பொறி

author
0 minutes, 18 seconds Read
This entry is part 10 of 23 in the series 14 ஜூன் 2015

கே.எஸ்.சுதாகர்

என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம்.
எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை.
குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் தொல்லையோ தாங்க முடிவதில்லை.
குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ’ஒரு’ எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது.
நேற்று நள்ளிரவு ஒரு சத்தம். மெதுவாக நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது, ஹோலிற்குள் ஒரு ‘சிப்ஸ் பைக்கற்’ நகர்ந்து கொண்டிருந்தது. ஆளரவம் கேட்டு பாய்ந்து ஓடினார் எலிப்பிள்ளையார்.
|உங்களுக்கு எப்படித் தெரியும் ஒரு எலிதான் வந்து போகின்றது?| என்று நீங்கள் கேட்கக்கூடும்.
நான் ஒருபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட எலிகளை ஒன்றாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறெந்தச் சான்றுகளையும் என்னால் தரமுடியாது.
எப்ப கலைத்தாலும் அங்கு இங்கு என்று எங்களைச் சூக்காட்டி கடைசியில் ஹோலிற்குள் இருக்கும் காஸ் ஹீற்றருக்குள் (Heater) போய் ஒளிந்து கொள்ளும். பின்பு அந்தப் பாதையினூடாகத் திரும்பி வருவதில்லை. ஹீற்றருக்குள்ளால் ஏதாவது கள்ளப்பாதை வைத்திருக்க வேண்டும்.
போன வருடம் ஒருநாள் – தொல்லை தாளாமல் ’அது’ வருவதற்கு சற்று முன்னதாக ஹீற்றரைப் போட்டு நன்றாகச் சூடாக்கிவிட்டுக் காத்திருந்தேன். வெளியே வந்தது. சொல்லி வைத்தால் போல நாங்கள் எல்லாரும் சத்தமிட்டபடியே கதகளி குச்சுப்புடி ஆடினோம். அவர் எமது நிகழ்ச்சியைப் பார்த்து மிரண்டு போகாமல், தான் வகுத்த வழியே ஓடி ஹீற்றருக்குள் நுழைந்தார். பின்னர் தன்னுடைய பாஷையில் ‘ஐயோ’ எனக் கத்தியபடி அங்கேயே சங்கமமாகினார். ஹீற்றர் எலியைச் சரிவர உள்வாங்கியிருந்தால் இந்தமுறை அது வந்திருக்க முடியாது. ஆனால் கரட்டாக யூன் மாதம் வந்து காட்சி தந்தது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தத் தடவை எலி வந்தால் அயலவருடன் கதைப்பது என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளை இனத்தவரான டேவிட் வீடு சென்று எனது எலி பற்றிய சந்தேகத்தைக் கேட்டேன். அவர் நாடியில் கை வைத்து, எலி ஒன்று பதுங்கி நிற்பதுபோல நின்றார். தீவிர தேடுதலின் பின்னர், “யெஸ்… கரெக்ட்…. என்னுடைய வீட்டிற்கும் ஒவ்வொரு வருஷமும் எலி ஒன்று தவறாது வந்து போகின்றது” என்ற தனது கண்டுபிடிப்பையும் வெளியிட்டார்.
அடுத்து வந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
ஒன்று : ஒரு எலியைப் பிடிப்பதற்காக நிறைய எலிப்பொறிகள் வாங்கி வீடு முழுவதும் வைத்துவிட வேண்டும்.
இரண்டு : செக்யூரிட்டிக்கமராவைப் பார்ப்பது.
எலிப்பொறி வாங்க பணிங்ஸ் (Bunnings) என்ற கடைக்குச் சென்றேன். குட்டிக் குட்டி எலிப்பொறிகளாக பத்துப்பொறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது என் கைகளிற்கு மேலால் எலி ஒன்று பறந்தோடியது.
வீட்டிற்கு வந்து பொறிகளில் சீஸ் வைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன். செக்யூரிட்டிக்கமராவை ஒருவாரம் பின்னோக்கி நகர்த்திவிட்டு ஒவ்வொரு நிமிடமாகப் பார்கத் தொடங்கினேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணி இருக்கும். ஒரு மனிதர் கையில் ஒரு தூக்குப்பெட்டியுடன் வருகின்றார். வீட்டிற்கு முன்னால் நின்று பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக இருக்கின்றார். அப்படியே ஒவ்வொரு வீடாகச் சென்று எலி விநியோகம் செய்கின்றார். எனது கமராவில் மூன்று வீடுகள் பதிவாகி இருந்தன.
அப்போது ஏதோவொன்று என் மூளைக்குள் மின்னலென அடித்தது. கடந்த வாரம் என் தபால்பெட்டிக்கு வந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து அலசி ஆராய்ந்தேன். ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் என் கண்ணில் பட்டது.
|| Be “SPIDER FREE” this winter, 23 areas of your property treated, be 100% delighted or the job is FREE.
As s “SPECIAL BONUS” we will treat a second pest at a heavily reduced price and a third pest (Mice &
Rodents) for “FREE”
Call now Mark (Your Local Pest Control Experts ||
விளம்பரம் சொன்னது இதுதான். மேலும் விளம்பரதாரரின் ரெலிபோன், முகவரியும் அதில் அடங்கியிருந்தது. அவர்களின் முகவரி எமது வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தது.
எலி இலவசமா? அதற்கான மருந்து இலவசமா?
விளம்பரத்தை எடுத்துக் கொண்டு டேவிட் வீடு சென்றேன். வீட்டை விட்டுப் புறம்படும்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். அடுக்கி வைத்த பத்துப் பொறிகளில் ஒன்றினைக் காணவில்லை. இருவரும் அந்த முகவரி தேடிப் போனோம். அவரின் வீடு பொலிசாரினால் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் முன்னால் ‘Mark – Pest Control Expert’ என்று ஒரு பலகையில் எழுதி இருந்தது. அதற்குக் கீழே ‘யாரும் உள்ளே போக வேண்டாம்’ என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி இருந்தது. நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் எங்களை நோக்கி வந்தார்.
|இந்த வீட்டு மனிதர் சில பிராணிகளை தந்திரமாக றெயினிங் எல்லாம் குடுத்து வளர்த்து வருகின்றார். இரவில் அவற்றைக் கொண்டு போய் வீடுகளில் விட்டு விடுகின்றார். பகலில் அவற்றிற்கான மருந்துகளை விற்கின்றார். இப்ப சரியான றிச்சன் பீரியட் (Recession period) எண்டதாலை இந்த வேலைகளைச் செய்கின்றார்| என்றார் அந்த மனிதர்.

Series Navigationநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10மூன்றாம் குரங்கு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *