சிவக்குமார் அசோகன்
____________________________________________
கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் டிங்க் டங்க் என கேட்டது. ரூமில் சற்று சிரித்த முகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நர்மதாவின் தூக்கம் கலைக்கவே அந்த ஒலி புறப்பட்டது போல விழுந்த வேகத்துக்கு புருவங்களைச் சுருக்கிக் கொண்டு, ஜன்னல் வழியே படுக்கையில் பிரவேசித்திருந்த காலைக் கதிர்களை வெறுப்பவள் போல கண்கள் கூசிக்கொண்டு எழுந்தாள். முகம் பூராவும் எரிச்சலின் சாயை. தூக்கம் கலைந்ததாலா, அல்லது கனவு கலைந்ததாலா என்பது அவளுக்கே வெளிச்சம்.
சத்தம் வந்த திசை நோக்கிக் கூடத்தில் பார்த்தாள். ரெங்கபாஷ்யம் கீழே உட்கார்ந்து உடைந்த சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. பேத்தி விழித்துவிட்டாளா என்று ரூமை எட்டிப் பார்த்தார். அவள் இவரைப் பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்து ஒரு மாதிரி சிரித்தார். ‘தெரியாமல் போட்டுவிட்டேன்’ என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பு.
”காலங்கார்த்தாலே என்ன தாத்தா பண்ணிட்டிருக்கே… எக்ஸாம் அதுமா உன்னை என் தலைல கட்டிட்டுப் போனாங்களே?” என்றாள்.
”கை தவறிடுச்சு டா.. நானே பொறுக்கிடறேன். ”
”பின்னே நான் வந்து பொறுக்குவேனா..? தூக்கம் போச்சு..”- எழுந்தாள். ரூமில் இணைந்திருக்கும் பாத்ரூமிற்கு ஓடினாள். ரெங்கபாஷ்யம் துரிதம் காட்டினார். பேத்தி வந்துவிடுவதற்குள் இடத்தை சுத்தம் செய்துவிடுவதோடு, அவளுக்கு ஒரு காபியும் போட்டுக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
நேற்று காலையிலிருந்து வீட்டில் நர்மதாவும் அவரும் மட்டும் தான் இருக்கிறார்கள். அவர் மகன் ரத்தினமும், மருமகள் கல்பனாவும் வேலூரில் கல்பனாவின் பெரியப்பா பேத்தி திருமணத்திற்குச் சென்றிருக்கிறார்கள். நர்மதாவுக்கும் போக இஷ்டம் தான். பி.இ செமஸ்டர் நேரமாகப் போய்விட்டது.
செமஸ்டரோ, கல்யாணத்திற்குப் போகாமல் இங்கே தங்க வேண்டியிருப்பதோ கூட கஷ்டமில்லை நர்மதாவுக்கு. தாத்தா ரெங்கபாஷ்யம் கூட இருப்பதைத் தான் வெறுத்தாள். அதிகபட்சம் மாத்திரை வாங்கிவரச் சொல்லுவார். ‘இந்தா இந்த டிவியைப் போடும்மா…’ என்பார். அதற்குத் தான் அலுத்துக் கொண்டாள் நர்மதா.
‘தாத்தாவையும் அழைச்சிட்டுப் போங்க.. நான் தனியா இருக்கேன். கார்ல தானே போறீங்க?’
‘வேண்டாம். மாமாவுக்கு நீ துணைன்னு நினைச்சிட்டிருக்கியா.. உனக்கு தான் டீ மாமா துணை..வயசுக்கு வந்தப் பொண்ணை தனியா விட்டுட்டுப் போக முடியாது’
நர்மதா குளித்துவிட்டு வந்தாள். ரெங்கபாஷ்யம் ஒரு காபியோடு ரூமிற்குச் சென்று ”குளிச்சிட்டியாடா? காபி சாப்பிடு.” என்றார் பாசத்துடன்.
”உன் காபி யாருக்கு வேணும். உன்னை யார் போடச் சொன்னது. கிச்சன்ல விழுந்து வைக்கறதுக்கா.. இல்ல எதையாச்சும் போட்டு உடைக்கறதுக்கா?”
ரெங்கபாஷ்யம் மெளனமாக இருந்தார். ”அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. ஏன் இப்படி கடுப்பாகறே.. இன்னிக்கு பரிட்சை இருக்கா.. ராத்திரி ரொம்ப நேரம் படிச்சிட்டுருந்தே போலருக்கு… ”
”இன்னிக்கு இல்லை. நான் வெளில சாப்பிட்டுக்கறேன். உனக்கு இட்லி வாங்கிக் கொடுத்துட்டுப் போறேன். மமதி வீட்டுக்குப் போய் படிக்கப் போறேன். ஈவினிங் தான் வருவேன்.”
”இட்லி வேணாம். நேத்து வெச்ச சாதமே மிச்சமிருக்கு.. நான் சாப்பிட்டுக்கறேன். மமதியை இங்க வரச் சொல்லேன். ”
”மமதியோட தாத்தாவை வரச் சொல்றேன்.” என்றவள் அரக்க பரக்க ஜீன்ஸ் டாப்ஸில் கிளம்பிருந்தாள். பி.இ. கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம் வருடம் படிக்கும் நர்மதாவை வர்ணிக்கும் சாத்தியம் இன்னும் இந்தக் கதையில் வரவில்லை. ஆனால் அவள் இந்த உடையில் கிட்டத்தட்ட இலியானா உடல் வாகை நினைவுபடுத்தினாள் என்பதை மட்டும் இந்த இடத்திலே பதிவு செய்ய வேண்டும்.
ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு பறந்த நர்மதாவின் முதுகைப் பார்த்து ”ஜாக்கிரதை மா..” என்று கத்திய ரெங்கபாஷ்யம் ஒரு விரக்திப் பெருமூச்சை விட்டார். பிறகு லேண்ட்லைன் ஃபோன் அருகில் சென்று எண்களை ஒற்றினார்.
”ரத்தினமா… என்னப்பா எப்படி இருக்கீங்க.?”
”………………”
”மண்டபத்துலயா இருக்கீங்க?” அங்க எல்லாரும் செளக்யம் தானே..?”
”………………”
”நான் நல்லாத் தான் இருக்கேன். நர்மதா சினேகிதி வீட்டுக்குப் படிக்கப் போயிருக்கா.. ஃபோன் பண்ணி விவரம் கேட்டுக்க.. ” என்று விட்டு மேல் விபரங்கள் சிலவற்றைப் பேசிவிட்டு வைத்தார். நியூஸ் டிவியைப் போட்டுக் கொண்டு வந்து சோபாவில் சாய்ந்தார்.
சற்றைக்கெல்லாம் அப்படியே சாயந்தமேனிக்கு தூங்கிவிட்டார். ஒரு முக்கால் மணி நேரம் தூங்கியிருப்பார். அரவம் கேட்டு விழித்தவர் நர்மதாவும், அவளுடன் ஒரு குறுந்தாடி இளைஞனும் வீட்டின் படியேறுவதை கவனித்தார்.
ரெங்கபாஷ்யம் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருப்பதின் பிரக்ஞை ஏதுமின்றி சூவிங் கம் மென்று கொண்டிருந்த அந்த குறுந்தாடியைக் காட்டி
”ஃப்ரெண்ட் தாத்தா..” என்றாள் நர்மதா. குரலில் சிறு பவ்யமும் மரியாதையும் இருந்தது. ரெங்கபாஷ்யத்திற்கும் புரிந்தது.
”அப்படியா வாப்பா..?” என்று செயற்கையாக புன்னகைத்தார். நர்மதாவைப் பார்த்து ”என்ன விஷயம்மா?” என்றார்.
”நாளை மறு நாள் எக்ஸாம் பேப்பர்ல கொஞ்சம் டவுட் இருக்கு தாத்தா… அதான் சேர்ந்து படிச்சா நல்லா இருக்குமேனு..”
”இந்தப் பையனுக்கு எல்லாம் தெரியுமா?”
அவனும்(ராகேஷ்) நர்மதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
”நீ ரூம்ல வெயிட் பண்ணு நான் வர்றேன்.” என்று நர்மதா அவனிடம் கிசுகிசுத்தாள்.
”க்விக் நம்மி..” என்றுவிட்டு நகர்ந்த ராகேஷை, கம்பளிப் பூச்சியைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கபாஷ்யம், ”எங்கப்பா போறே…?” என்றார்.
அவன் திரும்பிப் பார்த்தான். ஆனால் பதிலேதும் பேசாமல் நர்மதா ரூமிற்குச் சென்றான். ரெங்கபாஷ்யத்திற்கு இயலாமையும் கோபமும் சேர்ந்தாற்போல் முகம் மாறியது.
”என்னம்மா இதெல்லாம்.. வீட்ல யாரும் இல்லாதப்போ.. ஆம்பளப் பையனை அழைச்சிட்டு வர்றே.. மமதி கூட படிக்க வேண்டியது தானே..?”
”உனக்கு சொன்னா புரியாது தாத்தா.. உனக்கு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை… நான் அம்மா கிட்டே சொல்லிட்டேன். நீ சீன் போடாமா பேசாம தூங்கு.. ஓகே..?”
அதற்கு மேல் ரெங்கபாஷ்யம் எதுவும் பேசவில்லை. அவர் அவளின் தந்தை வழி தாத்தா. அவருக்கு எழுபத்தைந்து வயது. அவர் ஒரு ரிட்டையர்டு ரெவினியூ இன்ஸ்பெக்டர். இருந்தும் பேத்தியைக் கண்டிக்கும் திராணியில்லாமல், அவள் செய்வது சரியா தவறா என்கிற முடிவைக் கூட எடுக்க முடியாமல் திணறினார்.
‘அதையெல்லாம் நான் அனுமதிக்க முடியாது. வேணும்னா ஹால்ல உட்கார்ந்து படிங்க..’ என்று கூட சொல்லலாம் தான். ஏனோ தயங்கினார். ஏன் தயங்குகிறேன் என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். தன் பால் விழும் ஒரே ஒரு விமர்சனத்திற்கு கூச்சப்படுபவராக அவர் எப்போதோ மாறியிருந்தார்.
‘சும்மா இருங்க மாமா.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது..’
‘சும்மா இருங்க அப்பா உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…’
‘சும்மா இரு.. தாத்தா.. உனக்கு வயசாயிடுச்சி..’
இதனாலேயே அவர் பெருவாரியாகப் பேசுவதைக் குறைத்துக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால் அவருக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டதாகவும், உலகத்தோடு ஒன்றி வாழ முடியாமல் போனதாகவும் அவரே நம்பவும் தொடங்கிவிட்டார். பல தவறுகள் இங்கே சரிகள் ஆக்கப்பட்டுவிட்டன என்பதை உணர்ந்த ரெங்கபாஷ்யம் தவறுகளை எடுத்துச் சொல்வதையே விட்டுவிட்டார்.
மகனோ, மருமகளோ, பேத்தியோ எது செய்தாலும் சரி என்ற முடிவுக்கு அவர் வந்து கிட்டத்தட்ட மூன்று வருடம் ஆகிறது. ராஜம்மா போயும் மூன்று வருடம் ஓடிவிட்டது. அவள் போன பிறகு தான் அவர் தனக்கென்று தனிப்பட்ட முடிவும், வாழ்வும் இனி இல்லை என்ற முடிவுக்கே வந்தார்.
”அம்மாட்ட சொல்லிட்டியா?” என்று அழுந்தக் கேட்டார் ரெங்கபாஷ்யம்.
”ம்!’ என்று தலையாட்டிய நர்மதா நேரே ரூமிற்குச் சென்று கதவை ஒருக்களித்து தாழிடாமல் சற்றே சாத்தி வைத்தாள். எட்டிப் பார்ப்பதற்கே வெட்கப்பட்ட ரெங்கபாஷ்யம் சடாரென திரும்பிக் கொண்டார். டிவி சத்தத்தை வேண்டுமென்றே, வெறுப்பைக் காட்டும் விதமாய் கூட்டினார்.
வசதியாகப் போனது போல் நர்மதா ரூம் கதவு முழுவதும் சாத்தப்பட்டது.
சரியாக இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். ரெங்கபாஷ்யம் அதே சோபாவில் தலைக்குக் கையைக் கொடுத்த ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவருக்குப் பின்புறம் நர்மதாவின் ரூம் திறக்கப்படும் சத்தம் க்ரீச்சலாகக் கேட்டது. ராகேஷ் பூனை மாதிரி வெளியே வந்து, அவனுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ரூமிலிருந்து எட்டிப் பார்த்த நர்மதாவிற்கு ‘பாய்’ என்று சைகை செய்து கிளம்பினான்.
மறுபடி ரூமிற்குத் திரும்பிய நர்மதா சோபாவில் தாத்தாவை ஒரு முறை பார்த்தாள். தூங்குகிறாரா நடிக்கிறாரா என்பதை கணிக்கமுடியாமல் குழம்பினாள். உண்மையில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த ரெங்கபாஷ்யம், வெறுமனே தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். உள்ளுக்குள் மனசு ஏதேதோ கற்பனை செய்து கொண்டு புழுங்கிக் கொண்டிருந்தது.
நர்மதா பாத்ரூமில் குளிக்கும் சத்தம் கேட்டது.
இரண்டு நாள் போயிருக்கும். கல்யாணம் முடித்து ரத்தினமும், கல்பனாவும் நேற்றே வந்துவிட்டிருந்தார்கள். எக்ஸாம் எழுதிவிட்டு வந்த களைப்பில் நர்மதா ரூமில் தூங்கிக் கொண்டிருந்தாள். மாலை நாலு மணி இருக்கும். பொழுது போவதற்குள் வீட்டை ஒரு முறை கூட்டிவிடுவது கல்பனாவின் வழக்கம்.
வழக்கம் போல் ஹால், கிச்சன் என்று கூட்டிக் கொண்டு வந்தவள், கல்பனா ரூமிற்குள் நுழைந்த இரண்டாவது நிமிடம்…
‘அடியே சண்டாளி..’ என்று கத்தினாள். ரெங்கபாஷ்யம் துள்ளி எழுந்தார். ‘என்னம்மா ஆச்சு..?” என்றபடி அவர் ரூமிலிருந்து நர்மதா ரூமிற்கு ஓடினார்.
அங்கே கல்பனா நர்மதாவின் தோள்களை பிடித்து உலுக்கி…”இதுக்கு என்னடி அர்த்தம் சொல்லுடி…?” என்று உக்கிரமாகக் கத்திக் கொண்டிருந்தாள்.
பேத்தி ஏதோ தப்பு செய்துவிட்டதை உணர்ந்து கொண்ட ரெங்கபாஷ்யம் ”என்ன விஷயம் சொல்லும்மா… ஏன் இப்படி கூப்பாடு போடறே..” என்றார். நர்மதாவையும் கல்பனாவையும் மாறி மாறிப் பார்த்தார்.
”இது எப்படி இங்க வந்ததுனு எனக்குத் தெரியாது மா” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் நர்மதா.
கல்பனா கீழே கிடக்கும் ஒரு பொருளைக் காண்பித்து ”இதுக்கு என்ன அர்த்தம் மாமா?” என்று அழுதாள்.
கல்பனா காட்டிய பொருளை குனிந்து எடுத்த ரெங்கபாஷ்யத்தின் சுருக்கம் விழுந்த முகம் அநியாயத்துக்கு சிவந்தது.
அது ஒரு காண்டம் பாக்கெட்டின் மேல் அட்டை.
கல்யாணம் ஆனவர்களின் பெட் ரூமிலேயே அந்தப் பொருளின் இருப்பும், அது ஏற்படுத்தும் உறுத்தலும் விசேஷமானது. விஷமமானது. அதுவும் ஒரு வயசுப் பெண்ணின் ரூமில் அப்பொருள் ஏற்படுத்தும் அர்த்தம்? மகள் சோரம் போய்விட்டாள். ஊரில் இல்லாத போது ஏதோ நடந்திருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக நம்பினாள் கல்பனா. அது தான் உண்மையும் கூட.
குனிந்திருந்த நர்மதாவின் தோள்களைத் தொட்டார் ரெங்கபாஷ்யம். தாத்தாவை நிமிர்ந்து பார்க்கிறாள் பேத்தி. வயசான கண்களும், வயசே போறாத கண்களும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டன. கணத்தில் அனைத்தையும் மனதில் ஓட்டிப் பார்த்துவிட்ட ரெங்கபாஷ்யம்.
”கல்பனா என்னை மன்னிச்சுடு..?” என்றார்.
கல்பனாவின் கண்கள் அழுகையை நிறுத்தின. நர்மதாவின் கண்கள் ‘ப்ளீஸ் தாத்தா… ‘ என்று கெஞ்சின.
”இந்தக் குட்டி என்ன செய்தா தெரியுமா?” நர்மதா பரபரவென்று நடுங்கிக் கொண்டிருக்கும் போதே.. அவளை அதற்கு மேல் படுத்தாமல்
”நீங்க ஊருக்குப் போன ரெண்டு நாளா.. எனக்கு இவ சரியா சோறு கூட போடலைம்மா.. ”
கல்பனா துணுக்குற்றாள். ”அதுக்காக?”
”கொஞ்சம் கூட தாத்தாங்கிற மரியாதையில்லாம அடிக்கடி திட்டிட்டே இருந்தா.. அதான் ஒரு வேகத்துல ரோட்ல கிடந்த இந்தப் பாக்கெட்டை இங்கே கட்டிலுக்கு அடியிலே போட்டுவிட்டேன். குழந்தை அழறதைப் பார்க்க முடியல…. அதான்…”
”போதும் நிறுத்துங்க மாமா.. ஒரு வயசான ஆள் பண்ற காரியமா இது… இப்படியும் ஒரு ஆள் யோசிப்பானா… ச்சே.. உங்களை நினைச்சாலே கேவலமா இருக்கு..”
கல்பனா வெளியே வந்து செல்போனை எடுத்து ரத்தினத்தை அழைத்தாள். அடுத்த அரைமணி நேரத்தில் போனில் அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்தவன், ரூமில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த அப்பாவை வந்த வேகத்து ”யோவ்…’ என்று அழைத்துக் கொண்டு வேகவேகமாக அவர் அருகில் சென்றான்.
நர்மதா ஓடிவந்து ”அப்பா தாத்தாவை ஏதும் செய்திடாதீங்க..” என்றாள்.
”கேட்டியாய்யா… அவ என்ன சொல்றான்னு.. பேத்தி எதிர்த்துப் பேசறானு உலகத்துல எந்தப் பாட்டனாவது இப்படிச் செய்வானா..? இவ்ளோ அழுக்குப் பிடிச்ச ஆளா நீ.. வயசானா புத்தி மழுங்கும்பாங்க.. உனக்கு மாறில்ல போயிருக்கு… ”
”மன்னிச்சிடுப்பா..”- என்றார் ரெங்கபாஷ்யம். உண்மையிலேயே அவர் மன்னிப்பைக் கோரினார். அன்றைய தினம் அந்த இளைஞனை வீட்டில் அனுமதித்தது முழுக்க முழுக்க தன்னுடைய குற்றமே என்று கருதினார் அந்தக் கிழவர். பேத்தி என்ன சொல்லியிருந்தாலும் அவர்கள் இருவரையும் ரூமில் விட்டுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்ததற்கு வெட்கப்பட்டார்.
”மன்னிப்பா…என் பொண்ணு சொல்றதனால உன்னை விடறேன். இல்லாட்டி இப்பவே இந்த நிமிஷமே ஹோம்ல சேர்த்துவிட்ருவேன். நீ இந்த ரூமை விட்டு வெளியே வர வேணாம். வேளா வேளைக்கு சாப்பாடு ரூமிற்கு வரும். சாப்பாடு போடலைனு தானே.. இந்தக் காரியம் பண்ணே..? கொட்டிக்க இனி நல்லா கொட்டிக்க..” என்று கத்திய ரத்தினம், கல்பனாவைப் பார்த்து ”அடியே… இந்தாளுக்கு நல்லா பொங்கிப் போட்டுடு.. இல்லாட்டி உனக்கும் ஏதாவது.. செய்வார்”
இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரம் ரெங்கபாஷ்யம் பொலபொலவென்று அழுதார். தாத்தா அழுவதை காணச் சகியாமல் நர்மதாவும் ஓடிவந்து தாத்தாவைக் கட்டிக் கொண்டு ”என்னை மன்னிச்சிடுங்க தாத்தா..” என்று கதறினாள். நர்மதாவின் கண்களிலிருந்து அருவியின் வீரியத்துடன் நீர் வழிந்தது.
பேத்தியை இறுக அணைத்துக் கொண்ட தாத்தா பேத்தியின் காதில்
”ஒண்ணும் ஆயிடலை.. ஏதும் உளறிடாதே.. என் பையனைப் பத்தி எனக்குத் தெரியும். நாளைக்கே சரியாகிடும். ஆனா அந்தப் பய கூட மட்டும் இனி சேராதே..” என்றார்.
தாத்தாவின் ஈரமான கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள் நர்மதா.
”இவ்ளோ பண்ணவருக்கு என்னடி முத்தம்?” என்றபடி நர்மதாவை இழுத்த ரத்தினத்தின் வலது கன்னத்தில் பளிச்சென்று அறைந்தார் ரெங்கபாஷ்யம். எனக்கும் என் பேத்திக்கும் நடுவில் நீ யார் என்று கேட்காமல் கேட்ட அந்த அறையின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத ரத்தினம், மெளனமாக வெளியேறினார்.
நடந்ததை முழுதும் அறிந்த இருவரின் வழக்கத்திற்கு மாறான அன்பையும் அழுகையையும், நடந்ததை முற்றிலும் அறியாத இருவர் ஆயாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிவக்குமார் அசோகன்
- ஏமாற்றம்
- கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது
- மணல்வெளி மான்கள் – 1
- மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
- ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…
- இடைத் தேர்தல்
- சாவு விருந்து
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு
- மிதிலாவிலாஸ்-19
- தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி
- மூன்று குறுங்கதைகள்
- நெருடல்
- “ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”
- முழுக்கு
- பல்லக்கு
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…
- சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா
- கடந்து செல்லும் பெண்
- மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா
- அந்தக் காலத்தில்
- வயசு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6
- கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
- சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
- சும்மா ஊதுங்க பாஸ் – 2