சி நாடகங்களில் வரும் கணவன் மனைவி போல் மிகப் பொருத்தமாக இருந்தார்கள் இருவரும். தங்களை தமிழரசன் சந்திரா என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். மிகத் துல்லியமாக ஒதுக்கப்பட்ட மீசை. சந்திராவின் முகம் மிக நெருக்கமாக பல தடவைப் பார்த்த ஒரு முகமாக இருந்தது. கேட்டுவிடலாமா? யோசித்தேன். ஆணாக இருந்தால் பரவாயில்லை. பெண் என்பதால் கொஞ்சம் யோசித்தேன். இன்னும் அந்தக் குழந்தையின் கவனம் அட்டைப் பெட்டியிலேதான் இருக்கிறது. அவர்களைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது. நான் இப்படி ஆரம்பித்தேன்.

‘ஒங்க பையனுக்கு என்ன வயசு தமிழ்?

‘வர்ற நவம்பர் 29 வந்தால் மூணு வயசு சார்.’

‘நீங்க புதுக்கோட்டையா?’

‘அட! சரியாச் சொல்லிட்டிங்க சார். எப்புடி சார்?’

‘புதுக்கோட்டக் காரங்கதான் வயசக் கேட்டால் பிறந்த நானையும் சேர்த்துச் சொல்வாங்க. மத்த ஊர்க்காரங்க பெரும்பாலும் ரெண்டு முடிஞ்சிருச்சு. மூணு ஆரம்பிக்கப் போவுது’ என்பார்கள்.

‘சரியான ஆராய்ச்சி சார்’ சப்தமாகச் சிரித்தார் தமிழ். அட அந்தக் குழந்தை மட்டுமல்ல இவரும் ஒரு வயதான குழந்தைதான். அவ்வளவு அழகான வெகுளித்தனமான சிரிப்பு அது.

‘இத நாங்க யோசிச்சதே இல்ல அண்ணா.’ என்றார் சந்திரா. அந்த ‘அண்ணா’ எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் தொடர்ந்தார்

‘புதுக்கோட்டயிலதான் இருக்கோம். ஆனா நா பொறந்தது முக்லாம்பட்டி’

‘அன்னவாசல் முலக்லாம்பட்டியா?’

‘அட!ஆம்’

பிறகு நான் தொடர்ந்தேன். ‘முக்லாம்பட்டி எங்க அம்மாவோட சின்னம்மா ஊரு. ஒரு கல்யாணத்துக்காக சின்ன வயசுலே எங்க அம்மா என்னக் கூட்டிட்டுப் போனாங்க. கல்யாண வீட்ல சரியான நெரிசல். எங்க அம்மாவ பந்திக்கு அனுப்பிட்டு எங்க அம்மாவோட சின்னம்மா, அதாவது நனிமா எனக்கு ஒரு கோப்பயில சோறு எடுத்து வந்து கறியானம் ஊத்திப் பேசஞ்சு ஊட்டிவிட்டாங்க. முக்லாம்பட்டிப் பொடியானம் ரொம்ப ருசியா இருக்கும். என்னமோ அந்த நெனவெ என்னால மறக்கவே முடியல. கறியானம்னா கறிக்குழம்பு. நனிமான்னா அம்மாவப் பெத்த பாட்டி.’

‘சார் நா பொறப்புல இந்துதான். நா பெரும்பாலும் முஸ்லிம்களோடுதான் பழகுவேன். ஆனம், அஸ்ஸலாமு அலைக்கும், துஆ, நிய்யத்து இதெல்லாம் நாங்க வீட்லயே சாதாரணமா பயன்படுத்துவோம். சார் ஒங்க ஊரச் சொல்லலியே?’

‘அறந்தாங்கி’

‘அட! அறந்தாங்கியா? அப்ப பாலுசார உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே?’

‘தெரியுமாவா? ஃபிஸிக்ச ஒரு கத மாரி நடத்த அவராலதான் முடியும். நியூட்டனப் பத்திப் பேசினா அழுதிருவாரு. அவரு பாடம் நடத்திறத நெனச்சா இப்பக்கூட நா அழுதுடுவேன். அன்று அவர் போட்ட வெத தான். நான் பி. எஸ்ஸி ஃபிஸிக்ஸ் முடிச்சு எம்.எஸ்ஸி முடிச்சு பாலுசார் மாரியே ஆகணும்கிற கனவுல ஒரு காலேஜ்ல லெக்சரரா சேந்து இப்ப சிங்கப்பூர்லயும் அந்த ஃபிஸிக்ஸ வச்சுத்தான் வாழ்றேன். அவர் பாண்டிச்சேரில ஏதோ ஒரு பள்ளிலில ஹெட்மாஸ்டராப் போயிட்டாருன்னு கேள்விப் பட்டேன். ஒவ்வொரு தடவ ஊருக்குப் போகும்போதும் பாக்கணும்னு நெனப்பேன். நெனக்கிறதோட சரி.’

தமிழ் தொடர்ந்தார். ‘ஒங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கவா? இவுங்கதான் அந்த பாலுசாரோட தங்கச்சி. அவரு ஞாபகமாத்தான் என் மகனுக்கு பாலுன்னு பேரு வச்சேன். சந்திரா சின்னப்புள்ளயா இருக்கும்போதே அம்மா அப்பா ரெண்டுபேருமே தவறிட்டாங்க. பாலுசாருதா இவுங்க குடும்பத்தயே கரசேத்தாரு. அவரு எனக்கு மாமனார் சார். இல்ல அதுக்கும் மேல.’

‘அவங்க மொகத்த பாத்தவொன்னே தெருஞ்சுக்கிட்டேன். ஆனாலும் கேட்க யோசிச்சேன். சந்திரா ஒங்கள நேத்துப் பாத்தது மாரி இருக்கும்மா. நா பாலு சார்ட டியூஷன் படிச்சேன். டியூஷனே ஒரு வகுப்புமாரிதான் இருக்கும். ஜன்னல்ல உக்காந்தெல்லாம் படிச்சிருக்கேன். அப்ப ஒரு கூஜாவுல பாலுசாருக்கு நீங்கதான் காப்பி கொண்டுட்டு வருவீங்க. அந்த கூஜாவ நா மறக்கவே முடியாது. எங்க விட்லயும் அதே மாரி ஒரு கூஜா இருந்துச்சு. சில சமயம் எங்க அத்தா காலங்காத்தால வயலுக்குப் போயிருவாரு. அப்ப எங்கம்மா அந்தக் கூஜாவுலதான் காப்பி போட்டுக் குடுத்து வயலுக்குப் போகச் சொல்லுவாங்க.’

‘என்ன சார் இது ஒவ்வொன்னுக்கும் ஒரு கதயே வச்சிருக்கிங்க சார். இந்த அளவுக்கு எதயுமே மறக்கமுடியாத நீங்க எப்படி சார் எல்லாத்தயும் மறந்து இங்க இருக்கீங்க?’

‘வாழ்க்கைன்னு வந்துட்டா அதுல வாழப் பழகணும் தமிழ். அந்த நினைவுகள்தான் என் உயிருக்குச் சோறு. இங்க சம்பாரிக்கிறதெல்லாம் என் ஒடம்புக்கும் ஒறவுக்கும் சோறு.’

அந்த அட்டைப்பெட்டியைத் திறக்கச் சொல்லி இன்னும் அவர் மகன் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். நான் அவனை அள்ளிக் கொண்டேன். அந்தப் பெட்டியை வாங்கி காரை வெளியே எடுத்து பாட்டரி பொருத்தி அந்த மேசை மீது ஓட வைத்து விழவைப்பதுபோல் விழவைத்து விழாமல் பிடித்துக் கொண்டேன். ‘பாத்தியா.விழுந்தா ஒடஞ்சுடும்ல. வீட்ல போயி நல்லா ஓட்டலாம்’ என்று சொல்லி மீண்டும் அட்டைப் பெட்டியில் காரை வைத்து சந்திராவிடம் கொடுத்தேன். சாப்பாடு இப்போதுதான் வந்துகொண்டிருக்கிறது. சாப்பிட்டோம். அதுதான் முதல் சந்திப்பு. ரயில் சிநேகம் பள்ளிச் சிநேகம் என்பார்களே அதுபோலல்ல இந்தச் சிநேகம். பல ஆண்டுகளாக நான் நன்றிக்கடன் பட்டு ஏங்கிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் ஒரு முக்கியமான ஒரு பெண்ணை சந்தித்திருக்கிறேன். இந்தச் சிநேகிதம் எவ்வளவு புனிதமானது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாலுசாரின் தங்கையை சந்திக்கும் வாய்ப்பை இறைவன் எனக்கு ஏற்படுத்தித் தந்திருப்பது வெறும் சும்மாவா. விருந்து முடிந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை வருகிறேன் என்று சொல்லி விடைபெறும்போது தமிழ் சொன்னார். வருகிற ஞாயிறு போயி அடுத்த ஞாயிறு அவரின் அம்மாவும் அப்பாவும் வருகிறார்களாம். எனவே அடுத்த ஞாயிறு வந்தால் அவர்களையும் பார்த்துவிடலாமாம். முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டோம். வீட்டுக்கு வந்ததும் அந்த நாள் முழுவதும் என்னை தமிழும் சந்திராவும்தான் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த இரண்டாவது ஞாயிறு வந்தது. புக்கிட் பாத்தோவில் ஒரு வீட்டுத் தொகுதியில் பத்தாவது மாடியில் இருக்கிறார்கள். சென்றோம். வீட்டுக்கு முன் துளசி, கருவேப்பிலை வேம்பு, பணச்செடி, முருங்க நாத்து எல்லாமும் எங்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லிச் சிரித்தன. கதவில் ஒரு பிள்ளையார் படம் ஒட்டியிருந்தது. கதவு இடுக்கில் சாம்புராணியும் பத்திப்புகையும் கலந்த ஒரு நறுமணம் கசிந்தது. அழைப்பு மணியை அழுத்தினேன். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் கதவு உடனே திறக்கப்பட்டது. தமிழ், சந்திரா, தமிழின் அப்பா கணேசமூர்த்தி தொடர்ந்து அம்மா அமுதவல்லி வரவேற்றார்கள். ஓர் உருட்டு வண்டியில் பாலு விளையாடிக் கொண்டிருந்தான். தமிழின் அப்பாவும் அதேமாதிரி துல்லியமாக ஒதுக்கிய மீசை. அடர்த்தியான முடி. ஆனால் அத்தனையும் தும்பைப் பூ வெள்ளை. தமிழுக்கோ தும்பிக்கைக் கருப்பு. கணேசமூர்த்தி சாயம் பூசினால் இரட்டைக் குழந்தை என்று தாராளமாகச் சொல்லிவிடலாம். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. நான் கையில் வைத்திருந்த பைகளை மேசையில் வைத்தேன். மைலோ டின்னை அப்பாவிடம் கொடுத்தேன். ‘ஒங்களப்பத்தி தமிழ் பேசாத நாளே இல்ல ரஜித்’ என்றார். முதல் முறை சந்தித்தாலும் என்னை மிஸ்டர் சேர்க்காமல் மிக உரிமையுடன் பெயர் சொல்லி அழைத்தது எனக்குப் பிடித்திருந்தது. ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, திராட்சைப் பழங்களை மேசை மீது வைத்தேன். இன்னொரு பை. அது பாலுவுக்கு. அதை அப்படியே வைத்துவிட்டேன். சாப்பாடு முடிந்து போகும்போது பாலுவை சந்தோசப் படுத்த வேண்டும் என்று நினைத்தேன். தலைவாழை இலைகள் விரிக்கப்பட்டன. முறையாக வெட்டுப் பகுதி வலப்பக்கமும் நுனி இடப்பக்கமுமாக, பூப்போல தண்ணீர் தெளிக்கப்பட்டு தயாராக இருந்தது. சைவம் அசைவம் இரண்டுமே வகைவகையாக சமைத்திருந்தார்கள். அமுதவல்லிதான் பரிமாறினார். ஒவ்வொரு கறியை வைக்கும் போதும் அந்தக் கறியின் பெயரைச் சொல்லி சாப்பிடுவீர்களா என்று உறுதிப் படுத்திக் கொண்டு வைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்ட ஒரு தெய்வீகச் சாப்பாடு அது. அது என்ன தெய்வீகச் சாப்பாடு? தெய்வத்தின் அன்புக்கு நிகரான அன்புடன் பரிமாறப்படும் சாப்பாடுதான் தெய்வீகச் சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தோம். கணேசமூர்த்தி இரண்டு பொட்டலங்களைக் கொண்டுவந்தார். தினமணி பத்திரிகைத் தாளில் மிக நேர்த்தியாக இருந்தது அந்தப் பொட்டலங்கள். மிளகாய் வற்றலும் சுண்டைக்காய் வற்றலும் அதில் இருக்கிறதாம். எனக்கு இந்த வற்றல்கள் பிடிக்குமென்று தமிழ் சொன்னதாகவும் அவசர அவசரமாக அமுதவல்லி தயார் செய்ததாகவும் சொன்னார். ‘வீட்ல போயி நீங்க பாட்டில்ல கொட்டி வச்சுக்கங்க. வேர்த்துவிடுமேன்னுதான் பேப்பர்ல கட்டி வச்சேன்’ என்றார் அமுதவல்லி. ‘வேர்த்துவிடுமே’ எங்க அம்மா சொல்ற அதே சொல் பிரயோகம். தோற்றத்தில் கூட என் அம்மாவையே நினைவுபடுத்தினார். இன்னொரு பையை இப்போதுதான் பிரிக்கப் போகிறேன். அது பாலுவுக்காகவே வாங்கிய உண்மையிலேயே பறக்கும் ஹெலிகாப்டர் பொம்மை. வெளியே எடுத்து பாட்டரி பொருத்தி தொலை இயக்கியின் ஒரு குமிழை அழுத்தியதும் காற்றாடியை கம்பீரமாகச் சுற்றிக் கொண்டு அந்த ஹெலிகாப்டர் பறந்தது. அந்தரங்கத்தில் பறந்துகொண்டே நிற்கும்படி வைத்துவிட்டேன். பாலு குதித்த குதியில் வெள்ளிக் கொலிசின் ஒரு மணி அறுந்து உருண்டது. எல்லாம் முடிந்து நாங்கள் வெளியேறியபோது எல்லாரையும் வீட்டுக்கு வரச்சொன்னேன்.

அநேகமாக ஒவ்வொரு நாளும் நானும் கணேசமூர்த்தியும் தொலைபேசியில் உரையாடிக் கொண்டோம். நான் முடித்ததும் தொலைபேசியை மனைவியிடம் கொடுப்பேன். பிறகு என் மனைவியும் அமுதவல்லியும் மோர்க்குழம்பு வைக்கும் பக்குவத்தை அலசுவார்கள். இன்னும் என்னெல்லாம் சமைக்கத் தெரியுமோ அத்தனையையும் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் நான் வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பேன். ‘ஒவ்வொரு நாளும் ஏதாவது வேலை வந்துவிடுகிறது. சீக்கிரமே ஒரு நாள் வருகிறேன் எனக்கும் உங்கள் வீட்டையெல்லாம் பார்க்க ஆசையாக இருக்கிறது’ என்றார் கணேசமூர்த்தி.

ஒரு நாள் மாலை 5 மணி. தொலைபேசி அழைத்தது. கணேசமூர்த்தியின் எண். ‘என்ன சார் வர்றீங்களா?’ என்றேன்

‘அது இல்ல தமிழ்…..தமி..ழ்’ அந்தக் கடைசி எழுத்து கண்ணீரில் மூழ்குவதுபோல் இருந்தது.

‘என்ன சார் சொல்றீங்க? என்ன தமிழுக்கு?’

‘டூ விலர்ல ஆக்ஸிடெண்ட். ஆம்புலன்ஸ்ல ஒடனே டன்டாக்செங்குக்கு கொண்டுட்டு போயிட்டாங்க. நாங்க இப்ப ஆஸ்பத்திரிலதான் இருக்கோம்’

‘சார். எல்லாம் சரியா வந்துரும் பயப்படாதீங்க சார் இதோ இப்பவே வர்றேன்.’

மனைவியிடம் சேதியை சொல்லிவிட்டு நான் மட்டும் விரைந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவின் முன்புற வராண்டாவில் கணேசமூர்த்தி. தோளில் பாலு. சந்திராவை மட்டும்தான் உள்ளே அனுமதித்தார்களாம். சந்திராவின் நிலையைப் பார்த்துவிட்டு துணைக்கு அமுதவல்லியும் இருக்க சம்மதித்தார்களாம். நான் அங்கே போய்ச் சேர்ந்த போது கணேசமூர்த்தி பாலுவைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. எனக்கு மட்டும்தான் தெரியப்படுத்தி யிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘என்ன சார். என்ன. டாக்டர் எதுவும் சொன்னாரா?’

பாலு அவர் தோளில்தான் இருந்தான். நான் அவனை வாங்கிக் கொண்டேன்.

‘சொன்னாரு ரஜித். செத்துப் போயிட்டான் தமிழ்னு சொன்னாரு ரஜித்…’

பாலுவுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ஒளித்து வைத்திருந்த கண்ணீரை மளமளவென்று கொட்டினார். பாலு அவரைப் பார்க்காதபடி அவனை வேறொரு பக்கம் திருப்பிக் கொண்டேன். தோளில் கைபோட்டு அழைத்து வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தேன். தமிழின் அலுவலக நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். பாலு என்னிடம் இருந்ததால் நான்தான் நெருக்கமானவன் என்று புரிந்துகொண்டார்கள். எல்லாரும் என்னைச் சுற்றியே நிற்கிறார்கள். ஒரு பெரிய சுழல் சுற்றிச் சுற்றி எங்களைப் புதைத்துக் கொண்டே இருக்கிறது. அதிலிருந்து சிரித்து வெளியேறும் காற்றுக் குமிழ்போல் பாலு சிரித்துக் கொண்டிருக்கிறான். நடந்தது எதுவுமே அந்த நிமிடம் வரை அவனுக்குத் தெரியவில்லை. தெரியக்கூடாது.

‘மாமா, மாமா’

‘என்ன பாலு’ எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு சிரிப்பதுபோல் நடித்தேன். சிரமமாகத்தான் இருந்தது.

‘எப்படி மாமா ஹெலிகாப்டர் பறக்குது?’

‘அது அதுவந்து அதுக்கு ஃபேன் இருக்குல்ல உச்சியில. அது சுத்தும்போது பறக்கும்’

‘அப்ப என் கார்லயும் ஒரு ஃபேன் வச்சா பறக்குமா மாமா?’

‘ஓ. வச்சாப் பறக்கும்.’

‘அட ஹ….ஹ….ஹ அப்ப ஒரு ஃபேன் வாங்கித்தா மாமா. நம்ம காரையும் பறக்கவிடுவோம்’

அவனுக்குள் பத்து நியூட்டன்கள் மூளைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறோம். நான் தொடர்ந்தேன்.

‘சரி பாலுத்தங்கம். அடுத்த தடவ வரும்போது ஃபேன் வாங்கிக்கிட்டு வர்றேன்’

‘மாமா எங்கிட்ட காரு இருக்கு. ஹெலிகாப்டர் இருக்கு ரயில் இருக்கு. கப்பல்தான் இல்ல.’

‘கப்பல் வாங்கித் தரவா பாலுத்தங்கம்’

‘கப்பல் விட எங்க வீட்ல கடல் இல்லியே. ஹ………ஹ…………..ஹ……….’

நானும் சிரிக்கிறேன். திடீரென்று மௌனித்துவிட்டான். இரு உதடுகளும் இறுகிக் கொண்டன. அடுத்த கேளவிக்காக நான் காத்திருந்தேன். அவன் உதடுகளைப் பிரிக்கவே இல்லை. என் முகத்தை ஏற இறங்கப் பார்க்கிறான். தமிழின் நண்பர்கள்தான் என்னைச் சுற்றி. ஒவ்வொரு முகமாகப் பார்க்கிறான். மீண்டும் என்னைப் பார்க்கிறான். மீண்டும் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். கணேசமூர்த்தியைப் பார்க்கிறான். என் தாவங்கட்டையில் கைவைத்து என் தலையை மெதுவாக உயர்த்தினான். பின் கேட்டான்.

‘அப்பா எங்க மாமா?’

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationபயணங்கள் முடிவதில்லைமூன்றாவது விழி
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *