ஒரு நிமிடக்கதை – நிம்மி

author
0 minutes, 2 seconds Read
This entry is part 21 of 23 in the series 14 ஜூன் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அழகான சிவப்பு ஃப்ராக் அணிந்த அந்த நான்கு வயதுப் பெண் குழந்தை எங்கள் ‘ போர்ஷன் ‘ வாசலி வந்து நின்று சிரித்துக்கொண்டு
நின்றது.
” வா…உள்ள வந்து ஒக்காரு… ” என்றேன். வந்து சோஃபாவில் அமர்ந்தது.
” ஒன் பேர் என்ன ? ”
” நிம்மி..”
” நிம்மின்னா ? முழுப்பேர் சொல்லு…”
” நிர்மலா..”
” எந்தக் கிளாஸ் படிக்கிறே?…”
” ப்ரி – கே.ஜி…”
” ஒனக்கு எந்த ஊர்?…”
” கோயம்புத்தூர்…”
–நிம்மிக்கு அழகான சற்றே மேடான நெற்றி ! பேசும் போது நொடியில் மாறும் ஸ்வாரஸ்யமான முக பாவங்கள் !
” ஸ்கூல்ல படிக்கிறியே.. எனக்கு ஒரு கத சொல்லேன்…”
” லயன் வந்துது.. கிச்சனுக்குப் போச்சு.. அப்படியே சாப்டிடுச்சு..”
” என்ன சாப்டுது?..”
” ரசம் சாதம்…”
” ரசம் சாதமா?… சிங்கத்துக்கு ரசம் சாதம் பிடிக்காது… இட்லிதான் படிக்கும்… மொளகாய்ப் பொடியை இட்லி மேல வச்சு , கிட்ட போகாம
தூர இருந்தே குடுக்கணும்.. கிட்ட போனா ‘ ஆவ் ‘ னு கடிச்சுடும்…”

கடித்துவிடும் என்பதைக் கேட்ட நிம்மியின் முகத்தில் சற்றே கிலி தட்டியது. உடனே சுதாரித்துக்கொண்டு , ” லயன் அனிமல்ஸ்தான்
சாப்பிடும்.. இட்லி எல்லாம் சாப்பிடாது..” என்றது.
” ரசம் சாதம் சாப்பிட்டதுன்னு நீதானே சொன்னே ? .. ”
—-பதில் இல்லை.

என் வயிற்றைத் தொட்டு ” தொந்தி ” எனக் கூறி மகிழ்ந்து சிரித்தது.

–திடீரென்று ” நிம்மி ” என்ற பெருங்குரல் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது. நிம்மியின் அம்மா குரல் !
” இதோ வறேன்…” என்று கூறி எனக்கு மறக்காமல் , ” பை பை.. ” என்று கூறி ஓடி மறைந்தது.

குழந்தை அம்மா அருகில் சென்றதும் , மடார் மடார் என்று அதற்கு அடி விழுந்தது. வலி பொறுக்காமல் நிம்மி அழுதாள்.
” சனியனே.. எங்கெல்லாம் தேடறது…? வீடு வீடாப் போயிண்டிருக்கியா..? ஒன்னைக் கட்டிப் போடணும்.. இரு கயத்த எடுத்திண்டு வர்றேன்…”
குழந்தை வாங்கிய அடி எனக்கும் வலித்தது. தாயின் பொறுப்புணர்ச்சியால் குழந்தையின் மனித நேயம் துண்டப்பட்டுக் கிடந்தது !

Series Navigationகல்பீடம்தெருக்கூத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *