டிசைன்

author
0 minutes, 43 seconds Read
This entry is part 5 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

சிவக்குமார் அசோகன்

தனசாமியை சுப்பு செல்போனில் அழைக்கும் போது மதியம் மணி மூன்று இருக்கும். கீரை சாம்பாரும் வாழைக்கறியும் உண்ட மயக்கத்தில் சற்று அயர்ந்திருந்த தனசாமிக்கு முதலில் வேறு யார் போனோ ஒலிப்பது போல் இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு எழுந்தவர், திரையில் தெரிகிற சுப்பு என்கிற பெயரைப் பார்த்துவிட்டு சற்று அலுப்புடன் ‘இவனா..’ என்றபடி அழுத்தினார்.

“அலோ.. சொல்லுய்யா?”- கொட்டாவி விட்டார்.

“சாமி எங்கே இருக்கே…?” -சுப்புவின் குரலில் அவசரமும் ஆர்வமும் இருப்பதை தனசாமி சற்று உணரவே செய்தார்.

”கொளுத்துற வெயில்ல எங்கேயா இருப்பேன்? வீட்ல தான் சொல்லு”

”ஒரு என்.ஆர். ஐ பொம்பள சிக்கியிருக்கு. மெயின் ஏரியாவுல வீடு வேணுமாம். பட்ஜெட்…”- சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே தனசாமி இடைமறித்தார்.

”போதும் நிறுத்து சுப்பு… இந்த என்.ஆர்.ஐ, சிங்கப்பூர் பார்ட்டி, துபாய் பாய்… இப்படி யாரையும் கொண்டு வராதே… எல்லாம் நடக்குற காரியம் இல்லை… வெட்டி அலைச்சல். இப்படி பெரிய பிஸினஸுக்கு அலைஞ்சு ஏதாச்சும் ஒண்ணாவது முடிஞ்சிருக்கா…என்னிக்காவது மூவாயிரம் ரூபாய்க்கு மேல கமிஷன் வாங்கியிருக்கோமா..?”

”அதையே தான் நானும் கேட்கிறேன். என்னிக்காவது மூவாயிரம் தாண்டி நம்ம ரேஞ்ச் போயிருக்கா..? கடைசியா போன வருஷம் சதாசிவம் நகர்ல அந்த கார்னர் பிளாட் முடிச்சப்ப முள்ளங்கிப் பத்தை மாதிரி பத்தாயிரம் கிடைச்சது.. அதுவும் ஆளுக்கு ஐயாயிரம். அதுக்குப் பிறகு ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா ஏதாவது வாடகை வீடு முடிக்கறதோட சரி… நாம எப்ப தான் லட்சமெல்லாம் பார்க்கறது?”

”இன்னிக்கு நிலவரத்துல லட்ச ரூபாய் கமிஷன் பார்க்கணும்னா கோடி ரூபாய்க்கு சொத்து முடிச்சுக் கொடுக்கணும். கோடில முடிக்கறவனெல்லாம் நம்ம கிட்ட வரமாட்டான் சுப்பு, அதுக்கு வேற மீடியேட்டர்ஸ் இருக்காங்க…”

”அவங்கல்லாம் என்ன வானத்திலேர்ந்து வந்தாங்களா… இல்ல பொறக்கும் போதே புரோக்கரா பொறந்தாங்களா?”- என்றார் சுப்பு.

இப்போது சுப்புவும், தனசாமியும் யாரென்பதற்கு அறிமுகம் தேவையில்லை. இருவரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். மற்ற துறைகளில் இருக்கும் இடைத் தரகர்கள் போல ரியல் எஸ்டேட் தரகர்கள் பெரும்பாலும் தனியே அலைய மாட்டார்கள். குறைந்த பட்சம் இரண்டு பேராவது இருப்பார்கள். கமிஷன் விஷயத்தில் பார்ட்டி காரர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்பதாலும், ஏதாவது பிரச்சனை என்றால் தனி ஆளாய் நிற்பதை விட துணைக்கு ஒருவர் இருப்பது உசிதம் என்பதாலும், சபையில் பேச்சு எடுபட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் தனியாக இத்தொழிலைச் செய்வதில்லை.

சுப்புவும் தனசாமியும் இருவரில் ஒருவர் பால் மாறிப் பிறந்திருந்தால் சகல பொருத்தங்களும் கூடிய தம்பதிகளாகியிருக்கக் கூடியவர்கள். ‘எனக்கு பாத்ரூம் வருது?’ என்று தனசாமி சொன்னால் ‘இரு நானும் வர்றேன்’ என்பார் சுப்பு. இங்கே சுப்புவுக்கும் பாத்ரூம் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று வருஷத்திற்கு முன்பு ‘ஏம்பா இந்தத் தெருவுல வீடு எதும் வாடகைக்கு இருக்கா?’ என்று தனசாமி ரோட்டில் போய்க் கொண்டிருந்த சுப்புவிடம் கேட்க ‘காட்டுவேன்.. முடிச்சா எனக்கும் கமிஷன் தரணும்’ என்று சுப்பு சொல்ல.. ‘அட நீயும் நம்மாளு தானா?’ என்று தனசாமி சுப்பு தோளில் கையைப் போட, அன்றிலிருந்து இருவரும் தொழில் ரீதியான அத்தியந்த நண்பர்களாகி விட்டார்கள்.

தனசாமியுடன் சுப்பு சேர்ந்த பிறகு தான் இருவரும் அதிகம் பிஸினஸ் முடித்தார்கள். பெரும்பாலும் வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுப்பது தான் முடியும். முடிந்தால் பார்ட்டி காரர்களிடம் ஒரு மாத வாடகையை கமிஷனாக வாங்கி இருவரும் பிரித்துக் கொள்வார்கள். தனசாமி கொஞ்சம் படிமானம் இல்லாத ஆள். கறாராகப் பேசுவார். ஒரு பைசா குறைந்தாலும் நீயே வெச்சுக்கோ என்றோ, எடுக்கறியா இல்லையா என்றோ பேசிவிடக் கூடியவர். அதனாலேயே அவரிடம் வருவதற்கு பார்ட்டிகள் பயப்படுவார்கள்.

சுப்பு தி பெர்ஃபெக்ட் புரோக்கர் என்பதற்கு உதாரண புருஷர். கொஞ்சம் கூட வெட்கமின்றி பார்ட்டியை நச்சரிப்பதில் ஆகட்டும், கிடைத்ததை சுருட்டிக் கொண்டு கிளம்பிவிடுவதில் ஆகட்டும், கைவசம் ப்ராபர்ட்டியே இல்லாமல் நான் காட்டுகிறேன் என்று பார்ட்டியை நம்ப வைப்பதில் ஆகட்டும் எல்லாவற்றிலும் ஒரு தரகர் எப்படி நெளிவு சுளிவுடன் நடந்து கொள்வாரோ அவையெல்லாம் அத்துப்படி ஆகிப் போன பிறவி தரகர்.

ஐம்பத்திரண்டு வயதில் சுப்புவுக்கு இருக்கும் தொழில் ஆர்வம், அவரை விட இரண்டு வயது குறைந்த தனசாமிக்கு இல்லாமலிருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தனசாமிக்கு காலேஜ் வயதில் ஒரே மகன். இரவில் இட்லி கடை போடும் மனைவி. ஏதும் சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. சுப்புவுக்கு பி.ஏ தமிழ் படித்துவிட்டு அரசாங்க வேலைக்குத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மகளும், எப்போதும் ஏதாவது ஒரு வலியைச் சொல்லி மருந்து வாங்கி வரச் சொல்லும் படு பலகீனமான மனைவி. இரண்டு, இந்த வேலையையே கேவலமாக நினைப்பவர் தனசாமி. ஒரு பார்ட்டி வந்து அவரை நழுவ விடுவதைக் கேவலமாக நினைப்பவர் சுப்பு.

வாடகை வீடுகள் சிறு ப்ளாட்டுகள் என்று முடித்துக் கொண்டிருக்கிற படியிலிருந்து அடுத்தப் படிக்கு தாவ வேண்டும் என்று சுப்புவுக்கு ரொம்ப நாள் கனவு உண்டு. அது இந்த என் ஆர். ஐ பெண்மணி மூலம் நிறைவேறப் போவதாக சுப்பு நினைத்துக் கொண்டார். அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திரிந்த டாக்ஸி டிரைவருக்கு இவர்கள் வாடகை வீடு முடித்துக் கொடுத்திருந்த புண்ணியத்தில், இவர் நம்பர் அந்தப் பெண்ணுக்கு கிடைத்திருக்கிறது.

”மிஸ்டர் சுப்பு..?” என்று போனில் கேட்டவுடனேயே சுப்புக்கு ‘ஏதோ பெருங்கிராக்கி’ என்று உள்ளே மணியடித்துவிட்டது.

”எஸ்.. ஆயாம் சுப்பு!” என்றார் பந்தாவாக. அந்தப் பெண்மணி சுப்புவின் ‘ஆயாமை’ வைத்தே அவர் இங்கிலீஷைக் கணித்திருக்க வேண்டும். உடனே தமிழுக்கு மாறிவிட்டாள்.

”வணக்கம்ங்க… என் பேர் லட்சுமி தனகோடி, நான் அமெரிக்காலேர்ந்து வந்திருக்கேன். அங்கே டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றேன். பூர்வீகம் தஞ்சாவூர் தான். சொந்த ஊர்ல ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும்னு இங்கே வீடு வாங்க வந்தேன். எனக்கு ஒரு டுப்ளக்ஸ் வீடு வேணும்..அலோ ஆர் யூ தேர்..?”

”டுப்ளக்ஸ் வீடு நிறைய இருக்கு மேடம்.. வாங்கிரலாம். உங்க பட்ஜெட் மட்டும் சொல்லுங்க..?” என்று சுப்பு சொன்ன நிமிஷத்தில் டுப்ளக்ஸ் வீடென்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

”ஒன் சி அண்ட் அபோவ் பரவாயில்லை.. ஆக்சுவலி அமவுண்ட் பிரச்னை இல்லை… வீட்டின் அழகும் இடமும் தான் முக்கியம்!” என்று அந்த பெண் சொல்லிக் கொண்டே போக சுப்புவுக்கு ஒன் சி-க்கு மேலே எதுவும் கேட்கவில்லை. நாளைக்கு வீடு காட்டறேன். மறுபடி ஃபோன் பண்றேன் என்று வைத்துவிட்டு, மறுவினாடி தனசாமிக்கு ஃபோனைப் போட்டார். கிட்டத்தட்ட நடிகர் வடிவேலு போல பேஸ்மட்டம் கொஞ்சம் வீக் ஆன தோரணையில் படபடப்புடன் சுப்பு பேசிக் கொண்டிருக்க, தனசாமி கொட்டாவி விட்டார்.

”அவுங்கள்லாம் வானத்திலேர்ந்து வரலை தான்.. கொஞ்சம் ஆ-னா விலாசத்தோடு பிறந்திருப்பாங்க.. நாம தொட்டாத் தான் விளங்காதே.. சரி நான் வர்றேன்.. நீ மணிக்கூண்டாண்ட நில்லு..”

சுப்பு ”சரி டுப்ளக்ஸ் வீடுன்னா என்ன?” -ஆர்வமாகக் கேட்க, தனசாமி சிரித்துக் கொண்டே ”வந்து சொல்றேன்” என்று போனைத் துண்டித்தார்.

அடுத்த அரைமணியில் தனசாமியும், சுப்புவும் ஒரு டீக்கடையில், கையில் டீ சகிதம் தீவிரமான யோசனையில் இருந்தார்கள். தனசாமியும் சில புரோக்கர்களுக்கு ஃபோனில் பேசி, விஷயத்தைச் சொன்னார். நீங்க அந்தப் பக்கம், நாங்க இந்தப் பக்கம் என்று முடிப்பதற்கு முன்பே கமிஷன் பங்கீடுகளைக் கறாராகப் பேசினார். அதில் முத்து என்கிற அகாசுகா புரோக்கர் அருளானந்தம் நகரில் ஒரு டுப்ளக்ஸ் வீடு இருப்பதாகவும், சொந்தக் காரர் சென்னையில் இருப்பதாகவும் சொன்னான். உடனே பார்க்க வேண்டும் என்று தனசாமி பிடிவாதம் பிடித்தார்.

”இங்க ஒரு இன்சார்ஜ் தான் வீட்டைப் பார்த்துக்கறார்…. ஆள் இருக்கானானு பார்த்துட்டு போன் பண்றேன்..” என்றான் முத்து.

மேலும் ஒரு கால் மணி நேரம் டுப்ளக்ஸ் வீடுகளைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டு, கமிஷன் தொகையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொண்டு தனசாமியை போரடித்துக் கொண்டிருந்தார் சுப்பு. முத்து அழைத்தான். அடையாளம் சொல்லி வீடு இருக்கும் இடத்திற்கு வரச் சொன்னான்.

போனார்கள். மூன்று கிரவுண்ட் இடத்தில் ஒரு கிரவுண்டில் கட்டப்பட்ட ஹை சீலிங், டுப்ளக்ஸ் வீடு அது. புத்தம் புதுசாக இருந்தது. இவ்ளோ பெரிய வீட்டைக் கட்டி எதற்கு விக்கிறான் என்று சுப்புவுக்கு மனசுக்குள் கேள்வி. அந்த வீட்டிற்கு வெளியே ஒரு சிறு ரூமில் தங்கியிருந்த இன்சார்ஜ், மூவரையும் மையமாகப் பார்த்து ”யார் பார்ட்டி?” என்றான்.

முத்து தனசாமியைக் காட்டி ”இவர் தான்! பார்க்கலாமா?” என்றான்.

”கண்டீஷன்லாம் சொல்லிட்டீங்களா?”

”என்ன பெருசா..? எல்லாம் சொல்லியாச்சு.. வீடு முடியணுமா வேணாமா?” – முத்து சற்று அனத்தலாகப் பேசினான். அவன் சற்றே அலுப்புடன்.. ”இதுவரைக்கும் நாலு பார்ட்டி கூட்டி வந்துட்டே.. இவர் அஞ்சாவது.. ஒண்ணும் முன்னேற்றமே இல்லையேப்பா.. பேச்சுல இருக்கிறது செயல்ல இல்லையே…”

முத்து ஒரு முறை தனசாமியைப் பார்த்துவிட்டு, அந்த இன்சார்ஜை ‘வாயை மூடு’ என்பது போல் பார்த்தான். அவரும் புரிந்து கொண்டது போல.. பூட்டைத் திறந்துவிட்டு, ”சுத்தி பார்த்துட்டு.. எல்லா ஸ்விட்சையும் ஆஃப் பண்ணிட்டு வா.. போன வாட்டி..”

”எல்லாம் தெரியும்..” என்று முத்து அவரை அப்படியே இடை நிறுத்தினான். மூவரும் உள்ளே சென்று பார்த்தார்கள். சுப்பு இதுவரை சினிமாவில் பார்த்த மாதிரியான வீட்டை நேரில் பார்க்கிறபடியால் வீட்டின் குறைகள் எதுவும் தெரியவில்லை. பார்த்தவுடனேயே அந்த அம்மாவுக்கு பிடித்துவிடும் என்றும், உடனே ரிஜிஸ்டர் செய்து, கமிஷன் கைக்கு வந்துவிடும் என்றும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.

தனசாமிக்கும் வீட்டை அந்த அம்மாவுக்கு காண்பிக்கலாம் என்று தோன்றியது. வெளியே வந்து அந்த அம்மாவை போனில் அழைத்து விவரத்தைச் சொன்னார்கள். சாயங்காலம் அந்த வீட்டைப் பார்ட்டிக்கு காண்பிக்கலாம் என்று முடிவானது. இவர்கள் போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து வீட்டின் இன்சார்ஜ், ”அப்ப இவர் பார்ட்டி இல்லையா?” என்று கேட்டதை மூவருமே கண்டு கொண்டதாய்த் தெரியவில்லை.

லட்சுமி தனகோடி சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு உறவினர் ஒருவருடன் வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் வந்திறங்கினாள். உள்ளாடை தெரியும்படி வெள்ளை நிற சிறு குர்தாவும், உடம்புக்கு இணங்காத ஊதா நிற ஜீன்ஸும் அணிந்திருந்தாள். குறைத்து மதிப்பிட்டாலும் எண்பது கிலோ இருப்பாள். முகத்தை பவுடரில் முக்கி எடுத்தது போலிருந்தாள். உள்ளங்கையை விட பட்டையான, கொஞ்சம் முயன்றால் ஒடித்துவிடலாம் போல மொபைல் வைத்திருந்தாள். ராயல் மிரேஜா, ப்ளூ லேடியா என்று கண்டறிய முடியாத ஒரு செண்ட் வாசனை அவளைச் சுற்றி வியாபித்திருந்தது. கறுப்பு நிற கண்ணாடி அணிந்திருந்தாள். கட்டை விரல், சுண்டு விரல் தவிர்த்து ஏனைய விரல்களில் விதம் விதமான மோதிரம் அணிந்திருந்தாள். உடன் வந்திருந்த உறவுக்காரர் யாரென்பது யாருக்குமே அவசியமில்லாமல் இருந்தது. லட்சுமியின் அண்ணன் தோரணையிருந்தது அவரிடம். ஹை ஹீல்ஸ் அணிந்து அவள் நடந்து வருவது குட்டி யானையை ஒத்திருப்பதாக சுப்பு யோசித்துக் கொண்டிருந்த போது,

”இதிலே யார் சுப்பு..?” என்று மூவரையும் பார்த்துக் கேட்டாள். சுப்பு ” நான் தான்..” என்று பிரயோஜனமில்லாத பெருமை தொனிக்கும் விதமாகச் சொல்லிக் கொண்டு அவளருகில் சென்றார்.

”வீட்டைப் பார்க்கலாமா?” என்றபடி அவள் நடக்க.. ”ஓ.. கண்டிப்பா..” என்று சுப்பு சொல்லி அவளுக்கு வழிவிட்டு வீட்டின் வெளித் தோற்றத்தைக் காண்பித்து ”முகப்பு எவ்ளோ அழகா இருக்கு பாருங்க மேடம்” என்றார்.

அவள் சுத்தமாக காதில் வாங்காதவள் போல நடந்து அரைமணி நேரம் வீட்டை இண்டு இடுக்கு விடாமல் சுற்றிப் பார்த்தாள். பிறகு சுப்புவை அழைத்து, ”வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. இதே ஊரில் இதுவரை ஆறு வீடு பார்த்துவிட்டேன். எதுவுமே இந்தளவிற்கு இல்லை… மிஸ்டர் சுப்பு யூ ஆர் கிரேட்..” என்று கை குலுக்கினாள்.

சுப்பு தனசாமியையும், முத்துவையும் பார்த்துக் கொண்டே ”தேங்க் யூ.. மேடம்” என்றார். கையை விடுவித்தவுடன் தன் உள்ளங்கையை ஏனோ பார்த்துக் கொண்டார்.

லட்சுமி தனகோடி உடன் வந்திருந்த உறவினரிடம் தனியாக கிசுகிசுவென ஏதோ பேசிக் கொண்டாள். பிறகு சுப்புவை அழைத்து.. ”சுப்பு.. எப்ப சிட்டிங் அரேஞ்ச் பண்றீங்க.. பார்ட்டி சென்னைல இருக்கார்னு சொன்னீங்க இல்லியா.. பார்ட்டி இங்க வருவாரா.. இல்லை நாம போகணுமா..? ”

சற்று தள்ளி நின்று கொண்டிருந்த முத்துவிடம் விவரம் கேட்டுக் கொண்டு வந்த சுப்பு ”வழக்கமா பார்ட்டி இருக்கிற இடத்துக்கு நாம தான் மேடம் போகணும்.. நீங்க விருப்பப்பட்டா.. அட்வான்ஸ் எதுவும் கொடுக்கிற ஐடியா இருந்தா… பார்ட்டியை இங்கே வரவழைக்கலாம்… மேடம்..”

”அதுக்கு முன்னாடி ரேட் பேசணுமே…?” லட்சுமி தனகோடியின் உறவுக்காரர் கேட்டார்.

சுப்பு முத்துவைப் பார்க்க, முத்து அந்த உறவுக்காரரையும் லட்சுமியையும் மையமாகப் பார்த்து ”பேச ஒண்ணுமில்லைங்க.. அவர் கறாரா சொல்லிட்டார்.. இதுக்கு முன்னாடி வந்த பார்ட்டி… ஒரு கோடியே பத்து லட்சம் வரைக்கும் கேட்டுப் பார்த்துட்டாங்க.. அவர் மாட்டேனுட்டார்.. ஒண்ணேகால் சொல்லிட்டிருக்கார். என் கணிப்பு.. ஒண்ணு இருபதுக்கு உட்காரும்.”

சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த லட்சுமி தனகோடி ”சரி முடிச்சுடலாம். சுப்பு உங்க டேர்ம்ஸ் என்ன?”

சுப்பு பவ்யமாக ”எல்லாரும் ரெண்டு பர்சண்ட் வாங்குறாங்க மேடம்.. இடையில சதுரடிக்கு பத்து ரூபா உள்ளடியெல்லாம் வைப்பாங்க… நாங்க பெருசா ஆசைப் படறதில்லை.. ஒரு பர்சண்ட் கமிஷன் ரிஜிஸ்டர் அன்னிக்குக் கொடுத்தா போதும்..”

”ஒரு பர்சண்ட்க்கு குறைச்சலா யாரும் இந்த வியாபாரம் பண்றதில்லைங்க மேடம்..” என்று தனசாமி சொல்ல.. படு அலட்சியமான தோரணையில் ”நீங்க யாரு?” என்று கேட்டாள் லட்சுமி.

தனசாமி சிறு கோபம் கொப்பளிக்க… ”சுப்புவுக்கு இந்த வீட்டை காட்னதே நான் தான் மேடம்.. ” என்று தனது முக்கியத்துவத்தை நிர்மானிக்கும் விதமாக அழுந்தச் சொன்னார். சுப்புவைத் தேவையில்லாம் சற்று கோபமாகப் பார்த்தார்.

”ஐ..ஸீ..! அப்ப இவர் செல்லர் சைடா?” என்று முத்துவைக் காட்டிக் கேட்க.. ”ஆமாங்க..” என்றான் முத்து அதே அனத்தல் தொனியுடன்.

”நீங்க கொடுக்கறதை நாங்க பிரிச்சுக்கணும் மேடம்… நாங்க பத்து வருஷமா சேர்ந்து பண்ணிட்டிருக்கோம்..” என்று சுப்பு ஒரு பிட்டைப் போட்டார்.

”பண்ணிடலாம்.. சுப்பு உங்க நம்பர் என் கிட்ட இருக்கு.. நான் கூப்பிடுறேன்.. நான் ஒரு பத்து நாள்.. தமிழ் நாட்டு கோயில்களெல்லாம் சுத்திப் பார்க்கப் போறேன்.. போயிட்டு வந்த உடனே கூப்பிடுறேன்.. பேசிடுவோம்.. சரியா?”- லட்சுமி தனகோடி சொல்வதைக் கேட்டு சுப்புவுக்கு தன்னியல்பாக முகம் சுருங்கிப் போனது.

”அதில்லைங்க மேடம், ஏற்கனவே ரெண்டு மூணு பார்ட்டி மோதிட்டிருக்காங்க.. வீடு மிஸ்ஸாக வாய்ப்பிருக்கு.. சட்டுபுட்டுனு ஒரு அட்வான்ஸைக் கொடுத்துட்டாக் கூட… வீடு கைமாறாது.. டுப்ளக்ஸ் வீடு கிடைக்கறதே கஷ்டம்.. ”

”டோண்ட் ஒர்ரி சுப்பு.. இந்த வீடு எனக்குன்னு இருந்தா.. மிஸ்ஸாகாது.. மிஸ்ஸானா எனக்கு கடவுள் இந்த வீட்டை வைக்கலனு அர்த்தம்.. பார்க்கலாம்..”

அதற்கு மேல் என்ன பேசினாலும் வீண் என்று பட்டது சுப்புவுக்கு. ”சரி” என்றார். ”ஊருக்கு வந்தவுடனே அடிங்க.. என் வீட்டம்மா நம்பர் தர்றேன்… எதுக்கும் வெச்சுக்குங்க..” என்றார்.

”வேண்டியதில்லை.. உங்க நம்பரே போதும்!” -லட்சுமி தனகோடி கறுப்புக் கண்ணாடியை செருகிக் கொண்டு காரில் ஏறிக் கொள்ள.. சுப்புவும், தனசாமியும் டாடா காட்டினார்கள்.. முத்து சற்று ஓரமாக ஒதுங்கி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

ஒரு வாரம் ஓடியது. சுப்புவும் தனசாமியும் இந்த வியாபாரத்தைப் பற்றிய கனவிலேயே வேறு எதுவும் மெனக்கெடவில்லை. குறைந்தபட்சம் ஒரு கோடி வைத்தாலும், ஒரு லட்சம் கமிஷன். ஆளுக்கு ஐம்பதாயிரம் வரும். சைக்கிளை தலைசுற்றிப் போட்டுவிட்டு செகண்ட்ஸில் ஒரு டிவிஎஸ் வாங்கும் கனவில் இருந்தார் சுப்பு. தனசாமிக்கு பெரிதாக திட்டம் எதுவும் இல்லை. வந்த பிறகு தான் யோசிக்கணும் என்பது போல் திரிந்தார்.

அன்று ஒரு பட்டா தொடர்பாக சுப்புவுக்கு ரிஜிஸ்டர் ஆபிஸில் ஒரு வேலை வந்தது. ”வா போயிட்டு வரலாம்!” என்று தனசாமி வண்டியில் இருவரும் கிளம்பினர். ரிஜிஸ்டர் ஆபிஸ் வாசலில் சில பல கார்கள் நின்றிருந்தன. ஓரத்தில் முத்துவின் பைக் நிற்பதை சுப்பு பார்த்துவிட்டு ”இந்த முத்து பயலும் இங்க வந்திருக்கான் போல..” என்றபடி உள்ளே செல்வதற்கும், முத்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

இவர்களைப் பார்த்ததும் அவன் வெளிறிப் போய் பம்முவதை சற்றும் அறியவில்லை நண்பர்கள் இருவரும்.

”என்னப்பா முத்து.. என்ன இந்தப் பக்கம்?” என்றார் தனசாமி. அவன் வாய் திறப்பதற்குள் ”அந்த டுப்ளக்ஸ் வீடு கை மாறலையே..?இருக்குல்ல…? அந்த அம்மா வந்துடும்பா..இடையில எங்கிட்ட போன்ல பேசுச்சு.. ” என்று அவிழ்த்துவிட்டார் சுப்பு.

”அது வந்து… ” என்று முத்து எதுவோ சொல்ல வருவதற்குள்.. உள்ளே இருந்து ஒரு குரல் ”முத்து சீக்கிரம் வாங்க.. விட்னஸ் கையெழுத்து போட கூப்பிடுறாங்க..” என்றது.

மூவரும் குரல் வந்த திசைக்குத் திரும்பினார்கள்.

அடுத்த முப்பதாவது நிமிடத்தில்….

”இன்னும் ஒரு வாரத்தில் டாகுமெண்ட் கைக்கு வந்திடும் மேடம்… எனக்கு நீங்க எதுவும் தர வேணாம். எங்க சார் எல்லாம் கொடுத்துட்டாரு.. இனிமே தமிழ்நாட்டில சொத்து வாங்கணும்னா என் ஞாபகம் தான் வரணும் உங்களுக்கு..” என்று காரில் லட்சுமி தனகோடியிடம் முத்து சொல்லிக் கொண்டிருந்தான்.

”நைட் ஒரு சின்ன ட்ரீட் எங்க வீட்ல..” என்று லட்சுமி தனகோடி வீட்டை விற்ற சென்னை காரரை அழைத்துக் கொண்டிருந்தாள்.

”சார்.. ப்ளீஸ் விடச் சொல்லுங்க சார்… தெரியாம பண்ணிட்டான். கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொல்றேன்!” என்று புகார் கொடுத்த சார் பதிவாளரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் தனசாமி.

ரிஜிஸ்டர் ஆபிஸில் புகுந்து ரகளை செய்ததற்காகவும், ஒரு பெண்ணைத் தகாத முறையில் திட்டியதற்காகவும் போலீஸால் கைது செய்யப்பட்டிருந்தார் சுப்பு!

”ஸார் அந்த புரோக்கர்.. ஒரு அறை விட்டதுக்கே மயங்கி விழுந்துட்டான் ஸார்…” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் கான்ஸ்டபிள்.

சுபம்!

சிவக்குமார் அசோகன்
 

”கண்டீஷன்லாம் சொல்லிட்டீங்களா?”

 

 

அவள் சுத்தமாக காதில் வாங்காதவள் போல நடந்து அரைமணி நேரம் வீட்டை இண்டு இடுக்கு விடாமல் சுற்றிப் பார்த்தாள். பிறகு சுப்புவை அழைத்து, ”வீடு எனக்குப் பிடித்திருக்கிறது. இதே ஊரில் இதுவரை ஆறு வீடு பார்த்துவிட்டேன். எதுவுமே இந்தளவிற்கு இல்லை… மிஸ்டர் சுப்பு யூ ஆர் கிரேட்..” என்று கை குலுக்கினாள்.

Series Navigationசுந்தரி காண்டம் ( தொடர் கதைகள் ) 2. திரிலோக சுந்தரிJawaharlal Nehru’s biography retold in rhyming couplets
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *