தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
நல்ல வேளையாக அரவிந்தின் பாட்டி ஊரில் இல்லை. உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தாள்.
மறுநாள் காலையில் அந்த ஊர் அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
“மைதிலி! பூனாவில் எங்க உறவினர் ரமாகாந்த் இருக்கிறார். அங்கே போய் விடுவோம். அவர் நமக்கு ஆதரவு தருவார்” என்றான். இருவரும் அன்றே கிளம்பிப் போனார்கள்.
இரண்டு மாதங்கள் கண்மூடித் திறப்பதற்குள் பறந்து விட்டன,
மைதிலிக்கு வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருதது. ரமாகாந்தின் மனைவி உடல்நலம் சரியாக இல்லாமல் பிறந்த வீட்டுக்கு சென்றிருந்தாள்.
வந்த சில நாட்களுக்குள் ரமாகாந்த் அரவிந்துக்கு லோகல் இங்கிலீஷ் நாளேட்டில் வேலை வாங்கிக் கொடுத்தான். சின்னச் சின்ன சந்தோஷங்கள், நடுநடுவில் சனி ஞாயிறுகளில் பம்பாய்க்குப் பயணம் எல்லாம் ஜாலியாகத்தான் இருந்தது.
முதல் சம்பளம் வந்ததும் அரவிந்துக்காக புத்தாடைகள் வாங்கி வாங்கிவந்தாள். பணத்தை வீணடித்துவிட்டதாக அரவிந்த் சலித்துக் கொண்டான். அவனிடம் கொஞ்சம்கூட ஒழுங்குமுறை இல்லை. பொருட்களை தாறுமாறாக எங்கு வேண்டுமானாலும் வைத்துவிடுவான். ஞாபக மறதியும் இருந்தது.
மைதிலி முதலில் சலித்துக் கொண்டாலும் அவனை மாற்றுவதற்கு முயற்சி செய்தாள். சிலநாட்களிலேயே அரவிந்த் மாறமாட்டான் என்று புரிந்து விட்டது. தன்னுடைய விருப்பம் போல் அவன் வாழ்வான். அவனுடைய வாழ்க்கைமுறைக்கு எதிராளி சமாதானமாகப் போக வேண்டியதுதான்.
ஒருமுறை சலித்துப் போன மைதிலி, “ஸ்ரீலதா உன்னைப் பண்ணிக் கொண்டிருந்தாலும் உடனே டிவோர்ஸ் கொடுத்திருப்பாள்” என்றாள்.
“கொடுத்தால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்றான்.
“உன்னை விரும்பியவர்கள் உன்னை விட்டுவிட்டுப் போனால் உனக்கு வேதனையாக இருக்காதா?”
“இருக்காது. என்னை விட்டுப் போனவர்களைப் பற்றி எனக்கு இனி எந்த யோசனையும் இருக்காது.”
“உனக்கு தனிமையாக இருக்காதா?”
“ஊஹும். தூரிகை என் கையில் இருக்கும் வரையில் எனக்கு எந்த கவலையும் இருக்காது.”
மைதிலி அவனை வித்தியாசமாகப் பார்த்தாள். தான் அவசரப்பட்டு அவனைத் திருமணம் செய்துகொண்டு விட்டோமோ என்று யோசனையில் ஆழ்ந்தாள்.
மைதிலிக்கு குளிமுறை தவறிவிட்டது. சந்தோஷமாக அவனிடம் இந்த விஷயத்தைச் சொன்னாள்.
“இப்போ குழந்தைகள் வேண்டாம்.” சுருக்கமாகச் சொன்னான்.
“வேண்டாம் என்றால் எப்படி? நான் இப்போது கருவுற்று இருக்கிறேன்” என்றாள். அவன் மௌனமாக இருந்து விட்டான்.
வழக்கம்போல் வேலைக்குப் போய் விட்டான்.
மாலையில் வந்தான். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்த மைதிலியை அருகில் இழுத்து அணைத்துக்கொண்டு, “முதலில் நாம் கொஞ்சம் செட்டில் ஆன பிறகுதான் குழந்தைகள். கல்யாணமே ஒரு பெரிய பொறுப்பு என்று இப்போ புரிகிறது. இனி குழந்தைகள் என்றால்…”
“பயப்படுகிறாயா?”
“ஊஹும். பிறந்த குழந்தைக்கு சரியாக உணவு அளிக்க முடியாமல் போனால், அதற்கு அசௌகரியம் ஏற்பட்டால் என் மனம் வேதனைப் படும். மைதிலி! நீ அபார்ஷன் பற்றி யோசித்துப் பார்.” தாழ்ந்த குரலில் சொன்னான்.
மைதிலி விருட்டென்று எழுந்தாள். அடியுண்ட பெண்புலியைப் போல் பார்த்தாள். அவள் கண்களில் கிர்ரென்று நீர் சுழன்றது. ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டே, “நீதானா இந்த வார்த்தையைச் சொன்னது?” என்றாள். விருட்டென்று திரும்பி சுழல்காற்று வேகத்துடன் அறைக்குள் போனாள்.
“மைதிலி!’ அவன் பதற்றத்துடன் பின்னாலேயே வரப் போனான்.
மைதிலி ஏற்கனவே சூறாவளியாய் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் கையில் அவன் முதல் அறிமுகத்தின் போது கொடுத்த ஓவியம் இருந்தது. அதைக் காண்பித்துக் கொண்டே, “இதை வரைந்த நீ தானா இந்த வார்த்தையைச் சொன்னது?” என்றாள்.
“அது மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு செய்தி மட்டும்தான். இது நம் வாழ்க்கை. குழந்தைகள் என்றால் பெரிய பொறுப்பு. முதலிலேயே கவனமாக இல்லாமல் போனது தவறுதான். என்னுடைய தவறை நான்தான் சரி செய்ய வேண்டும்.”
“எப்படி?”
“அபார்ஷன் செய்விப்பதன் மூலமாய்.”
மைதிலியின் இதயத்தில் இடி விழுந்தது போலாயிற்று. அந்த இடியின் தாக்குதலுக்கு தன் வயிற்றில் துளிர்த்திருக்கும் விதையானது எங்கே கலைந்து விடுமோ என்று பயந்தவள் போல் அடிவயிற்றை கையால் அழுத்திக் கொண்டாள். “அரவிந்த்! நீ.. நீ…” என்றவள் இனி பேசமுடியாமல் விருட்டென்று பின்னால் திரும்பி அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டுவிட்டாள்.
மைதிலி அழுதுக் கொண்டிருந்தாள். அரவிந்த் தன்னை புரிந்துகொள்ளவில்லை. தன்னுடைய குழந்தையை அவள் கருவில் சுமந்து கொண்டிருப்பது தெரிந்தால் அவன் ரொம்பவும் சந்தோஷப்படுவான், அந்த சந்தோஷத்தில் தானும் பங்கு பெறுவோம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அந்த அனுபவம் கசப்பாக இருந்தது. அவனுக்கு தனக்கும் ரொம்ப இடைவெளி இருப்பது போல் தோன்றியது.
அன்று மாலை வருத்தத்தில் ஆழ்ந்திருந்த மைதிலிவிடம் ரமாகாந்த் சமாதானப்படுத்தினார். “அரவிந்துக்கு குழந்தைகள் என்றால் விருப்பம் இல்லாமல் இல்லை. அவ்வளவு பெரிய பொறுப்பை எப்படி நிறைவேற்றுவது என்று பயப்படுகிறான்” என்றார்.
“நான் அப்பார்ஷன் செய்துகொள்ள மாட்டேன் என்று அவனிடம் சொல்லி விடுங்கள்.”
“ஆனால் மைதிலி…” அங்கேயே இருந்த அரவிந்த் ஏதோ சொல்ல வந்தான்.
“என்னிடம் பேசாதே. இந்த ஜென்மத்தில் நான் உன்னிடம் பேச மாட்டேன்.”
“மைதிலி!”
“என் அறையிலிருந்து போய் விடு. கிளம்பு. உன் முகத்தை எனக்குக் காட்டதே.” கத்தினாள்.
அரவிந்த் முகத்தைத் தொங்க போட்டுகொண்டு வெளியே போய் விட்டான்.
மறுநாளும் மைதிலி அவனிடம் பேசவில்லை. ஆபீசுக்கு போகும் முன் அரவிந்த் தானே வந்து மைதிலிவிடம் பேச வந்தான். மைதிலி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்’
அறை வாசலில் அவன் தயங்கி நிற்பது அவளுக்குத் தெரிந்தாலும் மௌனமாக இருந்து விட்டாள். அவன் கட்டாயம் இந்த விஷயத்தில் சமாதானத்திற்கு வர வேண்டும். வந்துதான் தீரணும். தான் வேண்டும் என்றால் இது ஒன்றுதான் வழி. இல்லை என்றால் அவரவர்களின் வழி அவரவர்களுக்கு. சபதம் செய்வது போல் நினைத்துக் கொண்டாள் மைதிலி.
“நான் போகிறேன் மைதிலி! ஆவேசத்தில் வேண்டாத வேலை எதுவும் செய்யாதே. கவனமாய் இரு” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
நான்கு மணி ஆகும்போது அழைப்பு மணி ஒலித்தது. மைதிலி சந்தோஷமாக ஓடிப் போய் கதவைத் திறந்தாள். அவளுக்குத் தெரியும்! நன்றாகத் தெரியும். அரவிந்த் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிட்டான். காலையில் போகும் போதே அவனுக்கு அரை மனதுதான்.
கதவைத் திறந்ததுமே எதிரே தென்பட்டது அரவிந்த் இல்லை. ரமாகாந்த்!
“மைதிலி! அரவிந்துக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. அவன் சைக்கிளில் போகும் போது பஸ் வந்து இடித்துவிட்ட்டது. ஆஸ்பத்திரியில் இருக்கிறான்.”
அடுத்த நிமிஷம் இருவரும் புறப்பட்டர்கள். அரவிந்த் கடைசி வினாடிகளில் இருந்தான்.
“மைதிலி! உனக்காக வேறு யாரோ காத்திருக்கிறார்கள். என்னுடைய அத்தியாயம் முடிந்து விட்டது.”
“அரவிந்த்! அப்படிச் சொல்லாதே.”
“நீ அபார்ஷன் செய்து கொள்ளாமல் முடியாது.” காய்ந்து போன அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை!
அவன் தலையிலும், மார்பிலும் நன்றாக அடிபட்டிருந்தது. அன்று இரவே அவன் உயிர் பிரிந்து விட்டது.
மைதிலி கல்லாகச் சமைந்துவிட்டாள்.
ரமாகாந்த் டெலிகிராம் கொடுத்திருப்பார் போலும். மறுநாள் காலையில் தாயும், தந்தையும் வந்து விட்டார்கள். ரமாகாந்த் கொடுத்த தந்தியைப் பார்த்ததும் அவன் பாட்டி நினைவு தப்பி கீழே விழுந்து விட்டாள் என்றும், உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரச் சொன்னதாகவும் உறவினர்கள் போன் செய்தார்கள்.
“நான் உடலை எடுத்துக் கொண்டு போயாக வேண்டும். இல்லா விட்டால் அந்த பாட்டி என்னை உயிருடன் விட்டு வைக்க மாட்டாள்” என்றார் ரமாகாந்த்.
“வீட்டுக்கு போகலாம் வாம்மா” என்றாள் தாய்.
“மைதிலி! நான் உன்னை கோபித்துக் கொள்ள மாட்டேன். வீட்டுக்கு வாம்மா” என்றார் தந்தை.
மைதிலி வயிற்றில் அரவிந்தின் வாரிசுடன் தனியாய் பெற்றோருடன் ஹைதராபாத்துக்கு திரும்பி வந்தாள்.
மைதிலிக்கு உடனே கல்யாணம் முடிக்க வேண்டும் என்று தாய் தந்தை அவசரப்பட்டார்கள். தான் கருவுற்று இருப்பதாக மைதிலி சொன்னதும் அவர்கள் திகைத்துப் போனார்கள்.
அந்தச் செய்தி தெரிந்து இருபத்தி நான்கு மணிநேரம் ஆகும் முன்பே தாய் மைதிலியிடம் வந்து, “அபார்ஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டேன்” என்று சொன்னாள்.
“நோ! அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். எனக்குத் தெரியாமல் நீங்கள் ஏதாவது செய்தால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்க முடியாது” என்று கத்தினாள்.
மைதிலியின் முகத்தைப் பார்த்தால் சொன்னதை அப்படியே செய்து காட்டுவாள் போல் இருந்தது. அந்த பயத்தில் அவர்கள் பின் வாங்கினார்கள். தந்தை ஒழுங்குமுறைக்கு மறுப்பெயராக இருப்பவர். அம்மா பெரிய சோஷல் வர்கர். இருவருக்கும் பெயர் புகழ் பற்றிய அக்கறை அதிகம். அதை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு.
மைதிலி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அவர்கள் எதிர்த்து நின்றாள். வீட்டை விட்டு போய்விடுவதாக மிரட்டினாள். தாய் தந்தை எதுவும் செய்ய முடியாமல் சமாதானத்திற்கு வந்து விட்டதாக அறிவித்தார்கள்.
வேறு வழியில்லாமல் அவர்கள் வழிக்கு வந்து விட்டது மைதிலிக்கு தெரியாமல் இல்லை. தன் வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் அவர்களுக்குக் கொஞ்சம் கூட பிரியம் இல்லை என்று மைதிலிக்குத் தெரியும்.
இரவு நேரத்தில் மைதிலி கட்டில் மீது படுத்து வயிற்றின் மீது கையை வைத்துக் கொண்டாள். “யார் மறுத்தாலும் உன்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வராமல் இருக்க மாட்டேன். இன்மேல் எனக்கு நீ.. உனக்கு நான்” என்று நினைத்துக் கொண்டாள்.
மைதிலிக்கு ஐந்து மாதங்கள் முடியும் போது தாய் மறுபடியும் ரமாகாந்த ஊருக்கு வந்தாள். அங்கே என்றால் மைதிலியின் கணவன் இறந்து விட்டான் என்று எல்லோருக்கும் தெரியும். யாரும் ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள்.
மைதிலி ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்துக் கொண்டு, வயிற்றில் இருக்கும் சிசுவுடன் அரவிந்தின் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டு ஒன்பது மாதங்களை கழித்தாள். பிரசவ நேரம் நெருங்கியது.
மைதிலி பிரசவித்தாள். ஆண் குழந்தை! ஆனால் குழந்தை இறந்து பிறந்ததாக டாக்டர் சொன்னபோது மைதிலி அழுதாள்.
தாய் தந்தையின் முகத்தில் நிம்மதி!
அவளுடைய தவம் பொய்த்துவிட்டது. இந்த உலகில் அவள் தனியள் ஆகிவிட்டாள். “நீங்கள் ஏதாவது சதி செய்தீங்களா?” என்று பெற்றோரை மிரட்டினாள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல்தான் ரமாகாந்த் மூலமாக ஆஸ்பத்திரியைத் தேர்ந்தெடுத்தாள்.
“டாக்டர் சொல்லிவிட்டாள் இல்லையா. இனி அந்த விஷயத்தை மறந்து விடு. மனதை வருத்திக் கொள்ள வேண்டாம்.” ரமாகாந்த் அறிவுரை சொன்னார்.
மைதிலி பெற்றோருடன் ஹைதராபாத்துக்கு திரும்பி வந்து விட்டாள். அவளுடைய பெட்டியை பெற்றோர்கள் கொண்டு வரவில்லை. அதைப் பற்றி ரமாகந்துக்கு எழுதிய போது, அந்தப் பெட்டியை அவனுடைய பாட்டியிடம் சேர்பித்து விட்டதாக அவர் எழுதிவிட்டார்.
காலவெள்ளத்தில் நாளடைவில் அரவிந்த் பற்றிய நினைவுகள் மனதில் ஏதோ ஒரு மூலையில் பதிந்து விட்டிருந்தன. மைதிலி மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் முழு சிரத்தையுடன் ஆழ்ந்து போய்விட்டாள்.
அபிஜித் ஏதோ வேலையாக ஹைதராபாதுக்கு தாயுடன் வந்தவன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தான். மைதிலியின் பெற்றோர் அவர்களுக்கு மகளைப் பற்றிய விவரங்களை முழுவதும் சொல்லாமல் பூசி மேழுகியபடி தெரிவித்தார்கள்.
“மகள் ஒருத்தனை விரும்பினாள். திருமணத்தை நாங்களே எளிமையாக செய்து கொடுத்தோம். இரண்டு மாதங்கள் போவதற்குள் அவன் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டான். எங்களுக்கு இருப்பது ஒரே மகள். அவளைப் பற்றிய கவலைத்தான் எங்களுக்கு.”
அபிஜித்தின் தாய் அவர்களைத் தேற்றினாள். நடந்த விஷயத்தை பாதி உண்மையும், பாதி பொய்யும் கலந்து அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு அந்த அம்மாளின் மனதில் அவர்களைப் பற்றி இரக்கம் ஏற்பட்டது.
அபிஜித் மெள்ளமாக மூன்றாம் பிறை வெளிச்சம் போல் அவளுடைய வாழ்க்கையில் நுழைந்து போகப் போக அவள் வாழ்க்கையை முழுநிலவாக மாற்றிவிட்டான், தொடக்கத்தில் அவன் ஊருக்குப் போன பிறகு அவ்வப்பொழுது அனுப்பும் வாழ்த்து மடல்களில், “நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் வாழ்க்கை” என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன. அவ்வபொழுது போனில், “எப்படி இருக்கீங்க?” என்று குசல விசாரிப்புகள்.
தேர்வுகள் முடிந்த பிறகு ஒருமுறை பெற்றோர்கள் மைதிலியை பெங்களூருக்கு அபிஜித் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே இருந்த இரண்டு வாரமும் சந்தடியாக கழிந்து விட்டது. எல்லோருடன் சேர்ந்தும், சில சமயம் அபிஜித்தும் அவளும் மட்டுமே வெளியே போய் வந்தார்கள்.
அவன் அருகில் இருக்கும் போது இனம் தெரியாத நிம்மதி!
தன் மனதில் காயம் இருப்பதை உணர்ந்தது போல் அவன் நடவடிக்கைகள் மென்மையாக இருந்தன. ஒருவிதமாகச் சொல்லப் போனால் அபிஜித்தை அவளுக்கு பிடித்து இருந்தது. அவன் நடத்தையில், வாழும் முறையில் ஒரு ஒழுங்கு முறை இருந்தது. எதிராளிக்கு அவன் நெருக்கம் மலையளவு பலத்தைக் கொடுப்பது போல் இருக்கும். வார்த்தைகளால் எதுவும் சொல்ல மாட்டான். எதிராளியைப் பற்றி அவன் எடுத்துக் கொள்ளும் அக்கறை, அவர்களுடைய தேவைகளை அவன் நிறைவேற்றும் விதம் ரொம்ப அரிதாக இருக்கும். எல்லோரையும் சமமாக ஆதரிப்பான். அவர்கள் தம் மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லக் கூடிய உரிமையைக் கொடுப்பான். அதற்காக அவர்கள் தலையில் ஏறி உட்காருவதற்கு வாய்ப்பு தர மாட்டான். ஒரே பார்வையில், ஒரு வார்த்தையில் தொலைவில் நிற்க வைப்பான். இந்த உலகம் அவனுக்கு வேண்டும். அதனுடன் எந்த தயக்கங்களும் இல்லாமல் கலந்து போக அவனால் முடியும். அவனுடைய சுய கட்டுப்பாடு எதிராளியை பயமுறுத்தும்.
திரும்பிப் போக வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. அன்று ஷாப்பிங் முடித்துக் கொண்டு ஹோட்டலில் காபி அருந்திக் கொண்டிருந்தார்கள்.
“என்னுடைய வியாபாரத்தில் ஒருத்தனுடன் கூட்டாளியாக இருக்கிறேன். எந்த விஷயத்தையும் முடிவு செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. ஆனால் சிலசமயம் அவன் எனக்குத் தெரியாமல் யாருக்காவது வாக்கு கொடுத்து விடுகிறான். அது அவனுடைய பலவீனம். அதை நிறைவேற்றி தீரவேண்டிய நிர்பந்தம் எனக்கு. என்ன செய்வது என்று புரியவில்லை” என்றான் அபிஜித். ஏற்கனவே அவ்விருவருக்கும் இடையே நெருக்கம் கூடியிருந்தது.
“வெளியாட்களுடன் சமாதானமாகப் போகலாம். ஆனால் வியாபாரத்தில் கூட்டாளியுடன், வீட்டில் இருப்பவர்களுடன் வாழ்க்கை நடத்தணும் என்றால் அது பெரிய தலைவேதனை” என்றாள்.
“நீங்க சொல்வது மிகவும் சரி” என்றான் அவன். அவளைக் கூர்ந்து பார்த்தான். இந்தப் பெண்ணிடம் மேலும் மேலும் பேச வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருந்தது.
மைதிலி மேலும் சொன்னாள். “உங்களை நான் புரிந்து கொண்ட வரையில் சுதந்திர எண்ணங்கள் கொண்டவர். எப்போதாக இருந்தாலும் உங்களுக்கு என்று வியாபாரம் தனியாக இருப்பதுதான் நல்லது. அதனால் சில பொறுப்புகள் கூடினாலும் வேண்டாத தலைவலி குறையும்.”
“ஆமாம்” என்றான். அவள் கோப்பையில் சர்க்கரையைப் போட்டு கலந்துகொண்டே, “மைதிலி! உங்களிடம் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்றான்.
“ஊம்.”
“ஏனோ இது வரையில் என் வாழ்க்கையில் என்னைவிட பெரியவர்களுடன் சேர்ந்து வேலை பார்ப்பதோ, அல்லது என்னைவிட சிறியவர்களுடன் பேசி பொழுதைப் போக்குவதோ நடந்து வந்திருக்கிறது. உங்களிடம் பேசும் போது நம் அறிமுகம் கொஞ்சம்தான் என்றாலும் சம வயதினருடன் நட்பும், அந்த சந்தோஷமும் வேறுதான் என்று புரிகிறது” என்றான்.
மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள்.
கிளம்பும் நாள் வந்தது. பெரியவர்கள் எல்லோரும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய பேக்கை எடுத்துக் கொள்வதற்காக அறைக்குள் வந்தாள். அது அபிஜித்தின் கையில் இருந்தது.
“மறுபடியும் வருவீங்களா?” என்று கேட்டான்.
மாட்டேன் என்று குறுக்காக தலையை அசைத்தாள். பேக்கை கொடுத்துவிட்டான்.
ரயிலில் உட்கார்ந்து கொஞ்ச தூரம் வந்த பிறகு எதற்காகவோ பேக்கைத் திறந்தாள். அதில் ஒரு கார்ட் இருந்தது. எடுத்துப் பார்த்தாள்.
“டியர் பிரெண்ட்!
உன்னைப் பார்த்த பிறகுதான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். இந்த உலகம் ரொம்ப அழகாக காட்சி அளிக்கிறது. என்னுள் சக்தி கூடி விட்டது போல் இருக்கிறது. திரும்பவும் உன்னை சந்திக்கப்போகும் அந்த இனிமையான தருணத்திற்காக காத்திருக்கிறேன்.” என்று கொடேஷன் இருந்தது. கீழே அபிஜித்தின் கையெழுத்து இருந்தது.
அவன் சுயமாக அந்த கொடேஷனை எழுதவில்லை. ஆனால் தன் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கொடேஷனை தேடி கண்டுபிடித்திருக்கிறான்.
ஒருவிதமான தனிமையில் இருந்த அவளுக்கு அவனது வருகை நறுமணம் நிறைந்த பூங்காவனத்தில் நடப்பது போல் இருந்தது. தனிமையான தன் உலகத்தின் கதவுகளை வலுக்கட்டாயமாகத் திறந்து தன்னை வெளி உலகத்திற்கு அழைத்து வர முயற்சி செய்கிறான். அவனுடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாதோ என்னவோ.
அதற்கு அடுத்த மாதமே அவள் தாய் திடீரென்று இறந்து போய் விட்டாள். அபிஜித் உடனே கிளம்பி வந்தான். குன்றிப் போயிருந்த தந்தையைத் தேற்றினான். அவன் இருந்த பத்து நாட்களும் விருந்தினர் என்ற முறையில் அவள்தான் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அபிஜித்தின் வருகை அதிகரிதது. தந்தை நோய் வாய்பட்டார். தாய் உயிரோடு இருக்கும் வரையில் எவ்வளவு சொல்லி வந்தாலும் அவர் குடியை, சிகரெட்டை நிறுத்தியதில்லை. இப்பொழுது மனைவியை நினைத்து நினைத்து வருந்தி கொண்டிருந்தார். அவருக்கு தன்னுடைய உடல்நலக் குறைவுடன் மகளைப் பற்றிய கவலையும் அதிகரித்தது.
அபிஜித் ஒருமுறை வந்தபோது கட்டாயப்படுத்தி தந்தையை, அவளை தன்னுடன் பங்களூருக்கு அழைத்துப் போனான்.
அங்கே இருந்த ஒரு மாத காலம் அவளால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அபிஜித், அவன் தாயும் காட்டிய ஆதரவு அப்படிப்பட்டது. சரியான வைத்தியம், பொருளாதார வசதி இருந்ததில் ஒரு மாதத்தில் தந்தையின் உடல்நலம் தேறிவிட்டது.
வீட்டுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தார்கள். அன்று இரவுதான் பயணம்.
மைதிலி மாடியில் தன் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அபிஜித் உள்ளே வந்தான்.
“முடிந்து விட்டது. நான் ரெடி” என்றாள் மைதிலி.
“மைதிலி!”
“ஊம்.”
அவன் பேசவில்லை. பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருத்த மைதிலி நிமிர்ந்து பார்த்தாள்.
அபிஜித் அருகில் வந்தான். பெட்டியின் மீது கையைப் பதித்தான்.
அவன் மைதிலியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மைதிலிவும் அவனையே பார்த்தாள்.
“மைதிலி! நான் உன்னைத் திருமண செய்து கொள்ளணும் என்று முடிவு செய்திருக்கிறேன்.” அவன் வார்த்தைகள் எந்த விதமான தடுமாற்றமும் இல்லாமல் நேராக இருந்தன.
மைதிலி பெட்டியை விட்டுவிட்டு நேராக நிமிர்ந்து நின்றாள்.
“இது நான் திடீரென்று செய்த முடிவு இல்லை. உன்னைப் பார்த்த முதல் கணமே நான் உன்னுடையவன் என்று தோன்றிவிட்டது. நீ இல்லாமல் என் எதிர்காலம் அர்த்தமற்றது என்று எனக்கு தெரிந்து விட்டது.”
மைதிலி நிற்க முடியாதது போல் கட்டில் மீது அமர்ந்து கொண்டாள். இதழ்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
“இந்த உலகத்தில் இரண்டு விதமான காதல் திருமணங்கள் இருக்கின்றன. காதலித்து கல்யாணம் செய்துக் கொள்வது, கல்யாணம் செய்துகொண்டு பரஸ்பரம் காதலை பெறுபவர்கள்.”
“ஆனால்…”
“எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். தைரியமாக என் கையைப் பற்றிக்கொள். எனக்கு சக்தியைக் கொடு. என்னிடமிருந்து சக்தியைப் பெற்றுக்கொள்.”
“ஆனால் உங்க அம்மா?”
“முதல் முறையாக உன்னைப் பார்த்ததுமே என் விருப்பத்தை அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.”
“ஆனால் அபிஜித்! நான் ஒருமுறை…”
“அங்கிள் என்னிடம் எல்லாம் சொல்லி விட்டார். நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை. நீ என் கையைப் பற்றிய அந்த வினாடி முதல் நம் இருவரின் வாழ்க்கையும் ஒன்று. உன்னைப் பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. நீ எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”
மைதிலி பதில் பேசவில்லை. தலையைக் குனிந்து கொண்டாள். அவன் பேச்சிலிருந்து இனம் தெரியாத தைரியம் அவள் உடலில் புகுந்து கொள்வது போல் இருந்தது.
அவன் ஓரடி முன் வைத்து அவள் அருகில் சென்றான். “உன்னை எந்த அளவுக்கு சந்தோஷமாக வைத்திருப்பேன் என்று இப்போ என்னால் வாரத்தையில் சொல்ல முடியாது. ஆனால் வருத்தப்படும் விதமாக ஒரு வார்த்தையோ, எந்த ஒரு சின்ன காரியமோ செய்ய மாட்டேன். இது நான் அளிக்கும் வாக்குறுதி.” அவன் கையை நீட்டி சத்தியம் செய்வதற்காக கையை நீட்டினான்.
“பின்னால் எப்போதாவது அவசரப்பட்டு விட்டேன் என்று நீங்கள்…”
“என் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்காது. உன் விஷயத்திலும் உனக்கு அந்த எண்ணம் வராமல் இருக்க நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.”
“என்னால் எந்த முடிவுக்கு வர முடியவில்லை. நாம் இப்போது நண்பர்களாக சந்தோஷமாக இருக்கிறோம். இது போதாதா?”
“போதாது. உன்னை இன்னும் அதிகமாக சந்தோஷப்பட வைக்கணும் என்றாலோ, உன்னிடமிருந்து நான் எதையாவது பெற வேண்டும் என்றாலோ நாமிருவரும் கணவன் மனைவி ஆக வேண்டும். திருமணம் ஒன்றுதான் நமக்கு அந்த தகுதியை, உரிமையை கொடுக்கும்.”
மைதிலி தலையைக் குனிந்துகொண்டாள். தாயின் இழைப்பு, தந்தையின் நோய், மனதில் இருந்த தனிமை இவற்றுடன் குன்றிவிட்டிருந்த மைதிலிக்கு அவன் வார்த்தைகள் வெளிச்சத்தின் வெளிப்பாடாக தெரிந்தன. ஆனால் அதை நோக்கி நடக்கு துணிச்சல் தனக்கு இருக்கிறதா?
அவள் மனதில் இருப்பதை படித்து விட்டது போலவே அபிஜித் சொன்னான். “மைதிலி! சந்தேகம் வேண்டாம். ஒரு முறை நிமிர்ந்து பார்.”
மைதிலி நிமிர்ந்து நோக்கினாள். அவள் கணகளில் கண்ணீர் திரையாக படிந்திருந்தது.
அவன் கையை நீட்டினான். மௌனமாக அவள் சம்மதத்திற்காக காத்திருந்தான்.
மைதிலியால் அவனை மறுக்க முடியவில்லை. மெதுவாக கையை நீட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டாள். அவன் கை அவளுடைய கையை இறுகப் பற்றிக் கொண்டது. அவனுடைய தொடுகை அவளுக்கு புத்துயிர் அளிப்பது போல் இருந்தது. அவன் சொல்ல முடியாத விளக்கங்கள் எத்தனையோ அந்த ஸ்பரிசத்தில் அவள் கேள்விகளுக்கு பதிலாகத் தோன்றி அவள் பயத்தை, சந்தேகத்தை காணமல் அடித்து விட்டன.
அவன் மெதுவாக அவள் கையைப் பற்றி எழுப்பினான். தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு அருகில் இழுத்துக் கொண்டான்.
மைதிலி மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் அவள் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்தான். அவன் கண்களில் அவளுக்கு தன் ஆன்மா தெரிவது போலிருந்தது.
அபிஜித் மைதிலியின் தோள்களைச் சுற்றிலும் கையைப் போட்டான். இருவரும் சேர்ந்து படியிறங்கி வருவதைப் பார்த்து மைதிலியின் தந்தை மற்றும் அபிஜித்தின் தாய் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அங்கிள்! நீங்கள் பயணத்தை தள்ளிப் போடணும்” என்றான் அபிஜித்.
அவர் கண்களை அகல விரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
“நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம்.” தாயை நோக்கி மைதிலியை அழைத்துப் போய்கொண்டே சொன்னான்.
அந்த நிமிடம் முதல் வாழக்கை ஒரு இனிமையான கனவாக மாறிவிட்டது அவளுக்கு. அபிஜித்தின் கையை தான் பற்றிய நேரம் எதிர்பாராதது. தன் வாழ்க்கை அவன் வாழ்க்கையுடன் அந்தர்வாகினியாய் கலந்து போய் விட்டது. வியாபாரத்திற்கு சம்பந்தப்பட்ட யோசனைகளை தன்னுடன் அவன் பகிர்ந்துகொள்வது, தனக்குத் தோன்றிய அறிவுரைகளை அவனுக்கு வழங்குவது, அப்படி வழங்கும் முன் அவற்றைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்வது அவளது நித்திய கடமைகளில் ஒன்றாகி விட்டது. தனியாக பாலியத்தைக் கழித்த அவளுக்கு சந்தடி நிறைந்த இந்த வாழ்க்கை சந்தோஷத்தை அளித்துக் கொண்டிருந்தது. அபிஜித் சுற்றிலும் ஒரு உலகம், அதில் அவளுக்கு தனிப்பட்ட இடம்! அவனைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் அவளுடைய சுதந்திரத்திற்கும், ரசனைகளுக்கும் எந்த விதமான இடைஞ்சலோ, கட்டுப்பாடுகளோ இருக்கவில்லை. அவை மேலும் விரிவடைந்து இருந்தன.
அவளுக்கு என்று ஒரு தனித்தன்மை! அவனுடன் அன்பைப் பகிர்ந்துக் கொள்ளும் தாம்பத்தியம்! வாழ்க்கையில் அவன் கிடுகிடுவென்று வெற்றிப் படிகளில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து சந்தோஷத்தை அனுபவிப்பது வித்தியாசமான அனுபவம். அவளுடைய தனிமை அவன்! ஒருநிமிடம் கூட அவனை விட்டுப் பிரிந்து இருந்தது இல்லை. இருக்க விடவும் மாட்டான். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் மைதிலியின் மனதை தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவு செய்வான். அவள் வாயைத் திறந்து சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது. பெரும்பாலும் இருவருடைய கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். மாறுபடும் நேரத்தில் விவரமாக பேசி புரிந்துகொள்வார்கள்.
- வேலி – ஒரு தமிழ் நாடகம்
- செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
- இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது
- நகுலன் கவிதைகள்
- மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்
- மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி
- தினம் என் பயணங்கள் -46
- ஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழ் எழுத்தாளர் விழா – 2015
- திரிஷா இல்லன்னா நயன்தாரா – திரைப்பட விமர்சனம்
- மிதிலாவிலாஸ்-14
- மிதிலாவிலாஸ்-15
- மிதிலாவிலாஸ்-16
- அவன் முகநூலில் இல்லை
- மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015
- பொன்னியின் செல்வன் படக்கதை – 7
- பெரியபுராணத்தில் – மெய்பொருள் நாயனாரின் கருணையுள்ளம்
- திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
- அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2015
- தொடுவானம் 88. வீரநாராயண ஏரி
- அவன், அவள். அது…! -4
- சுந்தரி காண்டம் 8. மென்பொருள் சுந்தரி பத்மலோசனி
- ஊற்றமுடையாய்