நடேசன்
சிறுகதைகள் மனித வாழ்வின் தருணத்தை மின்னலாக வெளிச்சமிடுபவை. சிறுகதைகளின் தொடக்கம் ஜாதகக்கதைகள், விவிலியம் ஈசாப் கதைகளிலிருந்து தோன்றினாலும் அமரிக்கா, இரஸ்சியாவில் 19ஆம் நூற்றாண்டிலே இலக்கியமாக வரையறை செய்யப்படுகிறது. சிறுகதைகளை மதிப்பிடுவதில் உள்ளடக்கம், மொழி, அமைப்பு, என்பவற்றுடன் நம்பகத்தன்மை, சர்வதேசியத்தன்மை, வாசிப்போரது உள்ளத்தில் உருவாக்கும் தாக்கம் எனப்பல கூறுகள் அடங்கியது
ஜி நாகராஜனின் சிறுகதைகள் அவரது நாவல்கள் போல் உள்மன உணர்வுகளையும், கனவுகளையும் வெளியே கொணர்ந்து மனிதர்களின் மனதை கூறுபோட்டு மேசையில் காட்சிப்படுத்தும். அவருடைய சிறுகதைகளைக் கூர்ந்து கவனித்தால் சில விடயங்கள் புலப்படும். சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடுகள் என்பனவற்றை அந்த சமூகத்திலிருக்கும் மனிதர்களை தனிமைப்படுத்தி பார்க்கும்போது நெல்லிக்காய் மூட்டை சிதறுவதுபோல் சிதறிவிடும். கலாச்சார மூடுபனிகள் எவ்வளவு போலியானவை என்பதை வெளிக்காட்டும்.
காப்காவின் (Kafka) சிறந்த கதை கன்றி டாக்டர்(Country Doctor). கடமையுணர்வுள்ள அந்த டாக்டர் ஒரு நோயாளியை இரவில் பார்க்கப் புறப்படும்போது அவரது குதிரைகள் இறந்துவிட்டன. ஆனால் தொழுவத்தில் இரண்டு சிறந்த குதிரைகள் ஆச்சரியப்படும் விதத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த குதிரைகளைப் பராமரிப்பவன் டாக்டரோடு வரமறுத்ததும் அல்லாமல் டாக்டரின் விட்டின் உதவியாளரான ரோசா என்ற இளம் பெண்ணின் கன்னத்தில் பலவந்தமாக கடித்தும் வடுகிறான். ரோசா அவனுக்குப் பயந்து டாக்டர் வீட்டுக்குள் ஓடிச்சென்று கதவை தாளிடுகிறாள்.
டாக்டர் நோயாளியை பார்க்கப் போனபோது குதிரையை பராமரிப்பவன் ரோசாவை பாலியல் வன்தாக்குதல் செய்வது மனதில் நிற்கிறது. இடுப்பில் பெரிய காயத்துடன் படுத்திருக்கும் சிறுவனைப்பார்க்கும்போது அவர் ரோசாவை நினைப்பதால் சிறுவனின் காயம் ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரியவில்லை. பின்பு அந்தக் காயம் அவனது இடுப்பில் கையளவு பெரிதாக பெரிய ரோசா வண்ணத்தில் புழுக்கள் நெளியும் புண்ணாகத் தெரிகிறது. வைத்தியரால் எதுவும் செய்யமுடியவில்லை. காரணம் அவரால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை
‘ மருந்து எழுதுவது சுலபம். ஆனால் நோயாளியை புரிந்து கொள்வது கடினம்’
‘ நான் இங்கிருக்கும்போது எனது உதவியாளரான ரோசா அழிக்கப்படுகிறாள்’
மேற்கூறியவை டாக்டரின் மன எண்ணங்கள்.
நோயாளியிடம் ‘என்னால், உன்னைக் காப்பாற்ற முடியாது.’ என்கிறார்
அக்கால வழக்கப்படி நோயாளியை காப்பாற்றத் தவறிய டாக்டர் தண்டனைக்குள்ளாகிறார். டாக்டரின் உடைகளைக் களைந்து நோயாளியின் கட்டிலில் அருகே படுக்கவைக்கிறார்கள்.
நோயாளி டாக்டரிடம், ‘உன்னால் எனக்கு உதவ முடியவில்லை போதாக்குறைக்கு நான் இறக்கும்போது நிம்மதியாக இறக்க முடியாதபடி எனது படுக்கையில் படுத்து அந்த இடத்தையும் நீ நெருக்குகிறாய்.’ எனச்சொல்கிறான்.
இறுதியில் அங்கிருந்து நிர்வாணமாக பனிபடர்ந்த இடங்கள் ஊடாக டாக்டர் தப்பியோடுகிறார்
இந்தக் கதையில் உண்மை எது நினைவு எது என்பதைப்பார்த்தல் கடினம். யதார்த்தம் என்பது வார்த்தைகள் காற்றில் மிதந்து அந்தந்த இடங்களின் வடிவத்தை பெறுகிறது.
இதே மாதிரியான ஒரு சிறுகதை ஜி நாகராஜன் எழுதிய டெர்லின் ஷேர்ட்டும் வேட்டியும் அணிந்த மனிதர்.
விபசார விடுதியில் மற்றப் பெண்கள் விடுமுறையில் ஊருக்கும்போன நிலையில் விடுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் தேவயானியின் பற்றி விபரமாக சித்திரிக்கப்படுகிறது. கயிற்றில் தொங்கி தற்கொலை செய்வதற்காக அவள் முயற்சிக்கும்வேளையில், வெளிக்கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தபோது அவளது அத்தான்(மாமா)வருகிறார். அவர் விடுதிக்குள் பாகவதர் தலைமயிர் தோற்றத்துடன் டெர்லின் ஷேர்ட்டும் எட்டுமுழவேட்டியும் அணிந்த ஒருவரை அழைத்து வருகிறார்
வந்தவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவளது முந்தானையை விலக்கச் சொல்லி மார்பைப் பார்க்கிறார். தேவயானி அவளைத் தொட முயன்றாலும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவளைத் தொடாது இருந்துவிட்டு ஐந்து ரூபா கொடுத்துவிட்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று விட்டார்.
மீண்டும் அத்தான் வந்தபோது அவரைப் பற்றி கேட்கிறாள். அத்தான் தான் அப்படி ஒருவரையும் கூட்டி வரவில்லை எனச்சொல்கிறார். இன்று பொலிஸ்ரெயிட் இருப்பதாக தகவல் வந்தது என்கிறார்.
அவளோ அந்த மனிதர் தந்த ஐந்து ரூபாய் நோட்டைத் தேடுகிறாள். அதுவும் கிடைக்கவில்லை
இந்தக் கதையில் மிகப் பெரிய உண்மை. தேவயானி; தற்கொலைக்கு தயாராகிய நேரத்திலும் வாழத் துடிக்கிறாள் என்பதாகப் புலப்படுகிறது. தனக்கு ஏதாவது ஒரு சிறு ஒளிக்கீற்று கிடைக்காதா என ஏங்குகிறாள். வேறு வேலைக்காக இல்லை, குடும்பப் பெண்ணாக வாழ்வதற்கும் அவள் ஏங்கவில்லை. அதற்கும் மேல் சென்று யாராவது தன்னை தொடாத ஆண்வருவானா என தேடுகிறாள்.
தனது உள்ளத்து உணர்வுகளை ரசிப்பவன் கூடத்தேவையில்லை. தனது அழகை இரசிக்கும் கண்ணியமானவனைத் தேடுகிறாள்.
அவள் நினைவில் தேடியவனின் உடைகள் விசித்திரமானவை. ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் ஒரு ஆணின் வடிவம்; உருவகிக்கப்படுகிறது.
தமிழில் சிறுகதைகள் கவிதை வரிகளாக இருக்கவேண்டுமென நினைப்பவர்களுக்கு இந்தக் கதைகளில் எழுதாக இடைவெளிகள்தான் இலக்கியம் என்பதை புரியவைக்கிறது. எழுத்தாளன் தனது வாழ்க்கைச் சம்பவங்களையோ அல்லது அனுபவத்தையோ எழுதுபவன் அல்ல. மற்றவர்களின் மனஎண்ணங்களில் மூழ்கி முத்தெடுப்பவனே சிறந்த இலக்கியங்களை படைக்கமுடியும் என்பதற்கான சாட்சி இந்தச் சிறுகதை
அணுயுகம் என்ற கதை ஒரு யப்பானிய சிந்தனைவாதியான டாக்டரைப் பற்றியது.
இந்தக் கதை நாகசாகியில் குண்டுவிழுந்த பின்பு எப்படி மனிதர்களின் மனங்களைப் பாதித்தது என்பதை சித்திரிக்கிறது.
அணுகுண்டு போட்டபின்பு கதிரியக்கத்தால் குழந்தைகள் விகாரமான பிண்டங்களாக பிறப்பதால் காதலித்து மணந்த தம்பதிகளின் உளப்போக்கை காண்பிக்கிறது.
காதலித்த மனைவி மற்றும் டாக்டர் இருவரும் தமக்கு குழந்தை தேவையில்லை எனத்தீர்மானித்த பின்னர், டாக்டர் வேலைக்கு சென்றதும் மனைவி மற்றைய வாலிபர்களுடன் சந்தோசமாக விருந்துகள் கேளிக்கைகள் என காலம் கழிக்கிறாள். இதைச்சகிக்க முடியாத அந்த டாக்டர், அவளைக் கர்ப்பிணியாக்கியதும், அவள் கேளிக்கைகளை மறந்து தாய்மைக்குத் தயாராகிறாள். ஆனால் குழந்தை பிண்டமாகப் பிறக்கிறது.
இதுவரையில் தனது வேலைத்தலத்தில் தாதியுடன் கண்ணியமாக நடந்த டாக்டர் அந்தத்தாதியை உடலுறவுக்கு அழைக்கிறார்.
“இது அணுயுகம் ஆண்களைக் குஷிப்படுத்துவதுதானே பெண்களது வேலை. இனிப் பத்துமாதம் சுமக்க வேண்டாம்.’
‘குழந்தையே இல்லாதபோது புருசன் யார்? தகப்பன் யார்?’
இந்தக் கதையில் அறம், மனச்சாட்சி என்பன சூழ்நிலையைப் பொறுத்து அமைகின்றன. மனிதன் ஆழ்மனத்தில் விலங்கு. அந்த நிலைக்கு அவன் தள்ளப்படும்போது மீண்டும் அவனது இயல்பு தலை தூக்குகிறது. அணுகுண்டு நாகசாகியில் மக்களை கொல்லுவதோடு நிற்கவில்லை, சமூகம் காலம் காலமாக உருவாக்கிப் பாதுகாத்த விழுமியங்களையும் மாற்றுகிறது. இந்தக்கதை மனித மனங்களை குடைந்து பார்ப்பதோடு, எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதையும் சூசகமாக உணர்த்துகிறது. இந்தக் கதை எழுதப்பட்டகாலத்தை நினைக்கும்போது கதையின் முக்கியத்துவம் மேலும் உயருகிறது.
மிஸ் பாக்கியம் என்ற கதை முதிர்கன்னியாக தனிமையில் வாடிய பெண்ணின் கதை.
இருபால் உறவை எடுத்துக் கூறியதுடன் அவள் ஒரு மாணவியை கொலை செய்வதும் பின்பு தான் தற்கொலை செய்வதுமான கதை.
மாணவியான ஒருத்தி தனது பருவகாலத்தில் பக்கத்து வீட்டு வயதானவருடன் உறவு கொள்ளுவதிலிருந்து அவளது பாலியல் பருவம் ஆரம்பமாகிறது. இங்கே பெண்ணின் விருப்பத்துடனே உறவு நடைபெறுகிறது. வழக்கமான தமிழ்ச்சமூக சூறையாடல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் யதார்த்தமான உறவு.
உண்மையில் சொல்கிறேன். உன் கழுத்தில் முத்தணும் போல் எனக்கு எத்தனை தரம் தோன்றி இருக்கிறது தெரியுமா? – இது நண்பி சாரதா.
பிறகு தூக்கம் வராது ஏதாவது சேஸ்டைகள் செய்து தன்னைத்தானே ஆயாசப்படுத்திக்கொண்டு உறங்குவாள் . இப்பொழுதும் அவளுக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டது
இங்குதான் எஸ். பொ. வின் (சடங்கு) வார்த்தைகளால் காமத்தை சொல்லாமல் வாசிப்பவர்களிடம் உணர்த்தி விட்டுவிடும் நாகராஜனது இலக்கிய மேன்மை தெரிகிறது.
இந்தக்கதைப் பொருள் தமிழ் சமூகத்தில் இப்பொழுதும் விலக்கப்பட்டதுதான். ஆனால், சமூகத்தில் நடக்காத விடயம் அல்ல. ஆனாலும் நாகராஜன் காமத்தை தென்னம் பொத்திக்குள் உள்ள கதிராக வைத்து அலங்கரிக்கிறார்.
யாரோ முட்டாள் சொல்லிய கதை
பொருத்தமில்லாத கல்யாணத்தில் அகப்பட்ட மனைவி பாக்கியத்திற்கு கணவன் மணியைப் பிடிக்கவில்லை. அவன் லூசு மணி என்ற பட்டப் பெயருள்ளவன். அவனை மனைவி மட்டுமல்ல ஊராரும் கேலிக்குரியவனாக்குகிறார்கள். அவள் பணத்திற்காக சண்டியன் பரமன் ஊடாக பல உறவுகளில் ஈடுபடுகிறாள். பலமுறை சொல்லியும் பாக்கியம் கேட்காததால் மணி பரமனைக் கொலை செய்கிறான். குழந்தை அழகர் மேல் மணிக்கு அளவு கடந்த பாசம் அதேபோல் அழகருக்கும்; மணி மீது தாயைவிடப் பாசம்.
பரமனது கொலை ஒரு துப்பறியும் கதை வடிவில் செல்கிறது. பொலிஸ் மணியைப் பிடித்தபோது ‘என்மவன்’ ‘என்மவன்’ என அழகரை நோக்கி கதறுகிறான். அப்பொழுது பாக்கியம் ” கிறுக்கு அழகர் உன் மவனில்லை, உனக்கு கழுத்தை நீட்டினேனே அன்னைக்கு என் வவுத்திலே ஒரு மாசம். லட்சுமணதேவருக்கு கருத்தரித்தேனாக்கும் இனி எந்த …. மவனுக்கும் கருத்தரிக்கமாட்டேன்” என்கிறாள்.
வழக்கமாக சிறுகதையாசிரியர்கள் இந்த முரண்நகையுடன்தான் கதையை முடித்திருப்பார்கள். ஆனால், மணி ஊராரிடமும் பொலிசிடமும் தப்பி ஓடமுயன்று இளமைக்காலத்தில் தான் கண்ட சோளக்காட்டை மனதில் தேடி விழுகிறான். விழுந்து கிடந்தபடி பத்துவயதில் தான் ஏறிய தென்னை மரத்தை நினைக்கிறான்.
மணி கொலைகாரனாக வாசகர் மனதில் வரவில்லை. அப்பாவிச் சிறுவனாகிறான்.
நினைவுகள் நேர்கோட்டில் வருவதில்லை. பொலிஸ் பிடித்தாலும் அவனது நினைவுகளை சிறைப் பிடிக்க முடியாது. அப்பாவியான மணியின் கதை தொடரும் கதை என்ற என்ற அழகிய யதார்த்தம் தெரிகிறது.
இது சிறுகதையாக இருந்தாலும். பரமன் – மணி மற்றும் பாக்கியம் ஆகிய மூவரும் பூரணமான பாத்திரங்களாக அறிமுகமாகின்றனர். மணியின் வாழ்க்கை பத்துவயதில் இருந்து விவரிக்கப்படுவதாலும் பல சம்பவங்கள் உள்ளடக்கப்படுவதாலும் நாவல்போல் விரிந்து இருக்கிறது இச்சிறுகதை.
மேற்கூறிய நாலு கதைகளில் பாத்திரங்களின் பெயர்களை மாற்றினால் உலகத்தின் எந்தக் கண்டத்து மக்களுக்கும் பொருத்தமானது. அவை சர்வ தேசியத்தன்மை கொண்டவை. எழுத்தாளர் ஜி . நாகராஜன் தமிழ்நாட்டு அல்லது இந்திய தன்மைகளுக்கு அப்பால் நின்று எழுதியவர். அவரது எழுத்துகள் மிகவும் தனித்தன்மையானவை.
அவரது கதைகள் அனைத்தும் இன மத சாதி எல்லைகளைக் கடந்தவை. நாகரிகம் பண்பாடு என்பவற்றைக் கடந்து உள்ளத்து உணர்வுகளை பண்பட்ட புதை பொருளாய்வாளர் எடுப்பதுபோல் எடுத்துள்ளார். இன்னொருவிடயம் – இங்கே தமிழ்நாட்டு எழுத்துகளில் ஆழமாக பெண்மையின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த எழுத்தாளர்கள் மிகக்குறைவு. சமூகத்தில் ஐம்பது வீதமானவர்களின் உணர்வுகளை ஊடுருவாமல் இலக்கியம் முழுமை பெறாது. அப்படியாக எழுதிய ஒருசிலரில் முதன்மையானவராக எனக்கு ஜீ . நாகராஜன் தெரிகிறார்.
இந்தச் சிறுகதைகளில் முக்கிய பாத்திரங்களாகிய தேவயானி டாக்டர் மிஸ் பாக்கியம் லூஸ் மணி என்பவர்கள் பூரணமான பாத்திரங்கள். கவனமாக வாசித்த பின்பு அவர்கள் நம்மனதில் பலகாலம் நிற்பார்கள்.
புறச்சூழலுக்கும் உடல் அமைப்பு வர்ணனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அக உணர்வுகளையும் அவர்களது செயற்பாடுகளையும் மட்டுமே எடுத்து பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறது. சிறுகதைகள்; சுரியல் ஓவியம் போன்று நகருகிறது. இது வாசகர்கள் தங்களுக்கான பாத்திரத்தை கற்பனை செய்வதற்கு வழிவகுக்கிறது.
மேற்கூறிய நான்கு கதைகளைவிட நறுக்கான நகைச்சுவையான பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் மறுவாசிப்பு செய்யப்படவேண்டிய எழுத்தாளர் ஜீ.நாகராஜன்.
- குரங்காட்டியும் குரங்கும்
- இசை – தமிழ் மரபு – 3
- ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்
- மைத்தடங்கண்ணினாய்
- திரைப்படங்களும் தமிழிலக்கியமும் கருத்தரங்கு – சென்னை பல்கலைக் கழகம் – 4-9-2015
- ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?
- தொடுவானம் 83. இறை நம்பிக்கை
- ஸ்பரிஸம்
- மின்னல் கீறிய வடு
- ஜி. நாகராஜனின் சிறுகதைகள்
- விஜய் சித்திரம் – மரி
- பொன்னியின் செல்வன் படக்கதை -2
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 6)