கண்ணனுக்கு அப்படியே விட்டு விட்டுச் செல்ல மனமில்லை. ஏனென்றால் அவன் படைப்புக்கள் பலவற்றைப் படித்துவிட்டுப் பாராட்டியவள் அவள். அதனால் ஊக்கம் பெற்றவன் இவன். இப்பொழுது வேறு மாதிரிப் பேசுகிறாள். எதற்காக இத்தனை வெறுப்பு மண்டியது அவளுக்கு? எழுதுபவனெல்லாம் அப்படியே உள்ளவன் என்று பொருளா? ஒரு கதை என்றால் அதில் நாலுவிதமான கதாபாத்திரங்கள் வரத்தான் செய்யும். நாலு பேரும் நாலு விதமாகத்தான் பேசுவார்கள். செய்வார்கள். அதற்காக அந்தக் கதாசிரியனும் அப்படியாப்பட்டவனே என்று நினைத்து விடுவதா? இது என்னடா கொடுமை? அப்படி நினைக்கப் புறப்பட்டால் எந்த எழுத்தாளனும் எதையும் எழுதவே முடியாதே? இந்த உலகம் நல்லது மட்டுமேவா நிறைந்ததாக இருக்கிறது? எல்லாம் கலந்துதானே கிடக்கிறது? ஆறு என்றால் அந்தத் தண்ணீரில் பலதும் கலந்துதானே வருகிறது. இதில் இறங்க மாட்டேன் என்றா சொல்கிறோம். இறங்கி ஒதுக்கிவிட்டுக் குளிக்கத்தானே செய்கிறோம். அப்படித்தானே இதையும் பார்க்க வேண்டும். இந்தக் கதை எனக்குப் பிடித்திருக்கிறது. இது பிடிக்கவில்லை. முடிந்தது. அவ்வளவுதானே. ஒன்று ஒருவருக்குப் பிடிக்கும், இன்னொருவருக்குப் பிடிக்காது. சில பேருக்குப் பிடிக்கும். பல பேருக்குப் பிடிக்காது. அதற்காக அந்தப் படைப்பாளியையேவா ஒதுக்கி விடுவது?
என்னோட குப்பை சிறுகதையை படிச்சிட்டு பாராட்டின நீ இப்போ மட்டும் எதிர்க்கிறியே…என்ன காரணம்?
அதுக்கும் இதுக்கும் வித்தியாசமுண்டு. அதை நீங்க புரிஞ்சிக்கலையா?
என் கதையைப்பத்தியே நான் புரிஞ்சிக்கிட்டேனா இல்லையாங்கிற சந்தேகம் வந்திடுச்சா உனக்கு.
பின்னே? உங்க கேள்வி அப்படித்தானே இருக்கு.
அந்தக் கதைலயும் ஒரு பெண்ணைப்பற்றிய தாப உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தியிருக்கேன். வியாதிக்கார மனைவியோட சுகம் அனுபவிக்க முடியாத ஒரு நடுத்தர வயது மனுஷனுக்கு தெருவுல குப்பை எடுக்க வர்ற பொம்பளைகிட்டே எப்படி மனசு அலையுதுங்கிறதுதான் அந்தக் கதை. அந்த மனுஷனோட தாம்பத்திய வாழ்க்கை பூர்த்தியாகலைங்கிறதைப் புரிய வச்சிருப்பேன்.
தாம்பத்திய வாழ்க்கைங்கிறது வெறும் உடலுறவு சம்பந்தப்பட்டது மட்டும்தானா? வேறே ஒண்ணுமேயில்லையா? அது எத்தனை புனிதமானதுன்னு நினைச்சுப் பார்த்து எழுதக் கூடாதா? ஏன் அந்தப் புத்தி வரல்லை…?
மற்றதெல்லாம் எவ்வளவோ இருந்தாலும், பிரதானம் அதுதான். அது ஒண்ணு இருக்கிறதுனாலதான், குடும்பத்துல ஏற்படுற பிரச்னைகள் கூட சுமுகமா அவ்வப்போது தீர்க்கப்படுது….குடும்பம்ங்கிற அமைப்பு சிதறாம இருக்கிறதுக்குக் கூட அது ஒரு முக்கியமான காரணம். ஆனா அந்த ஆசை அவருக்குப் பூர்த்தியாகாததால, ஒரு நல்ல சிந்தனையுள்ள மனுஷன் எப்படி வக்கிரமா மாறிப்போறான்ங்கிறதை வலியுறுத்துறதுதான் அந்தச் சிறுகதை. அதிலிருந்த கவிதை போலான மென்மையான நடையை நீ ரசிச்சே…?
அழகு, அற்புதம்னு பாராட்டினே….இப்போ இது கசக்குதாக்கும்…?
இருக்கலாம். ஆனா அந்தக் கதையோட முடிவு என்ன? அதைச் சொல்லுங்க…அதுனாலதான அந்தக் கதையை எனக்குப் பிடிச்சதுங்கிறதை ஏன் மறைக்கிறீங்க…?
நான் ஏன் மறைக்கணும்? உன்னோட பாராட்டைத்தானே நான் எதிர்பார்த்திட்டிருக்கேன்…தன்னொட நைச்சியமான பேச்சாலே அந்தப் பெண்ணை வசப்படுத்திட்டதா நினைச்சு, வீட்டு வேலைக்கு வர்றியான்னு கேட்கிறான் அந்த ஆளு. அந்தக் கேள்வில கள்ளம் இருக்கிறதை அவன் மனசு அறியும். ஆனா அவளுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறான். அவ என்ன சொல்றா…என் புருஷன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, அவர் சம்மதத்தோட வர்றேன்ங்கிறா…ஏழைகள்னா கேவலமாங்கிறதை மறைமுகமா உணர்த்துறா…ரோடு கூட்டிப் பெருக்குறவன்னா, எதுக்கும் சம்மதிப்பான்னு நினைக்காதேன்னு சொல்லாமச் சொல்றா….நாங்க ஏழைகள் ஆனாலும் மானத்தோட வாழறவங்கன்னு அவன் புத்தில பதிய வைக்கிறா…அந்த இடத்துலயே அவன் நொறுங்கிப் போறான். அந்தக் கடைசி வரிதான் அங்கே டச்சிங்கா இருக்கும். “இப்போது வாசல் முழுவதும் சுத்தமாயிருந்தது. மனசு மட்டும் முழுக்கக் குப்பையாகிப் போயிருந்ததுன்னு முடிச்சிருப்பேன்…
அந்த முடிவுதான் அதுல பெஸ்ட். அவனோட தவறைச் சுட்டிக் காட்டியிருந்தீங்க…அந்த முடிவு உள்ளுக்குள்ளே இருக்கிற ஆபாசங்களைக் குழி தோண்டிப் புதைச்சிடுச்சு….அதை ஒத்துக்கிறீங்களா? அதுனாலதான் அந்தக் கதை எனக்குப் பிடிச்சிது….படிக்கிறவங்க மனசைக் கெடுக்கக் கூடாதுங்க….கதைகளும், நாவல்களும், டி.வி.சீரியல்களும் இன்னைக்கு இதைத்தான் செய்திட்டிருக்கு…அது எத்தனை சமுதாயக் கேடு தெரியுமா? பெண்கள் குடும்பங்கள்ல எரியுற பிரச்னைகள்னு காட்டுறதைப் பார்த்திட்டு, அதே மாதிரி மன நிலைக்கு ஆளாகுறாங்க…எல்லாக் குடும்பங்களும் போட்டியும், பொறாமையும், கோபமும், வன்மமுமாத்தான் இருந்திட்டிருக்குன்னு காண்பிச்சா, நம்ம உறவு முறைகள்ட்டயும் அந்தப் புத்திதானே வரும்….அது இந்தச் சமுதாயத்துக்குச் செய்ற பெரிய கேடு இல்லையா? அதையே கதைங்கிற பேர்ல நீங்க ஏன் செய்றீங்கன்னுதான் நான் கேட்கிறேன். படைப்பாளி இந்த சமுதாயத்துக்கு முன்னுதாரணமா இருக்கணும். சுருக்கமாச் சொல்லப் போனா எழுத்தும், வாழ்க்கையும் ஒண்ணா இருக்கணும். அது பொழைப்புக்குன்னு நினைச்சிட்டு.இல்லன்னா பொழுது போக்குக்கு, இல்லாட்டி புகழுக்குன்னு நினைச்சு, எதை வேணாலும் எழுதறதுங்கிறது மகா பாவம். அப்படிப்பட்ட எழுத்துனால வர்ற காசு கூட உங்களுக்கு விளங்காது….
ஏய், என்னாச்சு உனக்கு? என்ன இப்படி திடீர்னு மாறிட்டே? கதை எழுதற முறையைத் தெரிஞ்சிக்கிட்டா எந்தவொரு சின்ன விஷயத்தையும் மனசிலே நிற்கிற மாதிரி அழுத்தமா, சொல்ல முடியும்ங்கிறதுக்கு உங்க படைப்புக்கள்தான் உதாரணம்னு நீதானே பல தடவை சொல்லியிருக்கே? எழுத்துங்கிறதே சுய அனுபவமும், நேரடியா வாழ்க்கையிலே காணக்கூடிய சம்பவங்களின் தாக்கமும்தான்னு சொல்வேயில்லையா? அதைத்தானே நான் என் படைப்பிலே நிரூபிச்சிருக்கேன்…மிக நுணுக்கமான பார்வை ஒரு எழுத்தாளனுக்கு அவசியம்ங்கிறது உண்மைன்னா நீ என்னோட எழுத்தைப் பாராட்டித்தான் ஆகணும்……என்னைத் தவிர்க்கவே முடியாது…
அதெல்லாம் சரிதான்…ஆனாலும் ஒவ்வொரு படைப்புக்கும் ஏதாச்சும் ஒரு நோக்கம் இருக்கணும். அந்த நோக்கம் ஒரு செய்தியைத் தாங்கி நிற்கணும். அதாவது மெஸேஜ். அப்போதான் உங்க எழுத்து வாசகர் மத்தியிலே, அவுங்க மனசிலே, நிற்கும்….உங்களை மதிக்க வைக்கும்…
நீ சொல்றமாதிரி சிந்திக்க ஆரம்பிச்சா, அப்புறம் அதிலே இலக்கிய நயம் இருக்காது. வறட்சிதான் மிஞ்சும்…எழுத்தாளன் எந்தக் காலத்துலயும் போதி மரத்து புத்தனா இருக்க முடியாது. எழுத்து சமுதாயச் சீர்திருத்தத்திற்கு உதவும்னு நான் நினைக்கலை. அப்படியிருந்தா, இத்தனை ஆண்டுகளா எழுதிக் குவிச்ச மூத்த படைப்பாளிகளோட படைப்புக்களைப் படிச்சு, பயன்படுத்தி, இந்த சமுதாயம் முன்னேறியிருக்கணும். தன்னுடைய அழுக்குகளைக் களைஞ்சிருக்கணும். தவறுகள் குறைஞ்சிருக்கணும். தப்பு செய்யுறவங்க திருந்தியிருக்கணும்…தீயவை நடக்காம இருக்கணும். மனிதர்கள் நேர்மையானவர்களா மாறியிருக்கணும். அப்படி எதுவுமே நடந்தமாதிரித் தெரியலையே…நாளுக்கு நாள் தவறுகளும் குற்றங்களும்,அதிகரிச்சுக்கிட்டுத்தானேபோகுது..சமுதாயம் இன்னும் அதிகமா குற்றமுள்ளதாத்தானே மாறியிருக்கு…நவீன இலக்கியங்களை விடு…புராணங்களும், இதிகாசங்களும் சொல்லாததையே இந்த எழுத்தாளர்கள் புதிசா சொல்லிடப் போறாங்க…இராமாயணம், மகாபாரதம் மட்டுமே எடுத்துக்கோ…நம்ம ஜனங்களுக்குத் தெரியாததா?அதுல சொல்லப்படாத நல்லவைகளா? பின்ன ஏன் நம்ம சமுதாயம் திருந்தலே….அவை வேறே. நடைமுறை வேறே…மனுஷன்ங்கிறவன் அனுபவிச்சுத் தெரிஞ்சிக்கிறதுக்குன்னே பிறந்தவன். தொட்ட பின் பாம்பு என்றும், சுட்ட பின் நெருப்பு என்றும், பட்டபின் அறிவதே என் பழக்கமென்றானபின்புன்னு கண்ணதாசன் எழுதுவாரே, அதை நீ படிச்சிருக்கியா? அவர் மட்டுமில்லே…நம்ம ஜனங்களே அப்படித்தான்…பொதுவா மனுஷனே அப்படித்தான்…நான் உள்பட,நீ உள்படன்னு நான் சொல்லமாட்டேன்…அதை நீதான் சொல்லணும்…. ….ஒருத்தர் ரெண்டுபேர் வித்தியாசப்படலாம்…அவ்வளவுதான்…. ஆகையினாலே ….எழுத்துங்கிறது ஒரு கலை. அவ்வளவுதான். ரசிக்கிறதுக்குத்தான் எழுத்து. நீ சொல்றமாதிரியே கூட எடுத்துக்கிட்டாலும் இந்த வாழ்க்கையோட அனுபவங்களையெல்லாம் சொல்றதும் கூட மெஸேஜ்தான். ஏன்னா, எல்லா மனுஷங்களுக்கும் எல்லாவிதமான அனுபவங்களும் ஏற்பட்டிருக்காது. வாழ்க்கைங்கிறது நல்லதும், கெட்டதும் கலந்ததுதான். எவன் ஒருத்தனும் ஆயுசு முழுக்க நல்லதை மட்டுமே கண்டதும் இல்லை…கெட்டது மட்டுமே நிலைச்சதும் இல்லை…நான் எழுதியிருக்கிறது அபத்தம்னு சொன்னா, இந்த மாதிரியான வக்கிரங்களும் மனுஷ ஜாதியிலே இருக்கத்தான் செய்யுதுங்கிறதைப் படிக்கிறவன் உணர்ந்திட்டுப் போகட்டும்…அதுவும் ஒருவகை நன்மைதானே….இதை அந்த ரீதியிலே நான் எழுதியிருக்கேன்னு ஏன் எடுத்துக்கக் கூடாது?
அப்போ, படிக்கிற எல்லாரும் நீங்க நினைக்கிறபடி, உங்க இஷ்டப்படிதான் நினைக்கணும்னு நினைக்கிறீங்க….அப்படித்தானே? எல்லாரும் மனப் பக்குவப்பட்டவங்களா இருப்பாங்களா? பல்லாயிரக் கணக்கான பிரதிகள் அச்சாகிற ஒரு பத்திரிகையிலே இந்த மாதிரியான எழுத்துக்கள் வந்தா, அது எத்தனை ஆயிரம் பேர் மனசைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும்? அந்த வினையை உங்க எழுத்து மூலம் நீங்க விதைக்கணுமா? அப்படியான விஷத்தை இந்த சமுதாயத்துக்கு, இங்க உள்ள இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, பெரியவங்களுக்கு, ஏன் குழந்தைகளுக்குன்னும் … இப்படி எல்லாருக்கும் தெளிக்கிறீங்க….நீங்க சொல்றமாதிரி எழுத்துங்கிறது வெறும் பொழுது போக்கில்லை. அது ஒரு தவம்…அது ஒரு சத்தியம். நல்ல சிந்தனையிருந்தா, நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தா, நல்ல எழுத்து வரும். உங்க மனசு அழுக்கா இருந்தா, உங்க எழுத்தும் அதைப் பிரதிபலிக்கும்….அவ்வளவுதான்….
அப்போ கடைசியா நீ எதுக்கு வர்றே…? நான் நல்லவனில்லை… அதானே…? அதைச் சொல்லி நிலை நிறுத்தணும். என் எழுத்துப்படியான குணாம்சங்கள்தான் என்னிடம் இருக்கும்ங்கிறே…அல்லாம இப்படி எழுத முடியாதுன்னு சாதிக்கிறே…! அப்படித்தானே?
புரிஞ்சிக்கிட்டா சரி….. – ஆணித்தரமாக வந்த பதிலில் வாயடைத்துப் போனான் கண்ணன்.
- வேலி – ஒரு தமிழ் நாடகம்
- செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
- இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது
- நகுலன் கவிதைகள்
- மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி
- தினம் என் பயணங்கள் -46
- ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015
- திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
- மிதிலாவிலாஸ்-14
- மிதிலாவிலாஸ்-15
- மிதிலாவிலாஸ்-16
- அவன் முகநூலில் இல்லை
- மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015
- பொன்னியின் செல்வன் படக்கதை – 7
- பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
- திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
- தொடுவானம் 88. வீரநாராயண ஏரி
- அவன், அவள். அது…! -4
- சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி
- ஊற்றமுடையாய்