ஆர் கோபால்
பர்மிய அரசுக்கும் ரோஹிஞ்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையேயான போர் 1947இலிருந்து நடந்துவருகிறது.
ரோஹிஞ்யா மக்களில் சிலர் ரோஹிஞ்யா மக்கள் அந்த பிராந்தியத்தின் புராதன குடிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பல வரலாற்றாய்வாளர்கள் பிரிட்டிஷ் அரசு பர்மாவை ஆண்டுகொண்டிருந்தபோது, வங்காளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட முஸ்லீம்கள் என்றும், பின்னால் பங்களாதேஷ் சுதந்திரமடைந்தபோதும் வந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
முதல் பர்மிய-பிரிட்டிஷ் போர் 1826இல் நடந்தது. அந்த போரில் பிரிட்டிஷ் அரக்கான் மாநிலத்தை கைப்பற்றியது. 1869இல் சுமார் 5 சதவீதமே முஸ்லீம்கள் இருந்ததாக கணக்கெடுப்பு கூறுகிறது. 1911இல் இங்கு முஸ்லீம் மக்கள்தொகை 58ஆயிரத்திலிருந்து 178ஆயிரத்தை அடைந்தது. இரண்டாம் உலகபோரின்போது ராக்கைன் (அரக்கான்) பிரதேசத்தின் பௌத்தர்களுக்கும் பிரிட்டிஷ் அரசால் ஆயுததாரியாக ஆக்கப்பட்ட முஸ்லீம்களுக்கும் இடையே 1842இல் சண்டை மூண்டு, இருபுறமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
அரக்கான் முஜாஹிதீன் போர்(1947-61)
ஜாமியதுல் உலேமா இஸ்லாம் என்ற கட்சி 1947 இல் துவக்கப்பட்டு, இந்த அரக்கான் பிரதேசத்தின் மாயு பகுதி கிழக்கு பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்ற நோக்கத்தில் ஜிஹாதில் இறங்கியது. மே 1946இல் அரகான் முஸ்லீம் தலைவர்கள் முகம்மது அலி ஜின்னாவை சந்தித்து, பாகிஸ்தானுடன் சேர உதவ வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள். சில மாதங்களுக்கு பிறகு வடக்கு அரக்கான் முஸ்லீம் லீக் என்ற கட்சி துவக்கப்பட்டது. இது அரக்கான் பிரதேசம் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று கோரியது.
பர்மா அரசு இந்த தனி நாடு கோரிக்கையை ஏற்றுகொள்ளவில்லை. இதனால், வடக்கு அரக்கான் பிரதேச முஸ்லீம்கள் பர்மா மீது ஜிகாத் தொடுப்பதாக அறிவித்தனர்.
சில வருடங்களுக்குள்ளாகவே அங்கிருந்த பௌத்தர்கள் அரக்கான் பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டனர். 1949இல் பர்மா அரசின் கட்டுப்பாட்டில் அக்யாப் நகரம் மட்டுமே இருந்தது. வடக்கு அரக்கான் முழுவதும் முஜாஹிதீன் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த முஜாஹித்கள் வங்காளி முஸ்லீம்களை அரக்கான்பிரதேசத்துக்குள் சட்டத்துக்கு புறம்பாக கூட்டி வருவதாக பர்மா அரசு குற்றம் சாட்டியது
நகரங்களையும் இந்த முஜாஹிதீன்கள் சூழ்ந்ததும், பர்மாவில் இந்த பிரதேசங்களில் 1948இல் நவம்பரில் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. பர்மா ரைபிள்ஸ் ராணுவம் இங்கே அனுப்பப்பட்டதால், இந்த போராட்டம் நசுக்கப்பட்டது. முஸ்லீம் முஜாஹிதீன்கள் வடக்கு அரக்கான் காடுகளுக்கு தப்பியோடினர்.
1950-54களில் பர்மா அரசு இந்த முஜாஹிதீன்களுக்கு எதிராக பெரும் தாக்குதலை துவக்கியது. 1954இல் முஜாஹிதீன்கள் மாவுண்டா, புதிடாங், ரெதேடாங் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திகொண்டனர்.
அக்டோபர் 54இல் மீண்டும் அரசு தாக்குதலை துவக்கியதால், அதன் வெற்றியின் இறுதியில் பல முஜாஹிதீன்கள் கொல்லப்பட்டனர். 1957இல் ஷோர் மலுக், ஜுரா தான் போன்றவர்கள் நடத்திய முஜாஹிதீன் ராணுவப்பிரிவின் 150 போராளிகள் சரணடைந்தனர். நவம்பரில் ரஷித் என்பவரின் தலைமையில் இருந்த பிரிவு 240 பேருடன் சரணடைந்தது.
ஜெனரல் நீ வின் ஆட்சியை பிடித்ததும், இந்த முஜாஹிதீன் செயல்பாடுகள் இன்னும் குறைந்து மறைந்தன.
ரோஹிஞ்யா இஸ்லாமிய இயக்கம்(1971 முதல்)
பங்களாதேஷ் 1971இல் சுதந்திரமடைந்தபோது, எல்லைப்புறங்களில் இருந்த ரோஹிஞ்யாக்கள் ஆயுதங்களை கைப்பற்றும் வாய்ப்புகிடைத்தது. ஜாபர் என்பவரால் ரோஹிஞ்யா விடுதலை கட்சி என்ற கட்சி துவக்கப்பட்டது. 1974இல் இவர்களது போராளிகள் எண்ணிக்கை 500ஐ தொட்டது. பர்மா ராணுவத்தின் நடவடிக்கைகளால் இவர்கள் பங்களாதேஷுக்கு ஓடி சென்றார்கள்.
1974இல் முகம்மது ஜாபர் ஹபிப் என்பவர் ரோஹிஞ்யா பாட்ரியாடிக் முன்னணி என்பதை 70 முஜாஹிதீன்களுடன் துவக்கினார்.
1978இல் நீ வின் அரசாங்கம் அரக்கானில் சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் வேலையை துவக்கியது. இதனால் அச்சமடைந்த ஏராளமான ரோஹிஞ்யாக்கள் எல்லையை தாண்டி பங்களாதேஷுக்கு சென்றனர். இந்த நிகழ்வால் இந்த ரோஹிஞ்யா பாட்ரியாடிக் முன்னணிக்கு ஏராளமான முஜாஹிதீன்கள் கிடைத்தனர். பரிமிய முஸ்லீம் குடிமக்களை பங்களாதேஷுக்கு துரத்துவதாக பர்மா அரசை பங்களாதேஷ் அரசு குற்றம் சாட்டியது. பர்மாவோ, பர்மாவின் சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய பங்களாதேஷிகளையே திருப்பி அனுப்புவதாக கூறியது.
1980இல் இதிலிருந்து பிரிந்த இன்னொரு கட்சி ரோஹிஞ்யா சாலிடாரிட்டி ஆர்கனைசேசன் என்ற அமைப்பு உலகெங்கும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டது. JEI என்னும்பங்காதேஷ் அமைப்பு, குல்புதீன் ஹெக்மதியார் ஆப்கானிஸ்தான், ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற இந்திய காஷ்மீர் அமைப்பு, மலேசியாவின் தீவிரவாத அமைப்புகள் ஆகியவை இதில் சில.
1982இல் பங்களாதேஷ் அரசாங்கம் ரோஹிஞ்யா மக்களை தேசமில்லாத மக்களாக அறிவித்து அவர்களது குடிஉரிமையை ரத்து செய்தது. பதிலடியாக பர்மா அரசு, இந்த ரோஹிஞ்யா மக்களை பெங்காளிகள் என்று வரையறுத்து இவர்களை வெளிநாட்டினர் என்று கூறியது.
ராணுவ விஸ்தரிப்பு – தாலிபான் அல்குவேதா ஆகிய அமைப்புகளின் தொடர்பு (1988-2011)
பெரும்பாலான ரோஹிஞ்யா முஜாஹிதீன் அமைப்புகள் பங்களாதேஷிலேயே அமைந்துள்ளன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அல்குவேதா அமைப்பு இந்த ரோஹிஞ்யா முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளிக்கின்றன என்று ஆப்கானிஸ்தானில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வளர்ச்சியடைந்த RSO அமைப்பால் தூண்டப்பட்ட பர்மா அரசாங்கம், 1991இல் பங்களாதேஷ், பர்மா எல்லைப்புறத்தில் இருந்த இந்த முகாம்களை அழிக்க முனைந்தது. டிசம்பரில் பர்மா துருப்புகள் எல்லையை தாண்டி பங்களாதேஷ் அரசாங்கத்தின் ராணுவ முகாமை அழித்தன. இது இருநாட்டு உறவுகளில் சிக்கலை தோற்றுவித்தது. இதனால் ஏப்ரல் 1992இல் சுமார் 250000 ரோஹிஞ்யாக்கள் பங்களாதேஷுக்கு துரத்தப்பட்டனர். 1992இல் டாக்காவுக்கு வந்த சவுதி அரேபிய ராணுவ தளபதி பர்மாவுக்கு எதிராக பங்களாதேஷ் போரில் இறங்க வேண்டும் என்று தூண்டினார்.
1994 ஏப்ரல் 28இல் RSO முஜாஹிதீன்கள் வைத்த குண்டுகள் அரக்கானில் சுமார் 12 இடங்களில் வெடித்தன. இதனால் 4 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.
பங்களாதேஷில் இருக்கும் ரோஹிஞ்யா மக்களை திரும்ப பர்மாவுக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் 2005இல் துவக்கப்பட்டன. 2009இல் சுமார் 9000 ரோஹிஞ்யாக்களை பர்மா திரும்ப பெற்றுகொள்ளும் என்று பேச்சுவார்த்தை முடிவில் அறிவிக்கப்பட்டது. 16 அக்டோபர் 2011இல் பர்மாவில் பதவியேற்ற புதிய அரசாங்கம், பதிவு செய்த ரோஹிஞ்யா மக்கள் அனைவரையும் திரும்ப எடுத்துகொள்வதாக அறிவித்தது. ஆனால் 2012இல் நடந்த ராக்கைன் கலவரம் இதனை நிறுத்திவிட்டது.
2012 ராக்கைன் கலவரம்
2012 ராக்கைன் கலவரம் என்பது நீண்ட நெடுங்காலமாக ராக்கைன் பிரதேசத்தில் தொடர்ந்து சிறுபான்மையினராக ஆகிவந்த பௌத்த பர்மியர்களுக்கும் ரோஹிஞ்யா முஸ்லீம்களுக்கும் இடையேயான சண்டைகளின் தொடர்ச்சிதான்.
ஒரு பௌத்த இளம்பெண் முஸ்லீம்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டதும், இன்னும் பத்து பௌத்தர்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதுமே இந்த கலவரங்களின் தோற்றுவாய். இதற்கு பதிலடியாக பௌத்தர்கள் முஸ்லீம்களின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இரண்டு புறங்களிலும் ஏராளமான கிராமங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன. 78 பேர்கள் கொல்லப்பட்டார்கள் 140000 பேர்கள் இடம் பெயர்ந்தார்கள். ஜூன் 2012இல் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு ரோஹிஞ்யா அமைப்புகள் பர்மா அரசாங்கம் ரோஹிஞ்யா மக்களை கைது செய்வதாகவும் கொல்வதாகவும் பிரச்சாரத்தில் இறங்கின.
உண்மையில் இருபுறமுமே பர்மிய அரசின் ராணுவத்தில் பாதுகாக்கப்பட்டதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்போதும் அதற்கு பிறகும் பல பௌத்த மடங்கள் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பளித்தன.
–
மார்ச் 29 2014இல் பர்மிய அரசாங்கம் ரோஹிஞ்யா என்ற வார்த்தையை தடை செய்து, இனி பெங்காளி என்ற வார்த்தையையே சென்சஸில் உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.
—
2015 ரோஹிஞ்யா படகு மக்கள்
2015இல் பர்மா அரசாங்கத்திலிருந்தும் பங்களாதேஷிலிருந்து தப்பிக்கவும், ஏராளமான ரோஹிஞ்யா மக்கள் படகுகள் மூலம் மலேசியா இந்தோனேஷியா தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். சுமார் 25000 பேர்கள் இது போல படகுகள் மூலம் செல்கிறார்கள் என்று கணக்கிட்டுள்ளனர். வழியில் பலர் இறந்துவிட்டதாகவும் தெரிகிறது.
இவர்களை மலேசியா, இந்தோனேஷியா போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளும் ஏற்றுகொள்ள தயாராக இல்லை. பங்களாதேஷ் இவர்களை குடிமக்கள் அல்ல என்று நிராகரிக்கிறது. பர்மா இவர்களை பங்காளிகள் என்று கூறுகிறது.
பங்களாதேஷின் மீது உலகளாவிய விமர்சனத்தின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான ஷேக் ஹசீனா இந்த படகு மக்களை “மனநலம் பிறழ்ந்தவர்கள்” என்றும் இவர்கள் பங்களாதேஷில் நல்ல வாழ்க்கை வாழலாம் என்றும் கூறியிருக்கிறார்.
தாய்லாந்து இந்த மக்களுக்கு மனித நேய முறையில் உதவி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாடு சுமார் 3000 பேருக்கு இடம் கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் காம்பியா நாடு இவர்களை எடுத்துகொள்வதாக அறிவித்திருக்கிறது. ஆஸ்திரேலியா அரசு இந்த படகு மக்களை எடுத்துகொள்வதாகவும் அறிவித்திருக்கிறது.
பொய் பிரச்சாரங்கள்
பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் போட்டோஷாப் வேலை செய்து பிரச்சாரம் செய்வதை போலவே ரோஹிஞ்யா ஆதரவு இயக்கங்களும் இவ்வாறு போலி படங்களை போட்டு ரோஹிஞ்யா மக்கள் மீது இரக்கத்தை வேண்டுகின்றன. அவற்றை காட்டும் பேஸ்புக் பக்கம்
- வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்
- மிதிலாவிலாஸ்-20
- சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)
- தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.
- ஒவ்வாமை
- பலவேசம்
- சாயாசுந்தரம் கவிதைகள் 3
- மயிரிழை
- அன்பானவர்களுக்கு
- ஆறு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3
- பிசகு
- நிலவுடன் ஒரு செல்பி
- சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்
- சூரிய ஆற்றல்.
- ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்
- டிமான்டி காலனி
- ஒரு வழிப் பாதை
- இடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு
- மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்