திருக்குறளில் இல்லறம்

author
0 minutes, 1 second Read
This entry is part 10 of 19 in the series 28 ஜூன் 2015

செ.சிபிவெங்கட்ராமன்

மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு. உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும். மனத்தினும் பாவத்தை நினையாது யாருக்கும் எவ்வுயிர்க்கும் கேடு நினையாது, இரங்கும் தயவும், கொலை, பொய், வஞ்சகம் விடுவதுமே அறமாகும். இன்றைய உலகின் இன்றியமையாத தேவையாக இவ்வறம் உள்ளது குறிப்பிடத்தக்கது. பழந்தமிழரின் அக வாழ்வானாலும் சரி, புற வாழ்வானாலும் சரி அறமே முதலிடம் வகித்தது. அக வாழ்வின் அறமாவது நேர்பட வாழ்தலும், நேரிய முறையில் பொருளீட்டுவதும், நேரிய நிலையில் பல்லோருக்கும் உதவி செய்து வாழ்வதும் ஆகும். புறவறமாவது எவ்வுயிர்க்கும் துன்பம் தராது போரின் போது கூட ஏனைய உயிர்களிடத்து இரக்கங்கொண்டு வாழ்வதாகும். நிலை இப்படி இருக்க, இன்றைய உலகில் அன்றைய அறத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் மனிதகுலம் அறத்தைத் தொலைத்து நிற்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டியதாகவே உள்ளது. இன்றைய உலகில் மனித நேயம் மண்மூடிப்போனதற்கு மனம் மாசுபட்டுப்போனதும் ஒரு காரணம் எனலாம். அனைத்து அறங்களுக்கும் ஆணிவேர் இல்லறமேயாகும். அந்தவகையில் வள்ளுவர் சுட்டிய பல அறங்களுள், அறங்களின் ஆணிவேராகிய இல்லறத்தை விளக்கி வரைவதாக இக்கட்டுரை அமைகின்றது.
அறம்:
அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல்லிடங்களில் பயின்றுவந்துள்ளது. அறம் என்ற சொல்லுக்கு கையறம், கருமம், நீர்மை, நூற்பயனில் நான்கினொன்று, பெரியோரின் இயல்பினொன்று என நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும், தனி மனிதனின் வாழ்வும், பொதுவாழ்வும், சீராக இயங்கத் தனிமனிதன், அரசு போன்றவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கத்தின் அடிப்படையான நெறிமுறைகள் அல்லது கடமைகள் என்று கிரியாவின் தற்காலத் தமிழ்மொழியகராதியும் பொருள் சுட்டிச் செல்கின்றன. இதனூடாக அறமாவது, மனத்தெளிவு பெற்ற அல்லது மனத்தூய்மை பெற்ற தனிமனிதனின், ஒழுக்கத்தின் அடிப்படையிலான வாழ்வின் இன்றியமையா நெறிமுறை என்பது புலனாகிறது. தொல்காப்பியரும்,
”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”
(தொல்.பொருள்.கற்:89)
என பழந்தமிழரின் களவொழுக்க இயல்பைச் சுட்டுமிடத்து அறத்தையும் உள்ளார்ந்துச் சுட்டிச்செல்கிறார். அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்று அவர் சுட்டுவதை, திருவள்ளுவனார், அறத்திற்கே அன்பு சார்பென்ப (குறள்:79) என்கிறார். ஆக, அறமெனப்படுவது அன்பின் வெளிப்பாடு; அன்பெனப்படுவது மனம் சார்ந்த பண்பு நிலைகளுள் ஒன்று என்பது தெளிவாகின்றது.

அறப்பாகுபாடுகள்:
திருவள்ளுவர் தாமியற்றிய 1330 திருக்குறள்களையும் 133 மூன்று அதிகாரங்களில் விரித்தும், 133 அதிகாரங்களை அறம், பொருள், இன்பமென்ற மூன்று நிலைகளில் வகுத்தும் அமைத்துள்ளார். அதில் முதலாவதியலாக அமைவது அறத்துப்பாலாகும். மனிதப்பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் முதலில் மனவொழுங்கோடு, அறத்தைக் கைக்கொண்டு வாழ முற்பட வேண்டும். அவ்வாறு அறத்தோடு வாழ்ந்தால் மட்டுமே அறப்பொருளீட்ட முடியும். அறப்பொருளீட்டுமிடத்து இன்பம் தானாகவே வந்து சேரும் என்பது அவரது முடிந்த முடிபு. அதனால்தான் அறத்தை முதலில் எழுதிச்சென்றார்.
அறத்தை இல்லறம், துறவறம் என்று வகைப்படுத்தியுமுள்ளார். இல்லறமாவது, இல்+அறம்; அதாவது, இல்வாழ்வின்கண் நின்று மனதால் தூய்மைப்பட அறம் செய்து ஒழுகி வாழ்தல். அவ்வாறு வாழுமிடத்துத் தம்மைச் சார்ந்தோருக்கும், சாராதோருக்கும் யாவர்க்கும் உதவி செய்து வாழ வேண்டும். இல்வாழ்வை,
”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள்:45) என்கிறார்.
துறவறமாவது, இல்லறத்தைத் துறந்துச் செய்யும் அறமாகும். அக்காலத்தே துறவு பூணுதலென்பது வாழ்வின் படிநிலைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. ஒரு மனிதன் பிறந்த காலம் தோன்றி அவனுக்கென சில கடமைகள் இருந்தது. அஃது தன்னைப் பெற்றோருக்கும், தன்னை நாடி வந்த தன் மனைவியிடத்தும், தன் பிள்ளைகளிடத்தும் அன்பு கொண்டு இல்லறத்தை சரிவர அறத்தின்பால் நடத்துதல்லாகும். அவர்களுக்குச் செய்யவேண்டிய கடன்களையெல்லாம் அறநெறியின் பாற்பட்டு செய்து முடிக்க வேண்டும். பின்பு துறவு மேற்கொண்டு இறைவனின் தாளடி சென்று சேர்தல் வேண்டும். அந்த வகையில் இல்லறம் நல்லறமான பின்பு துறவறம் செல்வது வாழ்வின் அடுத்த படிநிலையாகக் கருதப்பட்டது. தான் விரும்பிய அனைத்தையும் விட்டொழித்து வாழ்தலே துறவாகும். ஐம்பொறிகளின் நுகர்ச்சி ஐந்தினையும் கொன்று வாழ்தலே துறவாகும். இதனை,
”அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு” (குறள்: 341)
என்கிறார் திருவள்ளுவர்.
பாயிரவியலில் அறன் வலியுறுத்தலை முன் வைத்த திருவள்ளுவர், தொடர்ந்து இல்லறவியல், துறவறவியலை வைத்து இல்லறம் நடத்துவோர் இதனிதனையும், துறவு போவோர் இதனிதனையும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் தனித்தனியே சுட்டிச் செல்கிறார். இல்வாழ்வும், அதைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையும், வாழ்க்கைத் துணைநலத்தின் தேவையும், புதல்வரைப்பெற்று, அன்பு கொண்டு வாழ்தலும், விருந்திட்டு, இனியவைப் பேசி, செய்நன்றி அறிந்து, நடுவுநிலைமையோடு வாழ்தலையும், அடக்கத்தோடும் ஒழுக்கத்தோடும் பிறனில் விழையாது வாழ முற்படுவதும் என இல்வாழ்வின் இன்றியமையாத நுணுக்கங்களை நுண்மாண் நுழைபுலத்தோடு எடுத்தியம்புகிறார்.
துறவறத்தைச் சுட்டும் போது, அருளோடு வாழ்தல், புலால் மறுத்தல், தவம் மற்றும் அதன் திறன், தவநிலையில் கூடாவொழுக்கம், வாய்மையின் தேவை, நிலையாமையுணர்தல், மெய்யுணர்தல், அவாவறுத்தல் முதலிய அறங்களைச் சுட்டிச் செல்கிறார்.. அக்காலத்தே எல்லோரும் துறவறம் மேற்கொண்டார்களா என்பது ஆய்வுக்குரியது. அதாலால், இப்பேராசான் இல்லறம் செய்வோருக்கு இல்லறத்தையும், துறவு போவோருக்குத் துறவறத்தையும் தனித்தனியே கற்றுத்தருகின்றார். இல்லறத்தை நலமுற அனுபவித்தப் பிறகே துறவு போதல் வேண்டும் என்பது அவரின் சாலச் சிறந்த எண்ணம். இல்லறம் காணாது துறவு மேற்கொள்பவர்களால்தான் இன்றைய உலகின் பாலியல் முதலான சிக்கல்கள் எழுகின்றன. ஆகவே துறவு கொள்ள இல்லறம்தான் முதல் படி என்பது புலனாகின்றது.
வள்ளுவர் காட்டும் இல்லறங்கள்:
தனிமனித வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இல்லறமாகும். இல்லறத்தின் வழியாகத்தான் இன்பந்துய்க்க முடியும். அஃது பொருளின்பமானாலும் சரி, வீடு பேற்றின்பமானாலும் சரி, இல்லறமே வாழ்வின் முதல் படி. அறத்தான் வருவதே இன்பம் (குறள்:35), ஆதலால் அவ்வின்பம் துய்க்க அறநெறியோடு வாழத் தலைப்படுதல் வேண்டும். அவ்வாழ்க்கை இல்லிடத்தின் கண் துவங்குதல் வேண்டும்.
இல்வாழ்க்கை:
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை. ”இல்லறம் செய்யுமவன் தவத்தின் பாற்பட்ட விரதங்கொண்டு ஒழுகா நின்ற பிரம்மச்சாரிக்கும், தவ மேற்கொண்டு ஒழுகா நின்ற வானப்பிரத்தன் சந்நியாசிகளுக்கும் தத்தம் நிலைகுலையாமல் உணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலினாலும் (குறள்:41.மணக்குடவர் உரை), துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தவற்க்கும் என யாவர்க்கும் இல்வாழ்பவனே துணை (குறள்:42) என்று சொல்வதினூடாகவும் இல்வாழ்வின் தேவை என்ன என்பது புலனாகிறது. துறவு மேற்கொள்பவருக்கு இல்லறத்திலிருப்போரின் உதவி தேவைப்படுவதையும் உணர முடிகின்றது. அவ்வாறு இல்வாழ்வின்கண் அறநெறியின்படி வாழ்ந்து, பிறரையும் அறநெறியின்படி வாழச்செய்து வாழ்பவனின் வாழ்வு, இல்வாழ்வில் முன்பே இவ்வறத்தைச் செய்து நற்பெயர் பெற்று துறவறம் மேற்கொண்டவரின் தவ வலிமையை விட வலிமையுடையது என்கிறார்.
”ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து” (குறள்:47)
என்பதே அக்குறளாகும்.
மனையறம்:
வாழ்க்கைத்துணையே மனையறத்தில் முதலிடம் வகிக்கிறாள். அவளன்றி எதுவும் நடந்தில எனலாம். அவள் தன்னையும் காத்துக்கொண்டு கணவனையும் பேணி, நன்மையமைந்த புகழினையும் படைத்துச் சோர்வின்மையுடையவளாய் இருப்பவள். தான் பிறந்த குடிக்கும் புகழ் சேர்த்து, தன்னைக்கொண்டவனின் வருவாய்க்கு ஏற்ப செலவினைச் செய்பவள்.இதனை,
“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலால் பெண்” (குறள்: 57)
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (குறள்: 51)
என்ற குறட்பாக்களினூடாகப் பதிவு செய்கின்றார். மேலும் ஒருவனுக்கு அழகெனப்படுவதே மனைமாட்சி (குறள்: 60) என்றும் பதிவு செய்கிறார். புறநானூறும் மனைக்கு விளக்காகிய வாள் நுதல் (புறம்: 314) என்று இல்லத்தரசியை மனைக்கு விளக்கெனச் சிறப்பிக்கின்றது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது இக்காலத்திய கவிஞர்களின் சிந்தனைப்போக்கு. ஆக, மனைக்கு, மனையறத்திற்கு வாழ்க்கைத்துணையின் தேவை இன்றியமையாததாகின்றது. அதிலும் வருமானமறிந்து செலவுசெய்யும் மனைவியால் வாழ்வு செழிக்கும். குடும்பம் தழைக்கும்.
நன்மக்கட்பேறு:
மனைமாட்சியின் அணிகலன் நன்மக்களைப் பெற்றெடுப்பதாகும். அந் நன்மக்களானவர்கள், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும் அளவிற்கும் (குறள்: 68), மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் என்னும் அளவிற்கும் (குறள்; 70) இருத்தல் நன்மையாகும். பிள்ளைப்பேறு பெறுவதில் தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். ஒருவன் பெறும் பொருட்களுள் அறிவுடைய மக்களைப் பெறுவதை விட சிறந்த பொருள் வேறேதுமில்லை. இதனை,
”பெறுமவற்றுள் யாமறிவது இல்லை; அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” (குறள்: 61)
என்கிறார்.
அன்பே அறம்:
பிற உயிர்களிடத்து அன்பு கொண்டு வாழ வேண்டும் என்பது பழந்தமிழர்க் கொள்கைகளில் ஒன்று. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்ததும், உயிர் இறக்கப் பண்பு வளர்ச்சி கண்டதும் பழந்தமிழர் வாழ்க்கையில்தான். பழந்தமிழரின் வாழ்வு இயற்கையோடியைந்த வாழ்வு. ஆதலால் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு வாழ்ந்தனர். அன்பில் அறத்தையும் அறத்தில் அன்பையும் வைத்தவன் தமிழன். மறத்திலும் அன்பைக் கண்டவன் தமிழன். அன்பகத்து வாழ்வதே வாழ்வு. இதனை வள்ளுவர் இப்படிக் கூறுகிறார்,
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று” (குறள்: 72)
அதாவது, தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை, வலிய உலகினிடத்து உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போன்றது என்கிறார்.
விருந்திடுவதில் கூட அறத்தைச் சொன்னவர் திருவள்ளுவர். விருந்தானது முகந்திரிந்து நோக்கக் குழைவதாக இருக்கக் கூடாது (குறள்: 90) என்கிறார்.
அடக்கமுடைமையும் நடுவு நிலைமையும்:
அடக்கம் அமரருள் உய்க்கும் என்கிறார். இல்லறத்தில் அடக்கம் இன்றியமையாதப் பண்பாகின்றது. இங்கே அவர் அடக்கம் என சுட்டுவது, மனம் மொழி மெய்யடக்கமாகும். அதாவது, கட்டுப்பாடு; மெய்யடக்கம் இல்லாது பிறன்மனை நோக்குவதோ, நாவடக்கம் இன்றி பேசுவதோ, பணிவின்றி வாழ்வதோ, ஆரிருளில் கொண்டு சேர்த்துவிடும். அதேபோல், வாழும் வாழ்க்கையை நடுவு நிலைமையோடு வாழ வேண்டும். சமன் செய்து சீர் தூக்கும் செங்கோல் போல (குறள்: 111) நடுவு நிலைமையோடு வாழவேண்டும் என்கிறார். நடுவு நிலைமை தவறுபவர்க்கு கேடு விளைவது நிச்சயம். இதனைத் தன் நெஞ்சம் நடுவுநிலை தவறி ஏதும் செய்யுமாயின் தனக்குக் கேடு வரும் (குறள்:118) என்பதன் வழி அறியலாம்
அடங்கி வாழ்வதில் ஒழுக்கமும் இன்றியமையாததாகின்றது. அதாவது, அடங்குதல் என்பதற்கு முறைப்படி வாழ்தல் என்று பொருள். இவ்வொழுக்கம் உயிரினும் மேலானது. ஒழுக்கம் தவறி ஒருவன் நடக்கும் காலத்து அவனிடத்து பழியானது தானாய் வந்து சேர்ந்துக்கொள்ளும். ஆதாலால்தான், தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும் (குறள்: 138) என்றும், இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி (குறள்: 137) என்றும் கூறுகிறார்.
மனஞ்சார்ந்த அறங்கள்:
எல்லா துன்பங்களுக்கும் மனமே முழுமுதற் காரணம். ஆசையே துன்பத்தின் முதல் படி என்பது போல, எண்ணங்கள் தூய்மையாய் இருப்பின் வாழ்வு சிறப்பாய் இருக்கும். அதனால் தான் எண்ணம்போல் வாழ்க்கை என்பர் பெரியோர். வள்ளுவரும், பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காற்றாமை, வெக்காமை, புறங்கூறாமை முதலான அதிகாரங்களில் மனத்தூய்மையை வலியுறுத்திச் செல்கிறார். பிறனில் விழைவதற்கும், பொறுமை கொண்டு வாழ வேண்டும் என்பதற்கும், அழுக்காறு மற்றும் புறங்கூறி வாழ்வதற்கும், தீவினைக்கு அஞ்சி வாழ்வதற்கும், அஞ்சாமல் வாழ்வதற்கும் மனமே காரணமாகின்றது என்கிறார். அதற்கான ஆலோசனைகளைச் சிறந்த . மன நல ஆலோசகராக இருந்து இவ்விடத்து விளக்கிச் செல்கின்றார்.
பிறப்பின் நோக்கம்:
இவ்வுலகில் ஒத்தது அறிபவனே உயிர் வாழ்பவனாகின்றான் (குறள்: 219). மற்றையவன் செத்தாருள் வைக்கப்படுகின்றான். அவ்வொத்தது அறியும் பிறப்பானது, வறியவர்க்கொன்று ஈவதாகவும் (குறள்: 222), இசைபட வாழ்தலாகவும் (குறள்: 232) இருக்க வேண்டும். தோன்றின் புகழோடு தோன்றுக (குறள்: 231) என்கிறார் திருவள்ளுவர். அப்புகழானது நிலவரை நீள் புகழாக இருக்க வேண்டும் (குறள்: 235). இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் புகழாக இருக்க வேண்டும். வசையொழிய வாழும் வாழ்க்கையினரே வாழ்தலின் நோக்கம் உணர்ந்தவர் (குறள்: 238). ஆதலால் இல்லறத்தின் கண் வாழும் போதே அறம் பல செய்து வசையொழிய வாழ தலைப்படுதல் வேண்டும். அவ்வாறு வாழ்பவரே பிறக்கத் தகுதியுடையவர், பிறப்பின் நோக்கம் உணர்ந்தவர். ஏனையவர் தோன்றாமலிருப்பதே நன்று என்கிறார் திருவள்ளுவர்.
முடிப்புரை:
 அன்பின் வழியது உயிர்நிலையாதலால், அவ்வுயிர்நிலையின் அன்பானது அறத்தின் பாற்பட்டதாக அமைவது நலம்.
 பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சண்டை சச்சரவுகளோடு வாழும் வாழ்க்கை வாழ்க்கையல்ல. போர் முதலானவையாலும் இன்ன பிற பேதங்களாலும் நம்மை நாமே அழித்துக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை. அன்பே அகிலத்தை வாழ வைக்கும் மாமருந்து.
 இல்லறம் துய்த்து துறவறம் செல்வதே முறை. மாறாக இல்லறம் காணாது துறவு போவது பாலியல் சிக்கல்களுக்கு வழி வகையிடுகின்றன.
 ஆசையே துன்பத்திற்கு காரணம்; அதுபோல் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவரவர் மனமே. மனமொழி மெய்யால் அடங்கி வாழ்வதே இன்பத்திற்கு வடிகாலாகின்றது.
 அறத்தின் வழி ஈட்டிய பொருளும், அதனைக் கொடுத்துப் புகழ்பட வாழ்வதுமே சிறப்பு.
 அடக்கமுடைமையும், நடுவு நிலைமையும், பிறனில் விழையாப் பண்பும் நம்மை செதுக்கும் அணிகலன்களாகும்
 மனித வாழ்வின் நிறைவு இல்லறத்தின் நிறைவில் உள்ளது. மனித மனம் மாசுபட்டுப் போனதால்தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய், திருட்டு, சுரண்டல், ஊழல், அறமில்லாத போர், இனப்படுகொலை என எல்லாமே நடந்து அரங்கேறுகின்றன. இவையாவும் ஆக்கத்திற்கான அறிகுறிகளில்லை. நம்மை நாமே அழித்துக்கொள்ள வழி வகை செய்கின்றன.
 திருக்குறளின் சிறப்பும், திருவள்ளுவரின் புகழும் திருக்குறளை உலகப்பொதுமறை என்று உலகம் ஏற்றுக்கொண்டதில் இல்லை. அதனை வாசித்து அதன் படி நடப்பதில் இருக்கிறது. உலகத்தின் எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒரு மனிதன் திருக்குறளைக் கசடறக் கற்று அதன்படி நடக்கத் தலைப்படுவானேல் அதுவே திருக்குறளுக்கும், திருவள்ளுவப் பெருந்தகைக்கும் கிடைத்த வெற்றியாகும்.
 ஆதலால் வள்ளுவம் கற்போம், இல்லறம் செய்வோம், நல்லறம் பேணுவோம்.
துணை செய்த நூல்கள்:
1. திருக்குறள் மணக்குடவர் உரை. சாரதா பதிப்பகம்.
2. தொல்காப்பியம். பொருளதிகாரம். இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம்
3. புறநானூறு. இரண்டாம் பாகம். ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை. பூம்புகார் பதிப்பகம்.
4. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. க்ரியா.
5. நா.கதிரைவேற்பிள்ளை.தமிழ் மொழி அகராதி.சாரதா பதிப்பகம்.
6. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம். தொகுதி ஒன்று.
தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர்.


செ.சிபிவெங்கட்ராமன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
ஓலைச்சுவடித்துறை,,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர். 613 010
அலைபேசி: 9688690778 / 8124221089
மின்னஞ்சல்: sibiram25@gmail.com

Series Navigationகவி ருது வான போதுஅனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *