இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க…..

0 minutes, 0 seconds Read
This entry is part 16 of 19 in the series 5 ஜூலை 2015

bird

1
சில சமயம் பேருந்தில் _
சில சமயம் மின்ரயிலில் _
ஆட்டோ, ஷேர் – ஆட்டோ _
‘நேயம் நாய்ப்பிழைப்பல்லோ’ என்று உச்சஸ்தாயியில்
நெக்குருகிப் பாடும் ஆண்குரல்
உச்சிமண்டையில் ஓங்கியறைய
விரையும் ‘மாக்ஸி cab’ _
பல நேரம் பொடிநடையாய்……..
பப்பாதி ஓட்டமாய்

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

2
மொட்டைமாடிக்குச் சென்று
இன்னமும் நிழல் நிற்கும் மூன்று இடங்களில் இறைக்கிறேன்
அரிசியையும் கோதுமையையும்;
இரண்டொரு வாயகன்ற பாத்திரங்களில் நீரூற்றிவைக்கிறேன்.
காகங்களும் புறாக்களும் ஆரவாரக்கூச்சலிட்டவாறு
விர்ரென்று கீழிறங்கிவருகின்றன…..
அபூர்வமாய்ச் செடிகளில் பூத்திருப்பவைகளைக் கொய்வதா வேண்டாவா
என்று ஓரிரு நிமிடங்கள் குழம்பிநிற்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

3
அருகே அமர்ந்திருப்பவர் ஏதோ கேட்க
சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறேன்.
அலுவலகத்தில் அதிகாரி தரும் கடிதத்தை
கணிணியில் தட்டச்சு செய்துதருகிறேன்.
கவனமாய் ‘ஷிப்ட் கீ’யை அழுத்தி
‘ற’வுக்கு பதில் ‘ர’ விழுந்துவிடாமல்
பார்த்துக்கொள்கிறேன்…..

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

4
விருந்தினர் வருகை.
உறவினருக்கேயுரிய அறிவுரைகள் தரப்படுகின்றன:
”வருங்காலத்திற்கென்று இனியேனும் சேமிக்க ஆரம்பி”;
சரி என்பதாய் சிறிதே தலையசைக்கிறேன்.
காற்றில் ஈரப்பதம் அறவேயில்லை என்கிறார்.
ஆமோதிக்கிறேன்.
மாற்றம் வரும் தேர்தலில் என்கிறார்.
மறுப்புத் தெரிவிக்கவில்லை.
முத்தாய்ப்பாய் ”நல்லாயிரு” என்று விடைபெற்றுச் செல்பவரை
வாயில்வரை சென்று வழியனுப்பிவைக்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணாமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

5
மாலை ஸ்டிக்கர் பொட்டுகள் வாங்கச் செல்கிறேன்;
செருப்பு வாங்கிவருகிறேன்.
தக்கர் பாபா வித்யாலயாவில் நடக்கும் இலக்கியக் கூட்டத்தில்
தவறாமல் கலந்துகொள்கிறேன்
கோன் – ஐஸ்கிரீம் சாப்பிடுகிறேன்;
பன்னீர்சோடா குடிக்கிறேன்….

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

6
கோயிலுக்குச் செல்கிறேன்.
குட்டிப்பெண்ணாய் அந்தக் கூடத்தில மர்ந்து
தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட சுலோகங்களை
முணுமுணுத்தபடி வலம் வருகிறேன்
கருங்கற்சுவர்களில் பதித்துள்ள திருவாசகப் பாடல்களை
வாய்விட்டுப் படிக்கிறேன்.
கடவுள் உண்டோ, இல்லையோ
கசிந்துருகும் மனம் கண்களில் நீர் நிரம்பச் செய்கிறது.
பிராகாராத்தின் ஆடியில் தெரியும் என் முகம் யாரோவாக,
என் குரலை நான் கேட்கக் கிடைப்பது
ஆன பெறும் பேறாக ,
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம்
ஆசிர்வதிக்கிறது வானம்….

இன்றின் எல்லாநேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்.

7
இரவு சாப்பிடுவதற்கு முன் சில மாத்திரைகள்….
சாப்பிட்ட பின் சில வேறு….
கால்ஷியம், விட்டமின், டானிக் மேலும்…..
வாயு ரத்த அழுத்தம் மலச்சிக்கல் சீதபேதி
கபம், இருமல், திடீர்க்காய்ச்சல் முழங்கால் குடைச்சல்……
தலைவலிக்கு அமிர்தாஞ்ஜன்;
இடுப்புவலிக்கு ஃப்ராஞ்ச் ஆயில்….
நீளும் பட்டியலுக்கப்பால் _

இன்றின் எல்லா நேரமும் பயணமாகிக்கொண்டிருக்கிறேன்
வலியினூடாய்…..

8
உறங்கத் தவிக்கும் மனதில்
காலைக்காட்சியொன்று நிழலாடுகிறது
வலி(யும்)நிவாரண(மு)மாய்….?

அடிக்கொன்றாய் பல வண்ண வடிவங்களில்
அணிவகுத்து விரைந்துகொண்டிருக்கின்றன வாகனங்கள்.
‘சிக்னல்’ஐ சபித்துக்கொண்டே பாதசாரிகள் கடந்துசெல்வதற்கான கோட்டில்
வழிமறித்து நிற்கும் சில.
வாழ்வின் பாதியில் விழித்திரை கிழிந்துபோன முதியவ ரொருவர்
கழியால் வழியைத் துழாவிச் செல்கிறார்
வெற்றுப்பார்வையும் மண்ணாந்தைச் சிரிப்புமாய்.
எனக்குப் பரிச்சயமானவர்தான்.
‘சாவுகிராக்கி’ என்று அடிக்குரலில் இரைகிறான் கார்வண்டிக்காரன்.
”செத்துப்போயேன்” என்று நேற்றுத்தான் வெளியே தள்ளிவிட்டான் மகன்
இவருடைய சொத்தையெல்லாம் எழுதிவாங்கிக்கொண்ட பின்.
பத்தினியோ பதினைந்துவருடங்களுக்கு முன்னால்
பத்துலட்சத்திற்குமேல் பணத்தோடு போய்விட்டிருந்தாள்
பக்கத்துவீட்டுக்காரனோடு.

Series Navigationகவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசுசிலந்தி வலை
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *