சுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 16 in the series 20 செப்டம்பர் 2015

மேடலி முதல் தெருவில் பல ஒண்டுக் குடித்தன வீடுகள் உண்டு. அவைகளில் ஒன்றின் பின் கட்டில் மாட்டுத் தொழுவத்தினை ஒத்த ஒரு குடியிருப்பில் குடியிருந்தது ஒரு கன்னடக் குடும்பம். வீட்டு எசமானன் பெயர் வெங்கோபராவ். அவரது மனைவி பெயர் பூரணி. வெங்கோபராவ் கோபம் வந்து யாரும் பார்த்ததில்லை. அவ்வளவு சாந்த சொரூபி. ஆனால் பூரணி நேர் எதிர். எதிலும் பட படவென்று வெடிக்கும் எண்ணையிலிட்ட கடுகு அவள். அவள் ஒரு Mrs. Perfection. அதனாலேயே அவர்கள் வீட்டில் அடிக்கடி சச்சரவு நடக்கும். பல நேரங்களில் ராவ்தான் மாட்டிக் கொள்வார். ராவின் குரல் கொஞ்சம் சன்னமாக இருக்கும். ஏறக்குறைய பெண்மை சாயல் கொண்ட குரல். அதற்கு அவரது அம்மா _ அவரை குழந்தைகள் அஜ்ஜி என்று கூப்பிடுவார்கள் _ ஒரு காரணம் சொல்வார்கள். சின்ன வயதில் தேங்காய் பத்தையைத் திருடி அவசரமாக விழுங்கியபோது அது தொண்டையில் மாட்டிக் கொண்டதாம். அதிலிருந்து குரல் கம்மிப் போய்விட்டதாம்.
ஏற்கனவே சன்னமான குரல், பூரணியின் தாக்குதலால் சின்னா பின்னமாகி சிதிலமடையும். உள் நுழைந்து பார்த்தால் உப்பு பெறாத விசயமாக இருக்கும். எண்ணை புட்டியோ, பவுடர் டப்பாவோ, கழற்றப்பட்ட சட்டையோ அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அது அது அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் பூரணி அதிக அக்கறை கொண்டிருந்தாள்.
பூரணிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டும் ஆண் பிள்ளைகள். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஆளுமை உள்ள பெண் நடத்தும் தாம்பத்தியத்தில் ஆண் பிள்ளைகளே பிறக்கும் என்பதும், பூரணிக்கு அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.
பூரணி எல்லாக் காரியங்களிலும் நேர்த்தியைக் கடைபிடிப்பவள். இத்தனைக்கும் அவள் அதிகம் படித்தவளல்ல. அவளுக்கு வாழ்க்கை பற்றிய பல நுணுக்கமான புரிதல்கள் இருந்தன. அவள் ஒன்றும் பேரழகியல்ல என்பதை அவள் அறிந்தே இருந்தாள். அவளுடைய கணவனும் ஆணழகன் அல்ல என்றாலும், ஒரு கௌரவமான வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் புருச லட்சணம் மிக்கவன். அவனை தன் ஆளுமையில் வைத்திருப்பதும், அவன் உடல் மனம் சார்ந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்றுவதும் தன் தலையாயக் கடமைகளில் ஒன்று என்று அவள் உணர்ந்தே இருந்தாள்.
பூரணியின் புருசன் ராவ் வீடு திரும்ப ஆறு மணியாகிவிடும். சென்னப்பட்டணம் என்று அப்போது வழங்கப்பட்டது பாரிமுனையும் அது சார்ந்த பகுதிகளும்தான். மின்சார ரயில் பயணித்து அவன் அலுவலகம் போவதும், ஆலையிலிட்ட கரும்பாய் அவன் பிழிந்து வீடு திரும்புவதும் அன்றாட அவலங்களில் ஒன்று. அவன் வரும்போது பூரணி வாசற்படியில் காத்திருப்பாள். அவள் முகம் பளிச்சென்று இருக்கும். கண்களில் மை தீட்டப்பட்டிருக்கும். காதருகில் இரு முடிக்கற்றைகள் பிறைச் சந்திரனைப் போல் சுழித்து விடப்பட்டிருக்கும். தினமும் துவைத்து, காயவைத்து, மடித்து வைக்கப்பட்டிருக்கும் சாதாரண மதுரைச் சுங்கிடிப் புடவை_ அதிலும் இரண்டு மூன்று நிறங்கள் தான், கறுப்பு, சிகப்பு, பச்சை என _ அவள் உடம்பில் சிக்கென்று பொருந்தி இருக்கும். இடுப்புக்கு கீழ்வரை உள்ள கூந்தலை பின்னலிட்டு வாழைநார் கொண்டு கட்டியிருப்பாள். லேசான பவுடர் பூச்சும், உதட்டுச் சாயம் இல்லாமலே சிவந்த உதடுகளும் அவள் அழகை மேலும் மெருகூட்டும்.
கட்டுப்பெட்டியான சாத்திரங்களும், பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் ஊறிப்போன இனத்தில் பிறந்தவள் பூரணி. அதனால் கணவன் தவிர பிறர் பார்க்கக் கூடாது என தன் அழகைப் பூட்டி வைத்திருப்பாள். ஒன்பது முழச் சேலை அவள் உடம்பைச் சுற்றியிருக்கும். அதை முழுவதுமாக கழுத்துவரை போற்றி மூடியிருப்பாள். அவர்கள் வீட்டில் வேலைக்காரி கிடையாது. மொத்த வேலையையும் அவளே செய்வாள். கல்லுரலில் இடுப்பில் சொருகிய சேலையோடு அவள் மாவாட்டும்போது, அவளது வெண்மை நிறத் தொடைகளின் மேல் கிறங்கி மயங்கியிருப்பார் ராவ். ஒரு பாஸ்ஞ்சர் வண்டியின் தாள கதியோடு அவள் தொடைகள் மாவாட்டுவதற்கு ஏற்ப அசையும்போது கண்கள் சொக்கும். மிதமான உறக்கத்தில் தலை நழுவி தொடைகளுக்கிடையில் விழும். மாமியார் கிழவி தூங்குவதை உறுதி செய்து கொண்டபின் லேசாக கணவன் தலையை திருப்பி தொடைகளால் நசுக்குவாள் பூரணி. அடுத்த ஐந்தாவது நிமிடம் கௌபீனத்தை மாற்ற எழுந்து ஓடுவார் ராவ்.
பூரணி இதையெல்லாம் யாரிடமிருந்து கற்றாள் என்பது தெரியாது. கணவனுக்கான காமம் அவளுக்கு இயல்பாக வந்தது. ஆனாலும் லஜ்ஜையற்ற காமம் அல்ல அது. நாட்கணக்கில் ஊடல் காரணமாக அவள் ஒதுங்கியே இருந்ததுண்டு. ராவ் வாடி துடித்துப் போகும் வரை அவள் சமாதானமாக மாட்டாள். சரணாகதி அடைந்த பின் கிடைக்கும் பேரின்பம் ராவை அடிக்கடி ஊடல் ஏற்படுத்தத் தூண்டும்.
அவளது பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு சென்று படிக்கும் பிராயத்தில் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு போலிஸ் வந்தது. பூரணியை கைது செய்து அழைத்துப்போனது. அவள் செய்த குற்றம் தன் கையாலேயே தன் கணவனைக் கொலை செய்ததுதான்.
ராவின் பிரேத பரிசோதனையில் ஒரு உண்மை வெளிப்பட்டது. அவன் பால்வினை நோயினால் தாக்கப்பட்டிருந்தான்.
தன்னை மீறிய பெண்கள் தொடர்பு தன் கணவனுக்கு இருந்ததும், அவன் பால் வினை நோயால் தாக்கப்பட்டதும் பூரணிக்கு ஆத்திரமூட்டியிருக்க வேண்டும்.
நேர்த்தியும் ஒழுக்கமும் கொள்கைகளாகக் கொண்டு வாழ்ந்த பூரணிக்கு தன் கணவனின் ஒழுக்கக் கேடு தாங்க முடியாத ஆத்திரத்தைத் தந்திருக்கலாம். அது கொலை வெறியாக மாறி அவனைக் கொல்லும் அளவிற்கு போனது என்று செய்தித்தாளில் போட்டார்கள்.
திட்டமிட்ட கொலை அல்ல.. அது ஒரு உணர்வு ரீதியான செயல் என்பதால் பூரணிக்கு பத்து வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தது கோர்ட்.
ராவின் அரசாங்க ஓய்வூதிய தொகையும், வைப்பு நிதியும் அஜ்ஜியை தன் பேரன்கள் இருவரையும் படிக்க வைக்க உதவிற்று.
பூரணி நல்லொழுக்கம் காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு ஏழு வருடங்களில் விடுதலையானாள். வீட்டிற்கு வந்த இரவு அவள் இறந்து போனாள்.


Series Navigationபணிமனையில் ஒரு பயணம் [கண்மணி குணசேகரனின் நாவல் “ நெடுஞ்சாலை “ யை முன்வைத்து]தூ…து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *