தொடுவானம் 73. இன்பச் சுற்றுலா

This entry is part 4 of 23 in the series 21 ஜூன் 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

அண்ணன் பேருந்துக்குள் எழுந்தது தெரிந்தது. அதை வெளியிலிருந்தவர்களும் பார்த்திருப்பார்கள். ஆனால் அப்போது அந்த அதிசயம் நடந்தது.
திடீரென்று அவருக்கு முன் இருக்கைகளிலிருந்து எழுந்த பத்து காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு திமுதிமுவென்று இறங்கினர். அவர்களைக் கண்ட கூட்டம் சிதறி ஓடியது. காவலர்கள் அவர்களை துரத்திக்கொண்டு ஓடினார்கள்.அதைத் தொடர்ந்து அண்ணன் இறங்கினார். அவரைப் பின்தொடர்ந்து இன்னும் சில அரசியல் பிரமுகர்கள்போல் ( வேட்டி அணிந்திருந்தனர் ) காணப்பட்டவர்கள் இறங்கினார்கள்.
” யாரடா எங்க ஊர் வாத்தியாரை அடிக்க காத்திருந்தது? அவர் மேல கை வச்சு பாருங்கடா! அப்புறம் என்ன ஆகும்ணு தெரியும்.. எங்க ஊரு காரங்க திரண்டு வந்தா நீங்க என்ன ஆவீங்க தெரியுமா? ” அவர்தான் .நாகலூர் ஊர்த்தலைவர்.
கூட்டத்தினரை துரத்தி அடித்துவிட்டு காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முடியனூர் தலைவரையும் இன்னும் சில உள்ளூர்வாசிகளையும் அழைத்து விசாரித்தனர். அவர்கள் அண்ணன் எப்படி கடைக்காரரை அடிக்கலாம் என்று வாதிட்டனர்.
” ஒங்க ஊர் புள்ளைகளுக்கு படிப்பு சொல்லி குடுக்க வந்த டீச்சருக்கு நீங்க என்னடா மரியாதை குடுத்திங்க? அதுக்கு அடிக்காம வேறு என்னடா பண்ணுவாங்க? ” நாகலூர் தலைவர் ஆவேசமானார்.
இருபுறமும் மாறி மாறி கத்தியபிறகு ஒருவாறு கூச்சலும் குழப்பமும் ஓய்ந்தது கூட்டம் கலைந்து சென்றது. அண்ணனுடன் காவலர்களும் நாகலூரிலிருந்து வந்தவர்களும் வீடு வரை வந்தனர். நானும் பின் தொடர்ந்தேன். அனைவருக்கும் தேநீர் பரிமாறினோம். நாகலூருக்கு கடைசி பேருந்து வரும் நேரம் பார்த்து காவலரும் வேறு சிலரும் விடைபெற்றனர்.தலைவரும் அவருடன் இருவரும் திரும்பவில்லை. அவர்கள் காலையில் போவதாகச் சொன்னார்கள். இரவில் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்புக்கு இருந்தனர். இரவு உணவுக்குப்பின் அண்ணனுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். நானும் அப்போது அவர்களுடன் இருந்தேன்.
ஊர் மக்களை மிரட்டி சமாதானம் செய்துவிட்டார்கள். அனால் அது எத்தனை நாள் நீடிக்கும். என்ன இருந்தாலும் அவர்களுக்கு பெருத்த அவமானம்தானே. இப்படி ஒரு ஊரையே பகைத்துக்கொண்டு எப்படி இங்கேயே குடியிருப்பது? எத்தனை நாட்களுக்கு நாகலூர் தலைவரும் அவரது நண்பர்களும் இப்படி பாதுகாப்பு தரமுடியும்?
அண்ணனை நாகலூருக்கு குடிவந்துவிடச் சொன்னார்கள். ஆனால் அப்படி செய்தால் அண்ணி தனியாக முடியனூருக்கு வர வேண்டிவரும். அது இன்னும் ஆபத்தானது. இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணாமல் அண்ணியை இங்கே தனியே விட்டுவிட்டு அண்ணன் வேலைக்கும் செல்ல முடியாது. அண்ணி பள்ளிக்கு சென்றாக வேண்டும். அப்போது மீண்டும் அசம்பாவிதம் உண்டாகலாம். ஊர் மக்களை நம்ப முடியாது என்றார். இங்கு மனிதாபிமானம், நீதி, நேர்மை எல்லாம் சாதி வெறி முன் தோற்றுப்போகும் என்றார்.
நாகலூர் தலைவர் பாதுகாப்பு தர இங்கேயே தங்கவும் முடியாது. ஆதலால் அவர் இங்கு தொடர்ந்து வேலையில் இருப்பது நல்லதல்ல என்று கூறிவிட்டார். உடன் இருவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு வேறு ஊருக்கு மாற்றலாகிப் போவதே நல்லது என்றார். அதற்கு வேண்டுமானால் நாகலூர் காவல் நிலையத்திலிருந்து கடிதம் வாங்கித் தருவதாகவும் கூறினார். எனக்கு அவர் கூறுவது சரி எனப்பட்டது. அண்ணனும் சம்மதம் தெரிவித்தார். இருவரும் நாளையே நீண்ட விடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அன்று இரவு அவர்கள் திண்ணையில் படுத்துத் தூங்கினர்.
மறுநாள் நாங்கள் மூவரும் திருச்சி புறப்பட்டோம்.
அண்ணன் ” தரங்கைவாசம் ” சென்று பேராயரைச் சந்தித்து திருச்சபைப் பள்ளியில் சேர விரும்புவதாகத் தெரிவித்தார். அண்ணன் பட்டதாரி ஆசிரியர். அண்ணன் அண்ணியை திருச்சபையில் பணிபுரிய மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பேராயர். விண்ணப்பம் தந்துவிட்டுப் போகச் சொன்னார். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். எனக்கு மருத்துவக் கல்லூரியில் திருச்சபையின் சார்பில் இடம் கிடைத்துள்ளதற்கு நன்றி கூறினேன். அவர் என்னை வெகுவாக வாழ்த்தியதோடு எனக்காக ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். அது மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. அண்ணன் அண்ணிக்குக்கூட கடவுளின் அழைப்பு வந்தள்ளது தெரிந்தது.
அண்ணனும் அண்ணியும் திருச்சியிலேயே தங்கிவிட்டனர். நான் அங்கிருந்து நேராக வேலூருக்கு திருப்பதி துரித பிரயாணி புகைவண்டி மூலம் கல்லூரிக்குப் புறப்பட்டேன்.
புது உற்சாகத்துடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். வகுப்புகள் வழக்கம்போல் நடந்துகொண்டிருந்தன.
Sathanur Dam1 ஒரு நாள் இரவு எங்களுடைய வகுப்பு கூட்டம் நடத்தினோம். அது கல்லூரி மண்டபத்தில் நடந்தது. அதில் வகுப்பு மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது சுற்றுலா செல்ல முடிவு செய்தோம். நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் சாத்தனூர் ஆணை. அதற்கான நாள் குறித்தோம். அதை சிறப்பாக ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் தந்தோம். அதில் கணேஷ் கோபாலக்கிருஷ்ணன், பாலாஜி நாயுடு, ஏபல் ஆறுமுகம், ஜேக்கப் கோருளா, மீரா நரசிம்மன், அல்க்கா சின்ஹா ஆகியோர் இடம் பெற்றனர்.
Sathanur Dam3 சாத்தனூர் அணை திருவண்ணாமலையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அது சின்னகேசவ மலைகளில் தென்பெண்ணை நதியின் குறுக்கே 1958 ஆம் வருடம் கட்டப்பட்ட புதிய அணை. அங்கு அழகான சோலைகளும் பூங்காக்களும் உருவாக்கப்பட்டிருந்தன. அது இவ்வட்டாரத்தின் சுற்றுலாத் தளமாக மாறியது. தமிழ்த் திரைப்படங்களின் காதல் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள்கூட அங்கு நடைபெற்றன.
சுற்றுலா செல்லும் ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. பேருந்து பற்றிய கவலை இல்லை. கல்லூரி பேருந்து உள்ளது.ஓட்டுனர் தனபால் சாத்தனூர் அணையின் சிறப்பு பற்றி நிறைய கூறினார்.
நாங்கள் அங்கு தேவையான மதிய உணவை விடுதி உணவுக்கூடத்தில் தயார் செய்துகொண்டோம். தின்பண்டங்களும் குடிக்க போதுமான குளிர் பானங்களும் வாங்கிக்கொண்டோம்.
அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். பேருந்து திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டது. நாங்கள் கைதட்டி பாடல்கள் பாடிக்கொண்டு உல்லாசமாக பிரயாணம் செய்தோம். அது மறக்கமுடியாத அனுபவம். சுமார் ஒரு மணி நேரத்தில் திருவண்ணாமலை வந்துவிட்டோம். அங்கிருந்து தண்டராம்பேட்டை தாலுக்காவில் இருந்த சாத்தனூர் சென்றோம்.
Sathanur Dam2 அழகிய சோலைவனத்துக்குள் சென்று பேருந்து நின்றது. வெள்ளை நிறத்தில் பளிச்சிட்ட பிரம்மாண்டமான் சாத்தனூர் ஆணை வானுயர்ந்து நின்ற எழில் கோலம் கண்டு வியந்துபோனேன். நானும் பெஞ்சமினும் ஓடிச்சென்று படிகளில் ஏறி மேலே சென்றோம். அங்கே கண்ணுக்கெட்டிய தொலைவு வரை கடல் போன்று பறந்து விரிந்து நீண்டு காணப்பட்டது அமர்ந்த நீர்த்தேக்கம்! தொலைவில் சின்னகேசவ மலைகள் அணை நீரை அணைத்தவண்ணம் அமைதியாக காட்சி தந்தன. கீழே சோலையிலும் மேலே நீர்த் தேக்கத்திலும் பல்வேறு பறவை இனங்கள் சிறகடித்துப் பறந்து குதூகல ஆரவாரத்துடன் கீச்சிட்டுக் குரல் எழுப்பின. அங்கு காணும் அனைத்துமே கண்களுக்கு விருந்தாக அமைந்தன – வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வண்ணத்துப் பூச்சிகள் போன்று தவழ்ந்து வரும் என் வகுப்பு மாணவிகள் உட்பட!
அனைவரும் மேலே ஏறி வந்ததும் அங்கு நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். பின்பு கீழே இறங்கி மரங்களின் நிழலில் புல்தரையில் அமர்ந்து சிற்றுண்டி உட்கொண்டு சூடாகவே இருந்த காப்பி குடித்தோம். அதன்பின்பு சில விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.பாடல்கள் பாடினோம். ஆட்டங்கள் ஆடினோம். தனியாகவும் ஜோடியாகவும், கூட்டமாகவும் அணையின் வெவ்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். வகுப்பில் சில காதல் ஜோடிகள் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அன்று ஜாலிதான். பசுமையான சோலைக்குள் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமிதிலாவிலாஸ்-23தூக்கத்தில் தொலைத்தவை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *