ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…

author
0 minutes, 6 seconds Read
This entry is part 14 of 19 in the series 19 ஏப்ரல் 2015

நீலமணி

மிருதுவான சிந்தனைகள்

தடவும் விரல்களுக்கு இதமான ஆர்ட் தாளில் மனசை வருடும் எண்ணங்களைத் தெளிவான எழுத்துகளில் தரும் இந்நூலின் நூறு பக்கங்கள் வாசகரை நிச்சயம்

பிரமிப்பில் ஆழ்த்தும். இருபது வயது முதல் அறுபத்தாவது வயதுள்ளிட்ட காலகட்டத்தில் மிருதுவான ஆழங்களில் பூக்கும் கருத்துகளின் தொகுப்பு.

கிராமத்து ஓட்டுவில்லை வீட்டின் சாணமிட்ட திண்ணையில் அகரம் தொடங்கிய எழுத்தின் கனிவு. தஞ்சாவூர்க்காரரான ஆசிரியரின் இடப்பெயர்வு ஸ்ரீரங்கத்திற்குப்

பெருமை சேர்க்கும் நிலையில் ஆற்றங்கரை நாகரிகம் இவர் எழுத்துவழி பதிவாகிறது.

கடவுள்மீது பூப்போடுவோர் மலர் மென்மை தேர்தல்போல் கருத்துகளின் சீதோஷ்ணம் அறிவதிலும் சொற்களின் சுவை தேர்தலிலும் இவரது கவிதை ரசனை

ஏடுகளில் இன்புறுத்தல் கண்டுள்ளோம். வெறுமனே நன்று , சிறப்பு , மோசம் , என ஒற்றைச் சொல்லில் முடித்துவிடாமல் கவிதையில் உச்ச நீசப் பகுதிகளின்

எக்ஸ்ரேயை அவர் கடிதப் பார்வை பதிவு செய்துவிடும்.

சக கவிஞரைப் படித்தல் என்ற ஆரோக்கியமான போக்கை இவரிடம் பாராட்டலாம். உலகெலாம் என்ற மங்கலச் சொல் பெரிய புராணத்தைத் தொடங்கி வைத்தது

போல் இவருக்கு அச்சு அசரீரி ஆரம்பம் தந்துள்ளது. எழில்முதல்வனுக்கு என்றில்லை , எவருக்கும் இவர் கவிதை உடனடியாகப் பிடித்துப் போகும். அதற்கான காரணம்

அதிலேயே இருக்கிறது

 

” நாளை ” என்ற மர்மக் குகைக் கதவு திறக்கும் மந்திரம் தெரியவில்லை. ஆனால் இதற்காகக் கவலை தேவையில்லை. அது தானாய் நாளை திறந்தே தீரவேண்டியது

தானே ! [ நாளை ] தாவரங்களும் விலங்குகளும் மனிதனின் ஆறாம் அறிவுக்காக ஏங்குவதாகப் புலப்படவில்லை. அழுக்காறும் அவற்றிக்கு இல்லை. ‘ ஆடு ”

ஆசிரியருக்குப் பிடிக்கிறது. அமைதியானதுதான். சமயத்தில் முட்டும் அபாயமும் உள்ளது.

பெருமீன் வயிற்றில் செரிமானத் தொடக்க நிலையிலிருக்கும் ” சிறு மீனாக ” வித்தியாசமான ஒரு கோணத்தில் ஒரு பதிவு. பாரதி தன்னைத் தமிழில் பத்திரப்படுத்தி

-விட்டுப் போய் விட்டார் என்பது மிகத் துல்லியமான கணிப்பு. தடை மலை தகர்க்க ஒரு ராகமா ? தோள் வலி பெருக்கித் தூளாக்கலாமே…

வீசிய நாணயங்களில் பிழைக்கும் ஓவியர் அனுமாரைப் படைப்பவர். குழந்தைக்குச் சஞ்சீவி பர்வதம் எங்கிருந்து வருமோ ? ஊசிய உணவு வேலைக்காரிக்காக

எடுத்து வைக்கப்படுகிறது. இந்த எஜமான நடைமுறை எப்போதும் மாறாது போலும்.

சொல் குட்டிக்கரணமடிக்கும் கணினி வரைகலையில் மயங்கி ஒரு பாடல் . உறவும் நட்பும் வீசும் சொல்லே கல்லாய்த் தாக்கும். பசி உறக்கம் பறிக்கும். ” கவசம் ”

தரி என்று ஓர் எச்சரிக்கை. கதவென நினைத்துச் சுவரைத் திறக்க முனைதல் — புதிய படிமம். கவிதையாய்க் கட்டுவாள் என்ற எதிர்பார்ப்பில் சென்ற சொற்கள்

அவள் அலட்சியத்தில் உதிர்கின்றன., நீர் வாளையங்கள் விரிய …

விளிம்புகள் இல்லாத பிரபஞ்சம் –மற்றோர் அழகிய விவரிப்பு. மொழியால் நகலெடுக்க முடியாத நிதர்சனம் கவிதை கோருகிறது என்றொரு கூரிய பார்வை. அன்னை

தெரசா தொண்டில் நாம் பெருமிதமுற ஏதுமில்லை. இந்திய அரசின் சுகாதாரச் செயல்பாடுகளின் போதாமையையே இது சுட்டுகிறது. ” ஒரே ஓட்டம் ” ரயிலை முந்தி

ஓடும் மன ஓட்டம். அவள் காத்திருப்பில் மனோவேகம் அவனை முன் தொடும்.

” உணர்த்துதல் ” கவிதையில் உடைந்த நடைவண்டி வயோதிக உளைச்சலின் முன் நிழலாக எச்சரிக்கிறது. பிரபஞ்ச அளவுத் தாளூம் போதாது, உன்னுடனான ஆசைத்

திட்டங்களைக் குறித்து வைக்க. அவை அனந்தம் என்கிறது ‘ நேசம் ” கவிதை. குஞ்சுகளுக்குக் கோழியே கூரை–ஓர் அக்கறைப் பார்வை.

புது மருமகள் சமையல் திறன் சீர்தூக்க நாக்குத் தராசுடன் மாமனார். நாத்தியின் ஊசிச் சொற்கள். காயத்துக்கு கணவரின் கவி மருத்துவமாம்.போதுமா ? [ கவிதை:

புது மணப்பெண் ] ” என்னவள் ” என்ற கவிதை என்ன சொல்கிறது ? அவள் மிதித்த சுகத்திலிருக்கும் புல் பனி சுமக்க மறுக்கிறது. அவள் உதடு கடித்துக்கொண்டால்

கிழிவது இவன் இதயம். ஆனால் ஆளில்லா கிரகம் பார்த்து நிலவில் ஊஞ்சல் கட்டுவது நிறையவே ஓவர்.

 

விசுவரூப இசைக்கருவி நரம்புகளாக வான் மழைத்தாரைகள்– இப்படி ஒரு பூதாகார உவமை. ஒரு தாயின் ஆயிரம் கரங்கள்

மனிதன் மாதிரி ஒருவன் – என்ற கவிதைப் தலைப்பே குத்துகிறது – குடைகிறது. சிறுமி அணைக்கும் பூனைக்குட்டிபோல் அவளிடம் அடைக்கலம் தேடும். அரணை வால்

வண்ணத்தில் தோய்ந்த தூரிகையாகத் தெரிகிறது.

இறைவன் தோள் சேரவில்லை தாள் சேரவில்லை. எனினும் பிரகார மரம் சிந்தும் பூ ஆறுதல் கொள்கிறது, தொண்டரடிப் பொடி படுதலில்.. “காலிப் பாத்திரம் ”

கவிதையில்….. பெற்றோர் கடன் தீராக்கடன். வெயில் காயும் டிபன் பாக்சில் எலுமிச்சை ஊறுகாய் ஞாபகங்கள் என்றும் தீரா. ” ஓட்டைக் காலணா ” கவிதையில் ,

தாத்தா கொடுத்த ஓட்டைக் காலணா, அநேகமாக எல்லாப் பேரர்களும் மனசில் சேமித்து வைத்திருப்பது.

” ஓரவஞ்சனை ” கவிதையில் , கண்ணாடிக் குழல்களில் ஆரஞ்சு சாறு நிரப்பப்பட்டது போல் அழகான விரல்கள்: சௌரிராஜன் சார் , இது போல் உவமைகள்

நிறையக் கொடுங்கள். ” ஒரே படகில் பயணிப்பவர்கள் ” கவிதையில் மருதமுத்துவின் நண்டு பிடி தொழில் நுட்பம் சுவாரசியம்.

மறுத்து மறுத்து உன்னை ஏற்றேன்

பெருமரம் சாய்த்த

வெற்றிக் கோடரியை உன் தோளில்

இப்படி ஒரு பார்வை- [கவிதை விட்டுப் பிரிந்து.. ]

 

முதல் கோணல் கவிதையில் குளக் குளியலில் இவரைத் தாக்கிய நீர்ச் சாட்டை நீர்ச் சேட்டை ! சாரைப் பாம்பின் துரிதம்–இப்படி ஓர் உவமை !

கதவு என்ற கவிதையில்… திறந்து கொள்வதுகூடக் கதவின் இயல்பு என்பதை நீ எப்படி வசதியாய் மறந்து போனாய் ? –இன்னும் சற்று ஊடினால் இவர் மகா கவி !

“முதல் முகம் ” காவிதையில் ” பாலை மட்டுமே குடித்து வளர்ந்தது போல் / அப்படியொரு வெண்மை நிறம் உனக்கு…[ ஆப்பிரிக்காவில் மாடுகளே கிடையதோ ? ]

 

நிறைவாக , சௌரிராஜன் வாழ்க்கையைக் கூர்ந்து பார்க்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் பார்க்கிறோம். புத்தகம் கிடைக்குமிடம் ; ஸி. சௌரிராஜன் .12 பி சரஸ்வதி

தோட்டம் , ராகவேந்திரபுரம் , ஸ்ரீரங்கம் – 620 006 பக்கங்கள் 100 விலை ரூ. 95.

 

 

 

Series Navigationமறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *