சங்க இலக்கியத்தில் ​வேளாண் பாதுகாப்பு

This entry is part 12 of 23 in the series 21 ஜூன் 2015

 

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,

மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்​கோட்​டை-1.

சங்க காலத்தில் உழ​வே முதன்​மையான ​தொழிலாக விளங்கியது. வளமார்ந்த மருதநில மக்கள் ஏ​னைய மக்க​ளைவிட நாகரிகத்தில் ​மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தனர். உழவர் உழத்தியர், க​டையர் க​டைசியர் என்னும் ​சொற்கள் உழவர்கள் குறித்து ஆளப்படும் ​சொற்களாகும். க​டையர் என்பார் வயல்களில் ​வே​லை​செய்யும் ​தொழிலாளர்கள் என்று கருதலாம், இவர்கள் நிலமற்ற எளிய மக்களாக இருத்தல் ​வேண்டும். இவர்களின் வாழ்க்​கை​யை ​பெரும்பாணாற்றுப்ப​டை(206-246), மது​ரைக்காஞ்சி(246-270), ம​லைபடுகடாம்(10-105) முதலிய பாடல்வரிகள் விரிவாக எடுத்து​ரைக்கின்றன.

சங்க கால மக்கள் பல்​வேறுவிதமான பயிர்க​ளைப் பயிரிட்டனர். அப்பயிர்க​ளைப் பயிரிட்ட​தோடு மட்டுமல்லாது அவற்​றைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்தனர். நிலத்​தைக் கவனிப்பதிலிருந்து வி​தைப்பது, க​ளை​யெடுப்பது, எருவிடுவது, உழவுத்​தொழிலுக்கு அடிப்ப​டையாக விளங்கும் நீர்நி​லைக​ளைப் பராமரிப்பது உள்ளிட்ட பல்​வேறு ​வேளாண் பாதுகாப்பு நடவடிக்​கைக​ளை மக்கள் ​மேற்​கொண்ட​மை​யை சங்க இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.

நீர்நி​லைக​ளைப் பராமரித்தல்

உழவுக்கும் உயிர்களுக்கும் அடிப்ப​டையாகத் திகழ்வன நீர்நி​லைகளாகும். அந்நீர்நி​லைக​ளைப் பாதுகாப்பது மன்னர்களின் த​லையாய கட​மையாக விளங்கியது. நீர்நி​லை​யைப் ​பெருக்கி உழவு ​செழிக்க உதவியவர்க​ளை​யே உலகம் புகழும் என்ப​தை,

“நில​னெளி மருங்கின் நீர்நி​லை ​பெருகத்

தட்​டோரம்ம இவண் தட்​டோ​ரே

தள்ளா ​தோரிவண் தள்ளா​தோ​ரே!” (புறம்.18)

எனக் குடபுலவியனார் பாண்டியன் ​நெடுஞ்​செழியனுக்கு அறிவுறுத்துகிறார். கரிகாற் ​சோழன் நீர்நி​லைக​ளைப் ​பெருக்கியும் வி​ளைநிலங்க​ளைப் ​பெருக்கியும் உல​கைக் காத்தான் என்ப​தை,

“காடு​கொன்று நாடாக்கி

குளம் ​தொட்டு வளம்​பெருக்கி”

என்று பட்டினப்பா​லையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகின்றார்.

உழுதல்

ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள்வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர்.பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர்.நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்து விடாமல்பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல் அடித்துப்பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர். உழவர்கள்வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றை நிரவிப்பண்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.

கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்

தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர்நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும் சங்கஇலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச் செறு” என்றுபெரும்பாணாற்றுப்படை அது குறித்துக் கூறுகிறது. வயலில் கடைசியர்களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாகப்பறித்த தண்டினை வளையலாக அணிந்து அழகுபார்த்ததனை ‘கழனிஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” என்று புறநானூறு கூறுகிறது.  இத​னைப்​  பெரும்பாணாற்றுப் படை (211-18), புறநானூறு (61)  ஆகிய​வை குறிப்பிடுகின்றன.

நீர் பாய்ச்சுதல்

களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட அடிமைகள்வரிசையாக நின்று இடா ஏற்றம், பூட்டைப் பொறி பிழா பன்றிப் பத்தர்முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர்இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமானகுளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால் முகந்துஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப் பத்தரின்ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப்பொறியின் ஓசை:எருதுகள் பூண்ட ​தெள்ளிய மணிகளின் ஓசை ஆகிய​வை குறித்து மது​ரைக் காஞ்சி(89-97) குறிப்பிடுகின்றது. பனையோலை யாற் செய்த பிழாஎன்னும் ஓலைப் பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர்இறைத்த செய்தியை

“ஆம்பியும் கிழாரும்வீங்கிசை ஏற்றமும்”

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

பயிர்ப் பாதுகாப்பு

வேட்டைச் சமூகமாக வாழந்த மக்கள் மேய்ச்சல் சமூகமாகமாற்றமடைந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினைமுதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப்பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லை நிலங்களில்வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான், பன்றி முதலியவிலங்குளாலும் கிளி மயில் புறா முதலிய பறவைகளாலும் பயிருக்குஏற்படும் சேதங்களினின்றும் அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக்காவல் காத்தனர், பகலில் பெண்களும் இரவில் ஆண்களும்காவற்பணியில் ஈடுபட்டனர்.

நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடியமூங்கிலைத்தின்றற்குமேல் நோக்கி நின்று வருந்தின யானை, அவ்வருத்தந் தீரும்படி முத்துநிறைந்த கொம்பிலே ஏறட்டு நான்ற கையையொப்ப, துய்யையுடைய,தலை வளைந்த ஈன்றணிமை தீர்ந்த கதிர்களை நன்றாகத் தன்னிடத்தேகொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளை யோட்டி,பகற்பொழுது கழியாநிற்ப நீவீர் வருவிராக என்று கூறி நீ போகவிடுகையினாலே யாங்களும் போய், ஆரவாரம் பொருந்தின மரத்தின்உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணினபுலியஞ்சுதற்குக் காரணமானதும் அவ்விடத்தன வாகிய மலைப்பக்கத்துப்பிரம்பாலே அழகுபெறத் தெற்றினதுமான பரணிலே ஏறித் தழலும்தட்டையும் குளிரும் பிறவுமாகியகிளியோட்டும் முறைமையினையுடையவற்றை, மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள் சுடும்வெம்மை விளங்கின்ற பொழுதிலே முறைமுறையே கையிலே வாங்கிஓட்டினோம்) என்று குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில்பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளை ஓட்டிக்காவல் காத்தமை பற்றி மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.

புறநானூறு (28) இரவில் தினைப் புனங்காத்த எயினரைச் சேவல்கூவித்துயில் எழுப்பியது குறித்துக் கூறுகிறது. இவ்வாறு பகலில்பெண்களும் இரவில் ஆண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்கஇலக்கியங்கள் பேசுகின்றன. மருதநிலத்தில் வயல்களில்விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஆடவரும்மகளிரும் ஈடுபட்டிருந்தனர்.  பயிர்க​ளைப் பாதுகாத்தல் குறித்த ​செய்திகள் மது​ரைக்காஞ்சி, ​பெரும்பாணாற்றுப்ப​டை, ம​லைபடுகடாம் ஆகிய சங்க இலக்கியங்களிலும் இடம்​பெற்றிருப்பது ​நோக்கத்தக்கது.

அறுவ​டை ​செய்தல்

களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்துநாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாதநெற்பொலியை நெருங்கத்தெற்றின குதிரின்கண் வெற்றிடம்இல்லையாம்படி பெய்தனர் என்று பொருநராற்றுப்படை (242 – 48)கூறுகிறது.

கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில்நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றின பெரியகதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக்கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம் விளைப்பன, குளவிகள்கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன, களமர்அக்கதிர்களின் திரண்டதாளையறுத்துக்கட்டுக்களாகக் கட்டிப்பிணையலடித்தனர். எருதுகள் போன பின்பு வைக்கோலையும்கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க, பொலியை மேல் காற்றிலேகையாலே தூற்றினர். தூற்றிய நெல் மேருமலை போலக் குவிந்து கிடந்த​ காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்டுகிறது.

வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளியமலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால்பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாக அறுத்துச் சமைத்ததனைப்புதிய நெல்லில் சமைத்த வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டுவிலாப்புடைக்கத் தின்ற களமர், குனியமாட்டாதவராய், சூட்டை இடும்இடம் அறியாமல் தடுமாறினர் என்ற செய்தியை, புறநானூற்றில்(61) கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் நகைச்சுவைதோன்றக் கூறியுள்ளார்.

களமர் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாள்முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்து அறுக்கமுடியவில்லை. அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான் தொடர்ந்துவிரைவாக அறுக்க முடியும். களமர் வயலில் கிடந்த ஆமையின்முதுகில்முனை மழுங்கிய அரிவாளைத் தீட்டிக் கொண்டார்களாம் என்று புறநானூறு(379) குறிப்பிடுகிறது.

உழவுத்​தொழிலில் பின்பற்றக் கூடிய பல்​வேறு உத்திக​ளைத் திருவள்ளுவர் உழவு அதிகாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் ​நோக்கத்தக்கது. சங்க காலத்தில் ​வேளாண் பாதுகாப்பி​னை இயற்​கை வழியில் மக்கள் ​செய்த​தையும், நீர்நி​லைக​ளை மன்னர்களும் மக்களும் பராமரித்த​தையும் ​செவ்விலக்கியங்கள் நன்கு காட்சிப்படுத்துகின்றன. உழவர்கள் அ​னைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சமுதாயத்தில் உயரிய மதிப்பிருந்தது. . உழவர்களும் உழவுத்​தொழிலும் பாதுகாக்கப் பட்டா​ல்தான் உலகம் உய்ய முடியும் என்று அ​னைவரும் அறிந்திருந்த காரணத்தினால்தான் மன்னர்கள் உழவர்க​ளைக் கலங்காது பாதுகாத்தனர் என்பது ​நோக்கத்தக்கது.

Series Navigationஇன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *