மிதிலாவிலாஸ்-23

This entry is part 3 of 23 in the series 21 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

sulochanaraniமறுநாள்..
மைதிலி விழித்துக் கொண்டதும் பழகிவிட்டச் செயல் போல் அபிஜித்தின் தலை மீது கையை வைப்பதற்காக கையை நீட்டினாள். அவன் தலையோ, முகமோ கையில் தட்டுப்படவில்லை. மைதிலி தலையை திருப்பிப் பார்த்தாள். அபிஜித் படுக்கையில் இல்லை. தலையணையில் ஒரு காகிதத்தில் குறிப்பு இருந்தது. மைதிலி அதை எடுத்துப் பார்த்தாள். அதில் இப்படி இருந்தது.
“சாரி டியர், நான் ஊருக்கு போகாமல் முடியாது. இரவுக்குள் திரும்பி விடுவேன். ஜுரம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. மருந்துகளை கையோடு எடுத்துப் போகிறேன். நீ இன்றைக்கு சாப்பிடவில்லை என்றால் வேலையிலிருந்து நீக்கி விடுவதாக ராஜம்மாவை மிரட்டி இருக்கிறேன். நிம்மதியாக ஓயவு எடுத்துக் கொள். சிங்கபூருக்கு கிளம்புவதற்கு இன்னும் இருபத்தினாங்கு மணிநேரம்தான் இருக்கிறது.”
அந்த குறிப்பைப் படித்ததும் மைதிலி தலையைப் பிடித்துக் கொண்டாள். தன்னை எழுப்பினால் வேண்டாம் என்று சொல்லுவாள் என்று எழுப்பாமலேயே போய்விட்டான். விடியற்காலை நேரத்தில் மைதிலி உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தாள்.
மைதிலி கட்டில்மீது எழுந்து உட்கார்ந்து கொண்டாள் பேனாவால் வட்டம் போட்டிருந்த அந்த தேதி அவளை குசலம் விசாரிப்பது போல் இருந்தது. மைதிலி ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். மறுநிமிடம் இதழ்களில் முறுவல் விரிந்தது.
இன்று சித்தார்த்தாவின் பிறந்தநாள். மைதிலி கட்டிலை விட்டு இறங்கினாள். காலெண்டர் அருகில் வந்தாள். அந்த தேதியை விரல்களால் தொட்டாள். தலையை காலெண்டர் மீது வைத்து கண்களை மூடிக் கொண்டாள். இத்தனை வருடங்களாக இந்த தேதி தன் மனதை வெறுமையான தொட்டிலாக ஆட்டிவிட்டு போய்விடும். இன்று! மைதிலியின் கண்களில் சந்தோஷத்தால் ஈரம் கசிந்தது. குழந்தைகளே பிறக்காத தனக்கு, பதினெட்டு வயது பருவத்தில் தன் வயிற்றில் துளிர்த்து, இயற்கையில் கலந்து விட்ட மொட்டை அவ்வப்போழுந்து நினைத்துப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
மைதிலி அங்கிருந்து ஆபீஸ் அறைக்குள் சென்றாள். இந்த வீட்டை கட்டும் போது அபிஜித் படுக்கை அறைக்கு பக்கத்தில் இந்த அறையை ஏற்பாடு செய்து அதை தனிப்பட்ட முறையில் அழகுப் படுத்தினான். ஆரம்பத்தில் இருவரும் இந்த அறைக்கு வந்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருப்பார்கள். நாட்கள் செல்ல செல்ல அபிஜித் வருவதை நிறுத்தி விட்டான். அவன் மனதைப் புரிந்து கொண்ட மைதிலி அந்த அறையை ஸ்டடீ அறையாக மாற்றிவிட்டாள்.
ஒரு நாள் அவன் வந்த போது அந்த அறை ஸ்டடீ அறையாக, வர்கிங் பிளேஸ் ஆக மாறிவிட்டிருந்தது.
“எதற்காக இப்படி மாற்றினாய்?” என்று கேட்டான் அவன்.
மைதிலி பதில் சொல்லவில்லை. அவன் மறுபடியும் அந்த பிரஸ்தாபனையை ஒருநாளும் கொண்டுவரவில்லை.
மைதிலி அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டார்? அவர் செய்த தவறு இப்போது மூவரின் உயிரை சித்திர வதை செய்யப் போகிறது.
பத்து மணி ஆனதும் மைதிலி வீட்டை விட்டு கிளம்பினாள். அவள் வீட்டை விட்டு சீக்கிரமாக வெளியேற துடித்தாலும் தாமதம் ஆகிவிட்டது. கோ ஆபரேடிவ் சொசைடி காரர்கள், மாதர் சங்கம் அமைப்பினர் வந்தார்கள். தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. மைதிலி அவசர அவசரமாக கிளம்பிப் போய்க்கொண்டிருந்த போது பின்னாலிருந்து ராஜம்மா ஓடி வந்தாள்.
“அம்மா! டைனிங் டேபிள் மீது டிபன் வைத்திருக்கிறேன்.”
“எனக்கு பசி இல்லை ராஜம்மா.”
“அம்மாடியோவ்! என் குடி மூழ்கி விடும். அய்யா என்னைக் கொன்று போட்டு விடுவார்.”
“நான் இப்போதே வந்து விடுகிறேன் ராஜம்மா!” மைதிலி வெளியில் வந்து விட்டாள். அவள் மனம் பஞ்சவர்ண கிளியாய் பறந்து கொண்டிருந்தது.
******
மைதிலி சித்தார்த்தாவின் அறையை வண்ணக் காகிதங்களால், பலூன்களால் அலங்கரித்தாள். சின்னா சின்னச் சின்னக் கையால் அவளுக்கு உதவி செய்துகொண்டே அந்த அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அறையின் அலங்காரம் முடிந்து விட்டது. மைதிலி ஒரு முறை சந்தோஷமாக கண்ணால் பார்த்துக் கொண்டாள். காலையில் மைதிலி வரும் போது அன்னம்மா பாத்திரங்களை பரபரவென்று தேய்த்துக் கொண்டிருந்தாள். சித்தூ எங்கே என்று கேட்ட போது, “யாருக்கு தெரியும். காலையில் கூச்சல் போட்டு விட்டு எங்கேயோ போய் விட்டான். அவன் பெட்டியில் அவன் அப்பாவின் போட்டோ இல்லையாம். ஒரே ரகளை! அது யாருக்கு வேண்டும்? பழைய போட்டோ. எங்கே வைத்து மறந்து விட்டானோ? வாய் திறந்து பேசவே மாட்டான். கோபம் வந்தால் மட்டும் கூரை பறந்து போய் விடும் அளவுக்குக் கத்துவான்.”
மைதிலி வாயைத் திறந்து ஏதோ சொல்லப் போனாள். ஆனால் உடனே அவள் இதழ்கள் மௌனமாகி விட்டன. நேராக சித்தார்த்தாவின் அறைக்கு வந்து விட்டாள்.
பாத்திரங்களை உள்ளே வைத்துவிட்டு பழைய புடவைக்காக சித்தூவின் அறைக்குள் வந்த அன்னம்மா அந்த அறையின் அலங்காரத்தைப் பார்த்து திகைத்து விட்டாள்.
“இதெல்லாம் என்ன?” என்றாள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே.
“இன்றைக்கு சித்தார்த்தாவின் பிறந்த நாள். உங்களுக்கு தெரியாதா?” என்றாள்.
“பிறந்த நாளா?” கன்னத்தை அழுத்திக் கொண்டாள். “அவன் பிறந்த நாள் எப்போ என்று எனக்கு தெரியாது. அவனுக்கும் தெரியாது. உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.
“எனக்குத் தெரியும்” என்றாள் மைதிலி சந்தோஷமாக. “என் ஒருத்திக்கு மட்டும் தான் தெரியும்.” மார்பின்மீது கையை வைத்துக் கொண்டே சொன்னாள்.
அதற்குள் சித்தார்த்தா வந்து விட்டான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வந்தவன் போல் களைப்புடன் தென்பட்டான்.
காலை நேரத்தில் வந்திருந்த மைதிலியைப் பார்த்து திகைத்துப் போனான்.
ஏற்கனவே கார் வந்து விட்டது என்று தான் காவல் வைத்திருந்த பையன் சொன்ன தகவல் கேட்டதும், குளித்து முடித்து வெளியே வந்த ஜெயா தலையைக் கூடப் பின்னிக் கொள்ளாமல் அப்படியே வந்து விட்டாள். சித்தூவின் பின்னால் அவளும் வந்து நின்றாள்.
சித்தார்த்தாவை பார்த்ததும் மைதிலி அருகில் வந்தாள். அவன் கையைப் பற்றிக் கொண்டு, “ஹெபி பர்த்டே சித்தூ! மேனி.. மேனி…” அவள் வாயில் வார்த்தை வரவில்லை. இதழ்களை இறுக்கி சந்தோஷமும், துக்கமும் கலந்து வெளியேறிக் கொண்டிருந்த கண்ணீரை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்தினாள்.
சித்தார்த்தா கையை விடுவித்துக் கொள்ளப் போனான். சாத்தியப் படவில்லை. சும்மா இருந்துவிட்டான்.
மைதிலி அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டாள். அவனை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றுகொண்டே, ஜெயாவைப் பார்த்து, “ஜெயா! நீயும் வா. இன்றைக்கு சித்தூவின் பிறந்தநாள். கேக் வாங்கி வந்திருக்கிறேன்” என்றாள்.
“பிறந்தநாளா? சித்தூ! என்னிடம் சொல்லவே இல்லையே?” என்றாள் ஜெயா. தனக்கு விருப்பமான் நபரின் பிறந்த நாள் தனக்குத் தெரியாமல் வேறு யாரோ வேற்று நபருக்குத் தெரிந்திருப்பது ஜெயாவுக்கு ரோஷமாக இருந்தது.
“அவன் மூஞ்சி! எனக்கே தெரியாதபோது அவனுக்கு எப்படி தெரியும்? என்னடா சித்தூ! இன்றைக்கு உன் பிறந்த நாளாமே? இந்த அம்மா வந்து சொல்றாங்க.” தான் ஜெயாவின் பக்கம் என்பது போல் கிழவி ஏளனமாய் சொன்னாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் சித்தார்த்தா பாட்டியை கோபமாக பார்த்தான்.
மைதிலி சித்தார்த்தாவின் வாயில் இனிப்பை ஊட்டிவிட்டாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்ட போது தலையைப் பிடித்து கட்டாயமாக சாப்பிட வைத்தாள். அதைப் பார்த்த ஜெயா வாலை மிதித்த பாம்பு போல் சீறிக் கொண்டிருந்தாள்.
“போகட்டும். அப்பாவின் போட்டோ காணாமல் போய்விட்டது என்று ரகளை செய்து விட்டுப் போனாய். இனிப்பை சாப்பிடு. உன் கோபம் குறையுமோ என்னவோ.”
மைதிலி இனிப்பை சின்னாவிடம் கொடுத்து விட்டு ஜெயாவுக்குக் கொடுக்கப் போன போது ஜெயா அந்த கையை தட்டிவிட்டாள். இனிப்பு கீழே விழுந்தது. ஜெயா மைதிலியை கோபத்துடன், துவேஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சின்னா ஓடிவந்து கீழே விழுந்த இனிப்பை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டு ஜெயாவிடம் கொடுக்கப் போனான். ஜெயா அவன் கன்னத்தில் இழுத்து ஒரு அறை கொடுத்தாள்.
சித்தார்த்தா சட்டென்று முன் வந்து சின்னாவை தன் அருகில் இழுத்துக் கொண்டான்.
“சித்தூ! உங்க அப்பாவின் போட்டோ காணவில்லை என்று என்மீது இன்று காலையில்தான் திருட்டுப் பட்டம் கட்டினாய். உன் அறைக்கு இப்படி கண்ட கண்டவர்கள் உன் அறைக்கு வந்து போய் கொண்டிருக்கும் போது என்மீது மட்டும் உனக்கு சந்தேகம் வருவானேன்?” ஜெயாவின் குரலில் பாம்பின் சீற்றம் வெளிப்பட்டது.
“நீ பேசாதே” என்றான் சித்தூ.
“ஏன் பேசக்கூடாது?” குரலி உயர்த்தினாள்.
“நீ வீட்டுக்குப் போ.” சித்தூ ஜெயாவின் பக்கம் போகப் போன போது மைதிலி அவன் தோளை பற்றி தடுத்து நிறுத்தினாள், “சித்தூ! அந்த போட்டோ என்னிடம் இருக்கு, நான்தான் உன் பெட்டியிலிருந்து எடுத்துகிட்டு போனேன்” என்றாள்.
சித்தார்த்தா திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையில் வியப்பு வெளிபட்டது. அவள் சொன்னது புரியாதது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பார்த்தாயா பார்த்தாயா? திருடியது யார் என்று இப்போ தெரிந்து போய் விட்டதா? நீ என்னை திருடி என்று சொன்னாய். திருடர்களை வீட்டுக்கு வரவிட்டு, மரியாதைகள் செய்துக் கொண்டு இருக்கிறாய். காலையில் எவ்வளவு ரகளை செய்தாய்? இரு, எங்க அப்பாவிடம் சொல்கிறேன்.’ ஜெயா கால்களால் தரையை உதைத்தபடி சென்றாள்.
அன்னம்மா கிழவிகூட திகைத்துப் போனாற்போல் பார்த்தாள். சின்னா பயந்து போனவனாய் மைதிலியை, சித்தூவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அன்னம்மா தேறிக் கொண்டாள்.
“அந்த போட்டோவுடன் உனக்கு என்ன வேலை வந்து விட்டது? இருந்தாலும் எங்க வீட்டுப் பொருளை அப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எடுத்துக்கிட்டுப் போவதாவது? பெரிய இடத்து வீட்டுப் பெண் என்று சுதந்திரமாக உள்ளே வராவிட்டால்…”
“பாட்டி! நான் அந்த போட்டோவை திருடவில்லை. அது என்னுடையது” என்றால் மைதிலி.
“போதும். பணம் இருப்பவர்கள் போடும் வேஷம் எனக்குத் தெரியாததா? எங்களை இதற்கு முன் பார்த்ததும் இல்லை. எங்க வீட்டு பையனின் பிறந்தநாள் என்று உள்ளே புகுந்து விட்டாய். எங்க வீட்டில் இருக்கும் போட்டோ உன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறாயா?”
அதற்குள் கண்ணாயிரமும், ஜெயாவும் அங்கே வந்தார்கள்.
“போட்டோவை எடுத்தது யாரு?” தீவிரமாக பார்த்துக் கொண்டே கேட்டார் கண்ணாயிரம்.
“இதோ! இவள்தான். எப்போதோ எடுத்துக் கொண்டு போனாளாம். இவள் போக்கு எனக்கு புரியவில்லை. எப்போ எங்கள் வீட்டில் பிரத்யட்சம் ஆவாளோ எங்களுக்கே தெரியாது. இன்று சித்தூவின் பிறந்தநாளாம். இந்த அலங்காரம் எல்லாம் செய்து எங்களுக்கு இனிப்பு கொடுக்கிறாள். இவளுக்கு பைத்தியம் ஏதாவது இருக்கிறதா கண்ணாயிரம்?”
மைதிலி விறைப்பாக நின்றாள்.
ஜெயா தந்தையை முன்னால் தள்ளிவிட்டாள். “கேளுங்கள் அப்பா! அந்த போட்டோவை அந்தம்மாள் எடுத்தால் சித்தூ என்மீது திருட்டுப் பட்டம் கட்டினான். இப்போ என்ன சொல்லப் போகிறான்? அந்தம்மாள் இந்த வீட்டுக்கு இத்தனை முறை எதற்காக வரணும்? சித்தூவுக்கு வேலை கொடுத்தால் அவன் ஆபீசுக்கு போய்க் கொள்வான். இந்த மகாராணி அடிக்கடி இந்த வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறாள். எல்லோரும் சிரிக்கிறாங்க. அடுத்த முறை வந்தால் காலை ஒடித்துப் போடுகிறேன்.”
“நீ வீட்டுக்கு வா ஜெயா!” ஏற்கனவே அந்தக் கத்தல்களை கேட்டு அக்கம் பக்கத்தில் எல்லோரும் கூடி விட்டார்கள். மகளை வலுக்கட்டாயமாக இழுத்தபடி போய்க் கொண்டிருந்த கண்ணாயிரம் பின்னால் திரும்பி மைதிலியைப் பார்த்தார். ,
“என்னம்மா இதெல்லாம்? அய்யா உங்களை ஏன் இப்படி கண்டுகொள்ளாமல் இருக்காங்க? அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருப்பது நல்லது” என்றார்.
“சித்தூவுக்கு அந்த பிச்சாத்து வேலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லுப்பா. பிறந்தநாளாம் பிறந்தநாள்! அந்த சாக்கு சொல்லி சித்தூவை தலைப்பில் முடிந்துகொள்ள நினைக்கிறாள். இதோ பார்! மறுபடியும் இந்த தெருவுக்குள் அடி எடுத்து வைத்தால் தெரியும் சேதி. என்னிடம் பகைத்துக் கொண்ட யாரும் இந்த தெருவில் நடமாட முடியாது. வெட்கமாக இல்லையா? உன் வயசு என்ன? சித்தூவின் வயது என்ன?”
சாமி வந்தது போல் கத்திக் கொண்டிருந்த ஜெயாவை கண்ணாயிரம் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனார்.
வீட்டின் முன்னால் கூடியிருந்த மக்கள் குறுகுறுவென்று வம்பு பேசியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அன்னம்மா லட்டுக்கள், இனிப்புகள் இருந்த பாக்கெட்டை கொண்டு வந்து தெருவில் வீசி எறிந்தாள். குழந்தைகள் அவற்றை பொறுக்கி எடுக்கப் போனார்கள். பாவப்பட்டதை எடுத்துக்காதீங்க என்று பெரியவர்கள் அவர்களை அழைத்துப் போனார்கள்.
கிழவி உள்ளே வந்து கைகளை ஜோடித்து கும்பிடு போட்டாள். “இனி கிளம்பு தாயே! பிறந்தநாளை நன்றாக கொண்டாடி விட்டாய். இனி போதும். இனிமேல் எங்கள் வீட்டுப் பக்கம் வராதே. என் பேரனை சந்தி சிரிக்க வைத்தது போதும். அந்த சிந்திக்காரியின் தொல்லையிலிருந்து விடுபட்டோம் என்று நினைத்தால் நீ வந்து சேர்ந்தாய் எங்கள் உயிரை எடுப்பதற்கு. இந்த காலத்தில் வயது வித்திசாசம் எதுவும் இல்லை. பாழாய் போன உலகம்! கொஞ்சம் கூட பயமே இல்லாமல் போய் விட்டது மனிதர்களுக்கு.”
அருவருத்து கொள்வது போல் அந்த கிழவி சொன்ன வார்த்தைகள் எதுவும் மைதிலியின் செவிகளில் விழவில்லை.
சித்தூ பெட்டியின் மீது உள்ளங்கைகளில் முகத்தை புதைத்து மௌன சிலையாய் உட்கார்ந்து இருந்தான்.
“சித்தூ!” அழைத்தாள் மைதிலி.
சித்தார்த்தா எழுந்து கொண்டான். அவன் அறையிலிருந்து வேகமாய் வெளியேறப் போன போது உள்ளே வந்து கொண்டிருந்த ஆசாமியுடன் மோதிக் கொண்டான்.
“என்னடா இந்த ஓட்டம்? வாசலில் மக்கள் கூட்டம் என்ன?”
“மாமா!” சித்தூ ஏதோ சொல்ல வந்தவன் அப்படியே அந்த நபரை கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டான், மறுநிமிடம் அவன் உடல் நில நடுக்கம் வந்தது போல் தள்ளாடியது.
“என்னப்பா? என்ன நடந்தது?” அவர் கேட்டதும் அன்னம்மா நடந்தை எல்லாம் ஒப்பித்தாள்.
மைதிலி ஏற்கனவே உயிரில்லாத பதுமையைப் போல் அறையிலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தாள். சித்தார்த்தாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்த நபர் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த மைதிலியை பார்த்ததும் ஏதோ நினைவலைகள் கண்முன் நிழலாடியதுபோல் பார்த்தார்.
மைதிலியும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மைதிலி!” தெளிவற்ற குரலில் அழைத்தார்.
மைதிலியின் செவிகளில் அந்த அழைப்பு விழவில்லை. அழுதுகொண்டே அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்ட நிலையில் இருந்த சித்தார்த்தாவின் மீதே நிலைத்தன. அவள் இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சித்தூ என்று அழைப்பதற்குக்கூட அவளுக்கு தெம்பு இருக்கவில்லை. இப்பவோ அடுத்த நிமிடமோ நினைவு தப்பி விடும் போல் இருந்தாள்.
அந்த நபர் சித்தூவைப் பிடித்துக்கொண்டே மைதிலியிடம் வந்தார். “மைதிலி! என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் ரமாகாந்த்!” என்றார்.
மைதிலியின் விழிகள் அவர் பக்கம் திரும்பின. ஆனால் அவை அவரை அடையாளம் கண்டுகொள்ள வில்லை. சித்தூவை அருகில் இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் என்று அவள் உள்மனம் தவித்துக் கொண்டிருந்தது. அவள் கண்முன்னால் இருந்த பொக்கிஷத்தை ஜெயா, கண்ணாயிரம் சிதைத்து விட்டார்கள். அதை மறுபடியும் தான் அடைய வேண்டும் என்றால் சித்தூவுக்கு தான் யாரென்று சொல்லி விட வேண்டும்.
இதழ்கள் நடுங்க அவள் “சித்தூ!” என்று அழைத்துக் கொண்டிருந்த போதே, ரமாகாந்த் தன் தோளில் பதிந்து இருந்த சித்தார்த்தாவின் முகத்தை வலுகட்டாயமாக் இழுத்து மைதிலியிடம் காண்பித்துக் கொண்டே, “இவள் யாரென்று நினைத்தாய்? உங்க அம்மா இவள்! உன் அப்பா தன் போட்டோவின் மீது எழுதியது யாரை பற்றி என்று கேள்வி கேட்டு என் உயிரை எடுத்தாயே? அது இவள்தான். மைதிலி! சித்தூ உன் மகன் தெரிந்ததா?” என்று சொன்னார்.
மைதிலியின் கைகள் தன்னை அறியாமல் ஜோடித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டன. அந்த நிமிடம் அவள் கடவுளின் உருவமாய் காட்சி தந்த ரமாகாந்தை வணங்கிக் கொண்டிருந்தாள்.
சித்தார்த்த ரமாகாந்த் சொன்னதை நம்ப முடியாதவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரமாகாந்த் அதை கவனித்தவர் போல் சற்று நிறுத்தி, மீண்டும் சொன்னார். “நீ தினமும் பகவத்கீதையை போல் படிபாயே அந்த பழைய நோட்புக்! அது உங்க அம்மா எழுதியது தாண்டா. மைதிலி! எத்தனை வருடங்கள் ஆயிற்று உன்னைப் பார்த்து. எப்படி இருக்கிறான் உன் மகன் பார்த்தாயா? அன்று உன் மகனை என்ன செய்வது என்று தெரியாமல் அரவிந்தின் பாட்டியிடம் ஒப்படைத்து விட்டேன். ஆக்சிடெண்டில் நீயும் இறந்து விட்டதாகச் சொன்னேன். இல்லாவிட்டால் அந்தம்மாள் சம்மதிக்க மாட்டாள். அவளிடம் எட்டு வயது வரை வளர்ந்தான் சித்தார்த்தா. அதற்குப் பிறகு அந்தம்மாள் தன் தங்கையிடம் வந்து சேர்ந்தாள். அவளிடம்தான் தன் கடைசி காலத்தை கழித்து இருக்கிறாள். நான் துபாய்க்கு போய் விட்டேன். ஆறு வருடங்கள் கழித்து ஒரு முறை வந்த போது சித்தூவைப் பார்த்தேன். அப்படியே அரவிந்தின் ஜாடைதான்.” மைதிலி அடிமேல் அடியெடுத்து வைப்பது போல் அவர் அருகில் வந்தாள். அவர் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டு, “:உங்களுடைய நன்றியை என்னால் எப்படி தீர்க்க முடியும்?” என்றாள். அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. கடினமான அந்த உண்மை அவள் வாயிலிருந்து வெளிவராமல் ரமாகாந்த் கடவுள் போல் வந்து உண்மையை வெளிப்படுத்தினார். கால்களுக்கு இருந்த விலங்குகள் நீங்கி விட்டது போல் மைதிலியின் மனம் சுதந்திரமாக வெள்ளைப் புறாவாக பறக்கத் தொடங்கியது.
“நாம் நூறு நல்ல காரியங்களைச் செய்தால் கடவுள் நமக்கு ஒரு நன்மை செய்வார் என்று சின்னவயதில் வாத்தியார் சொன்னதை கேட்டிருக்கிறேன். நீங்கள் இருவரும் இப்படி சந்தித்துக் கொள்வது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டேய் சித்தூ! என்னடா இது? அம்மா, அப்பாவைப் பற்றி சொல்லச் சொல்லி என் உயிரை எடுத்துக் கொண்டு இருப்பாய். இப்போ ஊமையாய் பார்த்துகிட்டு சும்மா நிற்கிறாயே? உன் அம்மாடா. பார், நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று.”
“என்ன? இவங்க இரண்டு பேரும் தாயும் மகனுமா? இன்னிக்கு அவன் பிறந்த நாளுன்னு அவள் வந்தாள், எனக்கே தெரியாது உனக்கு எப்படி தெரியும் என்று திட்டினேன்.”
“ நீ ஒரு அவசரக் குடுக்கை. வாய் நீளம். அதனால்தானே உன் புருஷன் உன்னை விட்டுவிட்டு தேசாந்தரம் போய் விட்டான்” என்றார் ரமாகாந்த் சிரித்துக் கொண்டே.
மைதிலி, “ஒரு நிமிஷம் இருங்கள்” என்று அறைக்குள் ஓடினாள். தட்டில் இருந்த ஓரிரண்டு லட்டுக்களை எடுத்து வந்த போது சித்தார்த்தா இருக்கவில்லை. போய் விட்டிருந்தான்.
“அடடா! சற்றுமுன் இங்கேதானே இருந்தான்? அதற்குள் எங்கே போய்விட்டான்? “ என்றார் ரமாகாந்த். “போகட்டும். நான் இனிப்பை எடுத்துக் கொள்கிறேன்” என்று அவள் கையிலிருந்து எடுத்துக் கொண்டார்.

(தொடரும்)

Series Navigationஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்தொடுவானம் 73. இன்பச் சுற்றுலா
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *