வளவ. துரையன்
சிறுகதை என்பது வாழ்வின் ஏதேனும் ஒரு முரணைக் காட்டிச் செல்கிறது. அந்த முரண் என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சந்தித்திருப்பதே. அந்த முரணுக்குத் தீர்வு கண்டு வாழ்வை அமைத்துக் கொள்வதும் அல்லது அந்த முரணோடு இணைந்து போய் வாழ்வைச் சீராக்கிக் கொள்வதும் அவரவர் தேர்ந்தெடுக்கும் முறைகள். தான் கண்ட அல்லது கேட்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கும்போது படைப்பாளன் அந்த நிகழ்வில் உள்ள முரணை நேரடியாகவோ மறைமுகமாகவோ சுட்டிக் காட்டுகிறான். அதே நேரத்தில் அந்த முடிச்சை அவிழ்த்துக் கொண்டிருக்க வேண்டிய வேலை அவனுக்குத் தேவையில்லை. ஆனால் ஒரு சிலர் அதுவும் என் வேலைதான் என்று செய்தாலும் நமக்குக் கவலையில்லை. இந்த எண்ணங்களுடன்தான் குழிபிறை வி.கே. கஸ்தூரிநாதனின் சிறுகதைத் தொகுப்பான “அட்சய பாத்திரத்தில் அழுக்குப் படியாது” எனும் நூலை அணுக முடிகிறது
தொகுப்பில் மொத்தம் பத்துக் கதைகள் உள்ளன. எல்லாமே வாசிக்கப் பயமுறுத்தாத எளிமையான சிறிய கதைகள்தாம். ”நஷ்ட ஈடு” நல்ல கதை. எதிர்பாராத திருப்பத்தைத் தருகிறது. ஒரு விபத்து நடக்கிறது. குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவன் மற்றொரு வாகனத்தில் மோதி விடுகிறான். ஓட்டி வந்தவனுக்கும் அடி. ஆனால் மோதப்பட்ட வண்டியில் வந்தவருக்குக் காலில் அறுவை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் மூன்று லட்சம் செலவாகிறது. காவல் நிலயத்தில் வைத்துப் பஞ்சாயத்து நடக்கிறது. குடிபோதையில் வண்டி ஓட்டியவனிடம் இரண்டு லட்சம் கேட்கிறார்கள். அவன் தரப்போ ஐயாயிரத்தில் ஆரம்பிக்கிறது. கடைசியில் ஒருவாறாக ஐம்பதாயிரத்துக்குப் பேரம் முடிகிறது. காலில் அறுவை முடிந்தாலும் பூரண குணமாகாமல் விந்தி விந்தித்தான் நடக்கிறார்.
மூன்று மாதங்கள் ஓடுகின்றன. அறுவை செய்துகொண்டவர் மோதியவனின் ஊருக்குப் போகிறார். அங்கே பஞ்சாயத்துப் பேசி நஷ்டஈடு வாங்கிக்கொடுத்தவரை அழைக்கிறார். அவரிடம், “நீங்க வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு தொகை இனி என் காலையும் குணமாக்க முடியாது. என் செலவையும் ஈடு கட்ட முடியாது. என் உடம்புல ஓடுற ரத்தம்தான், என் மேல மோதினவன் உடம்புலயும் ஓடுது. நாங்க மேரியைக் கும்பிடறோம். நீங்க மாரியைக் கும்பிடறீங்க! யோசித்துப் பார்த்தா ரெண்டும் ஒண்ணுதான். குடிச்சுப்பிட்டோ குடிக்காமலோ மனுசன் பாவம் செய்யாம, அடுத்தவங்களுக்குத் துன்பம் செய்யாம இருக்கணும். அதுலதான் மனிதம் இருக்கு. இந்தாங்க அந்தப் பணம் ஐம்பதாயிரம். இதை ஊர் நலனுக்கு உருப்படியா செலவழியுங்க. அது போதும் எனக்கு” என்று அமைதியாகக் கூறிவிட்டுச் சென்று விடுகிறார்.
கதையின் இறுதிப் பகுதில்தான் அவர்களின் மதம் காட்டப்படுகிறது. குடிபோதையில் வண்டி ஓட்டியவனை மன்னிப்பது ஒரு முரண். அதை நியாயப்படுத்தவே மன்னிப்பவர் மேரியைக் கும்பிடுவதாகக் காட்டப்படுகிறார். இரண்டு லட்சம் கேட்டு, ஐம்பதாயிரம் வாங்கிப் பின்னர் மூன்று லட்சம் செலவாகியிருப்பதும் ஒரு முரண்தான். ஆனால் அதைப் பேசி முடித்தவர் சாதனையைச் செய்தது போல் சந்தோஷப்படுகிறார் என்பது அம்முரணில் தோன்றும் முடிவு. சிறுகதை என்பது குதிரைப் பந்தயத்தில் குதிரைகள் ஓடுவது போல் இருக்க வேண்டும். அதாவது மெதுவாகத் தொடங்கி போகப் போக வேகம் பிடிக்க வேண்டும். இறுதியில் எதிர்பாராத குதிரை வெற்றி பெறுவதுபோல திருப்பமும் நிகழலாம். இக்கதையில் அது நடந்திருக்கிறது.
ஆனால் குறு நாவலாகி இருக்க வேண்டிய “அட்சய பாத்திரத்தில் அழுக்குப்படியாது” கதையில் முரண்கள் ஏதும் இல்லை. கதை ஆற்றொழுக்காய்ச்செல்கிறது. கஷ்டப்பட்டுத் தன் மகனைப் படிக்க வைக்கிறாள் ஒரு தாய். மகனும் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போகிறான். அம்மாவை நல்லபடிக்கு வைத்துக் கொள்ளத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். அனால் அவளோ தான் பழகிய ஊரையும், மனிதர்களையும் விட்டு விட்டு வர மறுக்கிறாள். ஆனால் அவள் சொல்லும் ஒரு கதை கதைக்குள் கதையாக இருக்கிறது.
தான் இளமைக்காலத்தில் ஒருவனிடம் தவறிப் போய்க் கரு உண்டாகிவிட, அதனால் அவளின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதைக் கூறிவிட்டு, அத்துடன் மிக்க துன்பங்களுடன் பிள்ளை பெற்று ஆளாக்கினதையும் தெரிவிக்கிறாள். அந்தப் பிள்ளை தான் நீ என்றும் கூறுகிறாள். அவனோ ”உன்னை ஏமாத்தின ஆண்வர்க்கம்தான் வெட்கப்படணும்” என்கிறான். அவள் மடிந்து போகிறாள். அவள் பணக்காரர் வீட்டில் பாத்திரங்கள் தேய்த்துப் பிள்ளையைப் படிக்க வைப்பது ஒரு காட்சியில் காட்டப்படுகிறது.
அட்சய பாத்திரம் என்பது ஒரு குறியீடு. அதுதான் அவள். எப்படி அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாமல் சோறு வருமோ அது போல் அவள் மனத்தில் பாசம், கடமை, வைராக்கியம், மண் வாசனை எல்லாம் நிறைந்துள்ளன. மேலும் திரௌபதி அல்லது மணிமேகலை அல்லது ஆபுத்திரன் என அது யார் கையில் இருந்தாலும் அது புனிதமானது. அதில் அழுக்குச் சேர முடியாது.அதுபோல்தான் தாயும். அவள் மனம் என்றும் பிள்ளையின் வாழ்வையே எண்ணிக்கொண்டிருக்கும் கறை படாத மனமன்றோ?
ஒருசில கதைகளில் பாத்திரங்களின் மீது பரிதாபம் ஏற்படுகிறது. அது படைப்பாளரின் பலத்தாலா அல்லது பலவீனத்தாலா என்று புரியவில்லை. ’பொய்மையும் வாய்மை இடத்து’ சிறு கதையில் தப்புப் பண்ணிய சிகப்பியின் தவறை மறைத்து அவளை அவள் புருசன் சுப்பனிடம் சேர்த்து வைக்கிறார் நாட்டுத் தலைவர் கந்தசாமி. அது சரி. சோரம் போன மனைவியை உத்தமானவள் என்று நம்பி வாழப்போகும் சுப்பனின் கதி? “[ஏ]மாற்றம்” கதையின் கமலாவின் கதியும் இதுதான். கமலாவுக்குப் பிறக்கும் இரண்டு பெண் குழந்தைகளையும் அவள் மாமியார் வீட்டில் சிசுக்கொலை செய்து விடுகின்றனர். கமலா எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்க வில்லை. மூன்றாவதாக எல்லாரும் மகிழும்படி ஓர் ஆண்குழந்தை பிறக்கிறது. அனால் முன்பு செய்தவர்களைப் பழி வாங்க கமலாவே இதையும் சிசுக்கொலை செய்கிறாள். அவள் வீட்ட விட்டு வெளியே வந்து ”இது என் குழந்தை; நீங்கள் தொடாதீர்கள் என்று வாழ்ந்திருக்க வேண்டியவள். பாவம்.
”எல்லாம் தெரிந்தவள்” கதையில் தன் பாட்டி தன் அப்பாவை அவர் இல்லாத போது திட்டுவதைப் பதிவு செய்து அவர்களிடம் போட்டுக் காட்டித் திருத்துகிறாள் அமுதா. ஆனால் அவள் பெரியவளாகி அவளைப் பெண் பார்க்க வருபவன் “அதுபோல நாலுபேரு பேசும்போது ஒட்டுக் கேட்பது குடும்பப் பெண்னுக்கு அழகில்லை என்று அவளை மறுத்து விடுகிறான். யாரும் இல்லாதபோது தன் பாட்டி பேசுவதை பேத்தி அமுதா கேட்பதை ஒட்டுக்கேட்பது என்று புரிந்து கொண்ட மாப்பிள்ளை இவ்வுலகை எப்படி புரிந்து கொள்ளப் போகிறான்?
வயதான பின் தன் கணவன் தன்னிடம் செய்யும் சில்மிஷங்களை எல்லாம் பாலியல் பலாத்காரம் என்று காவல் நிலையத்தில் புகார் செய்யும் ‘பாலியல் பலாத்காரம்’ கதைபோல் சில காய்கள் இருப்பினும் சுவையான கனிகள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நூலை நேர்த்தியான முறையில் வெளியிட்டுள்ள மணிமேகலை பதிப்பகத்திற்குப் பாராட்டுகள்
[அட்சய பாத்திரத்தில் அழுக்குப் படியாது—சிறுகதைத் தொகுப்பு—குழிபிறை வீ.கே. கஸ்தூரிநாதன்—வெளியீடு: மணிமேகலை பதிப்பகம், சென்னை—பக்—92—விலை :ரூ 50]
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்