வளவ. துரையன்
“நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி இன்னும் இருந்தது. ஆளுக்கு இரண்டு தம்ளர்; அதுதான் அவர்கள் கணக்கு; கண்கள் சிவக்காமல், கால்களைத் ,தடுமாற வைக்காமல், யாரையும் சந்தேகம் கொள்ள வைக்காமல் இருக்க அந்த அளவுதான் சரியாக இருக்கும் என்று அந்த அளவைக் கடைபிடித்து வந்தார்கள். அது சரியாகவும் இருந்தது.
”ஏண்டா மாத்தணும்றே?” என்று தன் தம்ளரில் பாதி ஊற்றிக் கொண்டே கேட்டான் மோகன்.
”இந்த இடத்தைச் சுத்திக் காம்பவுண்டு சுவரு எழுப்பப் போறாங்களாம்” என்று வேலு பதில் சொல்ல “போடா, அதுக்குள்ளெ ஒண்ணும் வேலை ஆரம்பிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு ஒருவாய் குடித்தான் மோகன்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் வேலு. மோகனின் வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருந்தன. வங்கிக்குச் செல்லும் போது மட்டும் பல வண்ணங்களில் பேண்ட்டும் சட்டையும் அணியும் பழக்கமுள்ளவன் அவன். அதுவும் வங்கியில் நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் காசாளராக அமர்ந்து கொண்டு வரும் வாடிக்கையாளரிடம் அமைதியாக எப்பொழுதும் கோபமின்றிச் சிரித்துப் பேசும் அவன் குடிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
திருமணமான பின்பு மோகன் மனைவி அவனிடம் போராடிப் பார்த்து ஒரே வழியாக விட முடியா விட்டாலும் ‘வீட்டில் குடிக்கக்கூடாது; அதுவும் வாரத்தில் ஒரு நாள்தான்’ என்ற நிபந்தனைகளுடன் அவனை அனுமதித்தாள்
”அதோ பாரு, ஒனக்கு இருட்டுல தெரியல; கருங்கல் ஜல்லி வந்து கொட்டியிருக்காங்க” என்றான் வேலு. அவன் கை காட்டின பக்கம் பார்த்தான் மோகன். வேலு சொன்னது உண்மைதான் எனத் தோன்றியது. அரைகுறை வெளிச்சத்தில் ஒரு லோடு ஜல்லி அங்கே இருந்தது.
”எத்தனை தடவைடா எடம் மாத்தறது?’ என்று கேட்ட மோகன் அவனுக்குப் பிடித்த பகோடாவைக் கொஞ்சம் போட்டு மென்று கொண்டே வேலுவைப் பார்த்தான்.
வேலுவும் பார்வைக்கு மிகவும் நாகரிகமாகத்தான் இருந்தான். தனியார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் வேலை. தன் பேச்சுத் திறமையால் பாடம் கற்பிக்கும் போது மாணவர்களைக் கட்டிப் போட்டு விடுவான். அவ்வப்போது கவிதைகள் எழுதுவான். வெளியூர்ப் பட்டி மன்றங்கள் போய்ப் பேசுவான்.
மாணவர்கள் மத்தியிலும் கல்லூரி நிர்வாகத்திலும் அவனுக்கு நல்ல பெயர். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணமானவுடன் இப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று வேலுவின் அம்மா அவனிடம் சத்தியம் வாங்கியிருந்தாள்.
மோகன் பணிபுரியும் வங்கியில் ஒரு லாக்கர் வேண்டுமென்று வேலு சொல்ல மோகனின் சிபாரிசில் அது கிடைத்தது. அதுதான் அவர்கள் இருவரும் பழக்கமாக ஆரம்பக் காரணம். அதன் பிறகு தான் பேசும் கூட்டங்களுக்கு வேலு மோகனை வரச் சொன்னான். தான் எழுதி சிற்றிதழ்களில் வந்த கவிதைகளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கருத்து கேட்டான்.
இருவரும் தங்கள் குடிப்பழக்கத்தை ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டது ஒரு தற்செயலான நிகழ்வாகத்தான் அமைந்தது.
அவர்களின் ஊரான வளவனூரிலிருந்து கோபித்துக் கொண்டு போவதைப்போல ஒரு மண்பாதை பக்கமேடு கிராமத்தை நோக்கிச் சென்றது. அக்கிராமத்திலிருந்து கிராமமாகவும் இல்லாமல் நகரமாகவும் இல்லாமல் உலகில் பிறந்த சில பாவப்பட்ட ஜென்மங்களைப் போல் இருந்த இந்த வளவனூருக்குத்தான் பக்கமேடு ஜனங்கள் தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் வர வேண்டும். நகருந்து வசதிகள் இல்லாததால் கால் நடைதான்.
பாதையிலும் விளக்கு வசதி இல்லாததால் எல்லாரும் எட்டு மணிக்குத் தங்கள் ஊருக்குத் திரும்பி விடுவார்கள். பிறகு அங்கே ஆள் நடமாட்டமே இருக்காது.அவர்கள் இருவருக்கும் அந்தப் பாதையில்தான் ஒரு நாள் பழக்கம் ஏற்பட்டது.
இரண்டு நாள்களாக வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததை எடுத்து பனியனுள்ளே போட்டுக் கொண்டு காற்று வாங்கப் போவதைப் போல அப்பாதையில் நடந்தான் வேலு. ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பாலத்தின் மீது யாரோ ஒரு ஒயர் பையிலிருந்து எதையோ எடுப்பதைப் பார்த்தான். அரை நிலா வெளிச்சத்தில் தம்ளரில் ஊற்றுவதும் வாயருகில் வைத்துக் குடிப்பதும் தெரிந்தது. அருகில் சென்றதும் அது மோகன் என்பதறிந்த போது வேலுவுக்கு வியப்பு ஏற்பட்டது.
வேலுவைப் பார்த்து விட்ட மோகன் அவசரமாக எல்லாவற்றையும் மறைக்க முயன்று தோற்றான்.
“பதற்றப் படாதீங்க: இது ஒண்ணும் தப்பில்ல; ஆன நீங்க கூட குடிப்பீங்கன்னு எனக்குத் தெரியாது” என்று கூறிக் கொண்டே தனது பாட்டிலையும் ஒருதம்ளரையும் வெளியில் எடுத்து மோகன் வைத்தவுடன்தான் வேலுவுக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. அதன் பிறகு அந்த இடம் தான் ஒன்பது மணிக்கு மேல் அவர்களது குடி சாம்ராஜ்யத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகத் திகழ்ந்தது.
ஆனால் அந்த சாம்ராஜ்யம் இடம் மாறக்கூடிய நிகழ்ச்சியும் ஒருநாள் ஏற்பட்டது. இரவு ஒன்பது மணி இருக்கும். வழக்கம் போல் இருவரும் அந்தப் பாலத்தில் உட்கார்ந்து தங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். பௌர்ணமி போய் மூன்று நாள்களாகி இருந்ததால் வெளிச்சமும் கொஞ்சமும் அதிகமாகத்தான் இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக வீசிக் கொண்டிருந்தது. அரச சபையை முடித்துக் கிளம்ப வேண்டிய நேரம். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.
”என்னா வாத்தியாரே? இங்க ஒக்காந்து என்னா செய்யறீங்க? அதுவும் இந்த நேரத்துல”
வேலுவும் மோகனும் தொலைவிலேயே அவரைப் பார்க்கத் தவறி விட்டதை உணர்ந்தனர். அவசரமாக பிளாஸ்டிக் தம்ளர்களை எல்லாம் பாலத்துக்கடியில் போட்டனர். சட்டைப் பையில் இருந்த கிராம்புகளை வாயில் போட்டுக் கொண்டனர். அதற்குள் அருகே வந்துவிட்ட வைத்திலிங்கம்
“அட, பேங்காரரா? என்னா காத்து வாங்கறிங்களா?”
என்று கேட்டவாறே இவர்களுக்கு எதிரில் பாலத்தின் மறுபக்கத்தில் உட்கார்ந்தார். தங்கள் பேசினாலும் வாசனை ஏதும் வராது என்பது அவர்களுக்குத் தெரிந்தாலும் பேசுவதற்கு இருவருமே மிகவும் கூச்சப்பட்டனர். வேலு மேலே வானத்தில் தவழும் நிலவைப் பார்க்க மோகனோ கீழே குனிந்து கொண்டான்.
அவர் வேலுவுக்கும் மோகனுக்கும் நன்கு தெரிந்தவர்; வங்கியில் கணிசமான வைப்புத் தொகை வைத்திருப்பவர்; அதன் மூலம் அடிக்கடி வங்கிக்கு வர போக மோகனுக்கு மிகவும் பழக்கமானார். அது போல இலக்கியக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்த வேலுவிற்கு நன்கொடைகள் கொடுத்ததால் அவனுக்கும் அவரிடம் நெருங்கிய தொடர்பு வந்தது.
ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக மோகன் அவரைப் பார்த்து, ”என்னாங்க இவ்வளோ நேரம் கழிச்சு வரீங்க?” என்று கேட்டான்.
“அதை ஏம்பா கேக்கறே? ஒரே அலைச்சல் பொழைப்பா போச்சு; வெளச்சல் வந்ததா? வீட்டுல கொஞ்சம் சாப்பாட்டுக்கு வச்சுகிட்டு மீதியை காசாக்கினோமான்னு இல்லாம தவிக்க வேண்டி இருக்கு; கமிட்டியில போடப் போனா ஒரு நாள் பூரா இழுத்தடிக்கறாங்க; அது சொள்ள இது சொத்தன்னு வேற தள்ளறாங்க: வியாபாரிகிட்ட போட்டோம்னா அவன் வாங்கச்ச தேனு ஒழுகற மாதிரி பேசறான். ஆனா காசை அவங்கிட்ட வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடும் போல இருக்கு; அவன் ஊட்ல போயி ஒக்காந்து காத்திருந்து, ஊருக்குப் போனவன் இப்பதான் வந்தான்; அதுவும் பாதிதான் குடுத்தான்; மீதி அடுத்த வாரம் வரச் சொன்னான்”
என்று பொறிந்து தள்ளிவிட்டவர் தொடர்ந்து ”தெனம் இங்கதான் வந்து ஒக்காந்து காத்து வங்கறீங்களா? என்று கூறி முடித்தார்.
”இல்லீங்க, சனிக்கெழமை மாத்திரம் தான்” என்று கூறிய மோகன் ”ஏன் அதைக் கூறினோம்” என்று நினைக்கும் அளவிற்கு வைத்திலிங்கம் கேட்டார்.
“அப்ப சனிக்கெழமை முன்ராத்திரியில வந்தா இங்க ஒங்களைப் பாக்கலாம்” என்றார். அப்புறம் சில கிராமத்து விஷயங்கள் அரசியல் பற்றி எல்லாம் பேசிவிட்டு அரை மணி நேரம் கழித்துத்தான் அவர் போனார்.
வௌவால் இரண்டு வானத்தில் பறந்து சென்றன. எங்கோ ஓர் ஆந்தை அலறியது. தன் வேலையைத் தான் தானே செய்ய வேண்டும் என்ற நினைப்பில் ஓடுவது போல பத்து மணி பாசஞ்சர் வண்டி ஓடியது.
”என்னாடா யோசனை” என்று கேட்டான் மோகன்.
”இல்ல நீ ஏன் அவரு கிட்ட போயி சனிக்கெழமையில இங்க இருப்போம்னு சொன்ன? அடுத்த வாரமும் அவரு வந்தா என்ன செய்யறது?
ஆமாம், போடா, அவரு கரெக்டா வரப் போறாரு” என்று பதில் சொன்னான் மோகன்.
ஆனால் அடுத்த வாரம் வேலு சொன்னது போல இவர்கள் தங்கள் அரசாங்கத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவர் வந்து விட்டார். ”பேங்கில லோன் வேணுமாம் இங்க வந்தா ஒங்களைப் பாக்கலாம்னு வந்தேன்” என்று அவர் சொன்னதும் இருவருக்கும் ரொம்ப சங்கடமாகப் போய் விட்டது.
”பேங்குல லோன் கேக்குற எடம் இதுதானா”ன்னு வேலு கேட்டிருப்பான். மோகனுக்காக சும்மா இருந்தான். அவரிடம் பேசி அவரை ஒருவழியாய் அனுப்பி தங்கள் கதையை முடிக்க மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட அவர்கள் இருவருக்கும் அன்று இரவு வீட்டில் ஏகப்பட்ட அர்ச்சனைதான்.
அதற்குப் பிறகுதான் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நாராயணன் கோயிலுக்கு நாலு பக்கமும் வாசல் என்பது போல அது இருந்தது. இருந்ததே மூன்று வகுப்பறைகள்தாம். அவற்றுக்கும் கதவுகளில்லாதிருந்தது மிகவும் வசதியாயிருந்தது. தனியாய் இருந்த ஓர் அறையை மட்டும் பூட்டி இருந்தனர்.
அதுவும் மழைக்குக் கூட யாரும் ஒதுங்காத பள்ளிக்கூடம் அது. ஊருக்கு வெளியே இருந்த புறம் போக்கு நிலத்தில் அதைக் கட்டி இருந்தனர். யாரும் வராத அந்த இடம் அவர்கள் குடிக்க மிகவும் வசதியாய் இருந்தது. எந்தப்பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்களின் வண்டிக்கு இப்படி ஒரு தடங்கல் வரும் என அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
”நீ வாணா பாரு, சீக்கிரமா செவுரு எழும்பிடும்டா,’ என்றான் வேலு.
”எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே?
”மழைக்காலத்துக்குள்ள இதை முடிச்சாகணுமாம்; சீக்கிரமா செஞ்சிடுவாங்க; ஏன் தெரியுமா? இதை செய்யும் போதே காண்டிராக்டரு அவரு வீட்டுக்கும் செவரு எழுப்பப்போறதா பேசிக்கறாங்க”
”அப்ப நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே? வா வேற எடம் எங்க இருக்குன்னு பேசலாம்” என்று கூறிய மோகனிடம் “பத்து மணிக்கு நூலகத்துக்கு வரட்டுமா” என்று கேட்டு உறுதியாக்கிக் கொண்டான் வேலு.
அவர்களுக்கு எந்த இடமும் சரியானது எனத் தோன்றவில்லை. பழைய சத்திரம் ஒன்று இருந்தது. ஆனல் அது இரவு முழுதும் பாண்டிக்குப் பேருந்துகள் செல்லும் சாலைக்குப் பக்கத்தில் இருந்தது. யாராவது வண்டியிலிருந்து இறங்குவார்கள். அது தவிர தெருவில் இருந்த சோடியம் விளக்கு வேறு ”நீங்கள் செய்வதை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவேன்” என்று சொல்லாமல் சொல்லியது.
“வேலு, போயி பழைய எடத்தையே பாப்பமா” என்று கேட்டான் மோகன்.
“போட அங்க வீடெல்லாம் கட்டி இருப்பாங்க” என்றான் வேலு.
பழைய இடம் என்றது ஊருக்கு வெளியே ரியல் எஸ்டேட் காரர்கள் பிளாட் போட்டிருந்த இடம். அங்கே ஒரு கொட்டகையும் அலுவலகத்திற்காகப் போட்டிருந்த்து வசதியாய் இருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் பிளாட் போட்டவர்கள் போய் விடுவார்கள். இவர்கள் தங்கள் புதிய அரசை அங்கே நடத்தி வந்தார்கள். என்ன ஒரு தொல்லை என்றால் தம்ளர், பாட்டில்கள் எல்லாவற்றையும் அங்கே போடாமல் எடுத்து வந்து விட வேண்டும்.
அந்த அரசும் இரண்டு பேரால் திடீரென கவிழ்க்கப்பட்டது. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளே வந்ததால் ஏற்பட்ட விபரீதம் அது. வெளியூரிலிருந்து வந்த இரு நாடோடிகள் பகல் முழுதும் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ அலைந்து திரிந்துவிட்டு இரவு ஏழு மணிக்கே அந்த கொட்டகைக்கு வர ஆரம்பித்தனர். எனவே வேலுவும் மோகனும் அந்த இடத்தையும் வந்தவர்களை வாழ வைப்போம் என்று தியாகம் செய்தனர். அதற்குப்பிறகுதான் இந்தப் பள்ளியை அவர்கள் கண்டு பிடித்தார்கள்.
மறு நாள் எப்படியோ அவர்கள் ஓர் இடத்தைக் கண்டறிந்தார்கள். சொந்த வீட்டுக்காரனுக்கு ஒருவீடுதான். ஆனால் வாடகை வீட்டுக்காரனுக்குப் பலவீடு என்பார்கள்.
அந்த இடம் ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக இருந்தது. அங்கு சமாதி போலவும் கோயில் போலவும் ஓர் கட்டிடம் இருந்தது. அதன் உள்ளே போகவும் வெளியே வரவும் ஒரு வழிதான் இருந்தது. அங்குவர யாருமே பயப்படுவார்கள். அது ஒரு தனியார் இடம்தான். கதவுகள் ஏதும் கிடையாது. தினமும் ஒரு பெரியவர் காலையில் வந்து பெருக்கிச் சுத்தம் செய்து விட்டுப் போய் விடுவார்.
”வர வாரமே இங்க ஆரம்பிச்சுடுவோம்” என்றான் வேலு.
”பின்ன என்னா? நாள் நட்சத்திரம் பார்த்து கிரகப்பிரவேசமா செய்யப்போறோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் மோகன்.
”வெளிச்சம்தான் கொஞ்சம் கம்மியாக இருக்கும் போல தெரியுது.” என்று சொன்ன வேலுவிடம் ”இல்ல; மேல ஒயரத்துல ரெண்டு ஜன்னல் இருக்கு பாத்தியா? கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் அந்த வெளிச்சம் போதும். நாம என்ன கவிதையா படிக்கப் போறோம்.”என்று பதில் கூறினான் மோகன்.
”இந்தக் கிண்டல் தானே வேணாம்; நான் எப்ப பாத்தாலும் கவிதையா படிச்சுக்கிட்டிருக்கேன்” என்றான் வேலு. “சரி, கோவிச்சுக்காதே; வர்ற சனிக்கெழமை பாப்போம்” என்று கூறிப் பிரிந்தான் மோகன்.
சனிக்கிழமை முன்னிரவு எப்பொழுது வரும் என்று காத்திருந்த அவர்கள் புதிய நாட்டைப் பிடித்த மனநிலையில் மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.
போன வாரம் வேலு வாங்கி வந்ததால் இந்த வாரம் மோகன் பாட்டில் வாங்கித் தன் பனியனுள்ளே போட்டிருந்தான். அதேபோல இந்த வாரம் தண்ணீர் பாக்கெட்டுகள் வேலுவின் முறை. பிளஸ்டிக் தம்ளர்கள்தான் ஒரு பக்கம் பெண்ணின் முலைபோல் அவன் மார்பில் புடைத்துக் கொண்டிருந்தன. அதை மறைக்க ஒரு துண்டையும் அவன் போர்த்திருந்தான். வழக்கம் போல இருவரும் அதிகம் பேசாமல் போய்க் கொண்டிருந்தனர்.
மெல்லிய காற்றும் நட்சத்திரங்களின் ஒளியும் யாருமே இல்லாத சூழலும் அவர்களுக்கு நிம்மதியை அளித்தன. ஆற்றுக்குச் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் கொஞ்ச தூரம் நடந்தவர்கள் அந்தக் கட்டிடத்தின் அருகில் போய் நின்றனர். யாராவது கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கிறார்களா என்று பார்த்தனர். ஒருவரும் இல்லை என்று நன்றாக உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் சுவர் ஓரமாகத் தங்கள் செருப்புகளை விட்ட போது காலில் ஏதோ இடறியது போலத் தெரிந்தது. கீழே குனிந்து பார்த்த இருவருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏற்கனவே அங்கு சில செருப்புகள் கிடந்தன.
வேலுவின் தோளைத் தொட்டுத் தன் வாயின் மீது விரலை வைத்து அமைதியாயிரு என்பதுபோல் சைகை காட்டிய மோகன் அடி மீது அடி வைத்து ஒரு சிறு சத்தமும் எழும்பாதவாறு மெதுவாக நடந்து குனிந்து உள்ளே எட்டிப் பார்த்தான். மோகனின் தோள் மீது கையை ஊன்றி வேலுவும் பார்த்தான். அவர்கள் கண்ட காட்சி இருவருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. உள்ளே ஆடைகள் குலைந்த நிலையில் ஓர் ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தனர். மூன்று அல்லது நான்கு நொடிகளுக்குள் அவர்கள் தங்கள் பார்வையை மீட்டனர். ஒன்றும் பேசாமல் வந்தது போலவே அமைதியாகத் திரும்பி சாலையை அடைந்தனர்.
மெல்லிய குரலில் “கொஞ்ச நேரம் ஒளிஞ்சிருந்து யார்னு பாப்பமா?” என்று கேட்டான் வேலு.
“ச்சீ, பாவம்டா: கள்ளத்தனமோ? இல்ல கல்லூரித்தனமோ? அவங்களும் கஷ்டப்பட்டுத்தான் இந்த எடத்தைக் கண்டு பிடிச்சிருப்பாங்க”
”சரி, இன்னிக்குப் பள்ளிகூடத்துக்கே போவோம்; நாளையிலேந்து வேற எடம் தேடுவோம்” என்று சோகமாகப் பதில் சொன்னான் மோகன்.
——————————————————————————————————————————
- பொன்னியின் செல்வன் படக்கதை -3
- கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)
- கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்
- தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்
- உயிர்க்கவசம்
- குடிக்க ஓர் இடம்
- சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி
- ராசி
- கோணல் மன(ர)ங்கள்
- காலணி அலமாரி
- இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா
- ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.
- பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?
- தொடுவானம் 84. பூம்புகார்
- ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்
- தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !
- பாண்டித்துரை கவிதைகள்
- கேள்விகளால் ஆனது
- மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)
- மென்மையான கத்தி
- காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’
- கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!
- அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்
- நிஜங்களைத் தேடியவன்
- பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –
- வேலி நாடகம் – சென்னை செப்டம்பர் 19, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ்