தொழில் தர்மம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 19 in the series 5 ஜூலை 2015

ராஜா ராஜேந்திரன்

சதா போனில் பேசிக்கொண்டும், பைக்கில் ஆங்காங்கே அலைந்தபடியும் பிஸியாய் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நான், இப்படி கயிற்றுக் கட்டிலில் முடங்கிக் கிடப்பேனென்று பத்துமணி நேரம் முன்புவரை கூட எனக்குத் தெரியாது !

இன்று விடிவதற்கு முன், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு வட நாட்டு வியாபாரி பதட்டத்துடன், ’தான் லோட் ஏற்றி அனுப்பி வைத்த வெந்தய லாரி, ஆந்திரா அருகே ஒர் ஆற்றுப்பாலத்திலிருந்து கவிழ்ந்து விட்டதாகவும், உடனடியாக அங்குச் சென்று, ’நடந்தது என்ன ?’ ஏற்றி அனுப்பிய சரக்கின் கதி ?……..இதுபற்றியெல்லாம் ஒரு கள ரிப்போர்ட் கொடுக்கும்படி’ பணித்தார்.

அந்தச் சரக்கு இங்கு சென்னை நோக்கி எங்களுக்காக வந்துக் கொண்டிருந்த லாரிதான், ஆனால் லாரி சென்னைக்குள் வந்து எங்கள் கிடங்கிக்குள் அன் லோட் ஆகும்வரைக்குமான ரிஸ்க், ஏற்றிவிட்ட வட நாட்டு வியாபாரியையேச் சாரும் என்பதால்……….’ஒட்டு மொத்தச் சரக்கும்(பதினைந்து லட்சம் பெறுமானம்) ஆற்றில் மூழ்கி அடித்துப் போயிருக்குமோ ?’ எனப் பயந்து, உடனடியாகக் கிளம்பிப் போகுமாறு வேண்டினார்.

அவர் சொன்ன இடம் நெல்லூர், ஓங்கோலைத் தாண்டி இருந்தது. அதிகபட்சம் நெல்லூர் வரை போயிருக்கிறேன், இது ஏதோ ஒரு கிராமம் வேறு. வட நாட்டு வியாபாரிக்கும், லாரி விபத்து நடந்த இடம் பற்றி துல்லியமான தகவல் இல்லை, பாவம் அவருக்கு இந்த விபத்துச் சேதி, நள்ளிரவுக்கு மேல் போனதில், அரைத் தூக்கத்தில் நிகழ்ந்தது ஒன்றுமே புரியாமல் குழம்பி, ட்ரான்ஸ்போர்ட் ஆபீஸ், ஹைதராபாத் ப்ராஞ்ச் மேனேஜர் என எங்கெங்கெல்லாமோ பேசி, கடைசியாகத்தான் என்னை அழைத்திருந்திருக்கிறார்.

தூரம் அதிகம், உடனடியாக ட்ராவல்ஸில் காரெல்லாம் இருக்குமோ, இருக்காதோ……கையில் இருந்த சொற்பத் தொகை, ஏடிஎம் கார்டு என தடாலடியாகக் கிளம்பி, கோயம்பேடு வந்து, அங்கு நெல்லூருக்குத் தயாராக இருந்த ஓர் ஆந்திர அரசு பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.

அது லோக்கல் பஸ் போல ஊர்ந்து, உச்சி வெயில் பொழுதில் நெல்லூர் போய்ச் சேர்ந்தது, அங்கிருந்து ஓங்கோல் போகும் பஸ் தேடி அலைந்து, அதுவும் கிட்டியது. ட்ரைவரும், கண்டக்டரும் ஒரே ஆள். ஏறும்போதே ட்ரைவர் டிக்கெட் கொடுத்துதான் உள்ளே அனுப்பினார். இப்படியாக ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் நுழைந்து, பயணிகள் ஏறியபின்னர் அவரே டிக்கெட், சில்லறைப்பிரச்சினைகள் முடித்து………ஓங்கோல் போய்ச்சேர நாலு மணி ஆகிவிட்டது. அங்கிருந்து அத்தங்கி எனும் ஓர் ஊராம். ஸ்பாட் அதுவுமில்லை, அத்தங்கி போனபின், ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து பத்து கிலோ மீட்டர் தள்ளிப் போனால், உயிருக்கு ஊசலாடும் கரப்பான் பூச்சி போல, மல்லாந்து கிடந்தது அந்த மத்திய பிரதேசப் பதிவு கூண்டு லாரி ! மேற்கே சூரியன் செம்மையாய் சிறிகச் சிறுக கீழிறங்கிக் கொண்டிருந்தான்.

உண்மையில் அந்த வட நாட்டு வியாபாரி பேரதரிஷ்டசாலி. அந்த பிரம்மாண்ட லாரி ஆத்துக்குள் எல்லாம் கவிழ்ந்திருக்கவில்லை. அது ஒரு முட்டாள்த்தனமான மரண வளைவு. ட்ரைவர் பிரம்ம முகூர்த்தம் கொடுத்த மயக்கத்தில் சற்றே கண் அயர, வளைவை சரியாக கணிக்க முடியாமல், ஸ்டியரிங்கை அதிகமாக வலித்து, லாரி சாலையிலிருந்து நழுவி எட்டடி பள்ள வயலுக்குள் பாய்ந்து, கர்ணம் அடித்திருக்கிறது. ட்ரைவருக்கு நல்ல அடி. பிரக்ஞையின்றி மருத்துவமனையில் இருக்கிறாராம், துணை டிரைவருக்கும் பலத்த காயம்தான் என்றாலும், நினைவிருந்ததால் சேதியை மட்டும் எப்படியோ சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். லாரி அனாதையாக சில மணி நேரம் அங்கேயே கிடந்திருக்கிறது.

விடிந்தபின்னரும், அப்படியே இருந்திருந்தால் சேதி பரவி, சரக்குகள் எல்லாம் கொள்ளை போகும் அபாயமிருந்ததால், லாரி ஓனர் உடனடியாக அருகிலிருந்த தம் ஏஜண்ட்களை பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்திருந்திருக்கிறார். என்னை விட பல மணி நேரம் முன்னதாகவே அவர்கள், வந்துவிட்டிருந்ததால், சரக்கு தப்பியிருந்தது, ஆனால் லாரியின் தார்ப்பாய் கிழிந்து, உச்சியில் இருந்த சரக்குக்குள் வயலில் பாய்ச்சியிருந்த நீர் புகுந்து சேதமாகியிருந்தது, பரவால்ல விடுங்க, தலையே போக இருந்தவனுக்கு தலைப்பாகைல தூசி பட்டாப்பலத்தான் இது !

என்னுடைய ஆண்ட்ராய்ட் போனில் மல்லாந்திருந்த லாரியை போட்டொ எடுத்து, வாட்ஸ் அப்பில் அனுப்பி, கள ஆய்வை உள்ளது உள்ளபடி கொண்டுச் சேர்த்ததில், மிகவும் ஆசுவாசமானார் அந்த வட நாட்டு வியாபாரி. ஆனால் இதுவரை சொன்னது கதையே இல்லையே ? இது வெறும் முன்னோட்டம் அவ்வளவுதான்.

க்ரேன் கொண்டுவந்து பள்ளத்திலிருந்து லாரியை மேலே தூக்கி, சரக்குகளை வேறு லாரிக்கு மாற்ற வேண்டிய வேலைகளையெல்லாம் ட்ரான்ஸ்போர்ட் ஆட்களும், லாரி ஓனர் ஆட்களும் பார்த்துக் கொள்வார்கள், நாம் கிளம்பலாம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில்……… நினைப்புக்கு வந்தது வேட்டு !

அந்த சின்ன ஊரில் கிட்டிய சின்ன கிரேனை வைத்து அவ்வளவு பெரிய லாரியை தூக்கவே முடியாது என்று நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கிரேன் ட்ரைவர் ஒத்துக்கொண்டார். நடந்த களேபரத்தில் அவருடைய செல்ஃபோனை வேடிக்கை பார்த்த கூட்டத்திலிருந்த எவனோ ஒருவன் அபேஸ் செய்திருந்தான். தொலைந்த அந்த ப்ளாக் அண்ட் வொயிட் செட்டிற்கும் சேர்த்து, லாரியை ஒரே ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல் 5000/- ரூபாயை, எரியும் வீட்டில் பிடுங்கிக் கொண்டு போனான் அந்தக் க்ரேன் ட்ரைவர்.

’சரக்கை ஏற்றாமல் தயவு செய்து அவ்விடத்திலிருந்து நகரவே நகராதே’ என அந்த வட நாட்டு வியாபாரி சொல்லிவிட, நான் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று ! நெல்லூரிலிருந்து பெரிய க்ரேன் வருவதாகச் சொல்லி, ”சரியான நேரத்திற்கு வந்துவிட்டால், இரவுக்குள் வேலை முடிந்துவிடும், பொறுங்க’ என்று, அந்தக் கிராமத்தின் சாலையோரமிருந்த ஒரு டீக்கடையில் என்னை ஓய்வடுக்கச் சொன்னார் லாரியின் ஓனர். ஏதோ ஓர் அலுவலாக குண்டூர் வந்திருந்தவர், விஷயம் கேள்விப்பட்டு காரில் உடனடியாகக் கிளம்பி ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். எல்லாச் செலவையும் இப்போதைக்கு அவர்தான் பொறுப்பேற்றுச் செய்துக் கொண்டிருந்தார்.

ஒரு சிறிய குடிசைதான் அந்தக் கடை. டீக்கடை கூட அருகில் வேறு ஓர் ஆள் வைத்திருந்தான், இது நம்ம ஊர் வெற்றிலை பாக்குக் கடை போல, பிஸ்கட்கள், கடலை மிட்டாய், சாக்லேட்கள், வாழைப்பழம், பீடி, சுருட்டு, சிகரெட், பாக்குச் சரங்கள் என ஓர் அடுக்கில் இருக்க, ரெஃப்ரிஜிரேட்டர் இல்லாமல் குளிர்பானங்கள் ஓர் ஒரமாய், மரப் பெட்டியில் இருந்தது. ஒரு பிரம்மாண்ட மண் பானையில் தண்ணீரும், பீங்கான் தட்டு கொண்டு மூடி, நசுங்கிப்போயிருந்த பழைய செம்பு அதன் மேல் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு மூன்று நாட்டுக் கோழிகளும், ஏழுட்டு கோழிக்குஞ்சுகளும் கூட அந்தக் குடிசைக்குள் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தது. குடிசையின் பின் வாசல் வழியாக வந்திருக்கக் கூடும்.

ஒரு வயதான பெரியம்மாதான் அந்தக் கடைக்கு ஓனர் என நானாக அவதானித்தேன். வயோதிகத்தில் உடல் ஊதிக் கிடந்ததால், அந்தப் பெரியம்மா கடையிலிருந்த ஒரு கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தபடியே வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். நேஷ்னல் பெர்மிட் லாரிகள், கண்டெய்னர் லாரிகள், கரும்புகளை வானுயரம் அடுக்கிக் கொண்டு போகும் ட்ராக்டர் ஓட்டுனர்கள், உதவியாளர்கள்தான் இந்தக் கடைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் போல.

ஹைதராபாத்திலிருந்து நெல்லூர் வழியாக சென்னை அல்லது வேறு ஊர்களுக்குச் செல்லும் லாரிகளுக்கு, இந்தச் சாலை ஒரு குறுக்கு வழியென்பதால், இடைவிடாத போக்குவரத்து இருந்தது. இதனால் இந்தக் கடைக்கும் வரிசையாக ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். வந்தவர்கள் பெரும்பாலும் சிகரெட், பீடி, பாக்கு வாங்கும் கஸ்டமர்களாக இருந்ததால், கல்லாவில் அவர்களே காசு போட்டுவிட்டு, தேவையானதை எடுத்துக் கொண்டு, ‘சூஸ்கோம்மா’ என்று அந்த பெரியம்மாவிடம் காட்டிவிட்டு சென்றனர். ஒருசிலர், உள்ளே மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலை தலைக்கு மேல் தூக்கியபடி, கடைக்கு வெளியே போட்டு படுத்தும் கொண்டனர்.

’லாரியில் இருக்கும் சரக்குக்கு உரியவர்’ என்று லாரி ஏஜண்ட்கள் என்னைப் பற்றி, அந்தப் பெரியம்மவிடம் சொல்லியிருப்பார்கள் போல. பச்சாதாபத்துடனேயே பேசினார் அந்தப் பெரியம்மா. ’ராய்யா ராஜா, லோப்ல ரா, இக்கட கூஸ்கோம்மா’ கட்டிலில் தயங்கி தயங்கி நுனியில் அமர்ந்தேன்.

கயிற்றுக்கட்டில் அமர்வதற்கு அத்துணை வசதியாகவும் இல்லை. ’அய்ய நல்லா உள்ள வந்து ஒக்காருய்யா’ என்று பரிவுடன் தெலுங்கில் சொன்னார். ஓங்கோலைத் தாண்டிய தெலுங்கு என்பதால், ஓரிரு வார்த்தைகளைத் தவிர, எதுவுமே புரியவில்லை. ’இதுவாக இருக்கலாம்’ என நானாக ஒன்றை அவதானிக்க வேண்டியிருந்தது.

வசதியில்லாமல் அப்படி அமர்ந்து சாலையை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அவள் கண்ணில் பட்டாள். மாநிறத்தில் இருந்தாள். தலை நிறைய மல்லியோ, ஜாதியோ வெள்ளையாய் பூக்கள். முகம் நல்ல களையாக இருந்தது. குள்ளமுமில்லை, உயரமுமில்லை சராசரியான உயரம். அருமையான கட்டுடல். அக்மார்க் நாட்டுக்கட்டை. கைகள் நிறைய கண்ணாடி வளையல்கள், ஜல் ஜல் கொலுசு !

பரிச்சயமானவர்கள் யாருமேயில்லாத துணிவில், அவளை சற்றும் வெட்கமின்றி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை ஒரு மனிதனாகக் கூட அவள் கண்டுகொள்ளாதது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. கடைக்குள் வந்தவள், அந்த பெரியம்மாவிடம் ஏதோ சொல்லி விட்டு, சாலையைக் கடந்து எதிர்புற திசைக்குப் போய், பஸ்ஸிற்கு காத்திருப்பவள் போல, நின்றுகொண்டாள்.

ரெண்டு மூன்று பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் அவளைக் கடந்து சென்ற போதிலும் எல்லாவற்றையும் அலட்சியம் செய்தவள், பெரிய பெரிய ட்ரக்குகள் வந்த வேளைகளில் மட்டும், தன் இடது கட்டை விரலை உயர்த்தி, லிப்ட் கேட்ட வண்ணமிருந்தாள். நிறைய லாரிகள் அவளை உதாசீனப்படுத்திக் கடந்தாலும், ஒரு லாரி அவளைக் கடந்து ஐம்பதடி போன பின்னர் நின்றது. இவள் லாரி நின்ற திசை நோக்கி ஓடிப்போக, லாரியிலிருந்து ஒருவன் நீட்டிய கைபற்றி, அப்படியே துள்ளிக் குதித்தேறினாள்.

’சரி, அவளுக்குத் தெரிஞ்ச லாரிக்காரன் போல’ என்று, இருந்த களைப்பில் லேசாய் சரிந்து கண்ணயர முயற்சித்தேன். ஒரு மணி நேரம் அசந்துவிட்டேன் போல. “வா சார், டீ சாப்பிடலாம்” என்று ஓர் ஏஜண்ட் உலுக்கி எழுப்பிய போது, திடுக்கிட்டு விழித்தேன். அனீச்சையாய் கைகள் மேல்பையைத் தடவி செல்ஃபோன் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டது !

”க்ரேன் வந்துடுச்சா ?”

“பாஸ், அத ஸ்பீடாவா ஓட்ட முடியும் ? அவன் அப்பவே ஓங்கோல்கிட்ட வந்தாச்சுன்னான், இப்ப கேட்டாலும் அதையே சொல்றான், அவனுக்கு கிராக்கிய விட்டுடக்கூடாதுன்ற எண்ணம், பொய் சொல்லிகிட்டே உருட்டிகிட்டு வருவான், அது நைட்டு பத்தாயிடும் பாஸ், அதும் நல்லதுக்குன்னே நினைச்சுக்குங்க, இங்க கொஞ்சம் ட்ராபிக்கும் கம்மியாயிடும், நமக்கு வேலை கொஞ்சம் சுளுவா இருக்கும்”

“ப்ச்ச்…….மேல இருந்த சரக்கெல்லாம் தண்ணீல ஊறி நாசமா போகுதே பாஸ்”

போலிக் கவலையுடன் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில், லாரி ஓனர், “க்ரேன் ஒச்சுந்தி, பின்ன ரா, பின்ன ரா” என்று எல்லோரையும் அழைத்தார்.

அவசர அவசரமாய் டீயை அரைகுறையாய் குடித்து ஏஜண்ட் ஓட, என்னால் அந்தச் சூடான சுவையான டீயை அவ்வளவு அவசரமாய் என்னால் விழுங்க முடியவில்லை. சரி நான் போய் என்ன பண்ணப் போறேன் ? அதனால் மெதுவாகவே அந்த ஏலக்காய் போட்டிருந்த டீயை உறிஞ்சினேன்.

பய்ய்ங்ங்ங் என்கிற பெரிய ப்ரேக் சத்தத்துடன் ஒரு கண்டெய்னர் லாரி வந்து நிற்க, அதிலிருந்து லாவகமாக குதித்தாள் அந்தக் கருப்பழகி. தலையில் பூ இல்லை. கீழிருந்து அவள் லாரியின் க்ளீனர் அமர்ந்திருந்த இடம் நோக்கி கை நீட்ட, அவன் ஒரு புடைத்த துணிப்பை போல ஏதோ கொடுத்தான். அவளுக்கு டாட்டா காட்டியபடியே செல்லோ பையா எனச் சொல்ல அந்தக் கண்டெய்னர் லாரி, ஊர்ந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.
’அந்தப் பக்கம் ஒரு லாரில போய், இந்தப் பக்கம் வேற ஒரு லாரியில வர்றா ? பக்கத்து ஊர் மார்க்கெட் கீர்க்கெட்டுக்குப் போயிருப்பாளோ ?’ (ஆமா பாஸ், நான் அவ்வளவு சூதானமான ஆள் கிடையாது, எடுத்தவுன்ன லாரில போற பொம்பளன்றதுக்காக கேஸ்ன்னுல்லாம் சொல்ல மாட்டேன்)
அவள் மீண்டும் அருகிலிருந்த அந்தக் குடிசை கடைக்குள் போனவள், அந்தப் பெரியம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் டீ குடித்தபின், காசெடுத்த நீட்டியபோது, ’இச்சாரு நாய்னா’ என்றார் கல்லாக்காரர்.

லாரி கவிழ்ந்துக்கிடந்த இடத்துக்கு போய்க்கொண்டே கடைக்குள் எட்டிப்பார்த்தேன், அங்கு அந்தப் பெண் இல்லை, பெரியம்மாவும் கடை மூடும் பாவனையில் ஏறக்கட்டிக் கொண்டிருந்தார்.
நெல்லூரிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டிருந்த, இந்தக் க்ரேன் உண்மையில் பிரம்மாண்டமாக இருந்தது. நிச்சயம் வேலை முடிந்துவிடும் என நம்பிக்கை வந்தது. ஆனால் க்ரேன் ட்ரைவர் நிரம்ப அனுபவசாலி போல, லாரியிலிருந்து எல்லாச் சரக்கையும் இறக்காமல், லாரியை தூக்கவே முடியாதென்று கையை விரித்தார். ஏற்கனவே லாரியின் மேற்புறத் தார்ப்பாய் இப்போது சற்றுக் கிழிந்து, சில மூட்டைகள் வயல் தண்ணீரில் கிடந்தது. லாரி ஓனர், பிரம்மாண்ட ப்ளாஷ் லைட்டுகள் பொருத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் குட்டி யானை வண்டியை கொண்டு வந்து நிறுத்தி, அங்கிருந்த இருட்டை பகலாக்கிக் கொண்டிருந்தார்,

’போச்சு. போச்சு…..கைக்கெட்டினது வாய்க்கெட்டாது போலயே, லாரி ஆத்துக்குள்ள விழலன்ற சேதி பொய்யாகுதே, தண்ணி ஊறி, எல்லாச் சரக்கும் கெட்டுப்போகப் போகுது’ எனக்குள் பதட்டம் அதிகரித்தது. சரக்கை ஏற்றியவரிடம் விஷயத்தைச் சொன்னேன். ஆனால், அதற்குள் லாரி ஓனர் அக்கம் பக்கம் ஊர்களிலிருக்கும், லாரிகளிலிருந்து சுமை இறக்கும் தொழிலாளிகளுக்குச் சேதியைச் செல்லி டபுள் கூலி பேசி உடனடியாக வரச் செய்தார். அவர்களும் காத்திருந்தார் போல உடனடியாக இரண்டு ஷேர் ஆட்டோக்களில் ஸ்பாட் வந்திறங்கினர்.

தார்ப்பாயை முழுவதுமாக அவிழ்த்தால், எல்லா மூட்டைகளும் தண்ணீரில் சரிந்துவிடும், ஆக ஓரளவு மட்டும் கயிறைத் தளர்த்தி, சரக்கை எடுக்கலாம் என சுமைத் தொழிலாளர்களில் அனுபவஸ்தர் போலிருந்த ஒருவர் சொல்ல, எல்லோரும் அதையே ஆமோதித்தனர். ஆனால், எடுக்கும் சரக்குகளை மேலே ஏறி சாலையில் அடுக்குவது மிகச் சிரமம் எனத் தெரிந்தது

கொஞ்சம் மேடான இடத்தில் முதலில் அடுக்கி லாரியைத் தூக்கி விடுவோம். பிறகு வேறொரு லாரியில் மீண்டும் அதை ஏற்றலாம் என்றும் ஏக மனதாக முடிவானது.

”பைசா தேக்னேசே இதர் அப்னா காம் நெய் ஓத்தா சாப்” (என்னடா தகாத வார்த்தையெல்லாம் எழுதறாரேன்னு கோச்சிக்கதீங்க, ’காசெல்லாம் பாத்தா இங்க நம்ம வேலை எதுவுமே நடக்காது’ சார்ன்னு லாரி ஓனர், நான் என்னமோ அதிகமா செலவாகுதுன்னு ஃபீல் பண்ணிகிட்டிருக்கிறதா நினச்சி, ஹிந்தில சொல்றாரு) பிறகு, ’இந்த நள்ளிரவில் நீ இருந்து என்ன பண்ணப் போற, அத்தங்கில ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டிருக்கேன், என் பேரச் சொல்லி சாவி வாங்கிட்டு போய்த் தூங்கு’ என்றும் சொன்னார். அவருடைய உதவியாளர் ஒருவர் பைக்கில் வந்திருந்தார். அவர் பைக்கில் ஏறிக்கொள்ளச் சொல்லி, போகும் வழியில் ஒரு தாபாவில் எங்களைச் சாப்பிடச் சொன்னார்.

நான், மாற்றுத்துணி ஏதும் கொண்டுவரவில்லை என்றாலும், சில டாக்குமெண்ட் இருந்த ஒரு கைப்பை கொண்டு வந்திருந்தேன், அதை தற்செயலாக அந்தக் குடிசைக்கடைக்குள் மறந்து விட்டுமிருந்தேன். அதைச் சொல்லி, “ப்ளீஸ் ஒக்க நிமிஷம்” என்றுவிட்டு, அந்தக் கடை நோக்கி ஓடினேன். விளக்குகள் அணைந்திருந்ததால் கடையை அந்த அம்மா மூடிச் சென்றிருப்பாளே என்கிற பதட்டமும் தொற்றியது. அப்படியொன்றும் அத்தியாவசியமான டாக்குமெண்ட்கள் கிடையாது என்றாலும் மறதில் ஒரு பொருளைத் தொலைப்பது கொஞ்சம் உறுத்துமல்லவா ?

ஆச்சர்யமென்னவெனில், அந்தக் கடைக்கு கதவுகளே இல்லை போல. பொருட்கள் எல்லாம் கோணி போட்டு மூடியிருந்தது. குளிர்பான ட்ரேக்களும் அப்படியே மூடியிருந்தது. அந்தக் கயிற்றுக்கட்டில் இல்லை.

திடகாத்திரமாக பார்க்க லோக்கல் ரவுடி போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவன், அந்தக் கடைக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தான். என்னைச் சிறிதும் நட்பில்லாமல் வெறுப்போடு பார்த்தான். அவன் வாயைத் திறக்குமுன், என் பின்னாலேயே பைக்கில் வந்த உதவியாளன், நான் கைப்பை மறந்து விட்ட விஷயத்தைச் சொல்ல, “இக்கட் ஏம் லேதே” என்று உள்ளே பார்த்தபடியே பதிலளித்தான்.

அவன் வார்த்தையையோ, அவனையோ மதிக்காமல் நான் செல்போனில் இருந்த டார்ச்சின் உதவியால் உள்ளே தேடினேன். ஓர் அடுக்கின் மேல் என் கைப்பை வைக்கப்பட்டிருந்தது. “இதுதான்” என்றபடி தாவி எடுத்துக்கொண்டேன். திடுக்கென வந்த கொலுசொலியில் சன்னமாய் அதிர்ந்தேன்.
அந்த அழகிதான். கொஞ்சம் பவுடர் தீற்றல் அதிகமாக, அந்தக் குடிசையின் பின் வாசலிலிருந்து வந்துக் கொண்டிருந்தாள். நேரே என்னைக் கடந்து அந்த திடகாத்திரனிடம் சென்றவள் தெலுங்கில் பேச ஆரம்பித்துவிட்டாள். இப்போது அவளை முழுமையாக நம்ப ஆரம்பித்துவிட்டேன். அவள்தான் தினத்தந்திகளில் வரும் சாலையோர அழகி. இவன் ஜி. நாகராஜன் கதைகள்ல வர்ற ஏஜண்ட் அல்லது இவ புருஷன். இப்போது இவளழகு குறைந்து, எனக்குள் கொஞ்சம் முகச்சுளிப்பைக் கொண்டுவந்து விட்டிருந்தாள். உதவியாளனிடம் சொல்லிவிட்டு, ஓர் ஓரமாய் சிறு நீர் கழிக்க இடம் தேடிக்கொண்டிருந்தேன்.

அவனும் அவளும் சேர்ந்தே சாலையைக் கடந்து எதிர்புறம் சென்றனர். லாரிகள் வந்தபோது அவன் வயலுக்குள் இறங்கி பதுங்கிக்கொள்ள, இவளுக்கு இம்முறை வந்த இரண்டாவது லாரியே படிந்துவிட்டது. லாரி கிளம்பிய பின்னர் அவன் மீண்டும் சாலையைக் கடந்து என்னருகே வந்தான். ஆனால் அதற்குள் நான் உதவியாளர் பைக்கில் ஏறி, அது கிளம்பியும் விட்டிருந்தது.

கொஞ்சம் தள்ளியிருந்த தாபாவில் சப்பாத்தி, சிக்கன் சாப்ஸ் சுடச் சுடக் கிட்டியது. அப்படியே ஒரு பாலக் பன்னீர். பிசிறில்லாத அழகுடன் வட்ட வட்டமாக வெட்டப்பட்டிருந்த வெங்காயங்களும், வெள்ளரிகளும் ஒரு தட்டில் குவிந்திருந்தன. நீளமாய் நீளமாய் உப்பில் ஊறியிருந்த பச்சை மிளகாய். தேவையானதை அள்ளிக் கொண்டு, சாப்பிட்டோம்.

அங்கும் பல லாரி, கண்டெய்னர் ட்ரைவர்கள் சாப்பிட வந்தனர். சமைக்குமிடம் மட்டும் கூரைக்குள். சாப்பிடுபவர்களுக்கு பிரம்மாண்ட வெட்டவெளி. சப்ளை மற்றும் க்ளீன் செய்பவர்கள் பெரும்பாலும் சிறுவர்கள். கொஞ்சம் லோக்கல், நிறைய பிகாரிகள். டேபிள் சேர், கயிற்றுக் கட்டில்கள், நடுவில் தட்டு வைத்த சாப்பிட நீளமான மரப்பலகைகள்.

கிட்டத்தட்ட எல்லா ட்ரைவர்களுமே கையோடு எடுத்து வந்திருந்த குவார்ட்டர் பாட்டில்களை, ப்ளாச்டிக் டம்பளரில் நீரூற்றிக் கலந்து குடித்துவிட்டே, சாப்பிட ஆரம்பிக்கின்றனர். சாப்பிட்டவுடன் பீடி சிகரெட் முடிந்தவுடன், ஒரு பாக்கு பொட்டலத்தைப் பிரித்து, வாயில் கவிழ்த்துக்கொண்டு, அந்த ராத்திரியில் லாரியை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

அத்தங்கியில் இதுதான் ஓரளவு நல்ல லாட்ஜாம். முதல் மாடியில் இருந்த அறைக்குள் கதவைத் திறந்து நுழைந்தபோதுதான் வந்திருப்பது ஆந்திரா என்றே எனக்கு உறைத்தது. அதி பயங்கரமான உஷ்ணம் அப்படியே குப்பென்று வெளியே பாய்ந்தது. ஜன்னல்களோ, காற்று போக வரவோ அந்த அறையில் சிறு வசதியுமில்லை. மவுன்பேட்டன் பிரபு காலத்திய சீலிங் பேன் ஒன்று ஓடுகிறேன் பேர்வழி என ஓபி அடித்துக் கொண்டிருந்தது. அடப்பாவிகளா பேசாமல் சட்டையை அவுத்துப்போட்டுட்டு, கயித்துக் கட்டில்லயே படுத்துக் கிடந்திருப்பேனே ? கடுப்புக்கு பயந்து அடுப்புக்குள்ளயா தூங்க முடியும் ???

எப்படித் தூங்கினேன் என்று தெரியாது. காதருகே தெலுங்கு, ஹிந்தியில் யாரோ லொடலொடவெனப் பேசும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு விழிப்பு வந்தது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். லாரி ஓனர்தான். யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் ”சரி பெட்ரா”என்றபடியே போனை அணைத்தவர், ’தூங்கலையா ?’ என்று என்னைப் பார்த்து ஹிந்தியில் கேட்டார்.

” நல்லா தூங்கிக்கிட்டிருந்தேன், ஏதோ சண்டை போடுறா மாதிரி சத்தம் கேட்டதால தூக்கம் கலைஞ்சு வெளிய வந்தேன்”

”ஹிஹி, ஸ்பாட்ல ஒன்னு இருந்துச்சில்ல, ’அத லாட்ஜுக்கு வா’ன்னு கூப்பிட்டா, அவ ரூம்கெல்லாம் வர மாட்டாளாமாம், லாரின்னா மட்டும்தான் வருவாளாம், இதென்ன புது கொள்கையா இருக்கேன்னு, அவ ஆள்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்”

அரைத் தூக்கத்திலும், வெக்ககையிலும் கூட, அந்த லாரி ஓனரின் இச்சையைக் கண்டு வியந்தேன், வியர்த்தேன்னு சொல்லவே தேவையில்ல, தொப்பலாத்தான இருந்தேன் ?

“சரக்கையெல்லாம் தூக்கி, லாரி தூக்கியாச்சா என்ன ? என்ன மணி ஆவுது ?”

”மணி ரெண்டாவுது, சரக்கை மேட்டுல தூக்கி வச்சாச்சு, நாலு பேர சுத்தி காவலுக்கு உக்காரவும் வச்சுட்டேன், சரி க்ரேன் காரன் லாரிய தூக்கி வக்கிறது காட்டியும் சாப்பிட்டுட்டு, அப்படியே(கண்ணடிக்கிறார்) கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு போலாமேன்னு வந்தேன். இந்த ரண்டி ஈஸியா வந்துருவான்னு தப்பு கணக்கு போட்டுட்டேன், இனி தூங்கல்லாம் முடியாது. பீர் சாப்பிட்டுட்டு ஸ்பாட் போயிட வேண்டியதுதான், பீர் சாப்பிடுறீங்களா மாலிக் ?”

அந்த ஆந்திர வெக்கைக்கு அதிலிலெல்லாம் ஈடுபாடே வராததால் மறுத்து மீண்டும் அந்த அடுப்பிற்குள் நுழைந்து தூங்க முயன்றேன் !
அதன் பின் வந்த தூக்கம் முரட்டுத்தனமாய் இருந்தது. விழிப்பு வந்து செல்ஃபோனைப் பார்த்தால் மணி எட்டு நாற்பத்தி நாலு. அது கூட விழிப்பு தானாய் வரவில்லை. வெளியே யாரோ ’சாய் பாய் சாய் பாய்’ என ஒவ்வொரு கதவாய் தட்டிச் சென்றதன் விளைவு. அவசர அவசராமாய் எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு, ஸ்பாட்டிற்கு ஓடிப்போனேன்.

வேலை படு சுத்தம். ஒரு புறம் வேறொரு லாரி வந்து, அதில் பாதிக்கும் மேல் சரக்கை அழகாக ஏற்றிக்கொண்டிருந்தனர். மற்றொரு புறமாய் நசுங்கிக் கோரமான வடிவில் அந்த கவிழ்ந்த லாரி, நிமிர்த்தப்பட்டு அதன் முன் பக்கத்தை தூக்கிப் பிடித்தபடி, அப்படியே எங்கோ இழுத்துச் செல்லும் தோரணையில் தயாராக இருந்தது, இன்னுமொரு இழுவை லாரி.

நெல்லூர் க்ரேன் எப்போதோ வேலையை முடித்துப் போய்விட்டதாம் !

“உங்களுக்குத்தான் சார் போன் போட இருந்தேன். முப்பது மூட்டைகள் மட்டும் தண்ணில ஊறி நாசமாயிடுச்சி, மீதியெல்லாம் ஒரு சொட்டு கூட நனையல, இன்னும் அரை மணிக்குள்ள லோடிங் முடிஞ்சிடும். ஒரு பைசா கொடுக்கத் தேவையில்ல. லோடிங் முடிஞ்சவுன்ன லாரிக்காரர் போன் நம்பர் வாங்கிக்கங்க, எப்ப சென்னை வந்து சேர்வான்னு கேட்டுக்கங்க, அப்புறம் கிளம்பிடுங்க. மன்னிக்கணும் தேவையில்லாம ரெண்டு நாள் உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டோம்” என்றார் அந்த லாரி ஓனர் !

”அதானாலென்ன சார், உங்களுக்குத்தான் அதிக செலவு” என்றேன் நான்.

“ஏட கொண்டலவாடா மனசு வச்சா இன்சூரன்ஸ் கவராயிடும் சார், அது லேட்டாகி இழுத்தாத்தான் கஷ்டம். இந்த நாசமாப்போன முப்பது மூடை சரக்குக்கும் அந்த இன்சூரன்ஸ் வந்துச்சுன்னா கண்டிப்பா கொடுத்துவேன் சார், ஏத்தி விட்ட முதலாளிகிட்ட எல்லா விவரத்தையும் சொல்லிட்டேன், அப்ப நான் கிளம்பறேன் சார். விஜயவாடாவுல இந்த நசுங்கிப்போன லாரிய சர்வீஸ்க்கு விட்டுட்டு, அப்படியே ஊர்ப் போயிடுவேன், இந்த இழுவை லாரிலதான் போகப்போறேன், என் ஊர்க்காரப்பய லாரிதான், காரப் பசங்க எடுத்துட்டு வந்துருவாங்க, அப்ப கிளம்பட்டுமா சார் ?”

எங்களுக்கிடையேயான உரையாடல் முழுக்க முழுக்க ஹிந்திதான் என உணர்க. என்னிடம் விடை பெற்று லாரியில் ஏறிக்கொண்டதும், நான் அந்தக் கயிற்றுக்கட்டில் சுகம் தேடி நகர்ந்தேன்.

”எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சா தம்பி ? என்றுதான் அந்த அம்மா வினவியிருக்க வேண்டும். ’ஆயிந்திம்மா, இங்க்க கொஞ்சம் பணி உந்தி’ என்றேன்.

ஓனர் ஏறிய லாரியிலிருந்து புர்ர் புர்ர் புர்ர்ரென சத்தம் வந்தது. அந்த இழுவை லாரி, மெதுவாக ஊர ஆரம்பித்தது. அரக்கப்பரக்க அந்த ஜி. நாகராஜனின் ஏஜண்டும், கருப்பழகியும் கடையின் பின்வாசல் வழியாக ஓடோடி வந்தனர். ஓய் ஓய் எனக் கத்தியபடி அந்த லாரி பின்னே அவன் ஓட, லாரி சரக்கென ப்ரேக் போட்டு நின்றது.

உள்ளேயிருந்து ஒரு கை நீண்டு, அந்தக் கருப்பழகியின் கையைப் பற்றித் தூக்க, அந்த லாரிக்குள் ஐக்கியமானாள் அந்தச் சாலையோர அழகி. கைகொடுத்தது நம்ம லாரி ஓனர்ன்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன ??? :)

***

Series Navigationபூகோள நாள் சுழற்சி மணி நேரம் அணுத்துவ வடிவப் புரோட்டீனில் உயிரியல் குறிப்பதிவு ஆகியுள்ளது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *