அமராவதிக்குப் போயிருந்தேன்

This entry is part 15 of 23 in the series 21 ஜூன் 2015

சுப்ரபாரதிமணியன்

அமராவதிக்குப் போயிருந்தேன் அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில் ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு பெற்ற ஆசிரியை, ஹோமியோ மருத்துவர், சுயமுன்னேற்ற நூலகளை எழுதிவருபவர்- தாராபுரம் சென்றேன். நண்பர் குள்ளாளக்காளி பாளையம் பாலசுப்ரமணியம் அவர்களுடன் சென்றேன். தாராபுரம் அவ்வளவு அழுக்கிலாத, அவ்வளவு குப்பையில்லாத நகரம்( உடுமலையிலிருந்து எங்காவது கிளம்பி வந்து விடத் தோன்றும் போதெல்லாம் நான் வருவது தாராபுரம்தான் என்பார் ஆனந்த விகடன், பசுமை விகடன் நிருபர் ஜி.பழனிச்சாமி என்கிற ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ) என்ற பெருமையுடன் அமராவதி பகுதியில் அமராவதி தெளிந்த நீராய் ஒடும். கையில் அள்ளிக்குடிக்கலாம் என்பார் பாலு. அவர் சொல்வது வாஸ்தவம்தான். முன்பு பல முறை சாயப்பட்டறைகள் தாராபுரம் இருக்கும் அமராவதி ஆற்றின் கரையில் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போது ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் அவை தவிர்க்கப்பட்டிருக்கிறன. சுண்ணாம்புக்காட்டில் இருக்கும் தடுப்பணையில் நீர் பொங்கி வழிகிறது. மாணவர்கள் நீச்சலடித்து மகிழ்கிறார்கள்.ஈஸ்வரன் கோவில் பகுதியில் நீர்த்தடமாய் தண்ணீர் தென்படுகிறது. அகலமான, அந்தஸ்தான நதி அமராவதிதான். தாராபுரம் பகுதியில் மணற்கொள்ளையால் அது ஜீவன் இழந்து விட்டது. ஆனால் அங்கிருந்து 50 கி.மீ தள்ளிப்போனால் அதன் கதியே வேறுதான். திருமூர்த்தி மலையில் உருவாகி குளித்தலைக்கு அருகிலுள்ள மாயனூரில் காவிரியில் கலக்கிறது அமராவதி. தாராபுரம் போலவே அரவக்குறிச்சி, கரூர் தாலூக்கா விவசாயத்திற்கும் வீட்டுப்பய்ன்பாட்டிற்கும் அம்ராவதி பயன்படுகிறது. ஆனால் கரூர் சாயக் கழிவால் சுக்காலியூர் முதல் ராயனூர் வரை விவசாயம் கெட்டு விட்டது. அமராவதி நதி நெடுக 29 கி.மி நீளத்திற்கு இருக்கும் சாய்ப்பட்டறைகளால் நிலத்தடி நீரும் அமராவாவதியும் நஞ்சாகி விட்டது.வயலில் உப்பு படர்ந்து விடுகிறது. மீன்கள் செத்து விடுகின்றன. ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை நெல் விளைந்த இடத்தில் 19 மூட்டை கிடைப்பதே அபூர்வம். மாடுகள்., கன்னுகள் குடிக்கக் கூட அருகதையற்றது அப்பகுதியில் அமராவதி நீர். உடல் நோய்களும் சாதாரணம். அமராவதி பகுதியில் அமராவதி அமரத்துவம் பெறக்காரணம் மண்ற்கொள்ளைதான். இந்திரா( இன்றைய அகில இந்திய காங்கிரசின் மகளிர் பிரிவு தேசிய செயலாளர்) மணற்கொள்ளை பற்றி எடுத்த முயற்சிகள் தோற்றுப் போய் அதை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு சிறுகதைத் தொகுதி , ஒரு நாவல் , ஒர் கட்டுரைத் தொகுதி என்று எழுதி வெளியிட்டவர் அரசியலில் மூழ்கிவிட்டார். 9 ஆண்டுகளுக்கு முன் சங்கராண்டாம் பாளையம் பகுதி அமராவதி கரை மனலில் உட்கார்ந்து இந்திரா மணற் கொள்ளை பற்றி விவரித்தது இன்னும் நினைவில் உள்ளது.. ஸ்ரீராம், க.சீ. சிவகுமார், முருகானந்தம், பாலு என்று அவருடன் அமர்ந்து அமராவதி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அன்று கடை மடைக்கு தண்ணீர் போகாத அரசியல் பற்றி ஸ்ரீராம் சொன்னார். இன்றும் மழை, வெள்ள காலங்களிலும் கூட கடை மடைக்கு தண்ணீர் போகாத பிரச்சினை இருக்கிறது என்கிறார் பாலு.. பிரதான சாலை ஓரத்து வயல்களில் வாத்துக்கள் நீரில் முகத்தை அழுத்திக்கொண்டு இரையும், பூச்சிகளும் தேடிக் கொண்டிருக்கின்றன, இரு புற வயல்கள், நடுவில் பாதை அழகாகவே அமைந்திருக்கிறது. பாண்டவர் வந்து தங்கி ஓய்வெடுத்த அம்மன் கோவில் இன்றைக்கும் பல நல்ல காரியங்களுக்கு முக்கிய இடமாக உள்ளது.எஸ்விராஜதுரை, தியோடர் பாஸ்கரன், சிருஷ்ங்கினி, சரஸ்வதி ராம்நாதி போன்ற எழுத்தாளர்களின் சொந்த பூமியாகவும் இது உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளில் மாடுகள் வளர்ப்பில் கட்டுப்பாடு , மாட்டிறச்சி தடை என்று பல ரூபங்களில் மாடுகளின் பிரச்சினை தென்படுகிறது. அமராவதி நீரை மாடுகளுக்குக் கொடுக்க முடியவில்லை. சாணியில் ரத்தமும் கலந்து வரும் அபாயம். சினை பிடிக்க பெரும் சிரம்ப்பட வேண்டியிருக்கிறது. தொடர்ந்து முயற்சிகள் செய்தால் ஒரு ஆண்டில் பலன்கிடைக்கலாம். அதுவும் பலமுறை தோல்விதான். சினை பிடிக்காத காரணத்தாலே 20,000 ரூபாய் மதிப்புள்ள மாடுகள் மூவாயிரம் ரூபாய்க்கு இறைச்சிக்காக விலை போகின்றன. அமராவதியை ஒட்டகத்தில் கடக்கலாம் என்றும் சொல்லக் கூடிய அளவில் வறண்டு வருகிறது. தாராபுரம் பகுதில் அது தண்ணீர் தடத்துடன் காணப்படுவது தாராபுரம் மக்களுக்கு பல விதங்களில் ஆறுதல் தருகிற விசயமாகும். அமராவதி அணை கட்டப்பட்டபோது, ஆண்டுக்கு மூன்று முறை அணை நிரம்பும், 10 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் குறைந்து கொண்டே வருவதால், ஒரு முறை அணை நிரம்புவதே பெரும்பாடாக உள்ளது. இந்த அணை காரணமாக உடுமலை வட்டத்தில் உள்ள தலைமடை பகுதியில் 25 கி.மீ. தொலைவுக்கு ஆறு மாதங்களுக்கு மட்டும் நீர்வசதி கிடைக்கிறது. எஞ்சிய 125 கி.மீ. பகுதிகளில் வறட்சிதான் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளது. கோடை காலத்தில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி,காலங்காலமாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் உயிரினங்களும் நீரின்றி செத்து மடியும் அவலமும் தொடர்கிறது.

சமீபத்தில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதில் சமீபத்திய சர்ச்சைகள் தொடர்கின்றன. பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு காவிரி ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை, மத்திய மின்வாரியம்,தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதியைப் பெற வேண்டும், ஆனால் இவை பின்பற்றாமல் கேரள அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு, நில அளவை, நில ஆய்வுப் பணிகளை “முல்லைப் பெரியாறு பாணி”யிலேயே நடத்தி வருகிறது அணை கட்டும் முயற்சியிலேயேஎ இருக்கிறது. வைகோ போன்றவர்களின் தொடர்ந்த போராட்டங்கள் அந்த முயற்சிஅயை மந்தப்படுத்தி வருகின்றன.

பாம்பாற்றின் குறுக்கே கட்டும் அணையால் கிடைக்கும் கூடுதல் நீரை பயன்படுத்தும் உரிமையை கேரள அரசு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமராவதி பாசன விவசாயிகள் கருதுகிறார்கள்.. திட்டம் நிறைவேறும் காலத்தில் அமராவதி பகுதியில் விவசாயம் மட்டுமின்றி, கரூர்,திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருக்கும் அமராவதி அணையின் நீரை முழுக்க இழக்க வேண்டிய பெரிய சிக்கலும் இருக்கிறது.

Kanavu, 8/2635, Pandian nagar, Tiruppir 641 602 ( ph. 9486101003 )

Series Navigationபுகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.பா. ராமமூர்த்தி கவிதைகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *