பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?

author
1
0 minutes, 9 seconds Read
This entry is part 1 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

பெலிக்ஸ் மேக்ஸிமஸ்

usmanbrking_muftiphn_1ஆகஸ்ட் 5ம் தேதி புதனன்று காலையில், உதம்பூரிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் இருவரில் ஒருவனை ஜம்மு கஷ்மீர் பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். மற்றொருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதியை உயிருடன் கைப்பற்றியது, 26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டதற்கு பிறகு நிகழும் முதல்-பெரும் நகர்வு என கருதப்படுகிறது.
கரும் நீல சட்டையும், பழுப்புநிறக் காற்சட்டையும் அணிந்த அந்த இளைஞனை பார்த்தால் உங்களால் அவனை பயங்கரவாதி என்று கூற முடியாது. கல்லூரிகளில் சுற்றித்திரியும் போக்கிரி மாணவன் போல் காட்சியளிக்கும் அந்த இளைஞன், பதினோரு எல்லை காவல் படையினரை காயப்படுத்தியதுடன், இரண்டு எல்லை காவல் படையினரை சுட்டு வீழ்த்தியுள்ளான் என்பது வேதனையான தகவல். அவனும், அவனது கூட்டாளியும் ரோந்தில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நிகழ்த்தி விட்டு தப்பி ஓட முயன்ற பொழுது பிடிபட்டுள்ளான்.
கைப்பற்றப்பட்ட பயங்கரவாதி உஸ்மான் என இனங்காணப்பட்டுள்ளான். சில ஊடகங்கள் அவனை காசிம் கான் எனவும் அழைக்கின்றனர். இருபத்திரண்டு வயது நிரம்பிய உஸ்மான் (எ) காசிம் கான், தான் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்திலிருந்து வந்திருப்பதாக பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்திருக்கிறான். அவனது பேச்சு, பாகிஸ்தான் வட்டார மொழியை ஒத்திருக்கிறது.
ஆகா! நாம் ஒரு பயங்கரவாதியை உயிருடன் பிடித்து விட்டோம். இது பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எடுத்து வைக்கும் சாதனை நகர்வு, என அசாதாரணமாக இதனை எடுத்துக் கொள்ள முடியாது.
இப்பகுதி (உதம்பூர்) நீண்ட நாட்களாக தீவிரவாத தாக்குதலில் இருந்து விடுபட்டு அமைதியாக இருந்துள்ளது. இத்தாக்குதலுக்கு பின் ஜம்மு கஷ்மீரின் முன்னால் முதல்வர் உமர் அப்துல்லா பேசுகையில், இது மிகவும் வருந்ததக்க முன்னேற்றம் என கூறியுள்ளார்.
உமர் அப்துல்லாவின் தலைமையிலான முன்னால் மாநில அரசு, சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) உதம்பூரில் நிகழும் அமைதியை மேற்கோளிட்டு திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தது. மேலும் ஸ்ரீநகர், கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள புடகம் மற்றும் ஜம்மு மாவட்டத்தில் அமைந்துள்ள ஜம்மு பிராந்தியம் ஆகிய நான்கு நகரங்களில் இருந்தும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்த நிலைமையில், அதனை சீர்குலைக்கும் வகையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது எமக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
ஆனால் இது ஒன்றும் எதிர்பாராத தாக்குதல் இல்லை. இந்திய எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் இருக்கிறது என்றும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயங்கரவாத தாக்குதல் நிகழலாம் என குர்தாஸ்பூர் தாக்குதலுக்கு முன்னதாகவே புலனாய்வுத்துறைக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
உதம்பூர் தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் சென்ற வாரம் திங்கழன்று (ஜூலை 27ஆம் தேதியில்) நிகழ்ந்த, குர்தாஸ்பூர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூன்று பேருடன் ஊடுருவியவர்கள் என்பது தான், நாம் இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறது. ஜம்மு கஷ்மீர் முதல்வர் முக்தி முகம்மது சையது கூறுகையில் இத்தகைய சம்பவங்கள் எதிர்கொள்வதற்கு மாநிலங்களிடையே தகவல் பரிமாற்றங்களும், கூடுதலான ஒத்துழைப்பும் மற்றும் பகிர்வும் வரும் காலங்களில் அவசியம் என அழைப்பு விடுத்துள்ளார். இல்லையென்றால் இது போன்ற தாக்குதல்கள், அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐ.ஜி. தானிஷ் ராணா அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில், பயங்கரவாதி உஸ்மான் (எ) காசிம் கான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன் என்பதை உறுதி செய்தார். ஏனெனில் அதுவரையில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத குழுவின் தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகமும் இருந்தது. பாகிஸ்தான் முஜாஹுதீன் தலைவர் மவுலானா மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழு அந்த (உதம்பூர்) பகுதியில் வலுவான செல்வாக்கு கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. 1999ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த கந்தகார் விமானக் கடத்தலில் புகழ் பெற்ற ஹர்கத் உல் முஜாஹிதீனிலிருந்து பிரிந்து மவுலானா மசூத் அசார் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத குழுவை தோற்றுவித்தார். கஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத குழுக்களில் மிகவும் அபாயகரமானதாக ஜெய்ஷ்-இ-முகமதை கூறலாம். ஆனால் இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்கவில்லை.
ஐ.ஜி. ராணா அவர்கள் இது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத குழுவின் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்தார். மேலும் ராணா கூறுகையில் உஸ்மானும் அவனது கூட்டாளியும் எந்த வழித்தடங்களை தேர்வு செய்தனர் என்றும், இவர்கள் ஏன் எல்லை பாதுகாப்பு படையை குறி வைத்தார்கள் என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
ஆகஸ்ட் ஐந்து புதனன்று காலை நிகழ்ந்த தாக்குதலுக்கு பின், தன் கூட்டாளியை எல்லை பாதுகாப்பு படையினரிடம் பலி கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிப்பதற்காக உஸ்மான், மூன்று உள்ளூர்காரர்களை பணயக்கைதிகளாக கூட அழைத்துக் கொண்டு, கையில் AK 47ரக துப்பாக்கியுடன் அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பள்ளிக்கு விரைந்துள்ளான். அதிர்ஷ்டவசமாக அன்று திட்டமிடப்பட்ட போராட்டத்தால் பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. நல்ல வேளை பல குழந்தைகளின் உயிர்கள் தப்பியது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேர போரட்டத்திற்கு பிறகு பணயக்கைதிகளின் கட்டுப்பாட்டினுள் உஸ்மான் கொண்டுவரப்பட்டான். ஆம் பணயக்கைதிகளான கிராமவாசிகள் பயங்கரவாதி வைத்திருந்த AK 47ரக துப்பாக்கியை கொண்டே அவனை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். கிராமவாசிகளில் ஒருவர் பேசுகையில் அவன் எங்களிடம் “என்னை தயவு செய்து போக விடுங்கள்” என கெஞ்சினான் என்று கூறினார். ஆனால் அவர்கள் அவனது கழுத்தைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்தியாவில் இப்படி ஒரு வீர சம்பவம் நடந்தது அரிதானதே. இதே போலத்தான் குர்தாஸ்பூரில் தாக்குதலின் போது, பேருந்து ஓட்டுனர் தைரியமாகவும், சாதுர்யமாகவும் நடந்து கொண்டார்.
ஜூலை 27ஆம் தேதி காலை 5.30 மணியளவில் குர்தாஸ்பூரில், இராணுவ உடையில் மூன்று பயங்கரவாதிகள் பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு முன்னோக்கி வந்தார்கள். அப்பொழுது பேருந்தில் மொத்தமாக 75 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் மீது மூன்று பயங்கரவாதிகளும் தாக்குதலை தொடுத்தனர். ஓட்டுனர் நானக் சந்த் தைரியமாகவும், சாதுர்யமாகவும் மூன்று பயங்கரவாதிகளை நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்று, அவர்களை திரும்பி செல்ல கட்டாயப்படுத்தினார். பின் பேருந்தை, அரசு மருத்துவமனை நோக்கி ஓட்டிச் சென்றார். தாக்குதலில் காயமடைந்த அனைவருக்கும் அங்குதான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்களிலும் புலனாய்வு துறையின் செயல்பாடுகள் மெத்தனமாக தான் உள்ளது. இந்த முறை பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் போராடியுள்ளனர். மக்களிடம் பிடிபட்ட பொழுது தனது பெயர் உஸ்மான் என்றும் காசிம் கான் என்றும் நாவீத் என்று முன் பின் முரணாக பதிலளித்துள்ளான் அந்த பயங்கரவாதி.
ஆனால் பாகிஸ்தான் உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீத்தை எங்களுக்கு தெரியாது. அவர் பாகிஸ்தானியர் அல்ல என்று எப்பொழுதும் போல் மறுப்பு தெரிவித்துள்ளது. கசாப் பிடிபட்ட போதும் அவர்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறே பேட்டியளித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் குவாஸி கலிலுல்லாஹ் பேசுகையில், “பாகிஸ்தான் மீது உடனடி பழி போடுவதை இந்தியா நிறுத்த வேண்டும். ஆதாரம் இல்லாமல் ஒரு விஷயத்தை இந்திய ஊடகங்கள் பேசுகிறார்கள், இந்தியாவில் ஒரு பயங்கரவாதி பிடிபடும் போதெல்லாம், பாகிஸ்தானை தான் குற்றம் சுமத்துகிறது, இது நாங்கள் எப்பொழுதும் எதிர்பார்க்கும் ஒன்றுதான்,” என்கிற தொனியில் கொச்சையாக பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர், (பாகிஸ்தான்) தேசிய தகவல் மற்றும் பதிவு ஆணையத்தில் (Nadra) உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீத்தின் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவனை நாங்கள் பாகிஸ்தானியர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானினின் தேசிய தகவல் மற்றும் பதிவு ஆணையத்தில் (Nadra) இதுவரை நாற்பது சதவீதம் மக்களே பதியப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்து மக்களும் ஆணையத்தில் கீழ் பதியப்பட்டு ஆவணத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று சில மாதங்களுக்கு முன் தேசிய தகவல் மற்றும் பதிவு ஆணையத்தின் அரசு தலைமை நிர்வாகி பேட்டியளித்தார் என்பதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் குவாஸி கலிலுல்லாஹ் மறந்துவிட்டார்.
ஆனால் இந்தியா அவனை பற்றி கூறுகையில், பாகிஸ்தான் குடியுரிமைப் படி உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீதின் பெயர் முகம்மது நாவீத் என்றும் பாகிஸ்தான் உள்ள பைசலாபாதில், குலாம் முஹம்மது அபாத் பிராந்தியத்தின் கீழ் குடியுரிமை பெற்றவன் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவன் யூசுப் முகம்மதுவின் மகன் என்றும், அவனுடன் பிறந்தவர்கள் மூன்று நபர்கள் என்றும் மடக்குகிறது. மேலும் ஒரு படி மேலே சென்று அவர்களில் மூத்தவர் காற் கச்சு வேலை செய்கிறார் என்றும், மற்றொருவர் பாகிஸ்தானிலுள்ள ஜே.சி. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றுகிறார் என்றும், மூன்றாவதாக அவனுடைய சகோதரி ஒரு கல்லூரியில் படிக்கிறாள் என்று, அவர்கள்(பாகிஸ்தான்) வாயடைத்து போகும் அளவிற்கு ஆதாரங்களை முன் வைக்கின்றது.
ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஆதாரங்களை நெருக்கமாக கொண்டு வரும் முயற்சியாக உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீதின் தந்தையை நேரில் சென்று பேட்டி எடுத்திருக்கின்றார். அவருக்கு பேட்டியளித்த நாவீதின் தந்தை, “துரதிஸ்டவசமாக அவன் என் மகன் தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எங்களை லஷ்கர்-இ-தொய்பா தொடர்ந்து கண்காணிக்கிறது. நான் கொலை செய்யப்படலாம், என் மகனும் அவர்களுக்கு தேவைப்படுகிறான். உயிருடன் அல்ல பிணமாகத்தான் தேவைப்படுகிறான்” என்கிறார். ஆனால் அதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்தும், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ தரப்பிலிருந்தும் எந்த பதிலும் இன்னும் தரப்படவில்லை.
அவர்கள் கூறுவது போல், (பாகிஸ்தான்) தேசிய தகவல் மற்றும் பதிவு ஆணையத்தில் (Nadra) உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீதின் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அறுபது சதவிகிதம் பாகிஸ்தானியர்கள் (பாகிஸ்தான்) தேசிய தகவல் மற்றும் பதிவு ஆணையத்தில் (Nadra) இன்னும் பதிவு செய்யப்படாமல் தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர் அல்லர் என்று ஏற்றுக்கொண்டு விட முடியுமா ?
எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதியின் பெயர் நோமன் என்கிற மோமின் என்பது தெரியவருகிறது. நோமன் (எ) மோமின் பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூரை சேர்ந்தவன். இவர்கள் முசாபராபாத்திலுள்ள பயங்கரவாத பயிற்சி முகாமில் பயற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவருகிறது.
நாவீத் நிச்சயமாக இன்னொரு கசாப் அல்ல. இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியாளர்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட உறுதிப்பாடற்ற அற்ப குற்றவாளி என்றே கூற வேண்டும். அவனிடம் சிறுபிள்ளைத்தனம் தான் மேலோங்கி காணப்படுகிறது. துப்பாக்கியில் உள்ள தூண்டியை எவ்வாறு இழுக்க வேண்டும் என்பதை கூட அறிந்திருக்க, அவன் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும் தாக்குதல் குறித்தும் அவன் எந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. “நாங்கள் இந்தியாவிற்கு வந்து பன்னிரண்டு நாட்களாகிறது. நாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. நான் மூன்று நாட்களாக சாப்பிடவில்லை, எனக்கு உணவுதாருங்கள்” என்று கேட்ட அந்த இளைஞனை பார்த்து கோபம் கொள்வதா இல்லை பரிதாபப்படுவதா என்று தெரியாமல் வாயடைத்துள்ளோம்.
பாகிஸ்தான் உள்ள ஜிகாதி தொழிற்சாலைகள் உண்மையிலேயே மழுக்கம் அடைந்திருக்க வேண்டும். இப்பேர்பட்ட பயங்கரவாதியை தயார் செய்து அனுப்பியதிலிருந்து தெரிகிறது.
பாகிஸ்தானின் ஜிகாதி தொழிற்சாலை என்பது பயங்கரவாதிகளை தயாரிக்கும் ஒரு பயங்கரவாத முகாம். இதில் லஷ்கர்-இ-தெய்பா போன்ற பயங்கரவாத குழுக்கள் முக்கிய பங்குவகிக்கின்றனர். ஜிகாதி தொழிற்சாலைகளில், கஷ்மீரில் “இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகள்” என்று அழைக்கப்படும் முறைகேடான ஒளி நாடாக்களை காபிர்களை (இஸ்லாத்திலிருந்து விலகிய நாஸ்திகர்) கொண்டு தயாரிக்கிறது. பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் சிறுவர்கள், காபிர்களின் பகைமை நிறைந்த உரைகள் மூலம் ஈர்க்கப் படுகிறார்கள். அவ்வாறு ஈர்க்கப் பட்டவர்களை நீங்கள் இந்தியர்களுக்கு விரோதமானவர்கள் என போதிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப் படுகிறார்கள்.
காபிர்கள் இஸ்லாத்தில் நம்பிக்கை இழந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்திலிருந்து விலகி இஸ்லாத்தின் பெயரை சீர்குலைக்கும் வகையில் ஜிகாத் என்ற பெயரில் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் அவர்களை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன் என்று அடையாளப்படுத்துவது தவறானது.
இத்தகைய சிறுவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள், பொருள் புரியாமல் குருட்டு தனமாக கற்றுத்தரப்படுகிறது. மேலும் தாங்கள் உயரிய தியாக நோக்கத்திற்காக புனித போர்க்கு தயார் படுத்தப்படும் தியாகிகள் என்பது போன்ற கருத்துக்களால் உள்ளீர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். பயமோ அல்லது பச்சாதாபமோ இல்லாமல் ஆயுதப் போர் புரிய இச்சிறுவர்கள் தயார் படுத்தப்படுகிறார்கள்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை கொண்டு தோரா-இ-காஸ் என்று அழைக்கப்படும் மூன்று மாத கடும் ஆயுதப்பயிற்சியை லஷ்கர்-இ-தெய்பாவால் அளிக்கப்படுகிறது. இந்த கடுமையான பயிற்சிக்கு பின்னர் இறுதியாக, மன மற்றும் உடல் தகுதி இருந்தால் மட்டுமே இத்தகைய தாக்குதலுக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீத் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு.
ஜிகாதியர்களின் வெற்றி என்பது நாம் இவர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று அழைப்பதில் அடங்குகிறது. அதில் இவர்கள் எப்பொழுதும் வெற்றி பெறுகிறார்கள். “எம் இன மக்கள் தாக்கப் படுகிறார்கள், தயவு கூர்ந்து ஒன்று கூடுங்கள்” என்ற எளிமையான அழைப்பு மூலம் அப்பாவி மக்களை ஒன்று திரட்டி விடுகிறார்கள். ஏழை மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், தேர்வாளர்கள் மிகவும் விழிப்புடனிருந்து ஏழை எளிய சிறுவர்களையும், இளைஞர்களையும் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
ஒரு கசாப்புக்காரின் மகன்தான் அஜ்மல் கசாப் என்பது நம்மில் பலருக்கு தெரிந்த விவரம்தான். அவன் உணவிற்காகவும், பணத்திற்காகவும் தான் லஷ்கர்-இ-தெய்பாவிற்கு (வெறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு) விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இப்படிபட்ட தாக்குதலில் ஈடுபடும் பல சிறுவர்கள் அனாதைகளாக விடப்பட்ட முன்னால் பயங்கரவாதிகளின் குழந்தைகளாவும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள், சிலர் வெளிப்படையாகவே அற்ப தொகைக்காக பெற்றோர்களால் பயங்கரவாத குழுக்களுக்கு விற்கப்பட்டவர்கள். சிலர் அவர்களின் குடும்பத்தினரால் நிராகரிக்கப்படுகிறார்கள். இச்செயல்கள் அவர்களை சமுதாயத்திற்கு ஒவ்வாதவனாக மாற்றுக்கிறது. தாம் ஒரு தீண்டத்தகாதவராக மாற்றப் பட்டிருக்கிறோம் என்பதை வெளிப்படையாக உணர்கிறார்கள், இறுதியில் தங்களில் இருத்தலை பதிவு செய்யும் முயற்சிகளாக இத்தகைய தாக்குதலில் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.
ஜிகாதி தேர்வாளர்கள் இவர்களை, நீங்கள் ஒதுக்கப்பட்டோர் இல்லை என்றும், மாறாக நீங்கள் மாபெரும் சாதனைகள் புரியக்கூடிய திறனுடையவர்கள் என்று மூளைச்சலவை செய்து தங்களின் விருப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்தியர்களை கொலை செய்து பின் நாமும் நம்மை வதம் செய்து கொள்வோம். இது அல்லாவை பெருமை கொள்ளச் செய்யும் என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கசாப் தெரிவித்திருந்தான். ஆனால் அவன் பாதுகாவலில் இருந்த போது நிகழ்ந்த விசாரணையில், அவனுக்கு இஸ்லாமிய நூல்களில் அனுபவமின்மையும், ஜிகாத்தின் பொருள் பற்றியும் மிக சிறியளவிலான அறிவே காணப்பட்டது.
உஸ்மான் (எ) காசிம் (எ) நாவீத் பிடிபட்ட போது “நான் இந்துக்களை கொல்ல வந்தேன், இந்துக்களை கொல்வது எனக்கு வேடிக்கை அளிக்கிறது” என்று தெரிவித்திருக்கின்றான். முன்னதாக தப்பி ஓட முயற்சிக்கும் பொழுது தன்னை விட்டுவிடும் படி அழுதிருக்கிறான். இச் செயல்கள், அவன் எந்த அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளான் என்பதை ஆணித்தரமாக காட்டுகிறது. இந்தியாவிற்குள் புகுந்து இந்தியர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, பின் இங்கிருந்து தப்பி மீண்டும் பாகிஸ்தான் வந்து விடலாம் என்று நம்பிக்கை அளித்து ஏமாற்றியிருக்கிறார்கள். இத்தகைய செயல்கள், பாகிஸ்தானில் உள்ள இளைஞர்களின் நிலைபாடு, அவர்களது எதிர்காலங்களில் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவலை கொள்ள வைக்கின்றது.
பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் ஒருவகையில் எமது சகோதரர்கள். எனது தாயும் அவனது தாயும் ஒருத்தியே, நானும் எனது சகோதரனும் ஒன்றாவே வளர்ந்தோம். நானும் அவனும் ஒன்றாவே பள்ளிக்கு சென்றோம். நானும் அவனும் தனித்தனியே ஒரு காணி நிலம் வாங்கினோம். அங்கு ஒரு அழகான வீட்டை கட்ட நாங்கள் இருவரும் முயற்சித்தோம். அவ்வீட்டிலிருந்து அவனது பிள்ளைகளும் எனது பிள்ளைகளும் ஒன்றாகவே பள்ளிக்கு செல்வார்கள் என நான் கனவு கண்டேன். எனது வீட்டிலிருந்து அவனது வீட்டை பார்க்கும் பொழுது, அவனது வீடு பாழடைந்து காணப்படுகிறது. சமுதாய ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும், படிப்பினை ரீதியாகவும், அவன் பின் தங்கிவிட்டான் என்று உணரும் பொழுது மிகவும் வேதனையளிக்கிறது.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாததிற்கு எதிராக போர் புரிகிறது, இந்தியா எங்களை குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு தகவல் பரிமாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் போன்ற வாதங்களை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான் அவர்களின் இளைஞர்கள் பற்றியும் அந்நாட்டின் எதிர்கால வளர்ச்சி பற்றியும் விரைவாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய ஒர் அவசர காலகட்டத்தில் இருக்கிறார்கள். தங்கள் மக்களின் அடிப்படை பிரச்சனையை உளவியல் ரீதியாக அவர்கள் அனுக வேண்டும். இல்லையென்றால் தாலிபான் போன்ற பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் நிரந்தரமாக பாகிஸ்தான் சென்றுவிடும் என்பது சற்று வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய உண்மையே.
-பெலிக்ஸ் மேக்ஸிமஸ்

Series Navigationகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது
author

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    பாக்கிஸ்தான் விரைவில் உள்நாட்டு கழகத்தால் அழிந்துவிடும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *