தினம் என் பயணங்கள் -46

This entry is part 7 of 23 in the series 4 அக்டோபர் 2015

 

எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம்.

சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம் போல் என் ஸ்கூட்டி பயணம் இல்லை. துரிதமாய்க் கடந்து விடுகின்றன காட்சிகள். மனிதர்களும்தான் வேக ஓட்டத்தில் காணாமல் போய் விடுகிறார்கள்.

அலுவலகத்திற்குள் நுழையும் போதே கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. சேரும் சகதியுமான தெருவையும், சேற்றில் புரண்டு எழுந்து குறுக்கே ஓடிய நாயையும் கவனித்து என்ன கற்றுக் கொண்டேன் ?

தீர்ப்பதற்கு என்று அநேக பிரச்சனைகள் இருந்த போதிலும் கவலைப்படுதலான இப்பழக்கத்தை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறேன். வாகனம் உள் நுழைந்து அணைந்த உடனேயே ஏழுமலை வந்து கைப்பையை வாங்கிக்கொண்டு வாக்கா என்று நின்றான் தயாராக தாங்கிக்கொள்ளும் தோரணையோடு, மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் நான் விழுந்து விடுவேனோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வு என்னோடு பழகுபவர்களுக்கும் வந்துவிடுகிறேதே! நான் உள் சென்று என் இருக்கையில் அமரும் வரை அவன் என் பின்னால் வருவது பரிதாப உணர்வா? பாச உணர்வா? எப்போதாவது நான் கேள்விக் கேட்டுக் கொள்வதுண்டு.

அலுவலகத்தில் தூங்கி வழிந்தது தான் மிச்சம்.

வராமலேயே இருந்திருக்கலாம். அனைத்து வேலைகளும் நான் இல்லாமலேயே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் என்னைக் கசக்கிப் பிழிந்து உபத்திரவப்படுத்தியிருந்தவர்கள் எல்லோரும் மாறுதலாகிப் போய் விட்டார்கள்.

இந்த சூழல் மாற்றத்திற்கு பின்னும் நான் அந்த அலுவலகத்தில் அதே நிலைப் பதவியில் இருந்தேன்.

இந்த உப்புச் சப்பற்ற வாழ்க்கை முறையில் இருந்து எப்போது எனக்கு விடுதலை ?  காலையில் எழுந்து அலுவலகம் ஓடுவதும் பின்பு வந்து வீட்டின் மூலையில் முடங்கிக்கொள்வதும் இடையில் எப்பொழுதேனும் இணையம் வருவதுமாக ஒருவாறு ஒரு ஸ்திரமான எண்ணம் வந்து நிலைத்தது.

எப்பொழுது வீட்டிற்கு வந்து சேர்வேன் என்ற எண்ணத்திலேயே 5 மணிக்கு எழுந்து வெளியே வந்து விட்டேன்.

“நான் போய்ட்டு வரேன் சார்”

“சரி போம்மா”

என்று உடனே அனுமதி கிடைத்து விட உள்ளத்தில் உற்சாகத் தீற்றல்கள் தொற்றிக்கொண்டது.

வெளி மதில் சுவரை கடந்து சாலையில் இருமருங்கிலும் வீரிக் கடந்துக்கொண்டிருந்த வாகனங்களுக்காக தாமதித்து,  சாலையில் கலந்து, தேநீர் அங்காடியில் நௌஷாத் அண்ணா இருக்கிறாரா, என்று ஒரு கணம் திரும்பி பார்த்து, மீண்டும் சாலையில் கவனத்தைக் குவித்து, சாலையில் முன்பு சென்ற அந்த இருச்சக்கர வாகனத்திற்கு ஒலிப்பானால் எச்சரிக்கை எழுப்பி கடந்து, நாகா சில்க்ஸ் வந்த போது தான் மைக்கேல் அண்ணாவை சந்தித்தேன்.

“அண்ணா ஒரு கப் டீ” என்று குரல் கொடுக்க, சாலையின் மறுமுனையில் இருந்து கடந்து வந்தவர், “டீக்கடை பக்கத்துல தான இருக்கு நடந்து வரேன்” என்றார்.

“இல்லேண்ணா வாங்க வண்டியில அழைச்சுட்டுப் போறேன்” என்றேன்.

மைக்கேல் அண்ணாவைப் பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேனா என்று தெரியவில்லை. இப்பொழுது அவரைப் பற்றி இங்கு எழுதுவது அத்தியாவசியமானதென்பதால் எழுதுகிறேன்.

எனக்குத் தெரிந்த வரையில் ஒரு 100 பிள்ளைகளையாவது படிக்க வைத்து, இருக்க இடமும் தந்து, பாதுகாத்து வழிநடத்தியிருப்பார். இத்தனைக்கும் அவருக்கான வருவாய் அவர் பிரார்த்தனை செய்யும் போது அவருக்கு கிடைக்கும் காணிக்கைத் தொகையே, நான் துவளும் போதெல்லாம் ஆறுதல் படுத்தவென வந்து நின்றுவிடக் கூடியவர். அவருக்கு கிடைப்பதை பிறரோடு பகிர்ந்து கொள்வதில் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. இல்லாமையை புன்னகையில் மறைத்துக் கொண்டு, பசியையும் பண்போடு அனுபவிக்க கற்றிருப்பவர். அவரின் பசி அனுபவ நாட்கள் நான் அறியாத நாட்களின் சேர்த்தியாகவும் இருக்கலாம்.

மைக்கேல் அண்ணா நடத்தி வந்த உதவி இல்லம், மண் சுவரில் கூரை வேய்ந்த குடிசை. அங்கு அன்பும் நம்பிக்கையும் நிரம்பியிருந்தது ஏனோ அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. சட்டப்படி நிரந்தர கட்டிடம் இல்லாததால் இல்லம் நடத்த கூடாது என்று, இல்லத்திற்காக கொடுக்கப்பட்ட அரசாங்க இடத்தையும் பறிமுதல் செய்து கொண்டார்கள். குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடமோ அல்லது, அருகில் இருந்த வாம் நிறுவனத்திடமோ ஒப்படைக்க உத்தரவு.

இப்பொழுது இல்லம் மட்டுமே இல்லை. மற்றபடி அவரின் சேவை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சுதாவை (எங்களால் சுட்டி விகடன் என்று அழைக்கப்படுவள்) தற்போது பிசிஏ படிக்க வைத்துள்ளார். எதிர்பார்ப்புகள் இன்றி செய்வதற்கு பெயர் தான் சேவை என்று அடிக்கடி கூறும் அவர், நான் செய்துகொண்டிருக்கும் செயல்களின் முன்னோடி. ஹார்ட்பீட் அறக்கட்டளை உருவாக விதைக்கு நீர் ஊற்றிய ஆசான் அவர்.

டீயோடு வந்தவரிடம் (எங்கு போனாலும் என்னோடு வருபவர் தான் எனக்கு டீக்கொண்டு வந்து தருவார்கள் என்பது எழுதப்படாத அன்பு விதி) “அண்ணா மீன் கவிச்சி அடிக்கது ” என்றேன் மூக்கை நெருடிக்கொண்டு

சஞ்சலத்தோடு எப்பவும் இருக்கக் கூடாதுடா என்றவர் “பின்னாடி பள்ளமாதான் இருக்கு, ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணு என்று கூற, ஸகூட்டி பின் வந்து மழை நீர் சேற்றில் புதைத்து உர்ர்ர்ர் ரென்று அலறியது.

டீயை கடைக்காரரிடமே தந்து என்னோடு ஸ்கூட்டியை நகர்த்தி பக்கத்தில் இருந்த சமதளத்தில் நிறுத்தவும், அங்கு வந்து அவசர அவசரமாய் கடை விரித்த அந்த ஒடிசி (அப்படித் தான் எண்ணுகிறேன்) இனக்குழு ஒன்று பலூன் கடை விரிக்கவும் சரியாக இருந்தது.

நாங்கள் தேநீர் அருந்திக்கொண்டே பலூனை வேடிக்கைப் பார்க்க, மைக்கேல் அண்ணா அவர்களுக்கும் சேர்த்து தேநீர் தர ஆவன செய்ய, ஒரு சின்ன மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி அங்கு நிலவியது. அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்த போது, பாரதி ஆசிரியர் அங்கு வந்து பலூன் வாங்கினார்.

ஒரு குச்சியில் கட்டப்பட்ட பலூன்கள் 20 ரூபாய் என்று கூறினாள் அந்தப் பெண்

“பதினஞ்சு ரூவாய்க்குத்தாம்மா, என்ற பேரம் பேச, 20 ரூபாய்க்கு சிபாரிசு செய்தும், 5 ரூபாயை திரும்பவும் வாங்கிக்கொண்டு தான் சென்றார் அவர்.

அவருக்கு மட்டும் பதினைந்து ரூபாக்கு தந்தியே, என்று சண்டைக்கு வந்த வெங்காய வியாபாரியிடம், வறுமை பிழைக்க நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க இதுல என்ன கணக்கு, எவ்ளோ செலவாகுது அஞ்சு ரூபாய்ல கோட்டைாய கட்டிட முடியும்” என்று மைக்கேல் அண்ணா பேசியது என்னை நெகிழ்ச்சியை உணரச் செய்தது.

அழகான பலூன்கள் கொஞ்ச நேரத்தில் விற்கப்பட கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. இது போலவே புத்தகங்களை வைத்துக்கொண்டு நின்ற ஒரு நாள் பொழுதில் ஒரே ஒரு கைரேகை சோதிடம் புத்தகம் மட்டுமே விற்பனை ஆனதில் ஏற்பட்ட தோய்வு.

குழந்தைத் தனத்தோடு பலூன் விற்ற சிறுமியுடன் பேசிக் கொண்டிருந்தவரிடம், அட்டேன்ஷன் ப்ளீஸ் சொல்லி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, தெருவில் வரிசையாய் பலூனோடு வந்தார்கள் தம்பியின் மழலைகள்.

அவர்களின் விளையாட்டின் போது பட் பட்டென்று ஒடிந்து போனது பலூன்களில் சில.

அப்பட ஒலியில் அவர்களிடையில் எழுந்த கரகோஷம் மகிழ்ச்சியை தந்த போதும் சில மணி நேரங்களே ஆயுளோடு இருந்த அந்த சிறுவனின் மூச்சுக் காற்று அடங்கிய பலூன்களின் மரணத்திற்காக அஞ்சலி செலுத்தத் தோன்றியது.

என் கவனத்தைத் திருப்புவதாய் வந்து நின்றார்கள் அச்சிறுமியர் இருவர். அக்கா இது நான் செஞ்சது என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்க கூற அம்மகிழ்ச்சியை நிரந்தர சிறைப்பிடிக்க எண்ணி ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னேன் என் மகள் அருள் மொழியை.

ஒரு நாள் வாழ்க்கையில் எத்தனை நினைவு பொக்கிஷங்கள். வாழ்தல் என்பது நினைவுகளை அசைபோடுதல் அல்ல. நிகழ்வாக மாறிவிடுதல். எந்திரத்தனத்தில் இருந்து சற்றே விடுபட்ட உணர்வு எனக்கு.

அவசர அவரசமாய் வந்த என் தமக்கையார், இந்த கவிதையை எதுலயாவது போடு என்றாள்.

படித்த பின் என் அறிவுக்கு எட்டியவரை பிழைத்திருத்தியபின் இந்த வரிகைளை புதுப்பித்து இங்கு பதிவிடுகிறேன்.

 

உன் பொன் மொழிகளை

மறப்பேன் என்றால்

மரண வாசலில் சென்று கொண்டு

இருப்பேன் என்னவளே!

 

  1. ஆனந்த் அமலா.

 

இந்த கவிதையை தட்டச்சு செய்துக்கொண்டிருக்கும் போது ஆனந்த் குறித்து என் மகள் கூறியது எனக்குள் நேர் உணர்வை உருவாக்கியது. மம்மி, நாம தெரியாம செருப்பை போட்டுட்டு போய்ட்டா, “ஏங்க உங்க செருப்பை கழட்டி வெளியில விட்டுட்டு வாங்கன்னு” சொன்னா மூஞ்சுல அடிச்ச மாதிரிதான இருக்கும், காலணிகளை வெளியே விடவும்ன்னு எழுதி போட்டிருந்தாலும் ஒரு மாதிரியாத்தான இருக்கும், இந்தண்ணா காலணிகளுக்கு இங்கே ஓய்வு கொடுங்கள்ன்னு அழகா எழுதி வச்சிருக்கார் மம்மி என்றபோது சில வித்தியாசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் உலகத்தில் என்று தோன்றியது.

அவரவர் இருப்பின்படி உலகத்தில் ஒரு அங்கமாய் இருப்பவர்கள், பின் அவ்வுலகத்தோடே கலந்தும் போகிறார்கள்.

+++++++++++++++++++

Series Navigationமருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலிஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *