கவிதைகள்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 22 of 26 in the series 10 மே 2015

சாயாசுந்தரம்

 

1. ஒரு அண்ணனுக்காக

ஒரு நிறைவேறா
நீண்ட நாள் கனவு…

தூக்கி வைத்து கொஞ்ச
நிலவு காட்டி சோறூட்ட
பங்கு பறித்து சண்டை போட
ஜடை பற்றி இழுக்க..
கை பிடித்து பள்ளி அழைத்துப் போக
அழாதே சனியனே என
அவ்வப்போது திட்ட
அங்கையேல்லாம் நிக்காதடி என்றதட்ட…
காய்ச்சல் வந்த போது கைபிடித்துக் கொள்ள
தவறென்றால் காது பிடித்து திருக
நண்பனே என்றாலும்
வாசலோடு வழியனுப்ப
கலர் பற்றிப் பேசி
கலாய்த்துச் சிரிக்க…
மத்தாப்பூ மட்டுமே அறிந்த வாசலில்
1000 வாலாவை வாடி என்றழைத்துப் போய்
பத்தவைக்க உதவிவிட்டு பதறடிக்க…
எட்டு மணிக்கேஇறுகத் தாழிடப்படும்
இரு பக்கக்கதவுகளும்
அப்பாவுக்கே தெரியாமல் உனக்காக
அவ்வப்போது திறந்து மூட..
இரட்டைப் பெண்களாய்
பிறந்திட்ட வீட்டில்
ஒற்றைக்கு ஒருவனாய்
நீ உடன் பிறக்கா ஏக்கம்
இருக்கத்தான் செய்கிறது
ஒரு அண்ணனுக்காக……..
miss you anna…..
———————————————————————————————–
2.ஓடைக்கரை…
———————–
ஓடைக்கரையில் அமர்ந்து
வாய் ஓயாது யாரையோ
திட்டிக் கொண்டிருப்பவளைப் பார்த்து
இன்னிக்கும் ஆரம்பிச்சுட்டியா என்று
ஒதுக்கிவிட்டுப் போவோர்க்குத் தெரியாது
அவள் வாக்கப்பட்டு சீர்செமந்து
வந்தபோது கடக்க முடியாத
நதியாக கலகலத்து ஓடியதுதான்-அவள்
ஒண்ணுமத்து ஒதுக்கப்பட்ட போது
ஓடையாகிப் போனதென..
———————————————————————————————————————–
3.அம்முவும்…அப்பாவும்.
———————————————–
தொட்டில் விட்டு
இறங்கிய அம்மு
மெதுவாகத் தேடத் துவங்குகிறாள்…
திரைச்சீலை விலக்கியும்
கதவு தள்ளிப் பார்த்தும்
சட்டென்று குரல் கொடுத்து
அள்ளி அணைத்துக் கொள்ளும் அந்தக்
குரலுக்காகவும் தொடுகைக்காகவும்….
எதிர்பார்ப்பிலும் ஏமாற்றத்திலும்
விரிந்து விரிந்து சுருங்குகிறது
அதிகாலை மலர் போன்ற
அவள் முகம்…
அம்மாவின் மடியேறி
மார்பில் முகம் புதைத்து
‘’ப்பா’’ என்றழைத்து
கட்டை விரல் சப்பத் தொடங்கி
விசும்புகிறாள் மெதுவாக….
வாழ்வாதாரம் தேடி
வளைகுடாவின்
வெம்மையில் வறுபடும்
இயலாமையிலும்…
கிடைத்த விடுமுறையில்
கீழிறக்காது தோள் சுமந்தலைந்த
மகள்மீது கொண்ட வாஞ்சையில்….
சுரக்காத மார்பு விம்ம
தெறிக்கும் வலி சுமந்து
நெறி கட்டிய இதயத்துடன்
விழிகசிய அலைபாய்கிறான்
அம்முவின் அப்பாவும் அங்கே…
———————————————————————————————–
Series Navigationபெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *