தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 6 of 23 in the series 14 ஜூன் 2015

தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி

தொல்காப்பிய மன்றம்
நோக்கமும் செயல்பாடுகளும்

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்த நூலில் இடம்பெற்றுள்ள மொழியியல் செய்திகள் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்துபார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் பேராய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை நடுவணாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

தொல்காப்பியம் குறித்த அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தரும் வகையிலும், தொல்காப்பியத்தைப் பரப்பும் நோக்கிலும் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளை உலக அளவில் நடத்தும் வகையிலும், உலகெங்கும் உள்ள தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், பற்றாளர்கள், இலக்கிய, இலக்கண ஆர்வலர்களை ஒன்றிணைக்கும்வகையில் தொல்காப்பிய மன்றம் என்ற உலக அளவிலான அமைப்பினைத் தொடங்க முடிவுசெய்து அதற்குரிய முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. தொல்காப்பிய மன்றத்தில் தமிழ் படித்தவர்கள் மட்டும் என்று இல்லாமல் தமிழார்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கணினி வல்லுநர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் ஈடுபாட்டாளர்கள், மாணவர்கள் என அனைவரும் இணைந்து பணிபுரியலாம். இதுகுறித்த நெறிமுறைகள் விரைந்து வகுக்கப்படும்.

தொல்காப்பிய மன்றம் இலண்டன் அல்லது பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தொல்காப்பிய மன்றத்திற்குரிய கிளைகள் தொடங்கப்பட்டுத் தக்க ஆய்வறிஞர்களால் வழிநடத்தப்பட உள்ளன.

ஆண்டுதோறும் தொல்காப்பியம் குறித்த மாநாடுகள் நடத்தித் தொல்காப்பிய ஆய்வினை வளர்த்தெடுப்பது தொல்காப்பிய மன்றத்தின் முதன்மை நோக்கமாகும். மேலும் தொல்காப்பியப் பதிப்புகள், தொல்காப்பிய ஆய்வறிஞர்கள், தொல்காப்பியம் குறித்த கட்டுரைகள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள் என அனைத்து விவரங்களையும் ஒன்றுதிரட்டி இணையத்தில் உலகத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு வைப்பது என்னும் நோக்கிலும் செயல்பட உள்ளோம்.

தொல்காப்பிய ஆய்வில் ஈடுபட்டவர்களையும், தொல்காப்பியப் பரவலில் துணைநின்றவர்களையும் அடையாளம் கண்டு அறிஞர்கள்குழு ஒவ்வொருஆண்டும் பரிந்துரைசெய்யும். அதன் அடிப்படையில் மலேசியாவில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் பெயரில் உலக அளவிலான விருது வழங்கிப் போற்றுவதும் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

தமிழார்வமும் இலக்கண, இலக்கிய ஈடுபாடும் உள்ள வினையாண்மை மிக்க தமிழர்களை எங்களுடன் இணைந்து பணிபுரிய, தங்களை அன்புடன் அழைக்கின்றோம். தொல்காப்பிய மன்றம் தொடங்குவதற்குரிய தங்களின் மேலான கருத்துகளையும், வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய நூலில் புலமையும், தமிழ்மொழி வளர்ச்சியில் ஆர்வமும்கொண்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இம்மன்றத்தை நெறிப்படுத்தி வளர்க்க உள்ளனர்.

பிரான்சுநாட்டில் 2015 செப்தம்பர் மாதம் இறுதியில் தொல்காப்பிய மன்றத்தின் உலக அளவிலான முதல் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு முன்பாக உலக நாடுகளில் உள்ள தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பியத்தைப் பரப்பவும், தொல்காப்பிய ஆய்வுகளை முன்னெடுக்கவும், தொல்காப்பியம் குறித்த செய்திகளைத் திரட்டவும் ஆர்வமுடைய பெருமக்கள் எங்களைத் தொடர்புகொள்ளும்படி மெத்தப்பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு:

கி.பாரதிதாசன், பிரான்சு kambane2007@yahoo.fr
மு.இளங்கோவன், இந்தியா muelangovan@gmail.com
சந்தன், சிங்கப்பூர் winworld_raj@yahoo.com
வாணன், மலேசியா vanan_mk@yahoo.com
அகரன், இலண்டன் harishkm2k@gmail.com

Series Navigationதீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்உதவும் கரங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *