சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை

This entry is part 10 of 28 in the series 12 ஏப்ரல் 2015

 

பேராசிரியர் சேதுபதி மேலச் சிவபுரியில் கல்வி கற்றவர். கவிதை நாடகமும் எழுதியுள்ளார். பாரதியார் , ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

” சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் :என்ற இத்தொகுப்பில் 54 கவிதைகள் உள்ளன..புதிய சிந்தனைகள் , எளிமை , படிமம் ஆகியன இவரது கவிதை இயல்புகள் ஆகும்.

புத்தகத் தலைப்புக் கவிதை ஏழ்மையைச் சொற்கோலம் போட்டுக் காட்டும் யதார்த்தக் கவிதை !

குருணை பொங்கிக்

கஞ்சி வடிச்சாச்சு

திட்டு வாங்கி

அண்ணாச்சி கடையில்

புளி வாங்கிக் கரைச்சு

ரசமும் ஆச்சு

என்று கவிதை தொடங்குகிறது. இந்த எளிய சமையலை செய்து முடிப்பதற்குள் குழந்தை ராசாத்தி தூங்கிவிடுகிறாள்.

 

ஊறுகாய்ப் பொட்டல

ஓரங்கிழிச்சு

சப்பிச் சப்பிச் சாப்பிட்ட

ராசாத்தி

தூங்கிப் போயிட்டா…

குடும்பத்தலைவி கஞ்சி குடிக்கிறாள். அப்போது விக்கல் ஏற்படுகிறது

குடிச்சுட்டு

இன்னொரு கூத்தியாளோட

கொட்டமடிக்கிற

புருசன் மொகத்துல

காறித் துப்பின ரோசம்

ஏழ்மையின் கோரப்பிடி அவ்வப்போது வாட்டுகிறது.

வேலியோரத்தில்

பட்டுக் கெடந்த

சீமைக் கருவேல முள்ளை

வெறகுக்கு ஒடிக்கிறப்போ

தோப்புக் காவல்காரச்

சின்னான் கேட்ட அந்த…

” யாருடி அந்தத்

தேவ்…? ”

என்று கவிதை முடிகிறது. கச்சிதமான வெளிப்பாட்டில் சொல்லாட்சி நேர்த்தியாக உள்ளது.

” அன்னப் பறவைக்கு அஞ்சலி ” என்ற கவிதை மீராவைப் பற்றியது.

செதுக்குகின்றன உன்

ஊசிகள்

கவிதைகளின் தலைவன்

கவிஞன் எனில்

நீ

கவிஞர்களின் தலைவன்

என்கிறார் சேதுபதி. அஞ்சலிக் கவிதை யார் எழுதினாலும் மிகையுணர்வு தலை காட்டுவது மரபு.

கிளை தவிர்த்து

விண்ணேறுகிறது

ஒரு பறவை

அன்னம்

என்று கவிதை முடிகிறது. இக்கவிதையில் சொற்கள் தளர்வாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.

காதலுக்கு அங்கீகாரம் கிடைப்பது எளீயதன்று. எங்கும் அது ஏளனம் செய்யப்படுகிறது. இதைத்தான் சொல்கிறது ஒரு கவிதை !

எவர் கொடிக்கால் என்றால் என்ன ?

எந்தப் பாக்கு ஆனால் என்ன

ஓசியாய்க் கிடைக்கும்

சுண்ணாம்பைத் தடவி

நாக்கு சிவக்க மெல்லும்

வாய்களுக்கு

நீயும் நானும் வெற்றிலை பாக்கு !

” நீயே நானாய்…”என்ற தலைப்பில் ஒரு காதல் கவிதை ; மரபு சார்ந்தது ; நல்ல சொல்லாட்சி !

 

இதயம் உருகி இதயம் உருகி

உன்னை வளர்க்கிறாய் — என்

இமைகள் மலர்த்தி இருவிழிக் காம்பில்

நீயே பூக்கிறாய்

 

அசையும் காற்று மற்றும் ஆன்மச் சுடரிலும் அவள்தான் சிரிக்கிறாளாம் .

தசையும் எலும்பும் ஆக்கிய உடலில்

உயிரை நிறைக்கிறாய்

தவமாய்க் கிடந்தும் பெறமுடியாத

சொர்க்கம் சேர்க்கிறாய்

 

காதலின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுகின்றன சிந்தனைகள். ” செல்லம்மாக்கள் இன்னும் வாழ்கிறார்கள் ” என்ற கவிதையின் கருப்பொருள் வித்தியாசமானது. பாரதியின்

செல்லம்மாளின் கஷ்டங்களைப் பற்றிப் பேசுகிறது. இதில் பாரதியை விவரிக்கிறார் சேதுபதி.

தன்னுள்ளே அமிழ்ந்து

தன்னுள்ளே நிறைந்து

தானே லயித்து

எரிகிற பிழம்பு

அடுத்த இரண்டு வரிகள் செல்லம்மாவைப் பற்றிப் பேசுகின்றன.

தீயினைத் தீண்டும்

தீ அவள்

மனம் சிலிர்க்கச் செய்யும் வரிகள் .பாரதியின் அறிவாவேசத்தை முழுமையாக உள்வாங்கியுள்ளார் சேதுபதி.

தன்னையே கதியென்று

சரணம் எய்திய

அக்கினிக் குஞ்சினைத் தன்

முந்தானையுள் முடிந்து

காத்த சிரமங்கள்

என்ற வரிகள் , வித்தியாசமான , விசேஷமான குணங்கள் கொண்ட புரட்சியாளனை ஒரு பெண் சமாளிப்பதில் எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியிருக்கும் என

யோசிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதையிது !

எறும்புகள் பற்றிய கவிதை ஓன்றும் இத்தொகுப்பில் உள்ளது. ” அமுதும் நஞ்சும் ” என்ற கவிதை குழந்தையைப் பற்றியது. ” தற்கொலைக்கு முந்திய ஒரு நிமிடம் ”

தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒருவன் மனத்தை ஆய்கிறது.

வாழ்க்கையை நேசிக்கும் கவிதை ” இரகசியம் ”

 

தற்காலிகமானதுதான்

எதுவும்

இந்த மகிழ்ச்சி

இந்தத் துக்கம்

இந்த வாழ்க்கையும்கூட

 

ஆனாலும்

இதற்குள்தான் இருக்கிறது.

நிரந்தரத்திற்கான

சகலமும்

 

சேதுபதி கவிதைகள் படித்து ரசிக்கத்தக்கவை. அடுத்த நகர்தலுக்கு முயற்சிக்கலாம்.

 

?

s.

 

Series Navigationஅந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)கடைசிக் கனவு
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *