ஏகலைவன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 22 of 24 in the series 7 ஜூன் 2015

ராஜா ராஜேந்திரன்

’ஒண்ணாம் தேதி வந்தவுன்ன வாடகை கொடுத்திடுவேன், கரண்ட் இவ்வளவு மீட்டர் ஓடிருக்கு, யூனிட் ஒம்போது ரூபான்னு ஒன் வீடடு கரண்டுக்கும் சேத்து எங்கிட்ட கறப்ப, மூஞ்ச சுளிக்காம கொடுப்பேன், மொறவாசல், படிக்கட்டு லைட், தண்ணிக் காசு………….பத்தாயிரம் ரூபா வாடகைக்கு அப்புறமும் இவ்வளவையும் வெக்கமில்லாம நீ கேப்ப, அசராம நான் கொடுப்பேன். என்ன புண்ணியம் ? “வேற வீட ஒடனே பாரு, பையனுக்கு கல்யாணம்”ன்னு கருணையில்லாம வந்து நிக்குற ?’ இதெல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்த வார்த்தைகள். ஆனால், வழக்கம் போல இளித்தபடியே, “ஓகே சார், பத்து நாள்ல பாத்துடறேன்” என்றேன்.

”ஏங்க, ஒங்களுக்கு அறிவே கிடையாதுங்க, திடுப்ன்னு காலி பண்ணச் சொல்வாங்க, நீங்களும் பத்து நாள்ல காலி பண்ணிடறேன்னு ஒத்துக்கிறீங்க பாருங்க, இப்பதான் வீடு மாத்தி ஆஞ்சி ஓஞ்சி நிக்கறோம், திரும்ப புரோக்கர், கமிஷன், வேன், கட்டில பிரின்னு அல்லாடணும், மூணு மாசம் டைம் கேக்க வேண்டியதுதான ? ச்சே, கடன வாங்கியாவது வீடு கட்டுங்கன்னு சொன்னா, மதிக்கிறீங்களா ?”

“ஏய் பொத்துடி, எப்ப பாத்தாலும் இதே டெம்ப்ளேட் வசனத்த பேசிக்கிட்டு ? ஒங்கப்பன் நிலம் ஏதும் சும்மாருந்தா சொல்லு, கட்டிடலாம்”

“ம்க்கும் இவர் மட்டும் புதுசா சிந்திச்சி பேசுறதா நினைப்பு, எப்ப பாத்தாலும் மாமனார் எதும் தருவாருன்னு தொன்னாந்துகிட்டே இருக்க வேண்டியது, நான் வாங்கி வந்த வரம் அப்படி”
பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே போனால், இரவு உணவு கிட்டாது, நான் செய்த பாவத்திற்கு பொண்ணுக்கு திட்டும் அடியும் விழும், எதுக்கு சாமி வம்பு ? டீ ஷர்ட்டைத் தேடிப் போட்டுக் கொண்டு அவசரமாய் புறமுதுகு காட்டினேன்.

விதி வலியது என்பதால் டீக்கடையில் தற்செயலாக வீட்டு புரோக்கர் கண்ணில் சிக்க, இதே ஏரியாவில் பத்தாயிரம் வாடகையில், 24 மணி நேர தண்ணீர் வசதியுடன் வீடு வேண்டுமென்றேன் .

“ஹக்காங், பத்தாயிரம் ரூபாய்க்கு 24 மணி நேரத் தண்ணியத் தருவாங்க, நல்ல வீடா பாக்கச் சொல்லுங்க சார், பாக்குறேன்”

’அண்ணா, அப்பா உங்களத்தான் ஃபாலோ பண்ணச் சொல்லியிருக்கார்ண்ணா, நீங்கதான் என் மானசீகக் குரு, உங்க குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும், உங்கள மாதிரியே நானும் தொழில்ல முன்னேற ஆசி பண்ணனும்ண்ணா நீங்க’ திடுக்கென்று விழிப்பு வந்தது எனக்கு.

’இது யார்ரா, கனவில் புது கேரக்டர் என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன். சம்பந்தா சம்பந்தமில்லாமல் என்னைப் போய் ஒருவன் அதெப்படி குருவாய் ஏற்கச் சம்மதிக்கிறான் ?’ இன்னும் விடிந்திராதலால், அடித்த மெல்லிய குளிர் மீண்டும் என்னைத் தூக்கத்தைத் தழுவ வைத்தது.

“சார், உண்மையிலேயே நீங்க கில்லி சார்”

‘ ??????? ‘

“நீங்க சாமி இல்ல, பேய் இல்லன்னு வாதாடுறப்பல்லாம். ‘இவர் டுபாக்கூரு, இவருக்குன்னு வந்தாத்தான் தெரியும்’ ன்னு மனசுக்குள்ள நினைச்சுப்பேன் சார், ஆனா இன்னிக்கு அதையெல்லாம் தூள் தூளாக்கிட்டு, நீங்க நீங்கதான்னு நிருபிச்சீங்க பாருங்க, சான்ஸே இல்ல சார்”

‘டேய் லூஸூ உண்மையிலேயே நான் டுபாக்கூருதாண்டா, பேய்ப்படம் பாத்தா அன்னிக்கு நைட்டு பாத்ரூமே போகமாட்டேன்’ வழக்கம்போல் மனதுக்குள் பேசிக் கொண்டாலும், “பாஸ், நீங்க சொல்றது புரியவேயில்லையே, நான் என்னிக்கு சாமி இல்லைன்னேன் ?”

“ஆஹா, கமல் ஃபேனுன்றதையும் சரியா ப்ரூப் பண்ணிட்டீங்க போங்க, அவர்தான் எல்லாப் படத்திலயும் இப்படி குழப்புவாரு, சரி அத விடுங்க, நைட்டு ஏதும் பிரச்சினையில்லையே ?’

’அதுசரி, நைட்டு பிரச்சினைதான், ஆனா அதை ஏன் இவன்கிட்ட சொல்லணும் ?’ “அப்படில்லாம் ஒண்ணுமில்லையே பாஸ் ”

“ நீங்க துணிச்சலானவருன்னு ’அது’க்கு தெரிஞ்சிருக்கணும்’

“அதுக்கா ? பாஸ் கொஞ்சம் புரிறா மாதிரி பேசுங்களேன்”

“என்ன சார், அது யாரிருந்த வீடுன்னு தெரியுமில்ல ?”

”தெரியவே தெரியாதே, பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகை வீடு பாத்துகிட்டிருந்தேன், எட்டாயிரம் ரூபாய்ன்னு இந்த வீட்ட புரோக்கர் காமிச்சாரு, வீடு விசாலமா, தனியா இருந்தது, வாடகையும் சீப்பா இருக்கேன்னு வந்தேன், நீங்க அது இதுன்னு என்னென்னமோ சொல்றீங்க ? யார் இருந்த வீடு பாஸ் அது ?”

”ஒங்க சிஷ்யப்புள்ள ஒருத்தன் இருந்தான் தெரியாது சார், உத்தம புத்திரன் ?”

“உத்தம புத்திரன் ?????”

“அதான் சார், உத்தமன் மகன்”

”உத்தமன் ????”

“அட நம்ம அம்பிகாபதி தம்பி உத்தமன் இருந்தாருல்ல, உலக மகா ஃப்ராடுப் பய”

சுருக்கென்றானது எனக்கு. அம்பிகாபதி, உத்தமன், உத்தம புத்திரன்.

அம்பிகாபதி 50 விழுக்காடு மோசடி மன்னன். வட்டிக்கு பணம் வாங்குவான். ஒழுங்காய் வட்டி கட்டுவான், வட்டி போதும்யா, அசலக் கொடு என்கிற மாத்திரத்தில் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்திவிடுவான். அப்புறம் அந்த வட்டியும் வராது. டயரும், செருப்பும் கதறக் கதறத் தேய வைத்தபின், அசலில் பாதியை செட்டில்மெண்ட் பண்ணித் தருவான். வட்டிக்கு கொடுத்தவன் கணக்கு போட்டுப் பார்த்தால், அசலில் கால்வாசி நிகர இழப்பாயிருக்கும்.

அம்பிகாபதியாவது பரவாயில்லை. உத்தமன்தான் அதி பயங்கர மோசடி மன்னன். பணமாய், சரக்காய் எதைக் கடனாய்க் கொடுத்தாலும் அதைத் திரும்பத் தந்ததாய் எந்த வரலாற்று ஆதாரமுமில்லை. பணம் வசூலிக்கப் போகுபவரிடம், ‘இந்தா இந்த தே.மவன் எனக்குப் பணம் தரணும், அவன் கொடுத்திருந்தான்னா உங்களுக்கு எப்பவோ கொடுத்திருப்பேன், அந்தப் பு மவன் இதோ தரேன், அதோ தரேன்னு இழுத்துகிட்டேருக்கான், த்தா உங்க முன்னாடியே இப்ப என்ன கேள்வி கேக்குறேன் பாருங்க”

“டே கருப்பசாமி, ங்கோ** நீ என்ன பெரிய புடுங்கியா, போன் போட்டா எடுக்க மாட்டியா, நேர்ல வந்தேன் செருப்பால அடிப்பேண்டா பூ****, நீ என் பணத்தக் கொடுக்காம ஏமாத்துற, என் வீடு தேடி கண்ட நாய்ங்க வந்து கடிச்சிட்டு போது”(எதிரிலிருப்பவரை பார்த்துக் கண்ணடிப்பான், லுல்லுலாயிக்காமாம், கண்டுக்கக் கூடாதாமாம்)

“நீ மயிரே போச்சுன்னு ஒன் பொண்டாட்டி கூட புரண்டுகிட்டு கிடப்பியா ? ஒழுங்கு மரியாதையா அர மணி நேரத்துல பணம் மட்டும் என் வீடு தேடி வரலன்னு வை, ங்கொம்மாள ஒன் பொண்டா******** பீப் பீப் பீப்……..”

ஒருமுறை என் பணம் அவனிடம் சிக்கியிருந்தபோது, அவன் நிஜமாக அதுபோல் யாரிடமும் பேசுவதேயில்லை, அந்தத் திட்டெல்லாம் காசு கேட்கப்போன எனக்குத்தான் என எளிதாக அவதானித்து விட்டேன். இருந்தாலும் என் மென்மை குணத்தால் எப்படியோ அவன் கவரப்பட்டிருந்திருக்கிறான்.

“தம்பி, ஒன் பணத்த என் பொண்டாட்டி மேல சத்தியமா, இதோ எம் பொண்ணு மேல சத்தியமா முழுசா கொடுத்திருவேன் பாத்துக்க, டேய் புத்திரா(உள்ளறையிலிருந்து உத்தமனின் மகன் வந்தான், டவுசர் அணிந்திருந்தான், மேலே சட்டையில்லை, சிறு பாலகன்) என்னால தர முடியாட்டி, இதோ என் மகன் உனக்கு கொடுத்திடுவான், பயப்படாம போ, புத்திரா, நீ இந்த அண்ணன போலத்தாண்டா வளரணும், அண்ணன்கிட்டதான் வேலைய கத்துகிடனும், அண்ணன் கால சுத்துற நாயாத்தான் கெடக்கணும்”

ஆச்சர்யம் என்னவென்றால் அந்தச் சிறுவன், வளர்ந்து படிப்பில் சோதாவாகி(!) நான் செய்யும் தொழிலுக்கே வந்தான். என்னிடம் வேலை கேட்டு வந்தவனை, நான்தான் என் சக தொழில் செய்யும் நண்பரிடம் பரிந்துரை செய்து சேர்த்திருந்தேன். அதன்பின் அடிக்கடி சந்திக்கும் வேளைகளில் எல்லாம் ’உங்களிடம் வேலை செய்திருந்தால் அது என் பாக்கியமாக இருந்திருக்கும், இப்போதும் உங்களைப் போலத்தான் நேர்மையாக, மென்மையாக வாடிக்கையாளர்களை அணுகுகிறேன்’ என்பான்.

நான் யாரிடமாவது அப்போது டீலிங் பண்ணிக் கொண்டிருக்க நேரிட்டால் வைத்த கண் மாற்றாமல் என்னை ரசித்துக் கொண்டிருப்பான். வீட்டில் மனைவியிடம் இதைப் பெருமையாகச் சொன்னால், “பாவம் மன நிலை சரியில்லாத பய போல” ன்னு எள்ளலும், நக்கலும் துள்ளும். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

பிறகு கொசுவத்தி சுழல சுழல………..அவன் தொழில் நன்கு கற்று, தனியாய்த் தொழில் தொடங்கி, எனக்கே போட்டியாக வந்து, பிரம்மாண்டமாக வளர்ந்து, பெரும்பணம் சேர்ந்தபின், கெட்ட சகவாசம் ஏற்பட்டு, குடி, புகை, காபரே டான்ஸ் பெண்களின் சகவாசம் என தமிழ்ச்சினிமா கிளிஷேக்கள் போல அதள பாதாளத்தில் விழுந்தான்.

பெரியப்பா, அப்பாவைப் போலவே பலரையும் சதுரங்க வேட்டையாடி ஏமாற்றி…………..உத்தமனுக்கு தவறாமல் பிறந்த புத்திரன் என பதினாறாயிரம் அடி பாய்ந்தான். இதெல்லாம் சில வருடங்களில் நடந்து முடிந்து போனதாலும், உத்தம புத்திரனின் சகவாசம் பெரும் பிரச்சினையைத் தரக்கூடும் என்பதாலும், எங்கவனைக் கண்டாலும் தூர விலகி விலகி ஓடி………ஒரு கட்டத்தில் சுத்தமாக அடியோடு அவனை மறந்தும் போயிருந்தேன், ’இதோ விடாது உ. பு’ என வந்துவிட்டான்.
எல்லாம் கண்களுக்கு முன் வந்து நிழலாடி ஓய்ந்து போனது.

”ஓ, அந்த உத்தம புத்திரன் இருந்த வீடா ? ஓக்கே ஓக்கே, இப்ப எங்க இருக்கான் ? நல்லாருக்கானாமா ?”

“சார் நீங்க என்னை கிண்டல் பண்றீங்களா, இல்ல உண்மையிலேயே தெரியாமத்தான் பேசுறீங்களான்னே புரியலையே, ஒங்க சிஷ்யனாச்சே ?”

“பாஸ், அவனுக்கும் எனக்கும் என்னச் சம்பந்தம் பாஸ் ? எதோ கடன் பாக்கின்னு அவன் அப்பாகிட்ட போனேன், அந்தாளு சும்மா என்னை ஐஸ் வைக்கிறேன் பேர்வழின்னு அள்ளி விட்டான், அவன் அத சீரியஸா எடுத்துக்கிட்டு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டிருந்திருக்கான் போல”

”அடடா, நீங்க விஷயம் தெரியாமத்தான் இருந்திருக்கீங்க, நானாத்தான் ஒளறிட்டேனா, சரி நான் வர்றேன் சார்”
எனக்கு சுரீரென்று கோபம் கிளம்பியது.

“ஏம்ப்பா என்னைய பாத்தா கேன மாதிரி தெரியுதா ? என்னமோ சொல்ல வந்த, குழப்புன, நீயா போற ?”

”அய்ய நீங்க கேனதான் சார், ஒங்க உத்தம புத்திரன் இந்த வீட்டுலதான் தூக்கு போட்டுச் செத்தான் சார், கடன் தொல்ல, ஃப்ராடு பண்ணதுன்னு ஏகப்பட்ட நெருக்கடில……பொண்டாட்டி புள்ளய அம்போன்னு விட்டுட்டு தொங்குனான், ஆறு மாசமா இந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கே வரல, அப்புறமா வந்த ரெண்டு பேரும் ரெண்டே நாள்ல வீட்ட காலி பண்ணிட்டு ஓடிப் போனாங்க, நீங்க இதெல்லாம் தெரிஞ்சிதான் வந்திருக்கீங்கன்னு கொஞ்சம் பாராட்டிட்டேன், வர்றேன்”

என் பேஸ்மெண்ட் தள்ளாட ஆரம்பித்துவிட்டது. அடப்பாவி அதான் கனவுல வந்தானா ? பாவிப்பய புரோக்கர் ஏமாத்திட்டானே ?’

அன்றிரவு எளிதில் தூக்கம் வரவேயில்லை. “அண்ணே எனக்கு உங்ககிட்ட மட்டும் வேலை கிடைச்சி, நீங்க எனக்கு தொழில் சொல்லிக் கொடுத்திருந்தீங்கன்னா, நான் இப்படி தொங்கியிருந்திருக்கவே மாட்டேன்ணா” திடுதிப்பென்று விழித்தெழுந்தேன்.

மனைவியும், மகளும் எந்தத் தொந்தரவுமில்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர் !!!

-முற்றும்- (எனக்கு ???)

Series Navigationஎன் பெயர் அழகர்சாமிபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *