லதா அருணாச்சலம்.
கதிரின் கட்டுரைகள் “கிளையிலிருந்து வேர் வரை” புத்தகமாய்க் கையில் தவழ்ந்தபோது , அதற்காகக் காத்திருந்த பலரையும் போல நானும் அந்தக்கணம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஒவ்வொரு கட்டுரையையும் பக்கம் புரட்டி, நிதானமாக வாசித்தபோது மீண்டும் அதே, பிரமிப்பான, முழுமையான வாசிப்பனுபவம் கிட்டியது. அது ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு எளிதில் கரைந்துபோகாது.
கதிரின் கட்டுரைகளில் குரோதங்கள் இல்லை. எதிர்மறை எண்ணங்கள் இல்லை. திடுக்கிடும் வைக்கும் திருப்பங்களைக் கொண்ட சம்பவங்களின் பிண்ணனியில் புனையப்பட்ட நாடகத்தனம் இல்லை. மனிதர்களுக்கான பாடம், பக்கம் பக்கமாய், தடித்த வார்த்தைகளில், திகட்டத் திகட்ட ஊட்டப் படவில்லை.
வேறென்ன இருக்கிறது.? செயற்கைப் பூச்சு துளி கூட இல்லாத இயல்பு, வெகு சாதாரண மனிதனின் வாழ்வியல், அதில் நுட்பமான இழையாக ஓடும் மனிதம் எல்லாம் இருக்கிறது. அந்த மனிதத்தோடு வாசிக்கும் ஒவ்வொருவரும் சில கணங்களாவது தன்னை ஒப்பீடு செய்து சுய அலசல் செய்யத் தூண்டுகிற மனசாட்சியின் குரல் உள்ளது. தனது கட் டுரைகளில் ஒரு பார்வையாளனாக தன்னை முன்னிறுத்தும் கதிர், தன் அனுபவங்களை, ஒரு தனிமனித உணர்வுகளை, சமூகம் சார்ந்த சிந்தனையாக அழகாக நகர்த்திச் செல்கிறார்.
தன் கன்னத்தில் விழுந்த அடியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒரு சிறு குழந்தையின் துணிவு, ஒட்டு மொத்த தந்தையினத்தின் மனங்களை உலுக்கி சிந்திக்க வைக்கிறது. குக்கரிலிருந்து தானே சாப்பாடு வருகிறது என்னும் வெகுளித் தன்மான பதிலில், எழுகின்றது கோர்வையாய் சில கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கான விடையின் தேடலில் தன்னுடன் வாசிப்பவர்களின் கைகளைப் பிடித்து கழனி மேட்டுக்கும், வயலுக்கும் அழைத்துச் சென்று, விவசாயம் குறித்தான தீவிர அக்கறையையும், அதன் அவசியத்தையும் நம்முள் எளிதில் கடத்தி விடுகிறார். ஒரு சிறிய கேரி பேக் ஏற்படுத்தும் சூழல் சீரழிவு நியாயமான ஆதங்கத்துடனும், கோபத்துடனும் வெளிப்படுகிறது.
அன்றாட வாழ்வில் பலமுறை நம் பார்வையில் விழுந்து, எந்தவிதமான சலனமுமின்றி நாம் கடந்து போகும் நிகழ்வுகளை, மனிதர்களை, நின்று நிதானமாக அவதானித்து காட்சிப்படுத்துகிறார். குப்பைகளைக் கிளறும் ஒரு பெண்மணிக்குள் ஒளிந்திருக்கும் கருணை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. ஒரு சிறிய கிராமத்தின் தேர் நோம்பி, மேலை நாட்டின் எந்தக் கார்னிவலுக்கும் குறைந்ததல்ல என்பது படித்த பின்னே புரிகிறது. மனம் பிறழ்ந்த ஒரு மனிதனின் ஆழ்மன உணர்வுகளை, அவன் நனவோட்டத்தில் எஞ்சியிருக்கும் அழகியலை துல்லியமாக அவன் வரையும் கோலத்தில் பார்த்தபோது நாமும் திடுக்கிட்டு விடுகிறோம். எங்கேனும் இனி இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்த்தால், கடந்துபோவது அவ்வளவு எளிதன்று..
சில வெளிப்படுத்த முடியாத துக்கங்களும், தீண்டவியலாத் தனிமையும், தாளாத கோபமும், சூழ்நிலையின் பால் கொண்ட சலிப்பும் ஒருவரை வீழ்த்தி விடாமல், அதையே சவாலாக மாற்றி நம் வாழ்க்கையை ஆற்றுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது வாழ்வின் அறமாக வெளிப்படுகிறது. பிழைத்தலை விடுத்து வாழ்வதற்கான காரணங்களை சலிக்காமல் தேடித்தேடித் தருகிறார் எல்லாக் கட்டுரைகளிலும்..
மரணம் ஒரு வலியாகவும், வலி நீக்கியாகவும், விடுதலையாகவும் , சில சமயம் மனதின் மறைவிடங்களில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்வதாகவும் கதிரின் எழுத்துகளில் பிரதிபலிக்கிறது. பல கட்டுரைகளில் மரணம் பேசப்பட்டாலும் தன் புண்ணைத் தானே நாவால் தடவி ஆற்றும் மருந்தாக அது குறித்துப் படிக்கப் படிக்க மரணத்தின் வலியை, அதன் சூழலை, அதன் விளைவை எதிர்கொள்ளக்கூடிய கூடிய புரிதல் அதிகரிக்கின்றது.
அழகிய சீர் மிகும் வார்த்தைகளை உபயோகிப்பது கதிரின் பிரத்யேக உத்தி. அதில் ஏகாதிபத்தியமாகக் கொடியேற்றுகிறார். சில சொற்களைப் படிக்கும்போது இப்படி எல்லாம் இந்தச் சொற்களை இங்கு பொருத்திக் கொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கின்றது. அது போன்ற பல சொற்களுக்கு கட்டுரைகளின் தலைப்பே சாட்சி. கொங்கு வட்டார வழக்குகள், இனிப்புக்கு நடுவே கிடைக்கும் உலர் பழங்களின் சுவையாக ஆங்காங்கே தட்டுப் படுகிறது.
கட்டுரைகளை வாசித்த பின் எனக்கும் மனதில் பட்ட விஷயம் பெரும்பாலான கட்டுரைகள் அற்புதமான சிறுகதைக்கான களம் கொண்டவையாக இருக்கிறது. ஆனால் சிறுகதையாக்கப்படவில்லை. மேலும் ஒவ்வொரு தலைப்புமே , உதாரணமாக ,விவசாயம், மரணம், சூழல், பயணக்கட்டுரை, குழந்தை வளர்ப்பு என்ற உட் பிரிவுகளில் ஒரு தொகுப்பாகக் கூடிய சாத்தியமும் உண்டு. அப்படி வகைப் படுத்தியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.
அனைத்துக் கட்டுரைகளிலும், தீவிர சமூக அக்கறை நீரோட்டமாய் ஓடுகிறது. செம்மையான வாழ்வியல் பற்றிய குறிப்புகள் விரவி உள்ளன. நாம் இழந்த கடந்த காலத்து நினைவுகளை மீட்டெடுக்கவும், நிகழ்கால நிகழ்வுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும், எதிர்காலத்தோடு நம்பிக்கையாய் நம்மை இணைத்துக் கொள்ளவும் உரியதான முயற்சிக்குத் துணை புரியும் வகையில் இந்தக் கட்டுரைகள் தம்மை நிலை நிறுத்திக் கொள்கின்றன.
- ஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்
- வானம்பாடிகளும் ஞானியும்
- உள்ளிருந்து உடைப்பவன்
- பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’
- சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி
- பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்
- BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES
- குப்பி
- நாக்குள் உறையும் தீ
- கண்டெடுத்த மோதிரம்
- தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை
- திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு
- நிழல்களின் நீட்சி
- வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை
- பொன்னியின் செல்வன் படக்கதை 4
- தொடுவானம் 85. புதிய பூம்புகார்
- அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை
- சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.
- யட்சன் – திரை விமர்சனம்
- அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )
- நெஞ்சு வலி
- அறிவியல் கதிர் நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி
- X-குறியீடு