விஜய் சித்திரம் – மரி

This entry is part 11 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

 

திண்ணை இணைய இதழில் நான் சிலாகித்து கட்டுரையாக எழுதிய பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ தாய் செல்வத்தின் இயக்கத்தில் சனிக்கிழமை (29.8.2015) விஜய் சித்திரத்தில் ‘மரி’ என்கிற தலைப்பில் இரண்டு மணி நேர படமாகக் காட்டப்பட்டது.

கதை இதுதான்! புருசன் ஓடிப்போனபின், கடன் கொடுத்த எபினேசரே வாழ்வளிக்க முன் வர, அதை ஏற்றுக் கொள்கிறாள் அற்புத மேரி என்கிற மரியின் அம்மா. எபினேசர் மூலம் அவளுக்கு சேவியர் என்கிற மகனும் பிறக்கிறான். 18 வயதில் தனது அம்மாவை இன்னொரு குழந்தையுடன் பங்கு போட்டுக் கொள்ளப் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி தனியே வாழ்கிறாள் மரி. பள்ளிக்குச் செல்லாமல், பத்தாம் வகுப்பிலேயே தேங்கி, குப்பையான வீட்டில் தூங்கி, ஊர் சுற்றி, யாருக்கும் அடங்காமல், எதிர் பேச்சு பேசும் மரியை, பள்ளியை விட்டு விலக்க நிர்வாகம் முடிவு செய்யும்போது, அவளை திருத்தி ஆறுதலான வாழ்வை அளிக்கிறார் மாணிக்கவாசகம் வாத்தியார். மரி மீண்டும் பள்ளிக்குச் செல்கிறாள்.

சில வருடங்களுக்கு முன் கதையைப் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட பிம்பங்கள் இவைதான்!

மரி ஒரு ஏழைப் பெண். ஆனால் புத்திசாலி. அவள் வீடு ஒரு குடிசை. அதில் குப்பையோடு குப்பையாக அவளும் வாழ்கிறாள். ஒழுங்கில்லாத தோற்றத்தில் தலை சீவாமல், முகம் கழுவாமல், ஒரு அழுக்கு சீட்டி பாவாடையோடும் மேல் சட்டையோடும், மாராப்பு துணி இல்லாமல் அவள் ஆண்பிள்ளை போலத் திரிவாள். அவளைச் சந்திக்க வரும் மாணிக்க வாசகம் வாத்தியார், அவளை ஒரு பழைய லுங்கி, சட்டையுடன் தான் சந்திப்பார். கடற்கரைக்கு தன் குடும்பத்தோடு அவளையும் வற்புறுத்தி கூட்டிச் செல்லும்போதுதான் அவள் தன் கதையை, ஆதங்கங்களை அவரது மனைவியிடமும் அவரிடமும் சொல்வாள்.

வாத்தியார் குடும்பத்தின் அன்பும் ஆதரவும் கிடைக்கப்பெற, அவள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10ம் வகுப்பு தேர்வாவாள். இனி மரி ஜெயித்து விடுவாள் என்கிற நம்பிக்கைத் தொனியோடு கதை முடியும்.

சித்திரம் எப்படி மரியைக் காட்டியது?

மரி அழகான கல் வீட்டில், மொசைக் தரையுடன் கூடிய வீட்டில், பீரோ, நாற்காலிகள், சமையலறை வசதிகளோடு இருக்கிறாள். அவளுக்கு தினம் உடுத்த, புதிய நல்ல உடைகள் இருக்கின்றன. சமைக்கவோ அல்லது ஓட்டலில் வாங்கிச் சாப்பிடவோ காசு இருக்கிறது. ஊர் சுற்ற சைக்கிள் இருக்கிறது. ரோசக்காரியான மரி, அம்மாவின் புருசன் எபினேசரை வெறுக்கிறாள். ஆனால் அவனுக்குச் சொந்தமான வீட்டில் வசிக்கிறாள். அவன் வாங்கிக் கொடுத்த சைக்கிளை பயன்படுத்துகிறாள். அவன் கொடுக்கும் காசை வாங்கிக் கொள்கிறாள்.

எனக்குள் இருந்த மரியின் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டது மரி என்கிற சித்திரம். இரண்டு மணி நேர படத்திற்காக வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் பல.

ஒட்டு மொத்த ஆசிரியர்களும் மரிக்கு எதிராக திரும்புகிறார்கள். பள்ளிக்கே வராத மரிக்கு, அந்த விடுப்பே தகுந்த காரணமாக இருந்து, அவள் பள்ளியில் இருந்த நீக்க போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் அதில் மெலோ டிராமா, போதனைகள் ஏதும் இருக்காதே! அதனால் சுவாமிநாதன் என்கிற பாத்திரத்தை புகுத்தி, அவருக்கு மரி மேல் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அதை மணிக் கணக்கில் ஒளிப்படமாக்கி என் சிந்தையை பப்படம் ஆக்கிவிட்டார் தாய் செல்வம்.

கடைசியில் சுவாமிநாதன் திருந்த ஒரே வழி, அவரது பெண் சோரம் போவதும், அதை மரி சரி செய்வதும் தான் என்கிற பரண் கருத்தை புகுத்தி, அவார்ட் ரேஞ்சுக்கு காட்சி அமைத்த செல்வம், தன் கற்பனை வறட்சியை தண்டோரா போட்டு பறை சாற்றி விட்டார்.

மாணிக்கவாசகம் என்கிற பாத்திரத்தை அருமையாக வடித்திருப்பார் பிரபஞ்சன். புதிதாக வேலையில் சேரும் ஆசிரியர், ஏன் மரி வரவில்லை என்கிற காரணத்தைத் தேடி அவள் வீட்டிற்கு போகும் காட்சியில் தான் கதை ஆரம்பிக்கும் என்று நினைவு. இதற்கு முன்கதை எழுதியதில், நிஜக் கதையில் இருந்த விறுவிறுப்பு போயே போச்!

கதையின் முக்கியமான பாத்திரம் வாத்தியாரின் மனைவி திலகா. அவள் தான் ஒரு தாய் நிலையில் மரிக்கு அன்பை ஊட்டுகிறாள். ஆனால் ஆரம்பத்தில் அன்பால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. கருணை காட்டினால் குடும்பம் நடுத்தெருவுக்கு வர வேண்டியது தான் என்கிற சராசரி மனைவி பாத்திரமாக அதை காட்டுவது, பாத்திரப்படைப்பில் இயக்குனர் தெளித்திருக்கும் முரண்.

எபினேசர், மரியின் அம்மா, சேவியர் என எண்ணற்ற பாத்திரங்கள் கதைக்கு எந்த வலுவையும் சேர்க்கவில்லை என்பதே அப்பட்டமான உண்மை. பள்ளியின் ஆசிரியர் பாத்திரங்களும் அவ்வாறே!

மரியின் பள்ளிப் பை மைதானத்திலேயே கிடக்கிறது. அதில் சிகரெட்டுகளும், போதை புகையிலை பாக்கெட்டுகளும், அழகு சாதனப் பொருட்களும் இருக்கின்றன. அவை எல்லாம் மரி, தவறான வழியில் போகும் மாணவர்களிடம் இருந்து கைப்பற்றியது. இதை விளக்கமாக சொல்ல தவறியதால், மரி என்கிற பாத்திரத்தின் குணம் கூறு போடப் பட்டிருக்கிறது.

சராசரி தொலைக்காட்சி தொடர்கள் போலவே ஒரே கோணத்தில் க்ளோசப், மிட் ஷாட் என்று கேமரா பயணிப்பதும், வசனங்களுக்கு பாத்திரங்கள் காட்டும் உணர்வு பாவங்கள் ஒன்று போலவே இன்னொன்றும் இருப்பதும் பட்ஜெட் பற்றாக்குறையா? சிந்தனை வறட்சியா?

ஆனாலும் இம்மாதிரி கதைகளை எவ்வகையிலாவது காட்சிப்படுத்த வேண்டும் என்கிற விஜய் டிவியின் முயற்சி பாராட்டுக்குரியது. கதையை படித்த எனக்கு, அதோடு ஒப்பிட்டு பார்த்து சில காட்சிகளை ரசிக்க முடிந்தது. படிக்காதவர்களுக்கு இது புதிய அனுபவமாக, நல்ல இலக்கிய திரையிடலாக இருக்கக் கூடும்.

மரி ஜெயித்து விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

0

Series Navigationஜி. நாகராஜனின் சிறுகதைகள்பொன்னியின் செல்வன் படக்கதை -2

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *