வைரமணிக் கதைகள் – 13 காலம்

This entry is part 16 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 

காலம் மாறுகிறது. மாற வேண்டும். மாறா விட்டால் அது காலமில்லை. இப்படி தவிர சாமு காலத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அவனுக்கு வயது இருபத்திரண்டு.

 

அவனுடைய தாத்தா சபாபதி கவுண்டருக்கு எழுபத்தைந்து வயசாகிறது. ஆனாலும் கயிற்றுக் கட்டிலில் கிடந்து இறந்த காலத்தைப் பற்றி அசை போட்டு ஓயாமல் அலப்பும் ஆசாமியல்ல, விவசாயி.

 

மண் பேசும் பேச்சு எந்த மனுஷப் பேச்சையும் விட அர்த்தமுள்ளது என்று அனுபவப்பட்டவர். கண்ணும் பல்லும் கையும் இன்னும் திடம் கெடவில்லை. அதனால் அவர் காலம் மண்ணோடு பேசுவதில் தான் செலவாகி வந்தது.

 

சம வயதுக்காரர்கள், சற்றே இளையவர்கள் கூட எப்போதாவது ஓய்வாக உட்கார்ந்து பேசுவதுண்டு. கண்ணில் குறும் ஓடும் தீட்சண்ணியத்தோடு வெள்ளை மீசையில் நெளியும் சிறு இளக்காரச் சிரிப்போடு காலம் போகிற போக்கைப் பற்றி அவர் நறுக்குத் தெறித்தாற்போல ஓரிரு வார்த்தையில் கிண்டலடிப்பார்.

 

ஊரை விட்டுத் தள்ளி ஒரு கி.மீ. தூரத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் உள்ள வீட்டில் பெற்றோரை இழந்து தாத்தாவின் ஒரே வாரிசாக ஒரு கூரையின் கீழ் வசிக்க நேர்ந்த சாமுவுக்கு, கிழவர்கள் எல்லாம் கும்பல் கூடிப் பேசுவதை அடிக்கடி கேட்டுப் புளித்துவிட்டது.

 

தாத்தாவுக்கும் பேரனுக்கும் மத்தியில் தலைமுறை இடைவெளி அபிப்ராய பேதத்தை அதிகப் படுத்திற்று.

 

ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் மத்தியில் காலம் பெரிய பிளவாய் எதிரிட்டது.

 

சாமுவின் பாட்டிதான் பாலமாயிருந்தாள்.

 

சாமுவின் திறமை குறித்து அவருக்கு ஐயமில்லை. ஆனால் காலம் அவனுக்கு ஏற்படுத்தி யிருக்கிற மனப்போக்கைக் குறித்துத் தான் கவலை.

 

எல்லா விஷயத்திலும் அவர் அவன் போக்கிற்கு விட்டுக் கொடுத்தாலும் கொல்லையில் இருந்த பிரம்மாண்டமான நாக மர விஷயத்தில் அவர் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாய் இருந்தார்.

 

கால் ஏக்கருக்கு இடத்தை அடைத்துக் கொண்டு பறவைகளும், பழம் பொருக்க வரும் குழந்தைகளும், நிழலுமாய் விவசாயத்துக்குச் சிறிது தொல்லையாக இருந்த அந்த மரத்தை வெட்டிவிட வேண்டும் என்று சாமு நினைத்தான். கால் ஏக்கர் நிலம் மிஞ்சும். மரமும் நல்ல விலைக்குப் போகும் என்று விறகு மண்டி வைத்திருந்த சிநேகிதன் ஒருவன் கூறினான். ஆயிரத்து எண்ணூறு வந்தால் கொடுக்கலாம் என்று யோசனை கூறி ஒரு மர மண்டிக்காரரிடம் கூட்டிப் போய் அறிமுகம் செய்து வைத்தான். மரத்தைப் பார்க்க அவர்களும் வந்தார்கள்.

 

வரும்போது தாத்தா ஏர்க்காலுக்குக் கட்டை செதுக்கிக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தரம் ஏறிட்டு பார்த்து விட்டுத் தம் வேலையில் மூழ்கினார். அவரிடம் பேசிக் கொள்ளாமல் சாமு வந்தவர்களை மரத்தின் அருகே கூட்டிப் போனான்.

 

அவர்கள் அதைச் சுற்றி ஒரு வட்டம் வந்தார்கள்.

 

“கச்சல் கழிசல் அதிகம். முண்டு முடிச்சு நிறைய… இழைப்பில் சேதாரம் நிறையப் போகும்” என்றெல்லாம் குறை சொல்லிவிட்டு வீட்டுத் திண்ணைக்கு வந்து உட்கார்ந்தார்கள். பேரம் படியவில்லை.

 

தாத்தா எதற்கும் மசியாமல் உட்கார்ந்திருந்தவர் அவர்கள் போனதும், “யார் அது?” என்று மனைவியிடம் அமர்த்தலாகக் கேட்டார்.

 

“மர மண்டிக்காரங்க.”

 

“உம்” என்று மேற்கொண்டு பேசச் சொல்லிக் கட்டளையிட்டார்.

 

“மரத்தை வெலை பேச வந்திருந்தாங்க.”

 

வெய்யிலில் கண்ணைச் சுருக்கிக் கொண்டே சாமுவைப் பார்த்தார்.

 

“எந்த மரம்?” என்று நெற்றியில் படிந்த சுருக்கங்கள் கேட்டன.

 

“நாக மரத்தை வித்துடலாம்னு அவங்களைப் பார்க்கச் சொன்னேன்” – தயங்கிக் கொண்டே, துணிச்சலாகப் பேசும் தொனியில் விளக்கினான்.

 

ஓர் இகழ்ச்சிப் புன்னகை அவர் உதட்டில் முளைத்தது. தெருக்கூத்தில் ஒரு காமிக் பேர்வழியைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு அவர் ஏர்க்காலைச் செதுக்கத் தொடங்கினார்.

 

‘கால் ஏக்ரா நெலம் வீணாயிருக்கு. கிளியும் குருவியும் பெரிய தொல்லை. கண்ட போன பசங்கள்ளாம் கூடிக் கும்மாளம் போடுதுங்க. வெட்டினா ஆயிரத்தைந்நூறு ரூபாய்க்குக் கொறயாம கெடைக்கும்.”

 

அவர் பேசாமல் செதுக்கினார். சாமுவுக்கு முகம் சிவந்தது. என்ன அலட்சியம்! அவன் விடுவதாக இல்லை.

 

“விறகு மண்டி கோபால் ஆயிரத்து எண்ணூறே கெடைக்கும்னு சொன்னான்.”

 

செதுக்கிய முனையைத் தடவிக் கூர் பார்த்தார்.

 

“வெட்டி சமப்படுத்தினா அந்த நிலத்திலே ரெண்டு புட்டி தானியம் கெடைக்கும்.”

 

இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தார். ‘ஆகா எவ்வளவு பெரிய புத்திசாலி, என்ற கிண்டலான பார்வை.

 

கூர் நன்றாக அமைந்துவிட்டது. அவர் ஏர்க்காலைத் தூக்கிக் கொண்டு எழுந்தார். நல்ல உயரம்! எழுபத்தைந்து வயது தெரியாத, உழைத்து உழைத்து உரப்பேறிய உடம்பு. மெதுவாய் வீட்டுக்கு நடந்தார். சாமு அவர் பின்னால் ஒரு கற்றுக் குட்டியாகக் குறுகிய உணர்வோடு தொடர்ந்தான். அவர் மரத்தைப் பரண் மீது வைத்தார்.

 

பின்னாலேயே நிற்கும் பேரனைப் பார்த்தார். பெரிய மீசை மெதுவாய் நெளிந்தது.

 

“வந்தவங்க என்ன சொன்னாங்க?” என்றார்.

 

“ஆயிரத்து இருநூறிலே நிக்கறாங்க! ஒத்துக்கல்லே.”

 

“ம்ம்” – ஒரு தரம் கனைத்தார். மீசையைத் தடவி விட்டுக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தார்.

 

“இந்த ஊரிலே எத்தினி நாக மரம் இருக்கு?”

 

“ரெண்டு மூணு இருக்கும்!”

 

“நம்ப மரம் மாதிரி?”

 

“ஒண்ணுகூட இல்லே!”

 

“நம்ம கொல்லைக்கு என்ன பேரு?”

 

“நாக மரத்துக் கொல்லை.”

 

தாத்தாவின் குறுக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டோம் என்று சாமுவுக்குப் புரிந்தது.

 

“இடத்தை அடைச்சுக்கிட்டு வீணாப் போகுதே” என்று குறுக்கே பேசி அதிலிருந்து அவன் தப்பிக்கப் பார்த்தான். அவன் பேசி முடிக்கும்வரை அவர் காதில் விழாதது மாதிரி மௌனமாய் இருந்தார். அப்புறம் ஆரம்பித்தார்.

 

“இது எப்போ மொளைச்சுது தெரியுமா?”

 

“தெரியாது!”

 

“இதுக்கு என்ன வயசு இருக்கும்?”

 

“தெரியல்லே.”

 

தாத்தாவின் பெரிய மீசையில் குறும்பு நெளிந்தது.

 

“ரெண்டாயிரம் குடுக்கிறேன். இப்படி ஒரு மரத்தை நட்டு வளர்த்து பத்து வருஷத்திலே உருவாக்கிக் காட்டுவியா?”

 

சாமு விறைப்பாக நின்றான்.

 

“எங்க தாத்தா தாண்டவராய கவுண்டர் நட்டு வளர்த்த மரம் இது! அஞ்சு தலைமுறையைப் பாத்தாச்சு. போ… போ… போயி உருப்படியான வேலை எதுவாவது இருந்தாப் பாரு.”

 

சாமு போகவில்லை. தாத்தா அப்படிச் சொன்னால் அப்போதுதான் அவர் வாதத்தை ஆரம்பிக்கிறார் என்று பொருள்.

 

“கிளியாம்… குருவியாம்… கொழந்தைங்க கூட்டம் கும்மாளம் போடுதாம்” – அவர் வானத்தை பார்த்தவாறே பேசினார்.

 

சாமு தலைகுனிந்து நின்றான்.

 

“ரெண்டு புட்டி தானியத்தை விளைச்சு வித்து ரூபாயைக் குவிச்சி எண்ணிப் பார்த்தா இந்த நிழல்… காத்து பழம்… ஜனங்க சந்தோசம் எல்லாம் ஓடியாந்துரும் இல்லே… போ… போ… போயி வேலையைப் பாரு.”

 

மரம் விஷயம் தீர்ந்தது. அவனுக்குத் தாளவில்லை பாட்டியை ஆதரவுக்கு நாடினான். அவள் தலையிட்டாள். பலன் இல்லை.

 

ஆனால் அதற்கப்புறம் தாத்தா வெகுநாள் ஜீவித்திருக்கவில்லை. உடம்புக்கு ஒன்று மில்லாமல் பகலெல்லாம் வேலை செய்துவிட்டுத் தூங்கப் போனவர் காலையில் எழுந்திருக்கவில்லை.

 

ஆற்றுக் காரியம் முடிந்து ஐந்தாறு நாட்கள் ஆகிவிட்டன. காரியத்துக்கு மர மண்டிக்காரர் வந்திருந்தார். மர விஷயத்தில் தாத்தாவின் தீர்ப்பு என்ன என்று சொல்லித் தன் மதிப்பை அவர்களிடம் அவன் தாழ்த்திக் கொள்ளவில்லை. காரியம் முடிந்ததும் அவர் போய் விட்டார், பிறகு வருவதாகச் சொல்லிவிட்டு.

 

சாமு கயிற்றுக் கட்டிலில் படுத்தவாறே யோசித்தான்.

 

சற்றுத் தூரம் வைரம் பாய்ந்து பிரம்மாண்டமாக நாக மரம் நிழல் பரப்பியிருந்தது. இரண்டு எருதுகளையும் அங்கே தான் கட்டியிருந்தது. உச்சாணிக் கிளையிலிருந்து ஒரு கூட்டம் கிளிகள் கிரீச்சீட்டுக் கிளம்பின. அரை வட்டமாக ஒரு பச்சை அலை நீலவானத்தில் பரவியது. பின் பெரியதாக விரிந்து மறைந்தது. சிறுவரும் சிறுமி யுமாக நாலைந்து பேர் கிளி கடித்த நாகப் பழங்களைப் பொருக்கினர்.

 

“டேய் சாமு! மர மண்டிக்காரங்க வந்திருக்காங்க” என்று பாட்டி நடுங்கிய குரலில் கூப்பிட்டாள்.

 

“உட்காரச் சொல்லு… வர்றேன்” அவன் மரத்தைப் பார்த்தான். தாத்தாவின் தாத்தா வைத்த மரம். ஐந்து தலைமுறை பார்த்த மரம்.

 

மண்டிக்காரர் வந்திருக்கிறார். தடுப்பதற்கு தாத்தா இல்லை. குறும்போடு, கேலியோடு பார்த்துக் கொண்டே அவர் குறுக்கு விசாரணை இனியில்லை. இனிமேல் அவனே முடிவு கட்டலாம். மரத்தை வெட்டச் சொல்லலாம்.

 

சாமுவுக்கு திடீரென்று வெறிச்சிட்ட ஒரு சூன்யம் தெரிந்தது. கண்கள் கலங்கின. கண்ணீர் சிந்தி விடுமோ என்று அவன் தன்னைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றான்.

 

நாக மரத்தை அவர் வெட்டக் கூடாது என்று ஏன் தடுத்தார் என்று இப்போது நன்றாகப் புரிந்தது. இதைத் தாத்தாவின் தாத்தா நட்டு வைத்தார். அவர் மீது இவருக்கு எவ்வளவு பிரியமோ…

 

காலம் ஒரு வாழ்க்கை முறையாகி வானளாவி நிற்கும் ஓர் அடையாளமாகி கண்ணெதிரில் நின்றது.

 

“மரத்தை வெட்டக் கூடாதுன்னு பெரியவர் சொல்லிட்டுப் போனார் செட்டியாரே…”

 

“அவர் காலமாகறத்துக்கு முந்தியே நான் பேசி அவர் மனசை மாத்தியிருப்பேனே” என்று ஒரு நல்ல பேரம் படியாத மன அங்கலாய்ப்போடு மர மண்டிக்காரர் புறப்பட்டார்.

 

காலமா மாறுகிறது என்று யோசித்தான் சாமு.

 

++++++++++++++++++++++

வைரமணிக் கதைகள்

[வையவன் ]

முதற் பதிப்பு : 2012

 

பக்கங்கள்:500

விலை:ரூ. 500

 

 

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்

4 A, ரம்யா ப்ளாட்ஸ்

32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை

அடையார், சென்னை-20

Series Navigationசொப்பன வாழ்வில் அமிழ்ந்துநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *