மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

This entry is part 10 of 29 in the series 19 ஜூலை 2015

– நாகரத்தினம் கிருஷ்ணா

அ. இலக்கிய சொல்லாடல்கள் -4

கலை மக்களுக்காக (Art Social)

கோட்பாட்டளவிலும் சரி, செயல்பாட்டிலும் சரி எவ்வித விதிமுறைகளையும் வகுத்துக்கொள்ளாமல் செயல்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், தங்கள் சமூகத்தை முன்வைத்து சில பொறுப்புகளும் கடமைகளும் தங்களுக்கு இருப்பதாகக்கூறி உருவானதே “கலை மக்களுக்காக’ என்ற இயக்கம். குறிப்பாக 1830க்கும் 1848க்குமான இடைபட்ட காலத்தில் இவ்வியக்கம் தீவிரமாக செயல்பட்டது. ‘கலை மக்களுக்காக’ என்பது கலை, இலக்கியம் ஆகியவற்றைக்கொண்டு சமூக ஏற்றதாழ்வுகளை விமர்சனம் செய்வது மற்றும் சாதாரண மக்களின் முன்னேறத்திற்கு ஆதரவாக அவ்வைரண்டையும் பயன்படுத்திக்கொள்ளுதல். மரபை உடைத்து, புதிய போக்கில் நம்பிக்கைக்கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் இவ்வியக்கத்தின் அபிமானிகள். பதினெட்டாம் நூற்றாண்டில் மேட்டுக்குடி மக்களின் ஆதிக்கம், மதத்தில் தலையீடு ஆகியவற்றை மறுத்த சீர்திருத்தவாதிகள், கலைஞர்களை சராசரி மக்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படவேண்டுமென வற்புறுத்தினார்கள் அச்செயல்பாடு இரண்டுவிதமாக இருக்கலாமென யோசனையும் சொல்லப்பட்டது. சமூகக் குறைபாடுகளை படைப்புகளில் வெளிப்படுத்துதல் என்பது ஒரு முறை, அக்குறைபாடுகளை அகற்றுவதற்கு உரிய யோசனைகளை வழங்குதல் என்பது மற்றொரு முறை.
“கலை கலைக்காக” என்ற இயக்கம் படைப்பிலக்கியவாதிகளிடத்தில் செல்வாக்கைப் பெற்ற அதேக் காலக் கட்டத்தில் கலை மக்களுக்காக என்ற இயக்கம் ஓர் எதிர் நடவடிக்கையாக இடது சாரி சிந்தனையாளர்களிடத்தில் செல்வாக்குப் பெற்றது. இவ்விரண்டு போக்குகளும், அவை பயணித்த பாதைகளும் வேறு வேறாக இருந்தபோதிலும் ஒவ்வொன்றும் மற்றதின் இயங்கா தளத்தைக் கண்டறிந்து அதில் செயல்பட்டதால், படைப்பிலக்கியதுறைக்கு இரண்டுமே உதவிபுரிந்திருக்கின்றன. இவ்வகையில் வந்த தொடக்ககால படைப்புகள்: உதாரணத்திற்கு Journal des débats என்ற பிரெஞ்சு தினசரியில் எழென் சுய் (Eugène Sue) என்பவர் ஒருவருடத்திற்குமேல் தொடர்ச்சியாக எழுதிய ‘The Mysteries of Paris’ என்ற நாவலைக் குறிப்பிடலாம். சோஷலிஸ சமூகத்தை கட்டமைக்கமுயலும் ஒரு மேட்டுக்குடி கதாநாயகன் தொழிலாளர்கள், அடித்தட்டுமக்கள் சகவாசம் என வலம் வரும் கதை. இப்படைப்புகள் ஒரு பக்கம் தொழிலாளர்கள் உலகில் ஓர் எதிர்பார்ப்பினை உருவாக்கின, மற்றொரு பக்கம், சமூக நலனில் அக்கறைகொண்டு அர்பணிப்பு மனத்துடன் செயல்படும் படைப்பாளிகளை இனம் கண்டது. ஆனாலும் ஓர் உண்மையைச் சொல்லவேண்டும், தம்மை நேரடியாக இணைத்துக்கொண்டு இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றிய பிரபலங்கள் குறைவு, சொற்ப எண்ணிக்கையினரே, ஆர்வம் காட்டினார்கள். மாறாக தொடர்கதைகள், கவிதகள், நாடகங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஆர்வம் காட்டினார்கள், அவற்றில் வேகம் இருந்தது, உண்மையும் இருந்தது, மாறாக வாசிப்புக் கணந்தோறும் சிலிர்க்கவைக்கிற, இன்பத்தில் திளைக்கவைக்கிற, எண்ணி மகிழ்கிற இலக்கிய குணங்கள் அற்றவையென்ற விமர்சனத்திற்கு ஆளாயின; எமிலி ஜோலா, பியர் த்ய்ப்போன்(Pierre Dupont) போன்றோர் அந்தக் களங்கத்தைத் துடைத்தவர்கள் என்கிறபோதும் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

1851ம் ஆண்டில் இரண்டாம் பிரெஞ்சு குடியரசைக் கலத்துவிட்டு, அதுநாள் வரை அதிபராகவிருந்த லூயி நெப்போலியன் போனபார்த் இரண்டாம் பிரெஞ்சு பேரரசை ஏற்படுத்தி தன்னை மூறாம் நெப்போலியனாக அறிவித்துக்கொண்டபோது ‘கலை மக்களுக்காக’ என்ற அணியினருக்குப் போதாதகாலம். ஆனால் 1889ல் மீண்டும் இவ்வியக்கம் சுறுசுறுப்பாக இயங்கியது. A. Tabarant, L.Cladel ஆகியோர், வேறு சிலருடன் இணைந்து சமூக எழுத்தாளர்கள் கிளப் (Club de l’art social) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். L’art social (1891-94) என்ற இதழ், ‘Théâtre d’art social’ என்ற நாடக இயக்கம், B. Lazare என்ற எழுத்தாளர் நடத்திய L’écrivain et l’art social (1896) என்ற சஞ்சிகை ஆகியவைகளெல்லாம் பின்னாளில் இவியக்கத்திற்கு ஏற்பட்ட ஆதரவைத் தெரிவிப்பவை.
இருபதாம் நூற்றாண்டில் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் ‘கலை மக்களுக்காக’ இயக்கத்தைக் கையிலெடுத்ததும், அது இலக்கிய அடையாளத்தை இழந்து அரசியல் சாயத்தை அப்பிக்கொண்டது, தொடக்கத்திலிருந்த கவர்ச்சி அதற்கில்லை. பின்னாளில் அதனாலேயே செல்வாக்கிழக்க காரணமும் ஆயிற்று. எனினும் சந்தர்ப்பங்கள் வாய்க்கிறபோது அவ்வப்போது இக்குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வியக்கத்தின் பலமும் பலவீனமும் அடித்தட்டு மக்கள். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து வரும் படைப்புகளுக்கு அம்மக்களே உரிய வரவேற்பைத் தருவதில்லை. அவர்கள் அக்கறைகொள்ள இருக்கவே இருக்கின்றன மலிவான பொழுதுபோக்கு அம்சங்கள். அடித்தட்டு மக்களை குறிவைத்து தார்மீக நோக்கம், எதார்த்தைத் தோலுரித்துக்காட்டுதல், பொழுதுபோக்கு அம்சங்கள் ( வெகு சன எதிர்பார்ப்பு?)மூன்றையும் ஒன்றிணைப்பதென்பது எளிதான விஷயமுமல்ல இன்று ‘தலித் எழுத்த்து’ ‘பெண்ணிய எழுத்து’ என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் ‘கலை மக்களுக்காக’ முன் வைக்கும் வாதங்கள்தான். நாளை ‘முதியோர் இல்லத்தில் வாடும் வயது கிழங்கட்டைகளின் எழுத்து’ என்று கூட ஒரு வகைமை உருவாகலாம், எதுவவும் தப்பில்லை, ஆனால் இயங்கும் தளம் இலக்கியம் அல்லது கலை என்பதை மறந்து அனுதாபத்தை யாசிப்பதும், பிரச்சார அரசியலை மையப்படுத்துவதும் உண்மையான நோக்கத்திற்கு ஒரு போதும் உதவாது. ‘கலை மக்களுக்காக’ என்ற கூத்தரங்கில் அதிகம் அமெச்சூர் நடிகர்கள் அரிதாரம் பூச வருகிறார்கள், விளைவாக அவர்கள் நொண்டுவதைக் கூட கலை என சாதிக்கிறார்கள், பார்வையாளர்கள் முகம் சுளித்தால் கூடம் கோணலென்கிறார்கள் அதே வேளை தற்போது தமிழில் மற்றொரு கூட்டம் (‘கலை கலைக்காக’ என்ற திருநாமத்தை அவர்கள் வெளிப்படையாக தரிப்பதில்லை, தரித்தால் வடகலையா? தென்கலையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய ஆபத்து அதில் இருக்கிறது.) கைக்கு எட்டாத இடத்தில் இலையைச் போட்டு முடிந்தால் சாப்பிட்டுக்கொள் என்கிறது.
வயிறு பசிக்கிறதே என்று வைக்கோலையும் புண்ணாக்கையும் சாப்பிடமுடியாது, வாய்க்கும் ருசியாக இருக்கவேண்டும் என்பது என்கட்சி.

ஆ. அண்மையில் வாசித்தது

சொல்வனம் இதழ் 131ல் வாசித்தவற்றுள் கவர்ந்தவை அல்லது கவனம் பெற்றவை என இரண்டு செய்திகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இக்கட்டுரைகளை நான் தேர்வு செய்தமைக்குக் காரணம் அவை இரண்டுமே, சித்திரத்தை அடிப்படையாகக்கொண்டவை. நூலாசிரியர்கள் கனவுபோல எழுத்தில் இயக்கிய காட்சிகளை, வாசகர் மனதில் படிமங்களாக மட்டுமே இடம்பெறக்கூடியவற்றை கோடோவியங்களைக்கொண்டு நடமாடச்செய்வதற்கு அசாத்திய ஞானம் வேண்டும், கலைஞானம் அறிந்து வருது அல்ல, கண்டு கேட்டு உற்று உணர்ந்து பெறுவது, மனிதர் காரியமல்ல, சிந்தனையில் விவேகமும் பார்வையில் நுட்பமும் அழகும் வேண்டும்.

‘கோபுலு’ மறக்க முடியாத நினைவுகள் – எஸ். சிவக்குமார்: என்ற தலைப்பில் அவரோடு பழகிய நண்பர், எஸ். சிவக்குமார் தம் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். விகடன் இதழாளர்கள் தங்கள் இதழில் இக்கட்டுரையை வெளியிடத் தவறினோமே என வருந்தி இருக்கக்கூடும். கோபுலுவுக்கு செலுத்தப்பட்ட உன்னதானமான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கமுடியும், கோபுலு என்ற பெயர் தன்னுள் விதையாக விழுந்த கதையிலிருந்து கட்டுரை தொடங்குகிறது. கோபுலுவின் கோட்டோவியத்தின் சௌந்தர்யமும் நளினமும் இந்த மனிதரின் எழுத்திலும் இருக்கிறது, வெகு நாளாயிற்று இதுபோன்ற நடையிற் தோய்ந்து. வெறுமனே சடங்காக எழுதிப் பிரசுரமான கட்டுரையாக தெரிவியவில்லை. கோபுலுவின் ஓவியத்துடனும், காலத்துடனும் தோய்ந்து சுவைத்து மகிழ்ந்ததை அவற்றின் Texture கொண்டே வார்த்தைகளாக வடிவமைத்திருக்கிறார். விகடனில் வெளிவந்த த. நா. குமாரசுவாமியின் நாவல் வரிகளை கோபுலு தமது தூரிகை கொண்டு உயிர்பித்திருந்த காட்சியைக் கட்டுரையாளர் விவரிக்கிறபோது, கோபுலுவின் சித்திரங்கள் திரும்பவும் உயிர்பெற, நாடகக்கொட்டகை பார்வையாளன்போல கண்களை அகல விரித்து காட்சியில் லயிக்கிறோம். எனக்கும் தேவன் எழுதிய “ஸ்ரீ மான் சுதர்சனத்தை” ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் சந்திக்கிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. கோபுலுவின் ஓவியத்தைக் கட்டுரையாளர்போல அக்கறைஎடுத்துக்கொண்டு அந்த நாளில் கவனித்தது குறைவு, பின்னாளில் சில வார இதழ்களைப் பிரிக்கிறபோது ஓவியங்களை வைத்து வரைந்தது யார்? என்பதை அறிவது எளிதாக இருந்திருக்கிறது, எனினும் கட்டுரையாளர் திரு எஸ். சிவக்குமார் அளவிற்கு ஓவியங்களில் தோயும் மனம் அப்போது எனக்கில்லை.

பீமாயணம் -தீண்டாமையின் அனுபவங்கள் -ரா.கிரிதரன்: சொல்வனத்தில் நான் வாசித்து மகிழ்ந்த இரண்டாவது கட்டுரை.
பொதுவாகத் தமிழில் புத்தக மதிப்புரைகள் செய்வது இலக்கிய சேவை அல்ல. இவர்களை ஐந்து வகையினராகப் பிரித்துப் பார்க்கலாம்.
முதற் பிரிவின்படி சில விடாக்கொண்டன் எழுத்தாளர்கள் ( இதில் பெண்களும் அடக்கம்) நமது கையில் புத்தகத்தைத் திணித்து அல்லது தபாலில் அனுப்பி எப்படியாவது மதிப்புரையை எழுதவைத்துவிடுவார்கள். இராண்டாவது வகையில் எழுத்தைத் தவிர வேறு கூறுகளின் நிர்ப்பந்தகளால் எழுதப்படும் மதிப்புரைகள், சொல்லக் கூச்சமாக இருக்கிறது, நான் எழுதிய 90 விழுக்காடுகள் இப்படி எழுதப்பட்டவைதான். மூன்றாவது வகைமையில் ‘இவர்’ ‘அவர்’ நூலுக்கு மதிப்புரை எழுதுவார், நன்றிக்கடனாக சில மாதங்களுக்குப்பின் ‘அவர்’ ‘இவர்’ நூலுக்கு மதிபுரை எழுதுவார். பரஸ்பரம் முதுகைச் சொரிந்துகொள்வார்கள்.மேற்கண்ட மூன்று வகமைகளிலும் மதிப்புரைகள் தரம் எப்படியென்று சொல்லத்தேவையில்லை. நூலாசிரியர் நோபெல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை மட்டும் சாமர்த்தியமாக தவிர்த்துவிடுவார்கள் மற்றபடி அவர்கள் எழுதிய பத்து மதிப்புரைகளை எடுத்து மறுவாசிப்பு செய்துபார்த்தால், வார்த்தைகளுக்கு அவர்களிடம் எவ்வளவு வறட்சி யென்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். ஆனால் மேற்கண்ட மூன்று வகைமைக்குள்ளும், அணுகுமுறையில் தவறிருப்பினும், நியாயங்களும் நடந்திருக்கலாம், தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்கள் சொந்த முயற்சியால்தான் தங்கள் அடையாளத்தை உறுத்திப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த மூன்றுவகை புத்தக மதிப்புரையாளர்களால் ஒருவருக்கும் பாதிப்பில்லை.நான்காவதாகத் தங்களை வசிஷ்டர்கள்(?) என நினைத்துக்கொள்கிற விமர்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் கொண்டாடப்பட ஒன்று நீங்கள் அவருக்குக் குடிப்பிள்ளையாக இருக்கவேண்டும், மீடியாக்கள் தயவால் வாமணவதாரம் எடுத்தவரென்றால், உங்களுக்குச் சலுகைகள் உண்டு, வசிஷ்டர்களை அனுசரித்துப்போகத் தெரியவேண்டும். தவறினால் உங்கள் இருப்பு கேள்விக்குறியாகும், அரிச்சுவடி பாடம் எடுப்பார்கள், உங்களுக்கு பேனாவைத் தொட யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்விகளும் வரலாம்.
இவற்றையெல்லாம் கடந்து ஐந்தவதாக வகை புத்தக மதிப்புரையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சிற்றிதழ்களையும், இணைய இதழ்களையும் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் அறிவார்கள். நல்ல புத்தகங்கள் படித்தேன், அவற்றைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன், என புத்தக மதிப்புரைகள் எழுதிக்கொண்டிருப்பவர்கள். அவர்களில் ஒருவர் நண்பர் ரா.கிரிதரன். இவர் மதிப்புரை எழுதுகிற புத்தகங்களை நம்பி வாங்கலாம். வாசித்தபின் மதிப்புரை எழுதிய ரா. கிரிதரன் கருத்திற்கு உடன்படாமல் போக வாய்ப்புண்டு. ஆனால் மதிப்புரை என்ற பெயரால் கொடுக்கும் சிபாரிசு கடிதம் நம்பிக்கைத் தன்மை கொண்டது. அவர் மதிப்புரைக்குத் தேர்வு செய்த நூலின் ஆசிரிரியரோ, ஓவியரோ, பதிப்பாளரோ ஒருவரும் வேண்டியவர்கள் பட்டியலில்லை. அம்பேத்த்கரின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டிலும் அதனைஓவியமாக்கிய கலைஞர்கள் ரா. கிரிரனைக் அதிகம் கவர்ந்த்திருக்கிறார்கள். அதாவது ஐயத்திற்கு இடமின்றி ஒரு வாழ்க்கை வரலாற்றை ஓவியமொழியில் கூடுதலாக பேசவைத்திருப்பதில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார்.சாதாரணமாக சித்திரகதைகளில் ஒரு கலைஞனின் ஓவிய ஞானத்தை மறைக்கிற, மீறிய கதை சொல்லல் இருக்கும். சித்திரக் கதையின் உற்பத்தியில், ஓவியன் ஒரு தொழிலாளி, கலைஞன் அல்ல. மாறாக பீமாயணம் நூலை விமர்சனம் செய்திருக்கிற நண்பர் ரா.கிரிதரன் கோபுலு பற்றிய கட்டுரைரையில் எஸ். சிவக்குமார் நினைவுகூருகிற அதே அணுகுமுறையை இங்கே கையாண்டிருக்கிறார். பல நேரங்களில் ரா.கிரிதரன் காட்சியில் லயித்து அதிலேயே அமிழ்ந்துவிடுவதுபோன்ற உணர்வை கட்டுரையில் சில வரிகள் தருகின்றன. பர்தான்கோட் ஓவிய முறையை உயிர்ப்பித்த பணியில் பாரத்பவன் மட்டுமல்ல, பீமாயணம் நூல் ஊடாக தமிழ் அறிய காரணமான காலச்சுவடு, அந்நூலை அறிமுகசெய்ய நூலின் கலைத் தன்மையைப் புரிந்துகொண்டு ஓர் ஆழமான கட்டுரை எழுதிய ரா. கிரிதரன் அனைவருக்கும் நன்றி கூற வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மேற்கண்ட இருகட்டுரைகளின் முழுப் பயனை அடைய, சொல்வனம் இணையதளைத்தில் அவற்றை வாசியுங்கள்.
http://solvanam.com

—-

Series Navigationஅடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழாகாரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழா
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *