தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
ரமாகாந்த் சித்தார்தாவுக்காக தேடிவிட்டு அலைந்து திரிந்து வந்தார். “அவன் எங்கேயும் தென்படவில்லை. நீ வீட்டுக்கு போம்மா. அவனே வந்து விடுவான்” என்றார்.
மைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “ஊஹும். அவனை ஒருமுறை பார்க்காமல், ஒருவார்த்தை பேசாமல் என்னால் போக முடியாது. நானும் வந்து தேடுகிறேன்” என்றாள் மைதிலி.
“வேண்டாம் வேண்டாம்” என்றார் ரமாகாந்த்.
அரைமணி முன்னால் வீட்டுக்காரம்மாள் வந்து, “இந்த ரகளை எல்லாம் எங்களுக்கு வேண்டாம். வீட்டை காலி செய்து விடுங்கள்” என்றாள்.
“கேட்டாயா? இதுதான் நீ எங்களுக்கு செய்த உபகாரம்” என்றாள் அன்னம்மா வெறுப்புடன் பார்த்துக்கொண்டே.
மைதிலி அந்த வார்த்தைகளை பொருட்படுத்த வில்லை. அவள் செவிகள் சித்தார்த்தாவின் காலடிச் சத்தத்திற்காக காத்திருந்தன.
அதற்குள் கல் ஒன்று வந்து டப் என்று வாசற்கதவில் பட்டது. “என்ன?” அன்னம்மா போய் பார்த்தாள்.
குழந்தைகள் ஓடி விட்டார்கள். உள்ளே வந்ததும் திரும்பவும் ஜன்னலுக்கு, வாசலுக்கும் கற்களை வீசிக் கொண்டிருந்தார்கள்.
சின்னா பழைய டவலை போர்த்திக்கொண்டு உள்ளே வந்து மைதிலியின் முன்னால் நின்று டவலை எடுத்தான். அவன் தோளில் பிளாஸ்க் இருந்தது.
“என்னது?” என்றாள் மைதிலி.
“அம்மா உங்களுக்கு காபி அனுப்பி இருக்கிறாள்” என்றான் பிளாஸ்கை கொடுத்துக் கொண்டே.
மைதிலி அவன் கன்னத்தை லேசாக கிள்ளினாள். “சித்தூவை உனக்கு ரொம்ப பிடிக்குமா?”
ஆமாம் என்பது போல் தலை அசைத்தான்.
“உங்க அம்மா ஏன் வரவில்லை?”
“கண்ணாயிரம் மாமா திட்டுவார்.”
அன்னம்மா வந்து காபியை டம்ளரில் ஊற்றிக்கொண்டு குடித்தாள். இருட்டும் நேரம் ரமாகாந்த் சித்தார்த்தாவை பலவந்தமாக இழுத்துக் கொண்டு வந்தது போல் தோளைச் சுற்றிலும் கையை போட்டு உள்ளே அழைத்து வந்தார்.
மைதிலிக்கு உயிர் வந்தாற்போல் இருந்தது. எதிரே வந்தவள் “சித்தூ!” என்று அழைத்தாள்.
அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நன்றாக அழுதது போல் அவன் கண்களும், மூக்கும் சிவந்து இருந்தன.
“சித்தூ! உங்க அம்மாவிடம் ஒரு முறை பேசு” என்றார் ரமாகாந்த்.
“எனக்கு யாரும் இல்லை” என்றான் சித்தார்த்தா.
“அம்மா எதிரே இருக்கும் போது இல்லை என்று சொல்கிறாயே?”
“என்னுடைய அம்மாவாக இருந்தால் என்னை விட்டுவிட்டு போயிருக்க மாட்டாள். அப்படி போனவள் எதற்காக திரும்பி வரணும்? வந்து யாரை கடைதேற்றனும்?” அவன் குரலில் உணர்வுகளின் கொந்தளிப்பு இருந்தது.
“எனக்கு யாருமே இல்லை. நான் சொல்கிறேன்.” தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
“நான் உன்னுடைய அம்மா சித்தூ!”
“மாமா! தயவு செய்து என்னிடம் யாரும் பேச வேண்டாம்.”
“என்னடா இந்த பிடிவாதம்? நடந்ததை எல்லாம் சொன்னேன் இல்லையா? அதில் அவளுடைய தவறு என்ன இருக்கு?”
“நான் யாருடைய தவறுகளையும் கணக்கு போடப் போவதில்லை. எனக்கு யாருமே வேண்டியதும் இல்லை.”
“அப்படிப் பேசாதே சித்தூ! மாமா சொன்னது உண்மை. நீ இருப்பது தெரியாது. தெரிந்து இருந்தால் ஒரு நிமிஷம் என்ன? ஒரு வினாடி கூட விட்டுவிட்டு இருந்திருக்க மாட்டேன். இப்போ இனி என்னால் இருக்கவும் முடியாது.” அவள் குரல் கடின இதயம் படைத்தவர்களையும் கரைப்பது போல் இருந்தது.
“பொய்!” பற்களை கடித்தபடி சொன்னான்.
“உண்மைதான் சித்தூ! உன்னைவிட்டு ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியாது.”
“பச்சை பொய்!” அவன் ரமாகாந்த் பக்கம் திரும்பினான். “என்னை ஏன் இப்படி வேதனைப் படுத்தறீங்க மாமா? என்னிடம் இருக்க முடியாவதர்களுக்கு நான் எதுக்கு? இப்போ இங்கே இருப்பாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னுடைய வீட்டுக்குப் போய் விடுவாள். போகவில்லை என்றால் அவளைத் தேடிக்கொண்டு வருபவர்கள் இருக்கிறார்கள். எதற்காக இந்த பசப்பு வார்த்தைகள்?”
“சித்தூ! தயவு செய்து அப்படிச் சொல்லாதே.” இரு கைகளையும் ஜோடித்துக் கொண்டே சொன்னாள்.
“என்ன இது மைதிலி? ஆசீர்வதிக்க வேண்டியவள் நீ! வணங்குகிறாயா? டேய் சித்தூ! பெரியவன் ஆகி விட்டாய் என்ற நினைப்பா உனக்கு?”
“எங்க பாட்டி என்னுடைய இரண்டாவது வயதில் குச்சியால் விளாசி, சாப்பாடு போடாமல் மாட்டுக் கொட்டகையில் என்னை இரண்டு நாட்கள் கட்டிப் போட்டபோதே நான் பெரியவன் ஆகி விட்டேன். உங்கள் வழியை பார்த்துக் கொண்டு போங்கள். என் வழியில் என்னை விட்டு விடுங்கள்.”
“சித்தூ! உன்னிடம் இந்த விஷயம் எப்போது சொல்லுவோம் என்று எவ்வளவு தவித்தேன் தெரியுமா?” அவன் கையைப் பற்றிக் கொண்டே சொன்னாள் மைதிலி.
கையை உதறிக் கொண்டான். “சொல்லி யாரையும் கரை சேர்க்கப் போவதில்லை. நீங்க யாரென்று தெரியாத போதே நான் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தேன். இப்போ அதுவும் போய் விட்டது. இதுதான் எனக்கு கிடைத்த நன்மை. என்னுடன் இருக்க முடியாதவர்கள் நான் அவர்களுக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைப்பது ஏமாற்று வேலை. பசப்பு வார்த்தைகளை நான் நம்பமாட்டேன்.”
“அவசரப்படாதே. இத்தனை நாட்களும் தெரியாது. அவளுக்கு மட்டும் யார் இருக்கிறார்கள் குழந்தையா குட்டியா? எப்படியாவது ஏற்பாடு செய்து உன்னை தன் வீட்டுக்கு அழைத்துப் போவாள்.”
“மாமா!” சித்தூவின் கண்கள் சிவந்தன. கைப்பிடிகள் இறுகின. “இனி நீங்கள் எல்லோரும் கிளம்புறீங்களா? தயவு செய்து போய் விடுங்கள். நான் எங்கேயும் வர மாட்டேன். இத்தனை நாளும் நான் அனுபவித்தது நரகம் இல்லை, சுவர்க்கம் என்று இப்போ புரிகிறது.” பற்களை கடித்துக் கொண்டே சொன்னான். தொண்டைக் குழியில் நரம்புகள் அதிர்ந்து கொண்டிருந்தன. மூடி இருந்த கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.
அதற்குள் வீட்டில் வாசலில் பெரிய வெளிச்சம் தெரிந்தது. அன்னம்மா எட்டிப் பார்த்தாள்.
“ஐயோ! ஐயோ! கார் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.” கிழவி கூச்சலிட்டாள்.
சித்தார்த்தா வாசலுக்கு வந்து பார்த்தான். மைதிலியின் கார் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
“யாருடா இந்த காரியத்தை செய்தது?” ரமாகாந்த் கத்திக்கொண்டே தண்ணீர் வாளியுடன் ஓடினார்.
அறைக்குள் ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனை போல் நெருப்பின் வெளிச்சம் சுவற்றின் மீது விழுந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்திற்கு நடுவில் மைதிலியும், சித்தார்த்தாவும் எதிரெதிரே நின்றிருந்தார்கள்.
“சித்தூ!” மைதிலி இரண்டு கைகளையும் நீட்டினாள். இந்த சிருஷ்டியில் இருக்கும் தாய்மை முழுவதும் அந்த கண்களில் வெளிப்பட்டது.
சித்தார்த்தா மனதில் ஒரு நிமிடம், முன்னால் அடியெடுத்து வைப்பதற்கும் பின்னால் நகர்வதற்கும் இடையே ஒரு நிமிடம் போராட்டம் நடந்தது. அடுத்த நிமிடம் விருட்டென்று திரும்பியவன் அறைக்குள் புகுந்து கதவைத் தாழ்போட்டுக் கொண்டு விட்டான்.
“சித்தூ! கதவைத் திறடா. என் கண்ணா! நான் உன் அம்மாடா. கதவைத் திற.” மைதிலி சாத்தியிருந்த கதவுகளுக்கு தலையை சாய்த்தபடி புலம்பிக் கொண்டிருந்தாள்.
சற்று முன்னால் ரமாகாந்தின் வருகையால் அவளுக்கு எட்டிய சுவர்க்கம் கைக்கு கிடைத்தும் கிடைக்காதது போல் ஊசாலாடிக் கொண்டிருந்தது.
ரமாகாந்த் அருகில் வந்தார். “மைதிலி! வா உன்னை வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்றார்.
“வேண்டாம். நான் போக மாட்டேன். என்னால் போக முடியாது.”
“மைதிலி! நான் உன்னைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீ க்ஷேமமாக இருந்தால்தானே உன் மகனை கண்ணார காண முடியும்.” என்று அவளை சமாதானப்படுத்தி தான் வந்த ஸ்கூட்டரில் அவளை ஏற்றிக் கொண்டு வேகமாக போகும் போது கல் ஒன்று வந்து மைதிலியின் நெற்றியைத் தாக்கியது.
“மேடம்! சரச சல்லாபங்கள் முடிந்து விட்டதா?” எவனோ போக்கிரி கத்தினான்.
எல்லோரும் சிரித்தார்கள். “திரும்பவும் எப்போ வரப்போகிறாய்?” இன்னொருத்தன் கத்தினான். “வந்தால் காலை ஒடித்து விடுவோம் ஜாக்கிரதை!” மிரட்டினான் இன்னொருத்தன்.
*****
இரவு ரொம்ப நேரமாகி விட்டது. எங்கும் நிசப்தம் அடர்த்தியாக பரவியிருந்தது. ரமாகாந்த் மைதிலியை கேட்டுக்கு வெளியே இறக்கிவிட்டு போய் விட்டார். கேட் பூட்டி இருக்கவில்லை. மைதிலி கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.
வாசற்கதவு திறந்துதான் இருந்தது. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
மைதிலி உள்ளே வந்தாள். அவளுக்கு நிற்கவும் தெம்பு இருக்கவில்லை. ஒரு மகா பிரளயத்தில் அவள் மனம் சிக்கிவிட்டது போல் இருந்தது. எந்தக் கரையை அடையப் போகிறதோ, தான் அடையப் போகும் கரையில் எந்த அதிருஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் தனக்காக காத்திருக்கிறதோ தெரியவில்லை. நிலைமை தன்னுடைய கட்டுக்கு மீறிக் கொண்டு எதிர்த்து நிற்கிறது;
சோபாவில் சரிந்தபடி உட்கார்ந்தாள். தலையைப் பின்னால் சாய்த்து கண்களை மூடிகொண்டாள். ரமாகாந்த் அவளுடைய உடலை பலவந்தமாக கொண்டு வந்து இந்த வீட்டு வாசலில் இறக்கி விட்டார். ஆனால் மூடியிருந்த சித்தார்த்தாவின் அறையின் கதவைத் தட்டியபடி, “கதவைத் திறடா கண்ணா!” என்று வேண்டிக் கொண்டிருந்த அவள் மனம் அங்கிருந்து வரவில்லை. அந்த கதவுகளை உடைத்தெறிந்து சித்தார்த்தாவை மடியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் கைகள் துடித்துக் கொண்டிருந்தன. தனிமையினால் அழுது அழுது சிவந்த அவன் முகம் அவள் கண்களை விட்டு அகலவில்லை.
‘என்னிடம் இருக்க முடியாதவர்களுக்கு நான் எதுக்கு? இப்போ இங்கே இருப்பாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் வீட்டுக்கு போய் விடுவாள்.”
“நான் சொல்கிறேன். எனக்கு யாரும் இல்லை.”
“நீங்க யாரென்று தெரியாத போது நான் சந்தோஷமாக வாழ்ந்தேன்.”
“மாட்டுக் கொட்டகையில் இரண்டு நாட்கள் என்னை கட்டிபோட்ட அன்றே நான் பெரியவன் ஆகிவிட்டேன்.
“எங்க அம்மாவாக இருந்தால் என்னை விட்டுப் போயிருக்க மாட்டாள். போனவள் பின்னால் திரும்பி எதற்காக வரணும்? வந்து யாரை கடைத் தேற்றணும்?”
சித்தூவின் வார்த்தைகள் ஈட்டியாய் வந்து மைதிலியின் உடலை தாக்கிக் கொண்டிருந்தன. இதழ்களை இறுக்கி வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்தாள்.
வேதனையா? தனக்கா? பத்தொன்பது வருடங்கள் பூப்படுக்கையைப் போல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு வேதனையை அனுபவித்து இருந்தால் அவன் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் எரிமலைக் குழம்பாய் வெளிவந்திருக்கும்!
அவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் சத்தியம். சின்னவனாக இருந்தாலும் வாழ்க்கையின் சத்தியத்தைச் சொன்னான்.
இதைப் பற்றி தெரியாத போதுதான் சந்தோஷமாக இருந்திருக்கிறான். அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் அவள் பறித்துவிட்டாள். பெற்றெடுத்த தாயாக அவனை ஒருநாளும் கையில் எடுத்துக் கொள்ளா விட்டாலும், அவன் வாழ்க்கை அவன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இன்று தான் போய் அவனுக்குப் புதிதாக வேதனையை பரிசாக அளித்துவிட்டு வந்தாள். இத்தனை நாளும் தன்னுடைய தவிப்பைப் பற்றியே யோசித்தாள். அவன் மனதைப் பற்றி யோசிக்கவே இல்லை. வெறும் சுயநலக்காரி! வாழ்க்கையில் தான் அவனுக்கு எதுவுமே தரவில்லை. இத்தனை நாட்கள் கழித்து தாய்மையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஓடினாள்.
சின்னவனாக இருந்தாலும் பளிச்சென்று பதில் சொன்னான். இந்த உலகத்தில் இதைவிட பெரிய அடி கன்னத்தில் எந்த தாய்க்கும் கிடைத்து இருக்காதோ என்னவோ.
“மைதிலி!” அழைப்பு கேட்டது.
மைதிலி கண்களைத் திறந்தாள். எதிரே அபிஜித் நின்றிருந்தான். அவள் கண்கள் ஏதோ உலகத்திலிருந்து மெதுவாய் இறங்கி வந்தது போல் அவனை அடையாளம் கண்டு கொண்டன.
அவன் கையில் பஞ்சும், பிளாஸ்டரும் இருந்தன. சோபாவின் பின்னால் வந்து அவள் நெற்றியில் ஏற்பட்ட காயத்தைத் துடைத்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தான்.
“அடி பட்டுவிட்டது அபீ!”
“பார்த்தேன். ரத்தம் வந்திருக்கிறது.”
ஒரு நிமிடம் மௌனம் நிலவியது.
“காயம் எப்படி பட்டதென்று கேட்க மாட்டாயா?”
“எப்படி பட்டது என்பது அனாவசியம். காரணம் எதுவாக இருந்தாலும் அடிபட்டிருக்கிறது. உனக்கு வேதனையாக இருக்கிறது. நான் செய்ய வேண்டிய வேலை கட்டுபோட்டு உனக்கு வேதனையிலிருந்து மீட்சி அளிப்பது. அவ்வளவுதான்.”
“நீ எப்போ வந்தாய்?’
“வந்து ரொம்ப நேரமாகிவிட்டது.
திரும்பவும் அவள் மௌனமுத்திரையில் ஆழ்ந்துவிட்டாள். அவன் வந்து பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளப் போனான். நின்றுவிட்டான். எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
அவள் கண்களை மூடிகொண்டாள். அவன் அவள் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.
“அபீ!”
“என்னம்மா?”
“நம் கார் எரிந்து சாம்பலாகி விட்டது. வேண்டாதவர்கள் கொளுத்தி இருக்கிறார்கள்.”
“தெரியும்.”
மைதிலி கண்களைத் திறந்தாள். “ தெரியுமா?” நெற்றியைச் சுளித்தாள்.
அவன் மிருதுவான குரலில் சொன்னான். “அதே தெருவில் இருக்கும் நம் பேக்டரி ஆள் சங்கரன் போன் செய்து சொன்னான்.”
“நான் அங்கே இருந்தேன் என்று தெரிந்து விட்டதா?” கண்களை மூடிக் கொண்டாள். அவளால் வேதனையைத் தாங்க முடியவில்லை. “தெரிந்த பிறகும் எனக்காக ஏன் வரவில்லை?” அவள் குரலில் லேசான நிஷ்டூரம் வெளிப்பட்டது.
“நீயாகவே வீட்டுக்கு வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.” அவன் ஒரு நிமிடம் நின்று மீண்டும் சொன்னான். “சித்தார்த்தாவையும் வீட்டுக்கு அழைத்து வருவாய் என்று நினைத்தேன்.”
மைதிலி கண்களைத் திறந்தாள்.
“சித்தார்த்தாவை விட்டுவிட்டு எப்படி வந்தாய்?” என்று கேட்டான். “இந்த வீடு அவனுடையதும் கூட என்று நீ அவனிடம் சொல்லவில்லையா?”
மைதிலியின் கண்கள் அகல விரிந்தன. “உனக்கு… உனக்குத் தெரியுமா?” அந்தக் கண்களில் பயம் கலந்த சந்தேகம்.
அவன் கண்கள் நிர்மலாய், அன்பாய் இருந்தன. “நேற்று வரையிலும் தெரியாது. நேற்று சித்தூவுடன் ரமாகாந்த் நம் ஆபீசுக்கு வந்திருந்தான். அப்பொழுதுதான் உங்க அப்பா சானிடோரியத்திலிருந்து டாக்டர் வரும் போது காரில் வந்தார் பணத்திற்காக.”
மைதிலி நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்கள் அகல விரிய பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ரமாகாந்த் போன பிறகு உங்க அப்பா சொன்னார். மகன் இருக்கும் செய்தி தெரிந்த பிறகு நீ எப்படி இருக்கிறாயோ என்று கவலைப் பட்டார். நம் திருமணத்திற்கு முன்பு உனக்கு அபார்ஷன் ஆனதாக தான் சொன்னது பொய் என்றும், மகளுக்காக அந்தப் பொய் சொன்னதாகச் சொன்னார்.”
“அபீ!” மைதிலி சோபாவை விட்டு எழுந்து கொண்டாள். கீழே சரிந்து அவன் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அவன் அவள் தலைமீது கையை வைத்தான். அந்த தொடுகை அவளுடன் அவனுக்கு ஜென்ம ஜென்மமாய் இருந்த பந்தத்திற்கு எடுத்துக் காட்டாய் இருந்தது.
“நேற்று சீக்கிரமாக வந்துவிட்டேன், இதைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக. சித்தூவிடம் உன் நடவடிக்கை முதலில் எனக்குப் புரியவில்லை. உன் மேஜையை ஏதோ காகிதங்களுக்காக தேடியபோது அரவிந்தின் போட்டோ தென்பட்டது. அவனிடம் சித்தூவின் ஜாடை! எனக்கு சந்தேகம் வந்தது. சித்தூ வந்த பிறகு நீ குழந்தைப் பற்றிய பேச்சை எடுப்பதை விட்டுவிட்டாய். நீ சொல்லப் போகும் உண்மைக்காக காத்திருந்தேன்.”
“அபீ! என்னை மன்னித்து விடு.” அவன் மடியில் மேலும் புதைத்துக் கொண்டாள்.
“மன்னிக்க மாட்டேன் என்று சொல்லத் தோன்றுகிறது. எதற்காக சொல்ல முடியாமல் போய்விட்டாய்? உன் மகன் எனக்கு மகன் இல்லையா? உன் சந்தோஷத்தில் எனக்கு பங்கு இல்லையா? நான் ஏன் வேற்று மனிதன் ஆகிவிட்டேன்?”
“அபீ! ப்ளீஸ்…..ப்ளீஸ்.”
“உங்க அப்பாவின்மீது நான் கோபப்பட்டேன். நீங்க ஏமாற்றியது என்னை இல்லை, மைதிலியை. பத்தொன்பது வருடங்கள் அவளுக்கு சந்தோஷம் இல்லாமல் செய்து விட்டீங்க என்றேன். மைதிலி! நான் உன்னை விரும்பினேன். உனக்கு மகன் இருப்பது தெரிந்தால் நான் கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று நினைத்துவிட்டார் உன் தந்தை.”
“அபீ!” மைதிலி எழுந்துகொண்டு அவன் கழுத்தைச் சுற்றிலும் கைகளைப் போட்டு அவன் மார்பில் சரிந்தாள்.
“நேற்று நான் ஊரிலிருந்து நேராக ஆபீசுக்குப் போனேன். பைல்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது சித்தூ வந்தான். ராஜினாமா கொடுத்துவிட்டுப் போனான்.”
இருவரும் மௌனமாக இருந்துவிட்டார்கள். மைதிலி அவன் கைகளுக்கு இடையில் முன்னைப் போல் நிம்மதியாக இருக்கவில்லை. அவள் உடல் அமைதியின்மையால் அதிர்ந்து கொண்டிருதது.
அவனுக்குப் புரிந்து விட்டது. அவள் உடல் மட்டும் தன் கைகளுக்கு இடையில் இருக்கிறது. அவள் மனம் இங்கே இருக்கவில்லை.
அவன் உடல் ஜுரத்தால் கொதித்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அவளுக்கு அந்த தொடுகையின் உணர்வு இருக்கவில்லை.
அவளை இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு போய் கட்டில் மீது உட்கார வைத்தான். “காபி வேண்டுமா?” என்று கேட்டான்.
தலையை அசைத்தாள். அபிஜித் எழுந்து போனான். அவனுக்கு முதுகு எலும்பில் நடுக்கம் பரவியது. தோள் மீது இருந்த சால்வையை எடுத்து தோளைச் சுற்றிலும் போர்த்திக் கொண்டான். ராஜம்மா ஏற்கனவே சூடாக பிளாஸ்கில் வைத்திருந்த பாலை கோப்பையில் ஊற்றி ப்ரூ, சர்க்கரை போட்டு ஸ்பூனால் கலந்து கொண்டிருந்த போது அறையில் அரவம் கேட்டது.
கோப்பையை எடுத்துக் கொள்ளப் போனவன் திரும்பிப் பார்த்தான்.
மைதிலி சூட்கேசை எடுத்து வந்து கட்டில் மீது வைத்து அதில் அரவிந்தின் போட்டோவை வைத்தாள். தன்னுடைய டிக்ரி சர்டிபிகேட் பைலை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன இது?” அபிஜித் கேட்டான்.
“நான் போகிறேன்,”
“எங்கே?”
“சித்தூவிடம்.”
அவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனாற்போல் நின்றுவிட்டான். காபி விஷயத்தை மறந்து போனவனாய் கட்டில் அருகில் வந்தான். மைதிலியின் கையைப் பிடித்து தடுத்தான்.
“அபீ! ப்ளீஸ்.. என்னைத் தடுக்காதே.” துக்கமும், இயலாமையும் அவள் முகத்தில் கலவையாய் தென்பட்டன.
“நீ எதுக்காக போகணும்?”
“அவன் வர மாட்டான் என்பதால்.”
“நான் அழைத்து வருகிறேன்.” அவன் குரலில் உறுதி தெரிந்தது.
“அபீ! உனக்குத் தெரியாது. அவன் வரமாட்டான். பிடிவாதக்காரன். ரொம்ப பிடிவாதம்.” மைதிலிக்கு சித்தூவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. கைகளால் முகத்தை மூடியபடி தலையை திருப்பிக் கொண்டாள். சித்தூவின் வார்த்தைகள் ஈட்டியாய் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன. அவள் அழுது கொண்டிருந்தாள்.
அபிஜித் எழுந்து மனைவியின் தோளைப் பற்றி அருகில் இழுத்துக் கொண்டான். “மைதிலி!” நயமான குரலில் ஏதோ சொல்லப் போனான்.
மைதிலி அவன் கைகளை விடுவித்துக் கொண்டாள். இரண்டு கைகளையும் கூப்பி வேண்டுகோள் விடுப்பது போல் “அபீ! ப்ளீஸ்.. எனக்கு விடுதலை கொடு” என்றாள்.
அவன் கல்லாகச் சமைந்துவிட்டான். உள்ளூர எழும்பிய ஆவேசத்தை தாடை எலும்பை இறுக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவனுக்கு அவள் சொன்னது புரியவில்லை. பதினெட்டு வருடங்கள் ஒரே மனதாய் வாழ்ந்த அவள் வார்த்தைகள் அவனுக்கு விளங்கவில்லை.
“நீ எத்தனையோ தடவை என் சுதந்திரத்தைப் பற்றி பேசி இருக்கிறாய். அந்த தருணம் இப்போது வந்து விட்டது. எனக்கு சுயேச்சையைக் கொடுத்து விடுதலை செய். பதினெட்டு வருடங்கள் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்தேன். சந்தோஷத்தை உன்னுடன் பகிர்ந்துக் கொண்டேன். என் எதிர்காலம், எஞ்சியிருக்கும் என் வாழ்க்கை எல்லாம் அவனுக்கு சொந்தம்.”
அபிஜித் ஓரடி பின்னால் வைத்தான். திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மைதிலி புடவைத் தலைப்பால் கண்ணீரை ஒற்றிக் கொண்டே சொன்னாள். “அவன் ஏதோ ஒரு இடத்தில் மற்றக் குழந்தைகளை போல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தால் நான் இவ்வளவு வேதனைப் பட்டு இருக்க மாட்டேன். கடந்த இருபது வருடங்களாக அவன் அனுபவித்த வேதனைகளை நினைத்தால்… வேண்டாம். நடந்து முடிந்து போனதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது, நடக்க வேண்டியதை என்னால் சரி பண்ண முடியும். என்னை போக விடு. அபீ! அரவிந்தின் அறிமுகத்தில் வாழ்க்கையைவிட திருமணம் உயர்ந்தது என்று நினைத்தேன். உன்னுடைய அறிமுகத்தில் திருமணத்தை விட காதல் உயர்ந்தது என்று புரிந்துக் கொண்டேன். ஆனால் சித்தூவின் வருகையால் இந்த சிருஷ்டியில் தாய்மையை விட மிஞ்சியது, மதிப்பு வாய்ந்தது, வேண்டியது எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் எனக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டது.”
”மைதிலி!”
“நீ இரண்டாவது திருமணம் செய்துகொள். உனக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அதனால்தான் நமக்கு குழந்தை பிறக்கவில்லையோ என்னவோ.”
குழந்தையின் பேச்சு வந்ததும் எப்போதும் போல் மைதிலியின் குரல் உணர்ச்சி வசப்படவில்லை. எந்த விதமான உணர்வும் இல்லாமல் அந்த வார்த்தைகளைச் சொன்னாள்.
அபிஜித் முகத்தில் அதுவரையில் அடக்கி வைத்திருந்த ஆவேசம் பொங்கி வந்தது. அவள் தோளில் கையை வைத்து தன்பக்கம் திருப்பிக் கொண்டான். “மைதிலி! எண்ணக் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாயா?”
“ஆமாம். உன்னுடைய நன்மைக்காகத்தான். உன் சுகத்திற்காகதான். நான் சந்தோஷமாக இருக்கப் போகிறேன். நீயும் இருக்க வேண்டும் என்றுதான்.”
“ஒரு கேள்விக்கு பதில் சொல்லு.”
அவள் அவன் கண்களுக்குள் பார்த்தாள். அவன் பார்வை தூண்டில் போடுவது போல் இருந்தன.
“சித்தார்த்தா சுகமாக இருப்பான் என்றால் நீ அவனை யாருக்காவது தானமாக கொடுத்து விடுவாயா?” நேராக பார்த்துக் கொண்டே கேட்டான்.
அவள் கண்கள் படபடத்தன. அந்தக் கண்களில் வேதனை, வெறுப்பு தென்பட்டன.
அபிஜித் அவளை விட்டுவிட்டான். அவனுக்கு பதில் கிடைத்து விட்டது. அவள் வாயைத் திறந்து சொல்லவில்லை.
“சித்தூவை உன்னால் கொடுக்க முடியாது. ஆனால் இன்னொரு பெண்ணுக்கு என்னை கணவனாக தானம் கொடுத்து விடுவாய். உண்மையான தாய் என்பதை நிரூபித்துவிட்டாய். அன்று சுரேந்தரா சொன்னது இத்தனை வருடங்களுக்கு பிறகு உண்மையாகி விட்டது.” பின்னால் திரும்பி அவன் மேஜை அருகில் வந்தான். ‘எத்தனை பைத்தியக்காரன் நான்! உன் சந்தோஷத்தில் பாதி எனக்கு என்று நம்பி வந்தேன்’ என்று நினைத்துக் கொண்டான்.
“அபீ! ப்ளீஸ்! நீ ஆவேசமடைந்தால் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. நான் சித்தூவிடம் போவது தான் நியாயம். அவன் குழந்தை! தனிமையில் திண்டாடுகிறான். நல்ல எதிர்காலம் உருவாக்கிக் கொள்ள வேண்டியவன். இந்த உலகத்தைப் பற்றி அவனுக்கு இன்னும் முழுமையாக தெரியாது. நீ அனுபவசாலி. வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்டங்களை உன்னால் சமாளிக்க முடியும். அதனால்தான் உன்னிடம் இருந்து கொண்டு அவனை வருத்தப்பட வைப்பதை விட அவனிடம் இருந்து உனக்கு வேதனை தந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது தவறு இல்லையே?”
இயலாமையை வெளிப்படுத்துவது போல் அவள் கேட்ட கேள்வி அவன் மனதில் அன்பை, பிரியத்தை இருமடங்காக்கி விட்டது. அவள் தன்னை விட்டுப் போவதை அவனால் சகித்துக்கொள்ள முடியாது. அந்த சக்தி தனக்கு இல்லை என்று மைதிலியால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் எடுத்த முடிவை பாராட்டாமல் அவனால் இருக்க முடியவில்லை.
தாயின் அன்புக்கு எடுத்துக்காட்டாக நின்ற மைதிலியை பார்க்கும் போது மேலும் அபூர்வமாகத் தோன்றினாள்.
மைதிலி சூட்கேஸை எடுத்துக் கொண்டாள். “போகிறேன் அபீ!” என்றாள். அவன் பதில் பேசவில்லை.
அவன் நின்றுகொண்டிருந்த தோரணை அவளுக்கு வேதனையாக இருந்தது. இருந்தாலும் அவள் அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டாள். இந்த நிமிடம் முதல் வாழ்க்கை தன்னுடையது இல்லை. சித்தூவுடையது.
மைதிலி சூட்கேசை எடுத்துக் கொண்டு அறையின் வாசலைத் தாண்டிக் கொண்டிருந்தாள். அபிஜித் திரும்பிப் பார்த்தான். அவள் இரண்டாவது பாதம் லக்ஷ்மண ரேகையைப் போன்ற எல்லையைத் தாண்டி கொண்டிருந்தது.
வாழ்க்கையில் என்றும் இல்லாத விதமாய் கசப்பான அனுபவம் அவனை சூழ்ந்து கொண்டது. சித்தூவுக்காக தன்னைத் துறந்துக் கொண்டு இருக்கிறாள். பதினெட்டு வருட தாம்பத்திய வாழ்க்கை அவளை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது, தன்னை அனாயசமாக விட்டுவிடக் கூடிய சக்தி அவளுக்கு வந்து விட்டது.
அது அவளுக்குள் இருந்த தாய்மை! எது வேண்டுமென்று தான் வேண்டிக் கொண்டிருந்தானோ அது தனக்குக் கிடைக்கவில்லை. காலத்தின் கர்ப்பத்திலிருந்து கிடைத்த அமிருதபாண்டத்தை பெற்றுக்கொள்ள அவள் போய்க் கொண்டிருக்கிறாள். தன்னுடைய அன்பு, காதல் எதுவுமே அவளை நிறுத்த முடியவில்லை. அவனுக்கு தோல்வி!
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்