அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. உங்களிடம் இருப்பது எத்தனை காலணிகள்? இந்த ஆண்டு நீங்கள் தொலைத்த காலணிகள் எத்தனை? உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை காலணிகள்? ஒன்றும் அவசரமில்லை. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். யோசிக்கும்போதே இந்தப் புள்ளிவிபரம் உண்மைதான் என்பது உங்களுக்குப் புரியும். 100வெள்ளிக் காலணி கூட அன்றாடப் பொருளாகிவிட்டது. அதை வெளியே எப்படி வைப்பது?
7 ஆண்டுகளுக்கு முன் ஒரு மரச்சாமான்களுக்கான பொருட்காட்சியில் ஒரு காலணி அலமாரி வாங்கினேன். 6 அடிக் கட்டிலைக் கூட நகர்த்திவிடலாம். இந்தக் காலணி அலமாரியை தனியாக ஒருவர் நகர்த்திவிடமுடியாது. அடிப்பக்கம் அப்படியே பச்சென்று 5 அடிக்கு இரண்டடி அளவில் தரையோடு தரையாக ஒட்டிக் கிடக்கிறது. மாதம் ஒரு முறை இதை நகர்த்தி ஈரத்தூரிகையால் சுத்தம் செய்வது என் வாடிக்கை. ஒருவர் அதை ஒருக்களித்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அம்மாடியோவ்! எங்கிருநதுதான் வந்ததோ இத்னை மூக்குப்பொடித் தூசும் பஞ்சுத்தூசும். இதை சுத்தம் செய்யுமுன் என் மகனை வெளியே போகச் சொல்லவேண்டும். அவனுக்கு தூசு ஒவ்வாமை. தும்ம ஆரம்பித்தால் சர்வசாதாரணமாக செஞ்சுரி போட்டுவிடுவான். நானும் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொள்வேன். பிறகு எதிர்ப்பக்கத்தை ஒருக்களித்து விட்டுப்போன மூக்குப் பொடியையும் அகற்ற வேண்டும். ஒரு வழியாக சுத்தம் செய்துவிட்டால் உங்கள் கணக்கில் யாரோ 1000 வெள்ளியை மாற்றிவிட்டதுபோல ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சியிலேயே அந்த நாள் இனிக்கும். பணிஓய்வு என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா? என்று அந்த அலமாரி கேட்பதுபோல் இருக்கிறது. அதிலுள்ள இழுவறைகள் சிக்குகிறது. சிலசமயம் இழுக்கவே வராது. அதில்தான் 35 காலுரைகளை வைக்கவேண்டும். கதவுகளை நிரந்தரமாக மூடவே முடியாது. திறந்துதான் கிடக்கும். அதை சிரமப்பட்டு மூடினாலும் இழுவறைகளை சுத்தமாக இழுக்கவே முடியாது. உள்ளே உள்ள தட்டுக்கள் அலைகள் போலாகி காலணி வைக்கும்போதெல்லாம் அதை ஊஞ்சலாட்டிவிட்டுத்தான் ஓய்கிறது. சரி. அந்த அலமாரிக்கு ஓய்வு கொடுத்துத்தான் ஆகவேண்டும். வெளியே போட்டுவிடுவோம். யாராவது எடுத்துக் கொள்வார்கள். நம் வீட்டில் ஏழாண்டுகளாக ஒட்டி உறவாடிய ஒரு பொருளை அனாதையாக வெளியே தூக்கிப் போடுவதில் உள்ள வலி கொடுமையானது. ஏழாண்டுகளாக வீட்டில் இருந்து பட்டுப்போய்விட்ட ஒரு கருவேப்பிலைத் தொட்டியை மின்தூக்கியின் கீழ்தளத்தில் வைத்துவிட்டு அந்த நாள் முழுதும் யாருக்குமே தெரியாமல் அழுதிருக்கிறேன். இந்த வலிகளெல்லாம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தாகிவிட்டது.
‘பாக்கியா ஃபர்னிச்சர்’ என்று ஒரு நிறுவனம். புதிய ஒரு அலமாரியை வாங்க அங்கு சென்றேன். நான்காம் மாடியில் படுக்கைப் பிரிவுக்கு அருகாமையில் என்றார்கள். யானைத்தந்த நிறத்தில் ஒரு அலமாரி இரண்டு கால்களில் நிற்கிறது. முதுகுப் பகுதியை சுவற்றோடு சேர்த்து ‘போல்ட்’ போட வேண்டுமாம். மூன்று அறைகள். திறந்தால் 120 டிகிரி சுழன்று ‘எனக்குள் எதையாவது வை’ என்று கெஞ்சுகிறது. பிறகு மூடிவிட்டால் பொத்திக்கொண்டு சிரிக்கிறது. என்ன அருமையான தொழில்நுட்ப வளர்ச்சி. விலை 300 வெள்ளியாம். சரி. வாங்கிவிடவேண்டியதுதான். எங்கு தேடியும் விற்பனையாளர்களைக் காணமுடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு ஒரு சீருடை விற்பனையாளர் கண்ணில் பட்டார். இந்தக் காலணி அலமாரி வேண்டும். பில் தர முடியுமா? என்றேன். ‘அந்த அலமாரியின் மேற்பகுதியில் தகவல் பதிவுகள் இருக்கும். அதை அப்படியே புகைப்படம் எடுத்து வாருங்கள். நான் அங்கே வரமுடியாது.’ என்றார். மீண்டும் வந்து புகைப்படம் எடுத்துச் சென்றேன். பதிவுகளை கணினியில் தட்டினார். ஏ4 அளவில் ஒரு பட்டியல் பொதக்கென்று விழுந்தது. எடுத்துக்கொண்டு முதல்மாடியில் இருக்கும் காசாளரிடம் சென்றேன். காசைச் செலுத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி பொருத்தித் தரும் பிரிவுக்குச் சென்றேன். தகவல்களை தட்டினார். ‘109 வெள்ளி ஆகும். அதைச் செலுத்துங்கள். இன்று தேதி 11. 21ஆம் தேதி மாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் வந்து பொருத்தித் தருவார்கள். வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் எங்கள் ஆட்கள் உங்களுக்கு தொலைபேசுவார்கள்.’ என்றார். ஏழாண்டுகள் பொறுத்தாகிவிட்டது. இன்னும் 10 நாட்கள் தானே. அந்த 21ஆம் தேதி காலை எனக்கு பல்மருத்துவரோடு சந்திப்பு இருக்கிறது. பல்லில் ஆணி அடிப்பது போன்ற வலி ஒரு மாதமாக. ஆனாலும் பரவாயில்லை. இவர் மாலையில்தானே வருகிறார். அதற்குள் பல்லைப் பிடுங்கிவிடலாம்.. ‘சரி’ என்றேன்.
21ஆம் தேதி காலை 10 மணி. பல் மருத்துவமனை. வரிசை எண் எடுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். தொலைபேசி அழைத்தது. எடுத்தேன். பாக்யாவிலிருந்து அழைக்கிறார்கள். ‘காலை 11 மணிக்கு எங்கள் ஆட்கள் வருகிறார்கள். வீட்டில்தானே இருக்கிறீர்கள்?’ என்றார். என்ன செய்வது? நான்தான் போகவேண்டும். அவரிடமே திரும்பக் கேட்டேன். ‘மாலை என்றுதானே சொன்னீர்கள். நான் வெளியே இருக்கிறேன். வீட்டில் யாரும் இல்லையே’ என்றேன். ‘ஓ. அப்படியானால் அடுத்த வாரம்தான் வருவார்கள்.’ என்றார். இன்னும் ஒரு வாரமா. பல் மருத்துவரைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ‘நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். வரச் சொல்லுங்கள்.’ என்றேன்.
நான் வீடுவந்து அடுத்த 20 நிமிடங்களில் அவர்கள் வந்துவிட்டார்கள். சப்பையான செவ்வக அட்டைப் பெட்டிகள் சில மட்டும் இருந்தன. சரசரவென்று கிழித்தார்கள். பிரித்தார்கள். கொத்து மறை ஆணிகளும் சில மரத்துண்டுகளும் வந்து விழுந்தன. பின் பலகையைப் பொருத்த சுவற்றில் ‘போல்ட்’ துளை போடப்பட்டது. 20 நிமிடத்தில் அந்த யானைத்தந்த அலமாரி சுவற்றில் நச்சென்று பொருத்தப்பட்டு ‘என்ன சேதி? சௌக்கியமா?’ என்றது. ‘போய்வருகிறோம் பாஸ்’ என்று சொல்லிக்கொண்டு அந்த ஆட்கள் வெளியேறினார்கள். அந்த ‘பாஸ்’ என்ற வார்த்தை என் தலையில் பனிக்கட்டிகளை இறக்கியது. அந்த அலமாரியின் மேல் அறையைத் திறந்தேன். 120 டிகிரி சுழன்று திறந்து ‘ம். சீக்கிரம் உன் காலணியை வை’ என்றது. ஒரு காலணியை வைத்தேன். மூடினேன். பிறகு மீண்டும் திறந்தேன். ஒரு மறை ஆணி கழன்று உள்ளேயே விழுந்து இடமும் வலமுமாய் சுற்றியது. ‘என்னடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை’. அந்த ஆணியை எடுத்து அந்தத் துளையில் பொருத்திப் பார்த்தேன். அது சாவகாசமாய் உள்ளே போய் உட்கார்ந்துகொண்டது. வெளியே இழுத்தேன் வந்துவிட்டது. திருப்புளியே தேவையில்லாமல் அந்தத் துளை நிரந்தரத் துவாரமாய் ஆணிககு பிடிமானமே இல்லாமல் போய்விட்டது. பாக்யாவை அழைத்தேன். இந்த விபரத்தை எப்படிச் சொல்வது? நான் இப்படிச் சொன்னேன். ‘உங்கள் ஆட்கள் சரியாகப் பொருத்தவில்லை. சில ஆணிகள் கழன்று விழுந்துவிட்டன’ என்று . ‘சரி. இன்றைக்கு தேதி 21. 23ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 7 மணிக்குள் வருவார்கள்’ என்றார். அன்று 7 மணிக்கு ஒரு கூட்டம் நான் அவசியம் போக வேண்டும். 7 மணிக்குள் அவர்கள் முடித்துவிட்டாலும் நாம் கூட்டத்துக்குப் போய்விடலாம். ‘சரி’ என்றேன்.
23ஆம் தேதி. 7 மணி ஆகியும் ஒரு அழைப்பும் இல்லை. தொலைபேசி அழைக்கவே இல்லை. தொலைபேசியை திறந்து திறந்து பைத்தியம் போல் பார்க்கிறேன். அவர்கள் வருவதுபோல் தெரியவில்லை. நான் கூட்டத்துக்கு கிளம்பினேன். பாதி வழியில் அழைப்பு. ‘நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 10 நிமிடத்தில் அங்கு இருப்போம்.’ என்றார்கள். உடனே வீட்டுக்குத் திரும்பினேன். கூட்டத்துக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. தலைவரிடம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். 10 நிமிடத்தில் வந்துவிட்டார்கள். அந்த ஆணியைப் பொருத்த மின்னியக்க திருப்புளியை எடுத்தார். ‘அது தேவையில்லை. அது தானாகவே உள்ளே போய் வெளியே வருகிறது’ என்றேன். ‘அட! ஆமாம். இந்த உருப்படி வீணாகிவிட்டது. நான் வீட்டுக்கு அனுப்பும் பிரிவிலும் வாடிக்கையாளர் பிரிவிலும் தெரிவித்து விடுகிறேன். இன்னும் சில நாளில் இதேபோல் வெறொரு காலணி அலமாரியுடன் வருகிறோம்.’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
அன்று இரவு முழுவதும் காலணி அலமாரி கனவுதான். பெரிய அலமாரிகள் நிற்கிறது. ஆடுகிறது. விழுந்து உடைகிறது. மீண்டும் எழுகிறது. ஒரு காலணி வைத்தவுடன் மீண்டும் விழுகிறது. சே! ஒரு செருப்பு அலமாரி என்ன பாடுபடுத்துகிறது. ஒரு வழியாக விடிந்தது. அத்தனை பட்டியல்களையும் அள்ளிக்கொண்டு பாக்யாவுக்கு ஓடினேன். தகவலைச் சொன்னேன். ‘எனக்கு இந்த அலமாரியே வேண்டாம். 100 கிராம் எடையுள்ள காலணிகளுக்குத்தான் இது சரியாக வரும். என் மகனின் காலணிகள் ஒவ்வொன்றும் 1 கிலோ’ என்றேன். ‘சரி. அமருங்கள். பெரிய அதிகாரியை கேட்டுவிட்டு வருகிறேன். பொருளை மாற்ற அவர்தான் அனுமதிக்க வேண்டும்’ என்றார். அமர்ந்தேன். கனவுகளால் கிழிக்கப்பட்டு தூக்கம் இழந்ததால் ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். வந்து எழுப்பினார். ‘அதிகாரி ஒப்புக் கொண்டுவிட்டார். நீங்கள் வெறொரு பொருளைப் பாருங்கள். இந்த அட்டையைக் காண்பியுங்கள். நீங்கள் செலுத்திய வெள்ளியைக் கழித்துக் கொள்வார்கள்.’ என்றார். அதே நான்காம் மாடி. அநதக் கட்டில் பிரிவுக்கு விரைந்தேன். அந்த யானைத்தந்த அலமாரி அதே இடத்தில் இருந்தது. பார்க்கும்போதே குமட்டியது. மூன்று அறைகள் நேராக இழுத்து மூடுவதுபோல் ஒரு சாதாரண அலமாரி இருந்தது. போல்ட் சமாச்சாரமெல்லாம் தேவையில்லை. ஒவவொரு அறையும் 3 அடிக்கு 2 அடி என்று விசாலமாக இருந்தது. அது துணிமணிகள் வைக்கும் அலமாரியாம். காலணி வைத்தாலென்ன? காலணி அலமாரி என்று இருப்பது எல்லாமே சுழன்று வந்து உயிரை வாங்குகிறது. அதற்கு இது தேவலாமே. சரி. வாங்கினேன். அனுப்பும் பிரிவுக்கு வந்தேன். ‘யோசித்துக் கொள்ளுங்கள். வெறு மாற்றமில்லையே?’ என்றார். ‘மாற்றமில்லை. இதைப் பொருத்துவது சிரமமா? இல்லையென்றால் நானே எடுத்துக்கொண்டு போய்விடுகிறேனே.’ என்றேன். ‘தாராளமாக.ஒரு தொடக்கப்பள்ளி மாணவன் கூட பொருத்திவிடுவான்’ என்றார். இனிமேல் நாம் பொருத்திக் கேட்கக் கூடாது என்பதற்காகவே அப்படிச் சொன்னாரோ? ஆனாலும் அன்று பல் மருத்துவரைப் பார்க்கமுடியாமல் போனது இன்னும் வலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்க நமக்கென்ன தலைவிதியா? அவரிடம் பொருத்தித் தரக் கேட்பதும் அவமானம்தான்.
எடுத்துக்கொண்டு வீடு வந்தேன். என் ஆயுதப் பெட்டியை எடுத்து விரித்து வைத்தேன். அட்டைப் பெட்டிகளை மிக எச்சரிக்கையுடன் பிரித்தேன். ஏகப்பட்ட பலகைகள் இரும்புச் சட்டங்கள், மறை ஆணிகள், மரத்துண்டுகள். ‘அட சண்டாளா! இதையா தொடக்கப்பள்ளி மாணவன் பொருத்தமுடியும்’ என்றான். அதில் ஒரு விளக்கப் புத்தகமும் இருந்தது. ஏதோ தேர்வு எழுதுவதுபோல வரிவிடாமல் படித்தேன். ஒவ்வொரு மறை ஆணியாய் பார்த்துப் பார்த்துப் பொருத்தினேன். மின்திருப்புளி இல்லை. கைத்திருப்புளிதான். நல்ல வேளை. போல்ட் இல்லை.
எல்லாம் ஒருவழியாக முடிந்த பின்னும் 10 மறை ஆணிகள், சில மரத்துண்டுகள் கிடக்கின்றன். இது என்ன உபரியா? அலமாரியை லேசாக அசைத்துப் பார்த்தேன். கால்களை மட்டும் ஊன்றிக்கொண்டு பக்கவாட்டிலும் முன்பின்னும் ஆடுகிறது. ‘கொஞ்சம் கூடத் தள்ளினாலும் விழுந்துவிடுவேன்’ என்று எச்சரித்தது. பாக்யாவை அழைத்தேன். ‘பொருளை நாங்கள் அனுப்பினால்தான் ஆளனுப்ப முடியும். நீஙகளே எடுத்துச் சென்றதால் உங்களுக்குத் தெரிந்த தச்சரை வைத்து சரிசெய்து கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு புரிந்துவிட்டது. இது திட்டமிட்ட சதி. இந்தப் பிரச்சினை எப்படித்தான் முடியப்போகிறதோ?
எனக்குத் தெரிந்த ஒரு தச்சர் இருக்கிறார். அவரிடம் சேதியைச் சொன்னேன். ‘அவர்களிடமே சொன்னால் அவர்களே ஆளனுப்புவார்களே’ என்று யாருக்குமே தெரியாத யோசனையைச் சொன்னார். நான் கொதித்தேன். ‘அவர்களை அழைக்க முடியுமென்றால் உன்னை ஏண்டா அழைக்கிறேன்’ என்ற வார்த்தைகள் உதடுவரை வந்து ஓசைப்படாமல் வெளியேறிவிட்டது. கோபித்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. சிரித்தபடியே அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். என் வீட்டை நீங்கள் புதுப்பபித்துக் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது’ என்று பனிக்கட்டிகளை அவர் தலையில் இறக்கினேன். ‘ ஹி ஹி ஹி… எல்லாம் சரிதான். உங்கள் இடத்துக்கு வந்தால் வண்டியை நிறுத்துவது பெரும் பிரச்சினை. நான் வண்டி இல்லாமல் வேறு வேலையாக அந்தப் பக்கம் வரும்போது தெரிவிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருங்கள் என்றார். அந்தப் பல் மருத்துவர் ஏனோ ஞாபகத்துக்கு வந்தார். என்ன செய்வது? ‘சரி’ என்றேன். அவருடைய தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த அலமாரியில் யாரும் கை வைக்க வேண்டாம் என்று வீட்டில் எல்லாரையும் எச்சரித்தேன். எல்லாரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அந்தத் தச்சர் அழைத்தார். எழுதிக்கொள்ளுங்கள் என்று முகவரியைத் தந்தார். இவர் முகவரி நமக்கெதற்கு? பிறகு சொன்னார். ‘அந்த அலமாரியை என் வீட்டுக்குக் கொண்டு வத்து விடுங்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது முடித்து வைக்கிறேன். பிறகு நீங்கள் தூக்கிக்கொண்டு செல்லலாம் என்றார். இதைச் சொல்லவா இவருக்கு மூன்று நாள் தேவைப்பட்டது. எல்லாரும் பேசிவைத்துக் கொண்டே செய்வது போல இருக்கிறது. நான் ஒரு தப்பும் செய்யவில்லையே. ஒரு காலணி அலமாரி வாங்க நினைத்தது தவறா? அப்படியே மீண்டும் பிரித்து ஒரு வாகனத்தை தேடுவதா அல்லது வேறு ஒரு தச்சரைப் பார்ப்பதா?
அந்த அலமாரி இன்னும் என் வீட்டில் அப்படியேதான் இருக்கிறது. யாரும் பக்கத்தில் போய்விடாதபடி ஒரு சிவப்புக் கயிறும் கட்டிவைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் சந்திப்பவர்களிடம் நான் முதலில் கேட்பது ‘உங்களுக்கு தச்சர் யாரையாவது தெரியுமா?’ என்பதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு உண்டு. அது எப்போது என்பதுதான் பிரச்சினையே.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- பொன்னியின் செல்வன் படக்கதை -3
- கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)
- கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்
- தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்
- உயிர்க்கவசம்
- குடிக்க ஓர் இடம்
- சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி
- ராசி
- கோணல் மன(ர)ங்கள்
- காலணி அலமாரி
- இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா
- ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.
- பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?
- தொடுவானம் 84. பூம்புகார்
- ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்
- தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !
- பாண்டித்துரை கவிதைகள்
- கேள்விகளால் ஆனது
- மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)
- மென்மையான கத்தி
- காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’
- கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!
- அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்
- நிஜங்களைத் தேடியவன்
- பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –
- வேலி நாடகம் – சென்னை செப்டம்பர் 19, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ்