அவன், அவள். அது…! -3

This entry is part 4 of 22 in the series 27 செப்டம்பர் 2015

 

      எல்லா விதத்திலும் தன்னோடு, தன் சிந்தனையோடு ஒத்துழைத்தவள் எப்படி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்? – கண்ணனால் நம்பவே முடியவில்லை.

சுமதி, இந்த வாரக் கதை படிச்சியா…?

எதைச் சொல்றீங்க…?

அதான், கமலம் வார இதழ்ல வந்திருக்கே “சபலம்”ங்கிற சிறுகதை…அதைத்தான் படிச்சியான்னு கேட்டேன்…

ம்ம்…படிச்சேன்….

என்ன? சுரத்தில்லாமப் பதில் சொல்றே? வெறுமே ஒரு வார்த்தைல இப்டி பதில் சொன்னேன்னா எப்டி? ஏதாவது பாராட்டுக் கிடையாதா? நடை எப்படியிருந்தது? கதையோட வேகம் எப்படி? உள்ளே சொல்லியிருக்கிற விஷயம் டெப்த்தா இருந்ததா? இல்ல ட்ரையா இருந்ததா? திடீர் திருப்பத்தோட முடிச்ச முடிவு எப்படி? எதாச்சும் ஒண்ணு சொல்லு…

எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரில….

டூப் விடாதே…உனக்குத் தெரியும். என்னவோ மறைக்கிறே…? உனக்குக் கதை பிடிக்கலை போலிருக்கு…அதான் மழுப்பறே…நான் சொன்னதுல ஏதாச்சும் ஒரு விஷயம் கூடவா உன்னை உறுத்தலே…?

உறுத்தறதா? கதை பூராவுமில்ல ஒரே உறுத்தல். அடேயப்பா…எப்படிப்பட்ட சிந்தனை….அதுனாலதான் என்ன சொல்றதுன்னு தெரியாம விக்கிச்சிப் போய் இருக்கேன்…

ஏய், இந்தா பாரு…உனக்குப் பிடிக்கலேன்னா விட்டிடு….என்னைப் பாராட்டுறதுக்கு நிறையப் பேரு இருக்காங்க….அடுத்த வாரம் வாசகர் கடிதம் வரும்…அதுவே போதும் எனக்கு. பத்திரிகைலர்ந்து எனக்கு எல்லாம் அனுப்பிச்சிடுவாங்க….அந்த உற்சாகமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும்….

அப்புறம் என்ன…நான் என்ன சொல்றது. என் வாயைப் பிடுங்காதீங்க…அவ்வளவுதான்…

இருந்தாலும் நீ சொன்னா, ரெண்டு வார்த்தை பாராட்டினா அதுல ஒரு சந்தோஷம் எனக்கு…அதுக்குத்தான் உன்னைப்போட்டு இந்த உருவு உருவுறேன்….

என்ன வார்த்தை இது…? வர வர உங்க பேச்சே எனக்குப் பிடிக்கல்லே….கதைகள்ல கதா பாத்திரங்கள் பேசற பேச்சையெல்லாம் நிஜ வாழ்க்கையிலும் நீங்க பேச ஆரம்பிச்சிட்டீங்க…உருவுறேன்…அது இதுன்னு….பொண்டாட்டிட்ட பேசற வார்த்தையா இதெல்லாம்….அதுனாலதான் புத்தி அப்டி வக்கரிச்சுப் போறது போலிருக்கு…?

ஏய், என்ன சொல்றே….? – குரல் உயர்ந்தது கண்ணனுக்கு.

பின்னே என்ன? சோரம் போற மாதிரி கதை எழுதினா எப்படிப் பாராட்டுறதாம்….?

என்னடி இது…புதுசா ஒரு வார்த்தை சொல்றே…? இந்த வார்த்தையை எங்க கத்துக்கிட்டே…புஸ்தகம் படிச்சுப் படிச்சு உனக்கும் நிறைய இது தெரிய ஆரம்பிச்சிடுச்சு போலிருக்கே…? என்னைப் பார்த்தே எதைச் சொல்றதுன்னு தெரியாமப் பேச ஆரம்பிச்சிட்டே?

பேசாம என்னத்தைப் பண்றதாம்? வேலைக்காரியை சைட் அடிக்கிறமாதிரி, அவ உடம்பை ரசிக்கிற மாதிரி…இப்டியெல்லாமா கதை எழுதறது? நல்லாவா இருக்கு….?

இதென்னடி அபத்தமா இருக்கு நீ பேசுறது? எழுத்தாளன்னா எல்லாத்தையும்தான் எழுதுவான். நீதானே சொன்னே…எதைப்பத்தியும் எழுதப் பழகிக்கணும்னு…?

ஆமா, சொன்னேன்…யார் இல்லேன்னா? டேலன்ட்டை நல்லபடியா வளர்த்துக்கணும்னு சொன்னேன். நான் சொன்னதுக்கு அதுதான் அர்த்தம். அதுக்காக வேலைக்காரின்னா சிந்தனை இப்படியா போகணும்? நம்மகிட்ட வேலைபார்க்கிறவங்கதானேங்கிற பார்வை. அதே மாதிரி பல வீடுகள்ல பற்றுப் பாத்திரம் தேய்ச்சுப் பிழைக்கிறவங்கதானேங்கிற அலட்சியம். அதுக்காக அது மட்டமா? அப்படிப் பிழைக்கிறதுனால அவங்க ஒழுக்கம் கெட்டவங்கன்னு பொருளா? தப்பாத்தான் நடக்க முயற்சி பண்ணுவாங்கன்னு எழுதறதா?

அவளோட உழைப்பு, சின்சியாரிட்டி, பெத்த பிள்ளைங்களைக் கஷ்டப்பட்டு நாலு வீடு வேலை பார்த்து, வர்ற வருவாயில் படிக்க வைக்கணும்ங்கிற லட்சியம், குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வரணும்ங்கிற வெறி, கஷ்டப்பட்டாலும் உழைச்சு வர்ற வருமானத்துல சாப்பிடணும்ங்கிற கௌரவம், இதையெல்லாத்தையும் எழுதறது….அவளோட உண்மையான துடிப்பு, புருஷன் காப்பாத்தாம ஓடிப் போயிட்ட நிலையிலும் தளராமே வாழ்க்கையில் ஜெயிக்கணும்ங்கிற நம்பிக்கை, ஆர்வம், உழைப்பு இப்படி எத்தனையோ இருக்கே…இதெல்லாமும் உங்க கண்ணுல, கருத்துல படலையா? இந்த அபத்தம்தான் பட்டுதா?

பெரிதாகச் சிரித்தான் கண்ணன்.

இப்படிப் பெரிசா சிரிச்சிட்டா சரியாப் போச்சா? உனக்கு ஒண்ணும் தெரியாதும்பீங்க….வெறுமே சிரிச்சிப்புட்டு நீ ஒரு மக்குங்கிறமாதிரிப் போயிடறது….அதென்ன சாமர்த்தியம்…

சாமர்த்தியம் ஒண்ணுமில்லே…நீ சொன்னதை நினைச்சு சிரிச்சேன். நீ பேசறதெல்லாம் ஏற்கனவே அரைச்ச மாவு. பலபேர் திரும்பத் திரும்ப அரைச்சு ஓய்ஞ்சு போயிட்டாங்க….இப்போ இதுதான் ட்ரென்ட்….அதாவது எல்லாத்தையும் முரணாப் பார்க்கிறது. நல்ல விஷயங்கள் எல்லாத்தையும் தப்புத் தப்பாப் பார்க்கிறது. ஏன் இப்டி இருக்கக் கூடாதா? ஒருத்தன் ரெண்டுபேர் இப்டி இருக்க மாட்டாங்களா? அவங்களைப் பத்தி யார் சொல்றது? அந்த மாதிரியும் மனுஷங்க இருக்காங்கன்னு இந்த சமுதாயத்துக்கு யார் சொல்றது? அவங்க சொல்லப்படாமலே விடுபடலாமா? அப்டீன்னுட்டு சிந்திக்கிறது இன்றைய இலக்கியப் போக்கு….நான் எழுதின கதையிலே இருக்கிற இலக்கிய நயம் புரியலையா உனக்கு? கதையோட க்ராஃப்ட் ஒர்க் எப்படியிருக்கு, அதைப் பாரு…டெப்த் இருக்கா, சொல்லு. லிட்ரேச்சர் படிச்சிருக்கேல்ல…? இதுல இன்ட்ரஸ்ட் இல்லேன்னா எப்படி? வீச்சுக் குறையாம இறுதிவரை கதை விண்ணுன்னு நிமிர்ந்து நிற்குதா, அதைக் கவனி….இப்படித்தான் விமர்சனம் செய்யப் பழகிக்கணும்….அதை விட்டிட்டு மூஞ்சியத் திருப்பிக்கிட்டா எப்படி?

நீங்க சொல்றதெல்லாம் யாருக்கு வேணும்? தேவையில்லாம மண்டையைப் பிச்சிக்க எனக்கென்ன தலை விதியா?

எனக்கு வேணும். நீ சொல்றதை வச்சு என்னை நான் மேலும் உயர்த்திக்க முடியும்….

எப்படி? இந்தச் சாக்கடையை நோக்கியா? கண்றாவி…..

நீ நினைக்கலாம் சாக்கடைன்னு. ஆனா படிக்கிற எல்லா வாசகர்களும் அப்படி நினைக்க மாட்டாங்க…அதான் சொல்லிட்டேனே இன்னைக்கு ட்ரென்ட் இப்டித்தான்னு….கல்யாணத்துக்கு முன்னாடி ஓடிப் போறது, கட்டின பெண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப் போறது, கட்டின பெண்டாட்டி இருக்கிற போதே இன்னொருத்தியைக் கொண்டு வச்சிக்கிறது, வச்சிக்கிட்டவளோட சேர்ந்து கட்டின பெண்டாட்டியைக் கொலை பண்றது, இன்னொருத்தனொட ஓடின பெண்டாட்டி, அவனோட சேர்ந்து வந்து, கட்டின புருஷனைத் தலைல கல்லைப் போட்டுக் கொல்றது, இப்டிப் பலபடி இந்த உலகத்துல அவ்வப்போது நடக்கிறதெல்லாத்தையம், செய்தியாப் படிக்கிற எல்லாத்தையும், திரிச்சு, திரிச்சுக் கதையா எழுதித் தள்றதுதான் இப்போ மவுசு….பெரும்பாலும் அதைத்தான் செய்திட்டிருக்காங்க….கேட்டா நடக்கிறதைத்தானே எழுதறோம்ங்கிறாங்க…இலக்கிய நயத்தோட, ஆழமா எழுதத் தெரிஞ்சவன் அதை கச்சிதமாப் படம்பிடிக்கிறான். அதுக்குப் பேர்தான் நவீனத் தமிழ் இலக்கியம். நிறைய இருக்கிற நல்லதுகளோட இந்த மாதிரிச் சாக்கடையும் கலந்துதான் இருக்கு இன்றைக்கு….இன்றைக்கு என்னோட தேவை எது தெரியுமா? என்னாலயும் எப்டியும் எழுத முடியும்ங்கிறதுதான். நான் என்னை நிரூபிச்சாக வேண்டிய நிலைல இருக்கேன். என்னை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்துல கிடக்கேன்.

போயும் போயும் இப்டியா உங்களை நீங்க அடையாளப்படுத்திக்கணும்…இது உங்களுக்கே வெட்கமா இல்லையா?

இதுல வெட்கப்படுறதுக்கு என்ன இருக்கு? எல்லாரும் எழுதறாங்க…நானும் எழுதறேன்…அவ்வளவுதான். நான் மட்டும் எழுதினா, என் எழுத்து மட்டும் இந்த ரகமா இருந்தா நீ சொல்லணும். எல்லாரும் திட்டணும்…இல்லையே? நிறையப் பேர் செய்ற வேலையைத்தானே நானும் செய்றேன்…என்ன, வித்தியாசமாச் செய்றேன்…எப்டியெல்லாம் குதிரையாப் பறக்கறான் பாருய்யான்னு சக எழுத்தாளர்களும், வாசகர்களும், மூக்கு மேல விரலை வைக்கணும்? கடிதம் மேல கடிதம் போட்டு என்னைப் பாராட்டணும்…அதுதான் இப்போ என்னோட தேவை….

அதனாலே உங்களுக்கு வேணும்னா நன்மை ஏற்படலாம். பலன் கிடைக்கலாம். படிக்கிறவங்களுக்கு என்ன பிரயோஜனம்? இந்த சமுதாயத்துக்கு என்ன நன்மை? எழுத்துக்குன்னு ஒரு பர்பஸ், அதாவது நோக்கம் இருக்க வேண்டாமா? அது இந்த சமுதாயத்துக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டாமா? படிக்கிறவன் மனசுல அசிங்கத்தைக் கிளறாம, நல்லதைப் பதிய வைக்க வேண்டாமா? அவனோட சிந்தனையை ஒரு படியாவது மேம்பட வைக்க வேண்டாமா? எழுத்துங்கிற புனிதமான பணிக்கு இப்படியான நல்ல நோக்கம் இருக்கணும்ங்கிறதுதான் என்னோட எண்ணம்….கருத்து….

கண்ணன் சற்று அதிர்ந்து போய்த்தான் நின்றான். இந்த அளவுக்கான ஒரு சிந்தனை அவளிடம் இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒரு ரசிகனாய் நின்று பதில் சொல்வாள் என்று பார்த்தால், விமர்சகனாய் மாறுகிறாளே? வெறுமே படித்துவிட்டு, கருத்துச் சொன்னால் போதாதா? என்னென்னவோ பேசுகிறாளே? அடுத்து அவளிடம் என்ன பேசுவது என்பதில் அவனிடம் ஒரு தயக்கம் ஏற்பட்டு விட்டது.

Series Navigationஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *